கா
விரிப் பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக மட்டுமே பார்க்காமல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாகப் படித்து, ஆக்கப்பூர்வமாக விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்கிறது தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் மூத்தப் பொறியாளர் சங்கம். அந்தச் சங்கத்தின் மாநிலச் செயலாளரும் தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் முன்னாள் சிறப்புத் தலைமைப் பொறியாளருமான அ.வீரப்பனிடம் பேசினேன்:
தீர்ப்பில் தமிழகம் எதிர்பார்த்தது என்ன, நடந்தது என்ன?
நிலத்தடி நீர் தொடர்பான பொருந்தாத புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தமிழகத்துக்குத் தர வேண்டிய 14.75 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடக அரசு முன்வைத்த 1972 - 1989-ம் ஆண்டுகளின் அடிப்படையிலான பழைய கால புள்ளிவிவரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. காவிரி நடுவர் மன்றத்தின் முன்பு கர்நாடக அரசின் சார்பில் முதல் சாட்சியாக விசாரிக்கப்பட்ட நிலத்தடி நீர் வல்லுநர் கே.ஆர்.கர்நாத், ‘நிலத்தடி நீரைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது; காவிரிப் படுகையில் உள்ள நிலத்தடி நீரை இரண்டாம் முறையாக இருப்பதாகக் கணக்கிடக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார். இதையெல்லாம் உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
காவிரிப் படுகையின் உண்மையான நிலத்தடி நீர் நிலவரம் என்ன?
தேவையான பயன்பாட்டுக்கும் குறைவாகவே இருக்கிறது. 1992-ல் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் முறையே 42%-ஆகவும், நாகையில் 100%-ஆகவும் நிலத்தடி நீர்ப் பயன்பாடு இருந்தது. ஆனால், 2013-ல் தஞ்சாவூரில் 102%-ஆகவும், திருவாரூரில் 79%-ஆகவும், நாகையில் 101%-ஆகவும் உயர்ந்துவிட்டது. தேவைக்கும் அதிகமான பயன்பாடு காரணமாக நிலத்தடி நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. நாகையின் பல இடங்களில் கடல் நீர் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளே புகுந்து நிலங்களில் உப்புத் தன்மை ஏறிவிட்டது.
இவற்றைத் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் எடுத்துச்சொன்னார்களா?
‘நர்மதா நதிநீர்ப் பங்கீட்டு தீர்ப்பாணையமும், கிருஷ்ணா நதி நீர்ப் பங்கீட்டு தீர்ப்பாணையமும் நிலத்தடி நீர் இருப்பைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. எனவேதான் காவிரி நடுவர் மன்றமும் நிலத்தடி நீர் இருப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த 1972, 1985, 1989 ஆகிய ஆண்டுகளில் இருந்த நிலத்தடி நீர் இருப்பை 2017-ம் ஆண்டில் இருப்பதாக எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்று விரிவாகவே அவர்கள் வாதிட்டார்கள். எதையும் நீதிமன்றம் பொருட்படுத்தவில்லை.
பெங்களுரூவுக்கு அளிக்கப்பட்ட சலுகை குறித்து..?
நிலவியல் அடிப்படையில் பெங்களுரூ 36% காவிரிப் படுகையில் இருக்கிறது. எனவே அதில் 20% தண்ணீரான 1.85 டி.எம்.சி-யை பெங்களுரூவின் குடிநீருக்காக வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதில் தவறில்லை. அதேசயம் பெங்களுரூ குடிநீர்த் தேவைக்கு நேத்ரா, துங்கபத்திரை ஆற்றிலிருந்தும் நீர் பெறலாம் என்பதை வழக்கறிஞர்கள் எடுத்துரைத்தும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. கர்நாடகத்தில் காவிரி நதி நீர்ப் படுகையிலிருக்கும் நிலத்தடி நீரைக் கணக்கில் கொள்ளவில்லை. கர்நாடகத்தில் காவிரி நதிநீர் படுகையிலிருக்கும் நிலத்தடி நீர் இருப்பை மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆண்டுதோறும் பதிப்பித்துவருவதை அறியாமல், ‘கர்நாடகத்தில் நிலத்தடி நீர் பற்றிய நம்பகமான புள்ளிவிவரங்கள் இல்லை’ (பக்கம் 438) என்று சொல்லிவிட்டது இந்த அமர்வு.
15 ஆண்டுகளுக்கு எதுவும் செய்ய இயலாது என்கிறது தீர்ப்பு. இனி என்னதான் செய்வது?
இந்த வழக்கு தனிநபர் தொடர்பானதல்ல. பல கோடி மக்களின் நலன் சார்ந்த வழக்கு. இதில் இதுவே இறுதி என்று அறுதியிட்டுச் சொல்வது சமூகநீதி அல்ல. இந்தத் தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு அனுப்பி மறுசீராய்வு செய்ய வேண்டும். அதில் தீர்ப்பின் தவறுகள் விவாதிக்கப்பட்டு சரிசெய்யப்பட வேண்டும். அதற்காக நீர்வளம் தொடர்பான அறிவியல்பூர்வமான தரவுகளை நீதிமன்றத்தில் வைத்துப் பேச வேண்டும். புள்ளிவிவரங்கள், தரவுகளின் அடிப்படையில் இந்தப் பிரச்சினையை ஆக்கப்பூர்வமாக அரசியல் கட்சிகள் அணுக வேண்டும்!
- டி.எல்.சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago