மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை, அவற்றுக்கான வாக்கு வங்கிகள் எவ்வளவு, கடந்த கால தேர்தல்களில் அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றிகள் / தோல்விகள், தற்போதைய அரசியல் சூழல் யாருக்கு சாதகமாக / பாதகமாக இருக்கிறது என பல்வேறு அம்சங்களை புள்ளி விவரங்களோடு இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது நாட்டில் அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்ப்போம்.
அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாட்டின் 4வது பெரிய மாநிலம் உத்தரப் பிரதேசம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாநிலத்தில் 19.98 கோடி மக்கள் வசிக்கிறார்கள். மாநிலத்தின் தலைநகரம் லக்னோ. இந்தி அலுவலக மொழியாகவும், உருது கூடுதல் அலுவலக மொழியாகவும் உள்ளன.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாநிலத்தில் இந்துக்கள் 79.73% இருக்கிறார்கள். முஸ்லிம்கள் 19.26% இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிறார்கள்.
உத்தரப் பிரதேசத்தில் கல்வி அறிவு 67.68%. ஆண்களின் கல்வி அறிவு 77.28%. பெண்களின் கல்வி அறிவு 57.18%.
இந்த மாநிலத்தில் 75 மாவட்டங்கள், 80 மக்களவைத் தொகுதிகள், 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. வேறு எந்த ஒரு மாநிலத்தைக் காட்டிலும் அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்டிருப்பதால், மத்திய ஆட்சியாளர்களைத் தீர்மானிப்பதில் இந்த மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1989 வரை காங்கிரஸ் கட்சிதான் இந்த மாநிலத்தை அதிக காலம் ஆட்சி செய்துள்ளது. பாரதிய கிராந்தி தல், ஜனதா கட்சி, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் இந்த மாநிலத்தை ஆட்சி செய்துள்ளன. 2017 முதல் பாஜக ஆட்சி செய்து வருகிறது.
கோவிந்த் வல்லப் பந்த், முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், வி.பி. சிங், பாஜக மூத்த தலைவர் கல்யாண் சிங், தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. திவாரி, முலாயம் சிங் யாதவ், மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் இந்த மாநிலத்தின் முதல்வர்களாக இருந்துள்ளனர். 2017 முதல் 7 ஆண்டுகளுக்கும் மேலாக யோகி ஆதித்யாநாத் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
உத்தரப் பிரதேசத்தில் 200க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தாலும், பாஜக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக் தள், அப்னா தள்(சோனிலால்), ஜன்சத்தா தள் (லோக்தந்த்ரிக்), நிஷாத் கட்சி, சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி ஆகிய 9 கட்சிகளே சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றன. இதிலும் குறிப்பாக, பாஜக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆகிய கட்சிகளே இரட்டை இலக்க சதவீதத்தில் வாக்கு வங்கியைக் கொண்டிருக்கின்றன.
2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலின்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,61,34,603. வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 8,57,56,301. வாக்கு சதவீதம் 59.21%. மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 78 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, சுமார் 50% வாக்குகளுடன் அதிகபட்சமாக 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மகாகட்பந்தன் என்ற பெயரில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில், 38 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி 19.42 சதவீத வாக்குகளுடன் 10 தொகுதிகளிலும், 37 தொகுதிகளில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி 18.11% வாக்குகளுடன் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பாஜக உடன் கூட்டணி அமைத்து 2 தொகுதிகளில் போட்டியிட்ட அப்னா தள்(சோனிலால்) 1.21% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 67 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 6.36% வாக்குகளுடன் காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.
2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலின்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,88,10,557. வாக்களித்தவர்கள் 8,05,00,789. வாக்குச் சதவீதம் 58.44%. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 78 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 42.63% வாக்குகளுடன் 71 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 78 தொகுதிகளில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி 22.35% வாக்குகளுடன் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 66 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 7.53% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அப்னா தள் கட்சி 0.02% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி சுமார் 19.60% வாக்குகளைப் பெற்ற போதிலும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
2022 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: கடந்த 2022 சட்டமன்றத் தேர்தலின்போது பாஜக அணி, சமாஜ்வாதி அணி ஆகியவை பிரதான அணிகளாக களம் கண்டன. அதோடு, பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தனித்து களம் கண்டன. இந்த தேர்தலில், பாஜக 376 தொகுதிகளில் போட்டியிட்டு 41.29% வாக்குகளுடன் 255 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது. பாஜக கூட்டணியில் போட்டியிட்ட அப்னா தள்(சோனிலால்) 17 தொகுதிகளில் போட்டியிட்டு 1.62% வாக்குகளுடன் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மற்றொரு கூட்டணி கட்சியான நிஷாத் கட்சி, 10 தொகுதிகளில் போட்டியிட்டு 0.91% வாக்குகளுடன் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
சமாஜ்வாதி கட்சி 347 தொகுதிகளில் போட்டியிட்டு 32.06% வாக்குகளுடன் 111 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. சமாஜ்வாதி கூட்டணியில் இடம் பெற்ற ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி 33 தொகுதிகளில் போட்டியிட்டு 2.85% வாக்குகளுடன் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மற்றொரு கூட்டணி கட்சியான சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டு 1.36% வாக்குகளுடன் 6 இடங்களில் வெற்றி பெற்றது.
பகுஜன் சமாஜ் கட்சி மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் போட்டியிட்டு 12.88% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. 399 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 2.33% வாக்குகளுடன் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
2024 மக்களவைத் தேர்தல்: உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஏப்ரல் 19ல் நடைபெற உள்ள முதல் கட்டத் தேர்தலில் 8 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 26ல் நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலில் 8 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 7ம் தேதி நடைபெற உள்ள மூன்றாம் கட்டத் தேர்தலில் 10 தொகுதிகளுக்கும், மே 13ம் தேதி நடைபெற உள்ள 4ம் கட்டத் தேர்தலில் 13 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 20ம் தேதி நடைபெற உள்ள 5ம் கட்டத் தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், மே 25ம் தேதி நடைபெற உள்ள 6ம் கட்டத் தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள 7ம் கட்டத் தேர்தலில் 13 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, சமாஜ்வாதி, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைக் கொண்ட இண்டியா கூட்டணி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆகியவை பிரதான சக்திகளாக தேர்தலை எதிர்கொள்கின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 74 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அப்னா தள் (சோனிலால்) கட்சி 2 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் தள் 2 தொகுதிகளிலும், சுஹெல்தேவ் சமாஜ் கட்சி மற்றும் நிஷாத் கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
இண்டியா கூட்டணி: இந்த கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி 62 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
தனித்துக் களம் காணும் பகுஜன் சமாஜ்: மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி மொத்தமுள்ள 80 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.
களம் யாருக்கு சாதகம்?: கடந்த 2014 மக்களவைத் தேர்தலைப் போலவே 2024 தேர்தலை பகுஜன் சமாஜ் கட்சி எதிர்கொள்கிறது. எனவே, அந்த கட்சி குறிப்பிடத்தக்க அளவில் வாக்கு சதவீதத்தைப் பெறலாம். ஆனால், குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிபெற முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். உத்தரப் பிரதேசத்தில் இதுவரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பகுஜன் சமாஜ் கட்சி அதிகபட்சம் 3 தொகுதிகளை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
இண்டியா கூட்டணியைப் பொறுத்தவரை சமாஜ்வாதி கட்சி மட்டுமே இரட்டை இலக்க சதவீதத்தில் வாக்கு வங்கியைக் கொண்டிருக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெயரளவில் கூட்டணியில் உள்ளது. அதேநேரத்தில், காங்கிரசும் சமாஜ்வாதியும் இம்முறை கூட்டணி அமைத்திருப்பதால் இஸ்லாமியர்கள் வாக்குகள் பிரியாது என்றும், ஓபிசி வாக்குகளில் கணிசமான சதவீதத்தை இக்கூட்டணி பெறும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், பாஜக கூட்டணிக்கு இண்டியா கூட்டணி கடும் சவாலாக விளங்கும். உத்தரப் பிரதேசத்தில் இதுவரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் இண்டியா கூட்டணி குறைந்தபட்சம் 3 தொகுதிகளையும், அதிகபட்சம் 9 தொகுதிகளையும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தேதியில் உத்தரப் பிரதேச தேர்தல் களம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் இந்த கூட்டணி குறைந்தபட்சம் 69 தொகுதிகளிலும், அதிகபட்சம் 75 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் இரட்டை இன்ஜின் ஆட்சிக்கு வாக்காளர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டிருப்பது இந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago