மருத்துவத் துறை சிக்கல்களும் எதிர்பார்ப்புகளும் | தேர்தல் எதிர்பார்ப்புகள்

By கு.கணேசன்

தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளின் தேர்தல்அறிக்கைகளும் வெளிவரத் தொடங்கிவிட்டன. ஓட்டுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த வாக்குறுதிகள், ஆட்சி அமைந்த பின்னர் முழுமையாக நிறைவேற்றப்படுகின்றனவா என்பது முக்கியமான கேள்வி. எனினும், அரசியல் கட்சிகள்தமது கொள்கைப் பாதையைத் தீர்மானித்துக்கொள்ள மக்களின் தரப்பிலிருந்து கோரிக்கைக் குரல்கள் எழுவது அவசியம். அந்த வகையில், ஒரு மருத்துவராக, மத்திய அரசின் நலவாழ்வு, குடும்பநலத் துறையில் அவசியமாகக் கவனிக்கப்பட வேண்டிய சில சிக்கல்களையும் எதிர்பார்ப்புகளையும் அமையவிருக்கும் புதிய அரசின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

வருத்தும் தொற்றுநோய்ச் சுமை: இந்தியாவில் ‘பொதுச்சுகாதாரக் கொள்கை - நடைமுறை’ (Public healthpolicy and practice) இங்கு பரவும் தொற்றுநோய்களைப் பொறுத்தே அமைகிறது. அரசு - தனியாரின் நிதி ஆதாரம், மனித வளம், உயர்ந்த தொழில்நுட்பம் ஆகியவற்றின் உதவியுடன் இந்தியாவில் இயங்கும் தடுப்பூசித் திட்டங்கள் பலதரப்பட்ட தொற்றுநோய்களை நன்றாகவே கட்டுப்படுத்தியுள்ளன. முக்கியமாக, கடந்த 10 ஆண்டுகளாக போலியோ இல்லாத இந்தியாவைப் பார்த்துவருகிறோம். 62% தொற்றுநோய்களை விரட்டியிருக்கிறோம். சுதந்திரத்தின்போது 32 வயதாக இருந்த நம் சராசரி ஆயுள்காலம் இப்போது 70ஆக உயர்ந்திருக்கிறது.

எனினும் மலேரியா, டெங்கு, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய் போன்ற வெப்ப மண்டலத் தொற்றுநோய்கள் இப்போதும் இந்தியாவுக்குச் சவால்விடுகின்றன. உதாரணத்துக்கு, ‘2030க்குள் மலேரியாவை ஒழித்துவிட வேண்டும்’ எனும் இலக்குடன் செயல்படும் இந்தியாவில், சுமார் 100 கோடி மக்கள் இன்னமும் மலேரியா பரவ வாய்ப்புள்ளவர்களாகவே இருக்கின்றனர்.

1990இல் ஒரு லட்சம் பேருக்கு 42 பேர் என்று இருந்த காசநோயாளிகளின் இறப்பு விகிதம், இப்போது 23ஆகக் குறைந்துள்ளது. ஆனாலும் 2025க்குள் காசநோயை ஒழிக்க வேண்டுமானால், இந்தியா செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். தேசம் முழுவதிலும் ஒரே நேரத்தில் ஒரு தொற்றுநோயை ஒழிக்கும் முயற்சிக்கு மாற்றாக, பகுதி பகுதியாக ஒழிக்கும் முயற்சியில் இறங்கலாம் எனத் தொற்றுநோய்த் துறை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தொற்றாநோய்களின் ஆதிக்கம்: மோசமான உணவுப் பழக்கம், புகையிலைப் பயன்பாடு, கட்டுப்பாடில்லாத மதுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, போதைப் பழக்கம் போன்றவற்றால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநோய்கள், புற்றுநோய்கள் எனத் தொற்றாநோய்களின் ஆதிக்கம் அதிகரித்துவருகின்றன.

அதே வேளையில் மன அழுத்தம், பணிச்சுமை போன்ற இன்றைய வாழ்க்கைமுறைகளால் மனநோய்களும் அதிகரித்துவருகின்றன. தற்போது இந்தியாவில் 5% பேர் பொதுவான மனநலம் இல்லாதவர்களாகவும், 1.5% பேர் கடுமையான மனநலக் கோளாறுகளுடனும் வாழ்வதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த விகிதாச்சாரம் ஆண்டுதோறும் அதிகரித்துவருவது துயரம்.

தொற்றாநோய்களுக்கான நவீன சிகிச்சைமுறைகள் இந்தியாவில் வளர்ச்சிபெற்று வருவது ஒருபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அச்சுறுத்தும் மனநோய்களைக் கட்டுப்படுத்துவது கடினமாகவே உள்ளது. அதற்கு, மனநோய் குறித்த மக்களின் அறியாமையும் மனநோய்களுக்குச் சிகிச்சை அளிக்கக் கிராம அளவிலும் தாலுகா அளவிலும் போதிய வல்லுநர்கள் இல்லாமையும் காரணங்களாகின்றன.

மேலும், இந்தியாவின் மனநலக் கொள்கை (2014), தேசிய மனநலப் பாதுகாப்புச் சட்டம் (2017) ஆகியவைமனநலமற்றவர்களின் நலன்களை முதன்மைப்படுத்துவதோடு நிறுத்திக்கொள்கின்றன; அவர்களின் குடும்பங்கள் - பாதுகாவலர்களின் நலன்களைக் கருத்தில்கொள்வதில்லை. அவர்களின் நலன்களையும் இணைத்துப் புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

மாற்றுப் பார்வை: “இந்தியாவின் சுகாதாரக் கொள்கைகள் பெரும்பாலும் நகர்ப்புற மக்கள், மேம்பட்ட சமூகத்தினர், சுகாதார வசதிகளைத் தாராளமாக அணுகக்கூடியவர்கள் ஆகியோரின் ஆரோக்கியத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. இது ஓர் ஆபத்தான அணுகுமுறை” என்கிறார் இந்திய அரசின் சுகாதாரம் - குடும்பநலத் துறை முன்னாள் செயலர் கேசவ் தேசிராஜு. “தங்கள் சுகாதாரப் பராமரிப்புக்காகப் பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களையும், தனியார் மருத்துவமனைகளை எளிதில் அணுக முடியாதவர்களையும் சுகாதாரக் கொள்கை வகுப்பாளர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

உதாரணமாக, இப்போதுள்ள அரசின் காப்பீட்டுத் திட்டங்கள் உள்நோயாளிகளுக்கே பயன்படுகின்றன; வெளிநோயாளிகளுக்குப் பலனளிப் பதில்லை; இவற்றின் பலன்கள் அடித்தட்டு மக்களுக்கு முழுவதுமாகச் சென்றடைவதில்லை; இவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதியை மடைமாற்றி, நோய்த் தடுப்புக்கு உதவும் அடிப்படை ஆரம்ப மருத்துவச் சேவைகளை வலுப்படுத்தவும், அவற்றைச் சரியாகச் செயல்படுத்தவும் ஏன் பயன்படுத்தக் கூடாது என்று கேட்கிறார் கேசவ். காரணம், தங்களின் மருத்துவச் செலவுகளில் 63%-ஐச்சொந்தப் பணத்திலிருந்துதான் இந்தியர்கள் செலவழிக்கிறார்கள். இது உலகிலேயே மிக அதிகம்.

பிரசவ காலத் தாய் - குழந்தை இறப்பு விகிதம்: மேம்பட்ட பிரசவகாலச் சிகிச்சை முறைகள் நாடு முழுவதிலும் நடைமுறையில் இருந்தாலும், 2015க்குள் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 109க்கும் குறைவாகப் பிரசவத் தாயின் இறப்பு விகிதம் இருக்க வேண்டும் என்ற இலக்கையே இந்தியா இன்னும் எட்டவில்லை. இப்போது 2030க்குள் இந்த இறப்பு விகிதம் 70க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று இலக்கு மாற்றப்பட்டுள்ளது.

கேரளம் (61), மகாராஷ்டிரம் (68), தமிழ்நாடு (79) இதைச் சாத்தியப்படுத்தி வருகின்றன. மற்ற மாநிலங்கள் பின்தங்கியுள்ளன. இதுபோல் 1,000 குழந்தைப் பிறப்புகளுக்கு 39 இறப்புகள் நிகழ்கின்றன. இந்தியப் பெண்கள் எடை குறைந்தவர்களாக இருப்பது, ரத்தசோகை, குறைந்த வயதில் திருமணம் செய்துகொள்வது, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவை இதற்குரிய ஆபத்துக் காரணிகள்.

இவற்றைக் களைய சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட திட்டவரைவுகளைத் தீவிரப்படுத்தாவிட்டால், இந்த இறப்பு விகிதங்களைக் குறைக்க முடியாது என்கிறது ‘லான்செட்’ மருத்துவ ஆய்விதழில் வெளியாகி யிருக்கும் ஆய்வுக் கட்டுரை.

குறைந்துவரும் ‘மொத்தக் கருவுறுதல் விகிதம்’ - இந்தியாவில் ‘மொத்தக் கருவுறுதல் விகிதம்’ (Total fertility rate – TFR) குறைந்துவருகிறது என்கிறது ‘லான்செட்’. 1950இல் இது 6.18ஆகவும், 1980இல் 4.6ஆகவும் இருந்தது. 2021இல் 1.91ஆகக் குறைந்துவிட்டது; 2100இல் இது 1.04 ஆகிவிடும் என்கிறது இந்த ஆய்வு. இது 2.1க்கும் குறையாமல் இருக்க வேண்டும்.

இந்தப் போக்கு தொடருமானால், அடுத்த கால் நூற்றாண்டில், நாட்டில் உழைக்கும் வயதிலுள்ள இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்; முதியோர் எண்ணிக்கை கூடிவிடும். இது இந்தியப் பொருளாதார வளத்தைப் பாதிக்கும். பாலின பேதத்தைத் தவிர்ப்பது, குழந்தைகளின் கல்வி - வேலைவாய்ப்புகளுக்குப் பொருளாதார வசதிகளை ஏற்படுத்தித் தருவது போன்ற முன்னெடுப்புகள் இப்போதே தொடங்கப்பட வேண்டும்.

தேவைப்படும் மருத்துவ மனித வளங்கள்: இந்தியாவில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அதிகமாகத் திறக்கப்படுகின்றன. அதேவேளை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை; துணைச் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரமில்லை; மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்களுக்குத் தகுந்த ஊதியம் வழங்கப்படுவதில்லை போன்ற போதாமைகள் களையப்பட வேண்டும்.

பொதுச் சுகாதாரம் என்பது ஒரு சமூக நீதி. அதில்காணப்படும் சமத்துவமின்மையை நீக்கி, அனைத்துத்தரப்பினரும் மருத்துவச் சேவையை எளிதில் அணுகக்கூடியதாகவும், மலிவானதாகவும் மாற்றுவதை புதிய அரசு முக்கிய நோக்கமாகக் கொள்ள வேண்டும். அத்தோடு, தேவையின் அடிப்படையில் சிகிச்சை - கவனிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் ‘சுகாதார சமபங்கை’ (Heath equity) முதன்மைப்படுத்த வேண்டும். இதற்கு ஜிடிபியில் 1.1% தான் ஒதுக்கப்படுகிறது. இது போதாது. குறைந்தது 3% ஒதுக்குவது அவசியம்.

புதிய அரசு சிந்திக்கட்டும்!

- தொடர்புக்கு: gganesan95@gmail.com

To Read in English: Expectations of the medical sector from the new government

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்