நூல் வடிவில் ஒரு பரப்புரை

By ஆனந்தன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவரான கோபண்ணா, 2024 நாடாளு மன்றத் தேர்தலை முன்னிட்டு ‘பாசிசம் வீழட்டும்! இந்தியா மீளட்டும்!’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். 2014இல் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் செயல்பாடுகளில் இருந்து 54 பிரச்சினைகள் இந்நூலில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, குடியுரிமைத் திருத்தச் சட்டம்,ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான வரி வருவாய்ப் பகிர்வு முதலியவை இதில் விமர்சிக்கப்பட்டுள்ளன.

ஆட்சியில் இல்லாதபோது, கறுப்புப் பணத்தை மீட்பதில் மோடிக்கு இருந்த ஆர்வம், ஆட்சிக்கு வந்த பிறகு காணாமல் போனது ஏன் என எல்லா எதிர்க்கட்சிகளுமே கேட்கின்றன. 2014 மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது மோடி சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் பேசியபோது, ‘வெளிநாடுகளில் மோசடிப் பேர்வழிகளால் பதுக்கப்பட்ட பணத்தைத் திரும்பக் கொண்டுவந்தால், ஒவ்வொரு ஏழை இந்தியரும் 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை இலவசமாகப் பெறலாம்.

பாஜக வெற்றி பெற்றால் கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்’ என்றார். 10 ஆண்டுப் பதவிக்காலம் அதற்குப் போதவில்லையா என இந்தப் புத்தகம் கேள்வி கேட்கிறது.

‘விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவோடு 50% கூடுதலாக வழங்கப்பட வேண்டும்’ என்கிற எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை நிறைவேற்றப்படும்; நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு; 2024க்குள் இந்தியப் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் கோடி டாலராக உயர்த்துதல் போன்ற பாஜகவின் வாக்குறுதிகளும் இதில் நினைவுகூரப்பட்டுள்ளன.

‘வெறுப்பு அரசிய’லை பாஜக வளர்க்கிறது என நாடு முழுவதும் கண்டனங்கள் எழக் காரணமாக இருந்த பல நிகழ்வுகள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வரும் ‘இண்டியா கூட்டணி’ வேட்பாளர்களுக்கு இந்நூலைக் கோபண்ணா அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE