வெற்றிப் பாதையில் மீண்டும் காங்கிரஸ்...

By ஸ்மிதா குப்தா

ரா

ஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் பாஜகவைப் படுதோல்வி அடைய வைத்திருக்கிறது காங்கிரஸ். கடந்த ஆண்டு குஜராத் சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் கடுமையான போட்டியை ஏற்படுத்தி மோடியின் கோட்டை அரண்களைக் கிடுகிடுக்க வைத்த பிறகு, இந்த வெற்றி ஈட்டப்பட்டிருக்கிறது. அந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் வெற்றி வீரனாகவே வெளியே வந்தது காங்கிரஸ்.

இந்த வெற்றிகள், வறண்ட அரசியல் நிலப்பரப்பில் காங்கிரஸ் கட்சிக்குள் பூத்த புதிய மொட்டுகள். காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, ‘‘இன்னும் ஆறு வாரங்களுக்குள் புதிய காங்கிரஸை உருவாக்குவேன்’’ என்று வாக்குறுதி அளித்திருந்தார். இந்த ஆண்டு ராஜஸ்தான் உட்பட எட்டு மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. மக்களவைக்கான நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 2019-ன் கோடைக்காலத்தில் நடைபெற உள்ளது.

புதிய நம்பிக்கை

ராஜஸ்தானில் கிடைத்த வெற்றி காங்கிரஸுக்கு மட்டுமல்ல எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது. கடந்த வாரம் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பாஜகவின் வெற்றியைத் தடுத்து நிறுத்த முடியாது என்பது உண்மையல்ல என்ற கருத்தை வலியுறுத்தினார். பாஜகவின் வெறுப்பரசியலையும், மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையையும் எதிர்க்க தேசிய செயல் நிரல் உருவாக்கப்பட வேண்டும், எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் சில மாநிலங்களில் சேர்ந்து செயல்பட முடியாத நிலை இருந்தாலும் இந்தப் பொது ஒற்றுமை காக்கப்பட வேண்டும் என்றார். அதை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொண்டன.

எதிர்க்கட்சிகளிலேயே பிரதான கட்சியான காங்கிரஸின் கடமை பெரிது; நாட்டுக்கு முன்னிருக்கும் சவால்களைப் பட்டியலிட்டால் மட்டும் போதாது, செயல்திட்டங்களையும் வகுக்க வேண்டும். புதிய காங்கிரஸை உருவாக்க ராஜஸ்தானில் சச்சின் பைலட்டிடம் பொறுப்பை ஒப்படைத்ததைப் போல இளம் தலைவர் களுக்கு வாய்ப்புதருவது முக்கியமான விஷயம். அத்துடன் பாஜக மேற்கொள்ளும் பிளவு செயல்திட்டத்துக்கு வலுவான மாற்றை உருவாக்குவது, பல்வேறு பெரும் சமூகங்களின் இடஒதுக்கீடு கோரிக்கையைப் பரிசீலிப்பது, தலித் இயக்கத்தில் உள்ள இளம் செயல்பாட்டாளர்களின் விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பது ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும். ஊரகப் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் வழியையும், சமூகக் கொந்தளிப்புக்குக் காரணமாக இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்க்கப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்களையும் அடையாளம் காண வேண்டும்.

இந்தியாவுக்குப் பேராபத்தாக இருப்பது சகிப்புத்தன்மையின்மையும், வேலையில்லாத் திண்டாட்டமும்தான் என்று ராகுல் காந்தி சரியாக அடையாளம் கண்டிருக்கிறார். தனிப்பட்ட முறையில் கட்சியின் மூத்த தலைவர் களிடம் பேசும்போதுகூட மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட மத உணர்வுகளைக் களைவது அவசரத் தேவை என்று கூறியிருக்கிறார். வெவ்வேறு சமூகத்தவரிடம் சமநிலையை ஏற்படுத்த வேண்டும், சாதி முரண்பாடுகளைக் குறைக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த கட்சித் தலைவர்களை மட்டும் அழைத்து ஆலோசனை நடத்திய முதல் காங்கிரஸ் தலைவர் ராகுல்தான்.

காங்கிரஸ் எதிர்நோக்கும் அனைத்து முக்கியக் கேள்விகளும் குஜராத் தேர்தலின்போதும் பேசப் பட்டவைதான். காங்கிரஸ் என்றாலே ‘இந்து எதிர்ப்புக் கட்சி’ என்று முத்திரை குத்தும் வாய்ப்பை பாஜகவுக்குத் தராமல் மதச்சார்பின்மையைத் தூக்கிப்பிடிப்பது எப்படி என்று காங்கிரஸ் சிந்தித்தாக வேண்டும். நாட்டின் மக்கள்தொகையில் பாதி அளவுக்கு இருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மீண்டும் காங்கிரஸை நோக்கிக் கொண்டுவருவதற்கு என்ன செய்யலாம் என்று தீர்மானிக்க வேண்டும். காங்கிரஸின் முதுகெலும்பைப் போல அக்கட்சியை ஆதரித்துவந்த தலித்துகளை மீண்டும் காங்கிரஸுக்குள் கொண்டுவருவதற்கான உத்திகளைச் செயல்படுத்த வேண்டும். அதேசமயம், தாங்கள் புறக்கணிக்கப்படவில்லை என்ற நம்பிக்கையும் முஸ்லிம்களுக்கு ஏற்பட வேண்டும். குஜராத்தின் படேல்கள் (படிதார்கள்), மகாராஷ்டிரத்தின் மராத்தாக்கள், உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் போன்றவற்றின் ஜாட்டுகள் ஆகியோருடைய இடஒதுக்கீட்டுக் கொள்கை தொடர்பாக கட்சி என்ன முடிவெடுக்க வேண்டும் என்று உறுதிசெய்ய வேண்டும்.

முத்திரைச் சிக்கல்

குஜராத் சோம்நாத் ஆலயத்தில், ‘இந்து அல்லாதவர்’ பதிவேட்டில் ராகுல் கையெழுத்திட்டார் என்பதை பாஜக பெரிதுபடுத்தியதும் காங்கிரஸ் அதற்குப் பதில் கொடுத்தது; ‘அவர் சிவ பக்தர், பூணூல் அணிந்த பிராமணர்’ என்று விளக்கம் அளித்தது. இது பிராமணர் அல்லாதவர்களிடம் அதிருப்தியையும் பழைய காலக் கசப்பனுபவங்களையும் நினைவுபடுத்தியது. சமூக அடுக்கில் மேல்நிலையில் இருந்த பிராமணர்கள் பிற சமூகத்தவரை அடக்கி ஆண்டதை நினைவுபடுத்தியது. ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரை மதம், சாதி, இனம், பிரதேசம், மொழி கடந்த தேசியத் தலைவர்களாக மக்கள் வரித்துக்கொண்டனர். ராகுல் காந்தியும் அப்படித்தான் பார்க்கப்பட வேண்டும். பூணூல் அணிந்த பிராமணராக அல்ல என்பது காங்கிரஸில் பலருடைய அபிப்பிராயம். காங்கிரஸை ‘முஸ்லிம் ஆதரவுக் கட்சி’ என்று பாஜக தொடர்ந்து முத்திரை குத்திவருவதால்தான், ராகுலை ‘சிவ பக்தர், பூணூல் அணிந்த பிராமணர்’ என்று சொல்ல நேர்ந்தது என்று பதிலுக்குச் சமாதானம் கூறியிருக்கின்றனர்.

மதரீதியில் மக்களை அணிசேர்க்கும் பாஜகவின் உத்தியை எப்படி முறியடிப்பது என்று காங்கிரஸ் கட்சி யின் உயர்மட்டத் தலைவர்கள் தீவிரமாகச் சிந்தித்துவருகின்றனர். அதேவேளையில், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட மக்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் தேவை அறிந்து மாற்றுப் பொருளாதாரத் திட்டங்களை உருவாக்குவது குறித்தும் ஆராயப்படுகிறது. கிராமப்புற வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள், சிறு தொழில் பிரிவு கள் வளர்ச்சி ஆகியவற்றுக்குத் திட்டங்கள் தயாராகின்றன. கல்வியிலும் அரசு வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கிய மண்டல் கமிஷன் பரிந்துரை அமலுக்குப் பிறகு, சமூகத் தில் உள்ள சில சாதிகளைத் தேர்வுசெய்து ஒருங்கிணைத்து வெற்றியை ஈட்டுவதில் பாஜக தேர்ச்சிபெற்றிருக்கிறது. இந்து சமூகத்தின் மீது பாஜகவுக்கு உள்ள பிடியைத் தளரவைக்க, சமூக நீதிக்கு ஆதரவான திட்டத்தைக் கையிலெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது காங்கிரஸ்.

செய்ய வேண்டியவை

புதிய காங்கிரஸை உருவாக்குவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற முதலில் கட்சிக்குள் அமைப்புரீதியாகச் சில மாற்றங்களை ராகுல் மேற்கொள்ள வேண்டும். எதிர்காலத் திட்டங்கள் குறித்து காங்கிரஸின் மூத்த தலைவர்கள் மனம்விட்டு விவாதிக்கும் முந்தைய வழிமுறையை ராகுல் ஊக்குவிக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகு, 2014-15-ல் காங்கிரஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில்கூட தீவிரமாகப் பல விஷயங்கள் ஆராயப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தேர்தல்களில் பட்ட அடியால் ஏற்பட்ட காயங்களை ஆற்றும் திட்டம் தயாராக வேண்டும். 70 ஆண்டுகளுக்கு முன்னால் அனைத்துவகை சிந்தனைகளுக்கும் இடம்தந்த பெரிய கூடாரமாக இருந்ததைப் போன்ற நிலைக்கு காங்கிரஸ் தயாராக வேண்டும். 21-ம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப புதிய லட்சியங்கள், வழிமுறைகளுடன் காங்கிரஸை உருவாக்க வேண்டும்!

தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்