“அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதே முதன்மை நோக்கம்” - கே.எம்.காதர் மொகிதீன் நேர்காணல்

By ச.கோபாலகிருஷ்ணன்

இந்தியாவின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக். சுதந்திரத்துக்கு முன்பு அனைத்திந்திய முஸ்லிம் லீக் என்னும் பெயரில் இயங்கிவந்தது. கேரளத்தில் கணிசமான செல்வாக்கு உள்ள அரசியல் கட்சியாக, ஐக்கிய ஜனநாயக முன்னணி (United Democratic Front-UDF) கூட்டணியில் தற்போது அங்கம் வகிக்கிறது.

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சியாக எப்போதும் தொடர்ந்துவருகிறது. இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இக்கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இ.யூ.மு.லீ கட்சியின் தலைவர் கே.எம்.காதர் மொகிதீனுடனான உரையாடலின் முக்கியப் பகுதிகள்:

தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுடன் ஓரணியில் இருக்கும் உங்கள் கட்சி கேரளத்தில் எதிரணியில் இருக்கிறது. இப்படி இண்டியா கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்த முரணை எப்படிக் களையப் போகிறீர்கள்?

இதுவரை ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகள் தேர்தல்களில் தனித் தனியாக நின்று வாக்குகளைச் சிதறடித்தன. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைப்பதுதான் இண்டியா கூட்டணியின் தலையாய நோக்கம். கடந்த தேர்தலில் கிட்டத்தட்ட 64% மக்கள் பாஜகவுக்கு எதிராகத்தான் வாக்களித்துள்ளார்கள்.

அந்தக் கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டிருப்பதால் 543 தொகுதிகளிலும் இந்த முறை இண்டியா கூட்டணி வெல்லும். வெற்றிபெறப்போகும் கட்சிகள் இணைந்து ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். குறைந்தபட்சச் செயல் திட்டத்தின் அடிப்படையில் அரசை அமைப்பார்கள்.

வாக்குகள் பிரிந்துவிடும் என்று அஞ்ச வேண்டிய அவசியமில்லை. பாஜகவுக்கு எதிரான 64% வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் இண்டியா கூட்டணியின் பக்கம் திரும்பியிருப்பதுதான் தற்போது முக்கியம். அது ஆட்சி மாற்றத்துக்கு வித்திடும் என்னும் நம்பிக்கையில் பணியாற்றிவருகிறோம்.

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிராகத் திமுக தலைமையிலும் அதிமுக தலைமையிலும் இரண்டு கூட்டணிகள் இருப்பதால் சிறுபான்மையினர் வாக்குகள் பிரிவது பாஜகவுக்குச் சாதகமாக அமையாதா?

தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியையும் சேர்த்து நான்கு அணிகள் போட்டியில் உள்ளன; சுயேச்சைகளும் போட்டியிடுவார்கள். தேர்தல்களில் பல கூட்டணிகள், பல கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுவதெல்லாம் சகஜம்தான். இந்த மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை பாஜக ஆட்சிக்குவந்துவிடக் கூடாது என்பதுதான் தமிழ்நாட்டு வாக்காளர்களின் தெளிவான முடிவு.

இதைத்தான், “யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட, யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதே முக்கியம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். சட்டமன்றத் தேர்தல்களில் வாக்குகள் சிதற வாய்ப்பிருக்கும்.

நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பில்லை. பாஜக கூட்டணியை எதிர்க்கக்கூடிய அணி எது என்பது தமிழ்நாட்டு வாக்காளர்களுக்குத் தெளிவாகத் தெரியும். அந்த அணியையே தேர்ந்தெடுப்பார்கள்.

இண்டியா கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் சில நேரம் இந்துத்துவச் சார்பை வெளிப்படுத்துகின்றன. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஆம் ஆத்மி வரவேற்றது. ராமர் கோயில் மூலம் பாஜகவின் இந்துத்துவ அரசியல் செல்வாக்கு பெறுவதை உணர்ந்து, தாம் இந்து மதத்துக்கு எதிரி அல்ல என்று நிரூபிக்க பிற கட்சிகளும் பாடுபடுகின்றன. இந்தச் சூழலில் பாஜகவுக்கு மாற்றாக வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் சிறுபான்மை மக்கள் உரிமைகளையும் பாதுகாப்பையும் எந்த அளவுக்கு உறுதிப்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

இந்தியாவின் மக்கள்தொகை 142 கோடி. இதில் 25 கோடி பேர் இஸ்லாமியர்கள். இந்தியாவிலேயே பெரும்பான்மையாக உள்ள சிறுபான்மையினர் இஸ்லாமியர்கள்தான். இந்தியாவை இஸ்லாமியர்கள் இல்லாத நாடாக்க வேண்டும் என்று சொல்வது வானத்தில் சூரியன் இல்லாமல் ஆக்க வேண்டும் என்று சொல்வதைப் போன்றது.

இந்தியா என்னும் நாடு இந்து நாடும் அல்ல, இஸ்லாமிய நாடும் அல்ல. இந்தியாவில் 4,500க்கு மேற்பட்ட வகுப்புகள் இருக்கின்றன என்று மானுடவியல் கணக்கெடுப்பு முடிவுகள் சொல்கின்றன. இந்திய நாடு என்பது அனைவருக்கும் சொந்தமானது. இஸ்லாமியர்கள் இல்லாமல் இந்த நாடு இருந்ததில்லை; இருக்கப் போவதும் இல்லை. இந்திய நாடு ஜனநாயக நாடு, மதச்சார்பின்மையை - சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துகிற நாடு. இந்திய அரசமைப்புச் சட்டம் இதை உறுதிப்படுத்துகிறது.

இந்திய முஸ்லிம்கள் ஒரு கையில் திருக்குரானையும் இன்னொரு கையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் சுமந்து செல்ல வேண்டும் என்றுதான் நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். சிறுபான்மை மக்கள் குறித்து அரசியல் கட்சிகள் பேசுவதைக் கண்டு இந்திய முஸ்லிம்கள் அஞ்சுவதில்லை.

அரசமைப்புச் சட்ட விழுமியங்களைப் பாதுகாப்பதற்காகத்தான் நாங்கள் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். இண்டியா கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் என்று நம்புகிறோம்.

நாடு முழுவதும் பாஜகவின் செல்வாக்கு வலுத்துவருகிறது. ஆனாலும் பாஜகவுக்கு எதிராகச் சிறுபான்மைக் கட்சிகளின் ஒற்றுமை ஏன் சாத்தியப்படவில்லை? குறிப்பாக ஹைதராபாத்திலும் வட இந்தியாவிலும் அசதுதீன் ஒவைஸி போன்றோர் பாஜக - காங்கிரஸ் இரண்டுக்கும் எதிராகப் போட்டியிட்டு ஓட்டைப் பிரிக்கிறார்கள் என்னும் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அசாமில் 1935இல் நிறைவேற்றப்பட்ட இஸ்லாமியத் திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதுவும்மலைவாழ் பழங்குடி மக்களுக்குப் பொருந்தாது. இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டமாகவே அது கொண்டுவரப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியர் வீடுகள் புல்டோசரால் இடித்துத் தள்ளப்படுகின்றன. மதரசாக்கள் அழிக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட பாரதிய ஜனதா கட்சியினருக்கு இஸ்லாமியர்களும் பிற சிறுபான்மை மக்களும் வாக்களிக்க மாட்டார்கள் என்பது தெளிவு. இந்தியச் சிறுபான்மை மக்கள் அனைவரும் பாஜகவுக்குஎதிராகத்தான் வாக்களிப்பார்கள். ஜனநாயக முறையான ஆட்சி மாற்றத்துக்கு அது பயன்படும் என்று நான் நம்புகிறேன்.

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மதமோ சாதியோ ஒட்டுமொத்தமாக ஒரே கட்சிக்கு வாக்களித்ததில்லை. இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் 2,600க்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றன. எல்லாக் கட்சியிலும் எல்லாச் சமுதாயங்களைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பதுதான் நமது பெருமை. பல பண்பாடுகள் இணைந்த நாடு இது. அரசியல்ரீதியாக இஸ்லாமியர்களால் நடத்தப்படும் கட்சிகள் 8-10 இருக்கும். இவை அனைத்தும் ஒன்றுசேர வாய்ப்பில்லை. ஆனால், இந்தக் கட்சிகள் அனைத்தும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகத்தான் உள்ளன என்பதுதான் முக்கியம்.

ஒவைஸியின் கட்சி வித்தியாசமான கட்சி. ஹைதராபாத் நிஜாம் சார்பில் போரிட்ட ரஸாக்கர் இயக்கத்திலிருந்து முளைத்த கட்சி. அந்தக் கட்சிக்கெனத் தனியாகச் சொத்துக்கள் எழுதிவைக்கப்பட்டுள்ளன. அதன் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல்கூட இருக்கலாம். ஏழு எம்.எல்.ஏ-கள், ஒரு எம்பி தொகுதியைக் கொண்ட ஹைதராபாத்தில் மிகப் பெரிய செல்வாக்குடன் அக்கட்சி இருக்கிறது.

ஒவ்வொரு தெருமுனையிலும் அக்கட்சியின் அலுவலகம் இருக்கும். இப்போது வட இந்திய அரசியலிலும் அது கவனம் செலுத்துகிறது. ஒரு சில மாநிலங்களில் போட்டியிடுகிறது. ஆனால், அங்கு அவர்களால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அந்தக் கட்சியை ‘பாஜகவின் பி டீம்’ என்று சொல்வது அரசியல் ரீதியான குற்றச்சாட்டே தவிர, உண்மை அல்ல.

- தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்