களத்தில் 24 வேட்பாளர்கள்: தமிழகத்தில் பாஜக வளர்ச்சியா, ‘வறட்சி’யா? - ஓர் அலசல்

By நிவேதா தனிமொழி

தமிழகத்தில் பாஜக சார்பாக அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தப் பட்டியல் உணர்த்தும் செய்திகள் என்ன என்பதை சற்றே விரிவாகப் பார்க்கலாம்.

பாஜக தமிழகத்தில் வளர்ந்துள்ளதா? - தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் கட்டமைக்க நினைக்கிறதே தவிர, வேட்பாளர் களமிறக்குவதில் சற்றே திணறியிருக்கிறது பாஜக என்னும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் மத்தியப் பிரதேச ராஜ்யசபா எம்.பி.யான முருகனுக்கு சீட் வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவர் நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு தென் சென்னையில் சீட் வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் நயினார் நகேந்திரனுக்கு திருநெல்வேலி மக்களவையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி தொகுதியில் தற்போது மாநில அமைச்சராகவுள்ள நமச்சிவாயம்தான் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். நாமக்கல் தொகுதி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கும் கே.பி.ராமலிங்கம். தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. ஆனால், கட்சி கட்டாயப்படுத்தியதால் போட்டியிடுகிறேன் என்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இப்படியாக, தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வில் சற்று சறுக்கலைச் சந்தித்துள்ளது பாஜக. அதேபோல், மாநிலத்தில் ஒரு எம்எல்ஏ, எம்.பி சீட் இல்லாத தமிழ் மாநில காங்கிரஸுக்கு 3 சீட் வழங்கியுள்ளது பாஜக.

அதேபோல், ஒரு தொகுதிதான் கேட்டேன். ஆனால், பாஜக இரண்டு தொகுதிகளை ஒதுக்கியதாக டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இப்படியாக, 39 தொகுதிக்கு வேட்பாளர்களை நிறுத்துவதில் பாஜக தடுமாறியிருக்கிறது.

குறிப்பாக, சரியான வேட்பாளர்கள் இல்லாததால் எம்எல்ஏக்கள், ஆளுநர் பதவி வகித்தவர், மத்திய அமைச்சர்களைக் களமிறக்கியிருக்கின்றனர் என்னும் கருத்துகள் சொல்லப்படுகின்றன.

பட்டியலில் பாஜக வளர்ச்சி! - பொதுவாக, கூட்டணி அமைத்திருக்கும் தலைமை கட்சி அந்தக் கட்சியினர் பட்டியலை மட்டும்தான் தங்களின் லெட்டர் பேடில் வெளியிடும். மற்ற கூட்டணி கட்சிகள், கூட்டணியைத் தலைமை தாங்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டாலும் கூட, தங்கள் கட்சியின் லெட்டர் பேடில்தான் வேட்பாளர் பட்டியலை அதிகாரபூர்வமாக அறிவிக்கும். ஆனால், பாஜக இந்த நடைமுறைக்கு நேர்மாறாகக் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவதால் தங்கள் கட்சி வேட்பாளர்களைப் போல் அறிவித்தது.

குறிப்பாக, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில், ‘வேலூர் தொகுதியில் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் பெரம்பலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் ஆகியோர் பெயர்களும், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் சிவகங்கை தொகுதியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் வேட்பாளர் தேவநாதன் மற்றும் தென்காசி தனித் தொகுதியில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஜான் பாண்டியன்’ ஆகியோர் பெயர்கள் பாஜகவின் பட்டியலில் வெளியானது.

இந்தப் பட்டியலை மொத்தமாகப் பார்த்தால் 24 தொகுதிகளில் பாஜக களம் காணுவது போன்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. திமுகவே நேரடியாக 21 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. ஆனால், பாஜக 24 தொகுதிகளில் போட்டி என எண்ணிக்கை வடிவில் தங்கள் வளர்ச்சியைக் காட்ட முயன்றிருப்பதும் இதில் தெரிகிறது.

பட்டியலில் உள்ள பாலிட்டிக்ஸ்! - அதேபோல், பாஜக வெளியிட்டிருக்கும் வேட்பாளர் பட்டியலில் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களே இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. அண்ணாமலை பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர்,குறிப்பிட்ட வகுப்பினரின் கட்சி என்ற இமேஜில் இருந்து வெளிவர பாஜக கட்சியில் முற்பட்ட பிரிவினர் எனச் சொல்லக் கூடியவர்கள் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டதாகவே பரவலாகப் பேசப்பட்டது.

தமிழகத்தில், முற்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கட்சி அரசியலுக்கு எடுபடாது என்பதால் இந்த நகர்வு முன்னெடுக்கப்பட்டது. அதுதான் தற்போது வேட்பாளர் பட்டியலில் தெரிகிறது. ஒருவர் கூட முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. கடந்த தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டிருந்த எச்.ராஜாவுக்குக் கூட இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதைப் பார்க்கும்போது இதனைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்திய அளவில் ஓபிசி அரசியலைக் கையிலெடுத்து செயல்படுத்தி வருகிறது பாஜக. அது 2021-ம் ஆண்டு தமிழகத்தில் அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் தொடங்கிவிட்டது. இந்த அடிப்படையில்தான் பாஜக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

திமுகவே 21 தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது. ஆனால், 24 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. எனவே, தமிழகத்தில் அண்ணாமலை மேற்கொண்ட யாத்திரை தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே பாஜக சார்பாக வாதங்கள் வைக்கப்படுகின்றன.

ஆனால், இந்த வாதங்கள் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்னவாக இருக்கும்? பாஜகவின் இந்தக் கட்டமைப்புகளால் தமிழகத்தில் வாக்கு அறுவடை செய்ய வாய்ப்பு இருக்குமா என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லும். நிழலா அல்லது நிஜமா தெரிய வரும் நாள் ஜூன் 4. காத்திருப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்