ஜான் கேஸில்: சுற்றுச்சூழலுக்காக ஒலித்து ஓய்ந்த குரல்

By ஆதி வள்ளியப்பன்

திவேகமாக நவீனமயமாகிவரும் உலகில் சுற்றுச்சூழலைக் காக்கக் குரல் கொடுத்துவந்த ஜான் கேஸில், ஜனவரி 11-ல் புற்றுநோயால் காலமானார். கிரீன்பீஸ் அமைப்பும், அவர் முன்னின்று வழி நடத்திய ‘வானவில் போராளி’ (Rainbow Warrior) என்கிற பாய்மரப் படகும் பெருநிறுவனங்களுக்கு எதிராக 80, 90-களில் புதுமையான வழிகளில் போராட்டங்களை முன்னெடுத்தவை. அவற்றின் மூலம் சுற்றுச்சூழல் அக்கறை சார்ந்து பரவலான மக்கள் கவனத்தை அந்த அமைப்பால் திருப்ப முடிந்தது. அந்த வகையில் ஜான் கேஸிலின் மரணம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியிருக்கிறது.

அடிப்படையில், ஜான் கேஸில் ஒரு தொழில்முறை மாலுமி. முழுப் பெயர் ஜோனதான் கிரஹாம் கேஸில். பிரிட்டனில் உள்ள சவுதாம்படனில் வணிகக் கப்பல் கல்லூரியில் படித்த அவர், சரக்குக் கப்பல்களில் துணை கேப்டன் நிலையில் வேலை பார்த்துவந்தார். 70-80களில் உலகெங்கும் உத்வேகமடைந்த சுற்றுச்சூழல் இயக்கம், அவரிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யிருந்தது.

கடல் போராட்டங்கள்

1978-ல் லண்டன் அறக்கட்டளை பணிகளுக்குத் தன்னார்வலராகச் செயல்பட்டபோது, கிரீன்பீஸ் இணை நிறுவனர் டேவிட் மெக் டக்கார்ட்டைச் சந்தித்தார். அப்போது பிரிட்டனில் கிரீன்பீஸ் அமைப்பின் செயல் பாடுகள் தொடக்க நிலையில் இருந்தன. அதன் ஒரு பகுதியாகப் படகுப் பிரச்சாரம் மேற்கொள்ள, படகு வாங்க உதவ முடியுமா என மெக் டக்கார்ட் கேட்டார். மீன்வள ஆராய்ச்சிப் படகு ஒன்றை வாங்குவதற்கு ஜான் கேஸில் உதவினார். அந்தப் படகை ‘வானவில் போராளி’ என்று மாற்றிய கிரீன்பீஸ் இயக்கம், உலகெங்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு எதிரான பயணங்களுக்கு அதைப் பயன்படுத்தியது. உலகளாவிய சுற்றுச்சூழல் போராட்டங்களுக்கான கடற்படையாகவே அதைப் பாவித்தது எனலாம். அதன் தளபதியாகத் திகழ்ந்தவர் ஜான் கேஸில்.

பிரிட்டன், ஃபிரான்ஸ் அணுஉலைகள், சட்டவிரோதமாகக் கழிவைக் கொட்டுதல், திமிங்கில வேட்டை, கட்டுப்பாடற்ற மீன்பிடிப்பு, காடழிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக அவரது தலைமையிலான வானவில் போராளிப் படகு முன்னின்று போராடி யுள்ளது. ‘ஒரு குற்றம் நடப்பதை நம்மால் தடுக்க முடியாவிட்டாலும் அந்தக் குற்றம் நடந்ததற்குச் சாட்சியாகவேனும் நிற்க வேண்டும். இதன்மூலம் தாங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என்பதைக் குற்றமிழைப் பவர்களுக்கு உணர்த்த வேண்டும்’ எனும் கொள்கை கொண்டவர் அவர்.

ஒருமுறை, திமிங்கில வேட்டைக்கு எதிரான கிரீன்பீஸின் பிரச்சாரத்தின்போது இவர்களுடைய படகை ஸ்பானிய கடற்படை கையகப்படுத்தியது. பிறகு, அந்தப் படகு எல் ஃபெரோல் ராணுவத் தளத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது. அங்கே அதன் இன்ஜின் செயலிழக்க வைக்கப்பட்டது. ஜான் கேஸிலும் அவருடைய குழுவினரும் ஐந்து மாதங்களுக்குச் சிறைப் பிடிக்கப்பட்டிருந்தனர். அதேநேரம், அந்தக் குழுவைச் சேர்ந்த பொறியாளர், அந்தப் படகிலிருந்து அகற்றப்பட்ட பாகங்களை விரிவாக வரைந்து கிரீன்பீஸின் உறுப்பினர்களிடம் கொடுத்தார். அந்தப் பாகங்களை வாங்கிவருவதற்காக இரண்டு பேர் ரகசியமாக லண்டனுக்குச் சென்றார்கள். எப்படியோ சமாளித்து, தேவைப்பட்ட பாகங்களைப் படகுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தனர். அடுத்த நாள் இரவில் ஸ்பானிய கடற்படையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, படகைக் கடலில் இறக்கினார் ஜான் கேஸில்.

மாலுமி இல்லாத படகு

1995-ல் பசிபிக் பெருங்கடலில் மொருரோவா பகுதி யில் உள்ள செயலற்ற எரிமலைப் பகுதியில் ஆறு அணுஆயுத சோதனைகளை நடத்த ஃபிரான்ஸ் திட்டமிட்டிருந்தது. மொருரோவா மலையின் வாய்ப்பகுதிக்கு ‘வானவில் போராளி’ மூலம் சென்று அணுஆயுத சோதனைகளைத் தடுக்க ஜான் கேஸில் திட்டமிட்டார். அதேநேரம் பிரெஞ்சு கடற்படை நிச்சயமாக இவர்களுடைய முயற்சியைத் தடுத்துவிடும் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தது. அதை முறியடிக்க அவர் ஒரு திட்டத்தை வகுத்தார். படகில் தலைமை மாலுமி நிற்கும் பகுதியிலிருந்து, தொலைவில் உள்ளவற்றைப் பார்த்து அறிவதற்கான பாய்மரக் கம்பத்தின் உச்சிப் பகுதிவரை ஒரு கம்பியைப் பொருத்தினார். அங்கிருந்து படகின் இன்ஜினையும் படகைச் செலுத்தும் ‘ஸ்டீயரிங்’கையும் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினார். அதாவது, மாலுமியே இல்லாமல் படகு சென்றுகொண்டிருந்தது. எதிர்பார்த்ததுபோலவே பிரெஞ்சு கடற்படை படகைக் கையகப்படுத்தியது. படகில் இருந்தவர்கள் முடக்கப்பட்டார்கள். அதற்குப் பிறகும் 12 மணி நேரத்துக்கு படகு எங்கும் நிற்காமல் சென்றுகொண்டிருந்தது. மாலுமி யாருமின்றி எப்படி இது சாத்தியம் என்று பிரெஞ்சுக் கடற்படையினருக்கு விளங்கவேயில்லை. பாய்மரக் கம்பத்தில் இருந்த ஜான் கேஸில்தான் இந்தத் தந்திரத்தைச் செய்தார் என்பதை அறிந்து அசந்துபோனது பிரெஞ்சுக் கடற்படை.

நடுக்கடல் குப்பைத்தொட்டி

1996-ல் ஷெல் எண்ணெய் நிறுவனம் வடகடல் பகுதி யில் நடுக்கடலில் இயங்கிவந்த ‘பிரென்ட் ஸ்பார்’ (Brent Spar) எனப்படும் எண்ணெய் சேமிப்புத் தொட்டியைக் கைவிடுவதற்குத் திட்டமிட்டிருந்தது. பிரென்ட் ஸ்பார், எண்ணெய்க் கிணற்றைத் தோண்டுவதற்கும் எண்ணெயைச் சேமிப்பதற்குமான அமைப்பு.

ஷெல் நிறுவனம் அப்படிச் செய்வது பெரு நிறுவனங்களின் கழிவுத்தொட்டியாக பெருங்கடல்களை மாற்று வதற்கான தொடக்கமாகிவிடும் என்று கிரீன்பீஸ் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்தது. பிரென்ட் ஸ்பார் பகுதியில் ஜான் கேஸில் தலைமையில் செயல்பாட்டாளர்களும் பத்திரிகையாளர்களுமாக 20 பேர் மூன்று வாரங்களுக்குத் தங்கிப் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில் செயல்பாட்டாளர்களை அங்கிருந்து வெளியேற்ற ஷெல் நிறுவனம் அரசிடம் அனுமதி பெற்றிருந்தது. இருந்தபோதும், இந்த விவகாரத்தில் கிரீன்பீஸ் அமைப்பின் பிரச்சாரத்தால் மக்களின் நம்பிக்கையை ஷெல் நிறுவனம் இழந்தது. அதன் காரணமாக வேறு வழியின்றி நடுக்கடல் கழிவுத்தொட்டி முயற்சியை ஷெல் நிறுவனம் கைவிட வேண்டி வந்தது. இதைத் தொடர்ந்து, அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் கழிவை வெளியேற்றும் முறை தொடர்பாகத் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய நிலை உருவானது. அதற்கு அச்சாரமிட்டது ஜான் கேஸில் உள்ளிட்டோரின் போராட்டம்.

சூழலியல் பாடங்கள்

இப்படித் தீவிரமாக இயங்கிவந்த ஜான் கேஸில், கிரீன்பீஸ் அமைப்பிலிருந்து பிற்காலத்தில் விலகி நின்றார். இதுவும் நமக்குப் பல்வேறு பாடங்களை வழங்கியுள்ளது. உலகப் பெருநிறுவனங்களுக்கு எதிராகத் துணிச்சலான போராட்டங்களை முன்னெடுத்த கிரீன்பீஸ் அமைப்பு, தன் அடிப்படை நோக்கங்களுக்கு மாறாகவும் புகழைக் காப்பாற்றிக்கொள்ளும் நோக்கத்துக்கும் நகர்ந்துவிட்டதாக அவர் கருதினார். இதை யடுத்து, அந்த அமைப்புடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டார்.

இன்றைக்கு இந்தியாவில் பெரும் சூழலியல் சீர்கேடுகளை நிகழ்த்திவரும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக மௌனம் சாதித்துவிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட சில திட்டங்களுக்கு எதிராக மட்டும் கொதித்து எழும் சில சுற்றுச்சூழல் குழுக்களின் செயல்பாடுகளுக்கும் கிரீன்பீஸ் அமைப்பின் மீது ஜான் கேஸில் முன்வைத்த விமர்சனங்களுக்கும் சில ஒப்புமைகள் உள்ளன. நாம் விழித்துக்கொள்ள வேண்டிய புள்ளி இது.

கிரீன்பீஸ் அமைப்பிலிருந்து விலகிய பின்னர், மனிதநேயச் செயல்பாடுகளில் ஜான் கேஸில் கவனம் செலுத்தினார். அமெரிக்காவின் ராணுவத் தளம் அமைக்கும் நடவடிக்கைகள் காரணமாக மொரீஷியஸ் அருகேயுள்ள சாகோஸ் தீவுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதை எதிர்த்துப் போராட தன் நண்பர்களுடன் சென்றார். ஆனால், அங்கிருந்து அவரும் அவரது குழுவினரும் வெளியேற்றப்பட்டனர். 2016-ல் ஜெர்மானியக் கடல் கண்காணிப்பு அமைப்பில் தன்னார்வலராகச் சேர்ந்து மத்திய தரைக்கடல் பகுதியில் அகதிகளை மீட்கும் பணியில் இறங்கினார்.

இப்படியாகத் தனது வாழ்நாள் முழுவதும், எதைச் சரியென நம்பினாரோ அதில் முழுமூச்சாக ஜான் கேஸில் ஈடுபட்டார். சுதந்திரச் சிந்தனையாளராக இருந்தார். இந்த உலகுக்கு அவர் விட்டுச் சென்றிருக்கும் செய்தி இதுதான்!

- ஆதி வள்ளியப்பன்,

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்