இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இது தேர்தல் ஆண்டுதான். பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 50 நாடுகள் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவருகின்றன. இந்தியா 18ஆவது பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் இந்த வேளையில், வரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போம்!
காத்திருந்த சவால்கள்: முதல் பொதுத் தேர்தலை நடத்தி முடிக்க இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையர் சுகுமார் சென் பட்டபாடு சொல்லி மாளாது. அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு, நாடு குடியரசாகிக்கொண்டிருந்த வேளை அது. இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த இந்தியா, வறுமையிலிருந்து விடுபடப் போராடிக்கொண்டிருந்தது.
பிரிவினையும் கலவரமும் ஏற்படுத்திய வடுக்கள், காந்தி படுகொலை என அசாதாரணமான சூழல். கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய மக்களை வைத்துக்கொண்டு, எடுத்த எடுப்பிலேயே அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்துவிட்ட நிலையில் தேர்தலை நடத்த வேண்டிய சூழல்.
முதலில் எப்படித் தேர்தலை நடத்துவது என்பதற்கு ஒரு சட்டம் வேண்டும் என்பதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் வடிவமைக்கப் பட்டது; நாடு முழுவதும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். யார் வாக்காளர்கள் என்பதைப் பட்டியலிடும் பணிகள் தொடங்கின.
» பாஜகவுடன் கூட்டணி: பாமக அறிவிப்பு | சேலம் கூட்டத்தில் பிரதமருடன் அன்புமணி பங்கேற்பு
» தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ராஜினாமா: தேர்தலில் போட்டியிடுகிறார்
ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு பெட்டி வைப்பது என்று முடிவு செய்து, தனித்தனி வாக்குப் பெட்டிகளைச் செய்து முடித்தனர். மக்களவையோடு சேர்த்து மாநிலசட்டமன்றங்களுக்கும் தேர்தலை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. 1951 அக்டோபர் 25 தொடங்கி 1952 பிப்ரவரி 21 வரை 68 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது.
‘காந்திக்குப் பிந்தைய இந்தியா’ என்ற நூலில், முதல் பொதுத் தேர்தல் பற்றி விரிவாக எழுதியிருக்கும் ராமச்சந்திர குஹா, சுகுமார் சென் நினைவுக் குறிப்போ, தன்வரலாறோ எழுதி வைக்கவில்லை என்கிறார். ஆனால், சுகுமார் சென் மேற்கொண்ட மகத்தான பணிகளைக் காலம் குறித்துவைத்துக்கொண்டது.
சில தகவல்கள் பெரும் ஆச்சரியமளிப்பவை. வாக்காளர்பட்டியல் தயாரிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பட்டியலை ஒரு கட்டத்தில் ஆய்வுசெய்த சுகுமார் சென், பெண்களின் பெயரை வட இந்தியாவில் காண முடியவில்லை என்று திகைத்திருக்கிறார். இன்னாரது மனைவி என்றோ, இன்னாரது மகள் என்றோதான் பெண் வாக்காளர்கள் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
அன்றைய காலத்தில் தனது மனைவியின் பெயரைப் பொதுவெளியில் பதிவுசெய்ய கணவர்கள் அனுமதித்து இருக்கவில்லை. வெறுத்துப்போன சுகுமார் சென், அந்தப் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, அசல் பெயர்களுடன் பெண் வாக்காளர்களைக் குறிப்பிட்டு புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கச் சொன்னார். அப்படி நாடு முழுவதும் நீக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை சுமார் 28 லட்சம்.
அன்றைய சூழல்: “முதல் தேர்தலில் போட்டிசமத்துவமாக இல்லை” என்று பதிவு செய்திருக்கிறார் லண்டனிலிருந்து வெளிவரும் ‘தி நியூ ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிகையின் செய்தியாளர் அமிதா மல்லிக். “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கிராமங்களுக்குச் சென்று வெள்ளைக்காரர்களை நாட்டைவிட்டு அனுப்பிவிட்டோம் என்று மட்டும் சொல்வது போதுமானதாக இருந்தது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் பொதுத் தேர்தலை ஒட்டி, மைசூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் தங்கி தேர்தல் நடைமுறைகளைக் கண்டறிந்து விரிவான ஆய்வுக் கட்டுரை எழுதிய சமூகவியல் அறிஞர் எம்.என்.நிவாஸ், “கிராமங்களில் ஒரு கிராம அரசியல் தரகர், ஒரு அரசியல் கட்சி, உள்ளூர் கிராம மக்கள் என மூவகையினரும் சேர்ந்து வாக்குகளை ஒருமுகப்படுத்துகின்றனர். இதனை ‘வாக்கு வங்கி’ என்று குறிப்பிடலாம்” என்று அதில் குறிப்பிடுகிறார். இன்றைக்கு அரசியல் களத்தில் பெருமளவு புழக்கத்தில் உள்ள முக்கியச் சொல் இது!
வென்று காட்டிய இந்தியா: ஒருகாலத்தில், இந்தியர்களுக்கு அரசாளவே தெரியாது என்றே மேற்கத்திய நாடுகள் கருதிக்கொண்டிருந்தன. அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்துத் தருவதாகக்கூடக் கூறின. இந்தியாவின் தலைவர்கள் அதை ஏற்கவில்லை. நேருவின் மறைவுக்குப் பிறகு இந்தியாவின் எதிர்காலம் என்னவாகுமோ என்று கருதிய நிலையில், நான்காவது பொதுத் தேர்தல் முடிந்த பின், ‘லண்டன் டைம்ஸ்’ பத்திரிகையின் டெல்லி நிருபர், “இந்தியாவைச் சுதந்திரச் சட்டகத்துக்குள் வளர்த்தெடுக்கும் முயற்சிகள் தோற்றுவிட்டன.
நடந்து முடிந்த நான்காவது பொதுத் தேர்தல்தான் சுதந்திர இந்திய ஜனநாயகப் பேரரசின் கடைசிப் பொதுத் தேர்தலாக இருக்கும்” என்று எழுதினார். மேற்கத்திய அறிஞர்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி 17 பொதுத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்து, உலகக் கணிப்புகளையெல்லாம் இந்திய வாக்காளர்கள் தகர்த்துவிட்டனர்.
அதிக நாள்கள் எடுத்துக்கொண்ட தேர்தலாக முதல் பொதுத் தேர்தல் அமைந்தது. ஏறத்தாழ நான்கு மாத காலம் முதல் தேர்தலுக்கு ஆனதென்றால், 1980இல் நடைபெற்ற ஏழாவது தேர்தலை நடத்திட இந்தியா எடுத்துக்கொண்டது நான்கு நாள்கள் மட்டுமே. அதன் பின் 10ஆவது தேர்தல் முதல், கடந்த 17 ஆவது தேர்தல் (2019) வரை வாக்குப்பதிவுக்கு மட்டுமே இந்தியா எடுத்துக்கொண்ட காலம் மூன்று முதல் ஆறு வாரங்கள்.
பொதுவாகவே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, நாடு முழுவதும் வேட்பு மனுக்களைப் பெற்று, பரிசீலித்து, நான்கு முதல் ஒன்பது கட்டங்களாக வாக்குப் பதிவுகளை நடத்தி, வாக்கு எண்ணிக்கை முடித்து, புதிய அரசு அமைக்கப்போவது யார் எனத் தெரிவிக்கத் தேர்தல் ஆணையம் எடுத்துக்கொள்ளும் காலம் 65 முதல் 75 நாட்கள்.
குறைந்தபட்சம் நான்கு கட்டங்களாகவோ, அதிகபட்சமாக ஒன்பது கட்டங்களாகவோ வாக்குப் பதிவு நடத்தி முடிக்கச் சராசரியாக இதுவரை எடுத்துக்கொண்ட காலம் 20 முதல் 40 நாள்கள் மட்டுமே. மே கடைசி வாரத்துக்குள் தேர்தலை நடத்தி முடித்துப் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் அளிக்க வேண்டும். அப்போதுதான் ஜூன் முதல் வாரத்தில் புதிய நாடாளுமன்றம் நிறுவப்பட ஏதுவாக இருக்கும்.
இத்தகைய சூழலில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேதி அறிவிப்பதற்கு இரண்டு நாள்கள் முன்பாக, தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டதும், அதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தமும் பேசுபொரு ளாகின. அதைத் தாண்டி, தேர்தல் பத்திர நடைமுறை குறித்து எழுந்த சர்ச்சைகளும், அதுதொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் பெரும் அரசியல் புயலை ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்த முறை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுவது குறித்தும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. எல்லாவற்றையும் கடந்து,இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டமைக்க விருக்கும் இந்தப் பொதுத் தேர்தல், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது!
- தொடர்புக்கு: arulselvan.senthivel@pondiuni.ac.in
To Read in English: Election time: History and expectations
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago