போ
க்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் சென்னை மக்களுக்கு மின்சார ரயில்களின் இயக்கம் ஆறுதலாக இருந்தாலும், மெட்ரோ ரயில் பயணம் என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்னும் எட்டாத கனியாகவே இருக்கிறது. மாற்றுப் போக்குவரத்து வசதியாக மெட்ரோ ரயில் சேவை இருக்கும் என்று நினைத்த மக்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. ஏன் இந்த நிலை?
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் மெட்ரோக்கள் எனப்படும் பெருநகரங்களின் பங்களிப்பு முக்கியமானது. பெருநகரங்களில் வசிப்பவர்களோடு ஒப்பிடுகையில், தினந்தோறும் புறநகர்ப் பகுதிகளிலிருந்து நகரத்துக்குள் வந்து பணியாற்றிவிட்டு திரும்பிச் செல்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். பெருநகரங்களை உயிர்ப்போடு வைத்திருப்பதில் இவர்களின் பங்கு பெரியது. பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கவும், புறநகர்ப் பகுதிகளிலிருந்து வந்துபோகும் தொழிலாளர்களின் பயண நேரத்தைக் குறைக்கவும் உருவாக்கப்பட்டவைதான் மெட்ரோ ரயில் சேவைகள்.
மெட்ரோ ரயில் வரலாறு
உலகின் முதல் மெட்ரோ சேவை, லண்டனில் 1863-ல் சுரங்க ரயில்கள் மூலமாகத் தொடங்கப்பட்டது. சுரங்க ரயிலில் 18 நிமிடங்களில் லண்டன் நகரின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குச் சென்றுவிட முடிந்தது. பின்பு, அந்த வழித்தடம் நகரத்தின் அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து முழுச்சுற்றுப் பாதையாக வளர்ந்தது. இந்தச் சேவை, உலகின் பிற நகரங்களிலும் பின்பற்றப்பட்டது. இந்தியாவில் 1984-ல் கொல்கத்தாவிலும் 2002-ல் டெல்லியிலும் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன. மேலும் பல நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுவருகின்றன. இந்தச் சேவைகளில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் இந்தியா முதலீடு செய்யவிருக்கிறது.
மாற்றுப் போக்குவரத்தாக மாறாதது ஏன்?
சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்குப் பணிகள் நடந்துகொண்டிருந்தாலும், 28 கிலோ மீட்டர் தூரம் பணிகள் நிறைவடைந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. விமான நிலையம் - நேரு பூங்கா, பரங்கிமலை – நேரு பூங்கா, சின்னமலை - ஆலந்தூர் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. பேருந்துக் கட்டண உயர்வுக்குப் பிறகு மெட்ரோ ரயில்களில் தினமும் பயணம் செய்வோரின் சராசரி எண்ணிக்கை என்பது 22 ஆயிரத்து 500-ல் இருந்து 27 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், ஒரு பிரதான போக்குவரத்தாகவும், மாற்றுப் போக்குவரத்தாகவும் மக்கள் எதிர்பார்க்கும் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு இது போதுமானது அல்ல.
சென்னை பெருநகரின் எல்லைப் பகுதி நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. மக்கள் தொகை எண்ணிக்கையும் ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் 3,600-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் தினமும் சராசரியாக 45 லட்சம் பேர் பயணம் செய்துவருகின்றனர். அதுபோல், சென்னையில் தினமும் இயக்கப்படும் 700-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகளில் சுமார் 7 லட்சம் பேர் பயணம் செய்துவருகின்றனர். ஆனால், மெட்ரோ ரயில்களில் தற்போது மக்களின் பயணம் என்பது அன்றாடப் பயணமாக இல்லாமல், அவசரகாலப் பயணமாகவே இருப்பதை உணர முடிகிறது.
சென்னையில் தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகரிக்காத நிலையில், இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஆர்வம் காட்டுவது ஏன் என்று மத்திய அரசு சமீபத்தில் கேள்வி எழுப்பியது. இதனால் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் பெறவும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. “சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களையும் அண்ணாசாலை வழித்தடத்தையும் இணைக்கும்போது மெட்ரோ ரயில்களில் தினசரி பயணிப்போரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும் தாண்டும்’’ என நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் இன்னும் மக்களைச் சென்றடையாததைக் காரணம் காட்டி இரண்டாவது கட்ட திட்டத்தை மத்திய அரசு தாமதம் செய்யக் கூடாது. டெல்லி மெட்ரோ சேவையைப் போல் சென்னையிலும் மெட்ரோ சேவையைப் பரவலாக்குவதற்குப் பல வழிகள் உண்டு.
கட்டணம் அதிகம்
முதல் பிரச்சினை, கட்டணம். மெட்ரோ ரயில் கட்டணத்தைச் சிறிய அளவில் குறைத்தாலே போதும், மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 0 - 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.10, 2 - 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.20, 4 - 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.30, 6 - 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.40, 10 - 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.50, 15 - 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.60, 20 - 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.70 என கட்டணம் நிர்ணயம் செய்து வசூலித்துவருகிறது. சென்னைக்கு முன்னரே கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையை விட, மற்ற மாநகரங்களில் கட்டணம் குறைவாகவே வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, டெல்லியில் முதல் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், சென்னையில் முதல் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கே ரூ.40. மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைத்து மக்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்று ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கியப் பங்குதாரராக இருக்கும் மாநில அரசும் மத்திய அரசிடமும் மெட்ரோ நிறுவனங்களிடமும் பேசி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தமிழக அரசும் எடுக்க வேண்டும்.
நஷ்டத்தைப் பார்ப்பதா?
இன்று உலகம் முழுவதும் இயங்கிவரும் மெட்ரோ ரயில் சேவைகளில் ஏறக்குறைய 90% அரசு நிறுவனங்களால்தான் இயக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. இந்தியாவிலும் பெரும்பாலான புறநகர் ரயில்களும் போக்குவரத்துக்கழகங்களும் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. இருந்தாலும் மக்கள் நலனைக் கருத்தில்கொண்டும், பொருளாதார வளர்ச்சியை முன்னிட்டும் அரசு அந்த நஷ்டத்தை ஏற்றுக்கொள்வதே வழக்கம். பெரும்பாலான மக்களுக்கு சேவை அளிக்கும் பொதுப்போக்குவரத்துத் திட்டங்களை, கார்ப்பரேட் நிறுவனங்கள்போல் நடத்தக் கூடாது.
பெருநகரப் போக்குவரத்துச் சிக்கல்களுக்கு மெட்ரோ ரயில் போன்ற பொதுபோக்குவரத்துத் திட்டங்களால் மட்டுமே ஓரளவுக்குத் தீர்வு அளிக்க முடியும். மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் மின்சார ரயில் நிலையங்கள் இணைப்பு, ‘மினி பஸ்’ வசதி மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சுமார் 300 முதல் 500 மீட்டர் தூரம் வரையில் நடந்தே வரும்வகையில் நடைபாதை வசதிகள் ஆகியவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தினால், போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணமுடியும்.
மெட்ரோ ரயில் நிறுவனம், ஏழை, நடுத்தர மக்களுக்கும் கட்டுப்படியாகும் கட்டணத்தில், பொதுப் போக்குவரத்து சேவையை அளிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. பெருந்தொகையை முதலீடு செய்கிறோம் என்பதற்காக அந்தச் சுமையை பயணிகளின்மீது ஏற்றிவைக்கக் கூடாது. மெட்ரோ ரயில் சேவைகளின் நோக்கம், அதிகரித்துவரும் போக்குவரத்துச் சிக்கல்களை எதிர்கொள்வது என்பது மட்டுமல்ல. ஒரு பெருநகரத்தின் வளர்ச்சி குறித்த கனவொன்றும் அதில் அடங்கியிருக்கிறது!
- கி.ஜெயப்பிரகாஷ்,
தொடர்புக்கு: jayaprakash.k@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago