உலகின் சில ஆழ்கடல் பகுதிகளில் உயிர்வளம் நிறைந்த மீன்வளத் திட்டுகள் (Bank) உள்ளன. அவ்வாறான ஒரு மீன்வளத் திட்டு, இந்தியப் பெருங்கடலில் குமரிமுனைக்கு 50 கி.மீ. தெற்கில் அமைந்துள்ளது. 10,500 சதுர கி.மீ. பரப்புள்ள இத்திட்டை, தென் கடலோர மீனவர்கள் ‘சுறாப்பார்’ என்று அழைக்கின்றனர்.
மணப்பாட்டுக்குத் தெற்கு தென்கிழக்காக 54 கி.மீ. தொலைவில், 36 மீட்டர் ஆழம் தொடங்கி 180 மீட்டர் ஆழம் வரை செழுமையான மீன்வளம் கொண்ட பகுதி இது. இப்பரப்பு, குமரிமுனைக்குத் தெற்கே 63 கி.மீ. வரைவிரிகிறது; தென்மேற்காக 45 கி.மீ. தொலைவில் 9-60 மீட்டர் உயரமான கடலடிப் பாறைகள் சுறாப்பாரின் வடபுறமாக அமைந்துள்ளன.
தமிழ்நாட்டு மீனவர்களிடையே தற்போது கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய சிக்கல், காவிரிப் படுகையை ஒட்டிய ஆழ்கடல் பகுதியில் 8,108 ச.கி.மீ. பரப்பிலும் இந்தியப் பெருங்கடலில் குமரிமுனையைச் சூழ்ந்து மூன்று பகுதிகளில் 27,154 ச.கி.மீ. பரப்பிலும் ஹைட்ரோகார்பன் வளங்களை ஆய்வுசெய்யும் திட்டத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது என்பதே.
துரப்பணத்துக்காகக் கடலடித்தரை 2,800 மீட்டர் ஆழம் வரை துளையிடப்படலாம் என்றும், இப்புதிய திட்டத்தின் வழி 15 ஆண்டுகளில் 1,964 மில்லியன் மெட்ரிக் டன் ஹைட்ரோகார்பன் எடுக்கவிருப்பதாகவும் தெரிகிறது.
மத்திய அரசின் ‘ஹெல்ப்’ என்கிற அமைப்பு, ஹைட்ரோகார்பன் ஆய்வு உரிமம் வழங்குவதற்கான திட்டம். இந்த ஹெல்ப் நிறுவனம் தனியாருக்கு வழங்கவிருக்கும் உரிமத்தின் நிபந்தனைக் கூறுகள் கடல் சூழலியலுக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் பாதகமானவை: 1. அனைத்து வகையான ஹைட்ரோகார்பன்களுக்கும் அனுமதி; 2. எந்தவொரு தொகுதியையும் ஏலம் எடுக்க அனுமதி; 3. எடுக்கப்படும் ஹைட்ரோகார்பனின் சந்தை விலையை நிர்ணயித்துக்கொள்ள, யாருக்கு விற்பனை செய்வது என்பதைத் தீர்மானித்துக்கொள்ள அனுமதி.
ஆழ்கடல் துரப்பணம்: ஒரு கோடி முதல் 60 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடலடி நிலத்தில் புதைந்துபோன தொல்லுயிரிகள், நுண்ணுயிரிகளால் சிதைவுண்டு கரிமவேதிமம் ஆயின. அவை சேற்றுடன் சேர்ந்து, ஷேல் என்னும் மணல் துகள் போன்ற பாறைகளாயின.
ஷேலின்மீது மேலும் அதிக அடுக்குகள் படிந்து படிந்து ஏற்படுத்திவரும் அழுத்தத்தினால் அதிலிருந்து கரிம எண்ணெய் வெளியேறலானது. இவ்வாறு வெளியேறும் எண்ணெய், நாளடைவில், பூமியின் சிலவகை அசைவுகளினால் சுண்ணாம்புக்கல் பாறைகளுக்கிடையில் சேகரமாகியுள்ளன.
துளைகளற்ற, இறுகிய பாறைகளுக்கு இடையில் சிக்குண்டு கிடக்கும் பெட்ரோலிய எரிபொருளை உயர் அழுத்தத் திரவத்தைச் செலுத்தி, பாறைகளை உடைப்பதன் மூலம் (hydraulic drilling) உறிஞ்சியெடுப்பர். எண்ணெய் இருப்புகள் கிடைமட்டத்தில் உள்ள இடங்களில் கிடைக்கோட்டுத் துரப்பணக் கிணறுகளை உருவாக்குவார்கள். செங்குத்தாகத் தொடங்கி, கிடைக்கோட்டு எண்ணெய்வள இருப்பின் புள்ளியிலிருந்து கிடைமட்டத்தில் துரப்பணம் செய்யப்படுகிறது.
‘ஹெல்ப்’ திட்டத்தில் வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் பகுதிகளில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரியுள்ள துரப்பணக் கிணறுகளின் தன்மை (செங்குத்து முறை/ஷேல் முறை) குறித்து ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் அமைதி காக்கிறது என்பது இதில் உள்ள முக்கியமான சிக்கல்.
பலமுனைப் பாதிப்பு: எண்ணெய்த் துரப்பணத்தின் பாதிப்பு எண்ணெய்க் கசிவு மட்டுமல்ல; எண்ணெய் உற்பத்தி சார்ந்த நடவடிக்கையான துரப்பணம், துரப்பணத் திரவங்கள், நங்கூரச் சங்கிலிகளால் கடல் சூழலியல் பாதிக்கப்படுகிறது. மிக முக்கியமாக, துரப்பண அலகைக் கைவிடும்போது கழிவு வேதிமங்களும், உப உற்பத்திப் பொருள்களும் கடல் மட்டத்துக்கு 1,000 மீட்டருக்குக் கீழே வெளியேற்றப்படுகின்றன.
கைவிடப்பட்ட துரப்பணக் கிணறுகளிலிருந்து பெட்ரோலியக் கழிவுகள், மீத்தேன் உள்ளிட்ட பலவகை மாசுகள் ஒழுகி, கடலை நஞ்சாக்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் கடல் பகுதிகளில் 28,232 கிணறுகள் இப்படி நிரந்தரமாகக் கைவிடப்பட்டுவிட்டன. ஆழ்கடல்கள் என்பது மீன்கள் உள்ளிட்ட பல்வேறு கடலுயிர்களின் வலசைப் பாதை. நிரந்தரமான கட்டுமானங்களும் தொழில் நடவடிக்கைகளும் வலசை உயிரினங்களின் வாழ்க்கைச் சுழற்சியைப் பாதிக்கின்றன.
புவியின் நுரையீரல் பாதிப்பு: புவியில் உற்பத்தியாகும் உயிர்வளியில் 60% கடல்பரப்பிலிருந்து வருகிறது. அதன் காரணியான பச்சைய மிதவை உயிரிகளைப் புவியின் நுரையீரல் என்பர். கடலுயிர்கள் வளிமண்டலத்திலிருந்து கரையும் உயிர்வளியை நம்பி உயிர் வாழ்பவை. ஆழ்கடல்களில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 12 எண்ணெய்க் கப்பல் விபத்துகள் நிகழ்வதாகப் பன்னாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இப்படிக் கொட்டுகிற எண்ணெய், பல்லாயிரம் ச.கி.மீ பரப்பை மெல்லிய படலமாய் மூடிவிடும். அதனால் ஏற்படும் சூழலியல் இழப்புகள் ஏராளம். கடலின் உணவுச் சங்கிலியின் தொடக்கநிலை உணவு உற்பத்தியாளர்களான பச்சைய மிதவை உயிரிகளும் கடற்பாசிகளும் உற்பத்தித் திறனை இழந்துவிடும்.சங்கிலியின் அடுத்த நிலையிலுள்ள மிதவை விலங்கு உயிரிகளும் பிற உயிரினங்களும் உயிர்வளிப்பற்றாக்குறையால் அழிந்து போகும்.
திமிங்கிலம், ஓங்கில், கடல் சிங்கம் போன்ற கடல்வாழ் பாலூட்டிகள் மூச்சு விட மேற்பரப்புக்கு வரும்போது அங்கு படர்ந்து கிடக்கும் எண்ணெய், அவற்றின் மூச்சுப் பாதையில் புகுந்துவிடும். ரோமக் கவசம் கொண்ட பாலூட்டிகளின் தோல் எண்ணெய்ப் படலத்தால் மூடுண்டு, தோலின் வெப்ப ஒழுங்காற்றுத் திறனைக் குறைத்துவிடும். குளிர்ச் சூழலில் வெப்ப வீழ்ச்சியினால் அவ்வுயிரினங்கள் இறந்துவிட நேரும்.
ஆமைக் குஞ்சுகள் எரி எண்ணெயை உணவெனக் கருதி விழுங்கிவிடுகின்றன. கடலின் அசைவுகள் எண்ணெய்க் கழிவை மீன்களுக்கும், சிப்பியின மெல்லுடலிகளுக்கும் கொண்டு சேர்த்துவிடும். அதனால் உயிரினங்களின் நோய் எதிர்ப்புச் சக்தி இழக்கப்படும்.
மீன்களின் துடுப்பு, செவுள், இதயம், ஈரல் போன்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். கழிவு எண்ணெய் உயிரினங்களின் இனப்பெருக்கத்தைப் பாதிக்கும்.எண்ணெய்க் கசிவு விபத்தில் தப்பிப் பிழைக்கும் உயிரினங்கள் உணவுச் சங்கிலி நெடுக, சக உயிரினங்களுக்கு நஞ்சாக மாறிவிடுகின்றன.
ஒலி மாசு: ஆழ்கடல் தரைக்கு அடியில் எண்ணெய்வள இருப்பை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அதிர்வு-ஒலி சார்ந்த ஒன்று. அது டைனமைட் வெடி ஏற்படுத்தும் அதிர்வுக்கு நிகரான (செவிடாக்கும்) பேரொலி. கடலடித் தரைக்குக் கீழே, வாரக்கணக்கில், 24 மணி நேரமும் 10 நொடிகளுக்கு ஒரு முறைஅந்த வெடியதிர்வு
ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். கடலுயிர்களால் தாங்க முடியாத அதிர்ச்சி இது. துரப்பணப் பகுதிகளில் கடலுயிர்களின் வாழிடம் மொத்தமாய் அழிந்துவிடும். ஆழ்கடலில் நிகழும் துரப்பண நடவடிக்கையினால் பல்லுயிரினங்களின் சமநிலையும் உணவுச்சங்கிலியும் சீர்குலையும், மீன்வளம் வீழ்ச்சியடையும்.
தாக்க ஆய்வு தேவை: எண்ணெய்த் துரப்பணம் உள்ளிட்ட பெருந்தொழில் நடவடிக்கைகளுக்குக் குறிப்பிட்ட நிலத்தில் அனுமதி அளிப்பதற்கு முன்னால் அந்நிலம் குறித்த சுற்றுச்சூழல், சமூகத் தாக்க ஆய்வுகள் நிகழ்த்துவதும், மக்கள் கருத்தைக் கேட்டறிவதும் சார்ந்த அரசுத் துறையின் கடமை. ஆனால் மத்திய அரசு, ஆழ்கடல் துரப்பண நடவடிக்கைகளுக்கு மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டியதில்லை என்கிறது.
அதற்கு இசைவாக சுற்றுச்சூழல் விதிகளைத் திருத்தியாயிற்று. அது மட்டுமல்ல, உரிமம் பெறும் தனியார் நிறுவனம் ஆழ்கடல் பகுதிகளில் எந்த வழிமுறையில் (செங்குத்து முறை/ஷேல் முறை) துரப்பணம் நிகழ்த்தும் என்பதை இப்போது சொல்வதற்கில்லை என்று கூறுவது பொறுப்பற்ற செயலாகும்.
மக்களின் வாழ்வாதாரமாய் அமைந்திருக்கும் ஒரு பகுதியில் - கடலாயினும், நிலமாயினும் - காற்றாலை, துரப்பணம் போன்ற கட்டுமானங்களை அமைப்பதில் மக்களிடம் கருத்துக் கோருவது அரசின் கடமையாகும். கடலில் 12 கடல்மைல் எல்லை என்பது இறையாண்மை தொடர்பானதே ஒழிய, மீனவர்களுடைய வாழ்வாதாரப் பரப்பின் எல்லை அல்ல.
200 கடல்மைல் தனியுரிமைப் பொருளாதாரக் கடற்பகுதியிலுள்ள மீன்வளம் இந்தியர்களின் உணவாதாரம்; கடல்சார் மக்களின் வாழ்வாதாரம். இந்த அடிப்படைப் புரிதல் மத்திய அரசுத் துறைகளுக்கு இருப்பதாய்த் தெரியவில்லை.
உணவாதாரத்துக்கு முன்னுரிமை: காலநிலை மாற்றத்தினால் மனிதகுலம் சந்திக்கப்போகும் பிரச்சினைகளில் முதன்மையானது உணவுப் பற்றாக்குறை. காலம் தவறிய மழை, வறட்சி, பெருவெள்ளம் போன்ற காரணங்களால் உணவு தானிய உற்பத்தி வீழ்ச்சி அடைந்துவருகிறது.
இந்நிலையில், நாட்டுக்கு மதிப்பு மிகுந்த புரத உணவும், தொழிலும், அந்நியச் செலாவணியும் வழங்கிவரும் கடல் மீன்வளத்தை அரசு இயந்திரம் அலட்சியம் செய்வது உகந்ததல்ல. இலங்கை தனது கடல் பகுதியிலுள்ள மீன்வளங்களைக் காலந்தோறும் கருத்தாய் ஆராய்ந்து, முழுமையாய் அறுவடை செய்து வருகிறது.
பீட்ரோ பாங்க் மீன்வள வளர்ச்சியில் இலங்கை காட்டிவரும் முனைப்பை சுறாப்பார் மீன்வளத்தில் இந்தியா பின்பற்ற வேண்டும். உணவு உற்பத்தியில் தன்னிறைவை உறுதிசெய்வதே அரசின் முன்னுரிமை ஆக வேண்டுமே ஒழிய, பெருநிறுவனங்களுக்குச் சாதகமான துரப்பணத் திட்டங்களை வகுப்பதல்ல.
- வறீதையா கான்ஸ்தந்தின் | பேராசிரியர், கடல் சூழலியல் ஆய்வாளர் | தொடர்புக்கு: vareeth2021@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago