எதிர்த்தரப்பில் சம அளவிலான ஆற்றல் உருவாகும்போது சமத்துவத்துக்கான மனப்பான்மை உருவாகும் என்று சமூகவியல் தத்துவங்கள் கூறுகின்றன. ஆனால், ஆண்களுக்குச் சம அளவிலான ஆற்றலாக உலகம் தோன்றிய காலந்தொட்டே பெண்கள் இருந்து வந்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் ஏன் இன்னும் அவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற கேள்வி முக்கியமானது.
புதிய விஷயங்கள் அறிமுகமாகும்போது சமூகம் அதை உடனே இயல்பாக எடுத்துக்கொண்டதில்லை. ஒருபுறம் பரிசோதித்துப் பார்க்கும். மறுபுறம் எச்சரிக்கை விடுக்கும். நல்ல அம்சங்களைத் தமக்கேற்றவாறு உள்வாங்கி ஏற்றுக்கொள்ளும். அதுதான் சமூகத்தின், நாகரிகத்தின் வரலாறாகக் கருதப்படுகிறது.
வரலாற்றை நுணுகிப் பார்த்தோமானால், அதில் அங்கம் வகிக்கும் இலக்கியம், நம்பிக்கை, தத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றோடு ஆணுக்குப் பிணைப்பும் பெண்ணுக்கு விலக்கும் இருப்பதைப் பார்க்க முடியும்.
அதாவது சமூக, நாகரிக வளர்ச்சியில் பெண்ணுக்குப் பங்கு உண்டு என்றாலும், அதைச் சமூகம் முழுமையாக ஒத்துக்கொண்டதில்லை. மாறாக, பெண்ணுக்கு ஒழுக்கங்களைப் போதிக்கத் தொடங்கிவிடும். உதாரணத்துக்கு, காலனிய காலத்தில் உருவான சில நூல்களைப் பார்க்கலாம்.
ஒழுக்கவியல் நூல்கள்: பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் இந்தியாவுக்கு ரயில் வந்தபோது, சமூகம் அதை இயல்பாக எடுத்துக்கொள்ளவில்லை. சுண்டல், காபி அறிமுகமானபோது அடைந்ததைவிட ரயிலுக்கு அதிகமாகப் பதற்றம் அடைந்தது. காரணம், சுண்டலையும் காபியையும் அனுபவிக்கப் பொதுவெளிக்குப் போக வேண்டிய கட்டாயம் இல்லை.
குடும்பத்துக்குள்ளேயே வைத்துக்கொள்ள முடியும். ரயில் அப்படியில்லை. அதைப் பயன்படுத்தப் பொதுவெளிக்குப் போய்த்தான் ஆக வேண்டும். இதே காலத்தில்தான் பெண்கள் நவீனக் கல்விக்குள் வருவதும் நடந்தது. இதைச் சமூக ஒழுங்குக்கான ஆபத்தாகப் பார்த்த சமூகம், பெண்களுக்கான ஒழுக்கங்களை வரையறுக்கும் புதிய நூல்களை எழுதிக் குவித்தது.
அத்தகைய எழுத்து முறை தமிழுக்குப் பழையது என்றாலும் ரயிலின் வரவுக்குப் பிறகு எழுதப்பட்டவை முந்தையதைக் காட்டிலும் உள்ளடக்கத்தின் அடிப்படையில் புதியனவாக இருந்தன. அதாவது, ஆணுக்கு ஆன்மிகம் சார்ந்தும் பெண்ணுக்கு ஒழுக்கம் சார்ந்தும் எழுதுவது பெரும்போக்காக இருந்தது.
ஒப்பீட்டளவில் ஆணுக்கு எழுதப்பட்டதைவிடப் பெண்ணுக்கு எழுதப்பட்டவை அதிகம். உதாரணமாக, பொ.ஆ. (கி.பி.) 1914இல் ‘நீதிச் சிந்து என்னும் பெண்புத்தி மாலை’ என்றொரு நூலைச் சொல்லலாம். இது பதிவிரதைக்கான ஒழுக்கத்தை வரையறுப்பதற்குத் ‘தடிக்கழுதை’ என்னும் ஒரு பாத்திரத்தை ஓர் அளவுகோலாகக் கொண்டு எழுதப்பட்டதால், இதற்குத் ‘தடிக்கழுதைப் பாட்டு’ என்றொரு பெயரும் உண்டு.
இந்நூல் பெற்றோரை வணங்குபவள், கொலைகாரக் கணவனாக இருந்தாலும் அவனை வணங்குபவள், மாமியார் அடித்தாலும் அவரை நோகாது தன்னை நொந்துகொள்பவள், அடி பிசகாமல் தலைகுனிந்து நடப்பவள், கணவனைக் கடியாதவள், கூட்டுக் குடும்பத்தை விரும்புபவள், கதிரவன் எழுமுன் எழுந்து கணவன் எதிரில் வருபவள், குறைந்த அளவில் உண்பவள் போன்றவற்றை ‘பதிவிரதை’க்கான இலக்கணமாகக் குறிப்பிடுகிறது.
இதைப் போலவே 1887இல் இலங்கையிலிருந்து ‘இல்லற நொண்டி’ என்கிற நூல் வெளியானது. அது பெண்களை ‘நற்குணப் பெண் x துர்குணப் பெண்’ எனப் பகுத்து இருவகைப் பெண்களின் செயல்கள் குறித்துப் பேசியது. கூடவே, ‘உத்தம ஆண் x அதம ஆடவர்’ என்ற வகைமையில் ஆண்களுக்கான ஒழுக்க வரையறைகளையும் சொல்லியிருந்தது.
ஆனாலும் பெண்ணுக்கெனச் சொல்லப்பட்ட ஒழுக்கங்களின் அடர்த்திதான் அதிகம். இலங்கையில் 1864இல் தொடங்கியிருந்த ரயில் போக்குவரத்து, ‘இல்லற நொண்டி’ வெளியான 1880களில் அனைத்துத் தரப்பு மக்களின் விருப்பத்துக்குரியதாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே காலத்தில் ‘பதிவிரதை’ பற்றிய நாடகங்களும் அரங்கேற்றப் பெற்றிருக்கின்றன. சாவித்திரி கதை பல வடிவங்களில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. உதாரணமாக, 1900இல் வெளியான ‘பதிவிரத பாரம்யம்’ நூலைச் சொல்லலாம்.
இதன் முன்னுரையில், ‘பெண் கல்வி ஒருவாறு அபிவிர்த்தியாகிவரும் இக்காலத்தில், இவ்வுத்தம சரித்திரம் முக்கியமாய்ப் பெண்பாலார்க்கு மிகப் பயன்படுமெனக் கருதி இதனைத் தென்மொழியில் ஒரு நாடகமாகச் செய்யத் தொடங்கினேன்… க
ற்பு நிலைமையை நமது பெண்கள் பூஷணமாகக் கொண்டு, அதனின்றி சிறிதும் வழுவாமல் பிறந்த குலத்துக்கும் புகுந்த குலத்துக்கும் புகழுண்டாம்வண்ணம் நடப்பதற்கு இச்சிறுநூல் சிறிது உதவி புரியுமானால் அதுவே யான் அடைந்த பெரும்பேறாகும்’ என்கிறார் நூலின் ஆசிரியராகிய பி.எஸ்.சுப்பிரமணியர்.
இதன்வழி, நூல் எழுதப்பட்ட சூழலையும் தேவையையும் புரிந்துகொள்ள முடியும். ‘மகா பதிவிரதா சிரோன்மணியாகிய அருந்ததி கல்யாண நாடகம்’, ‘பதிவிரதாபூஷணமென்னும் ஸ்ரீகளுக்கு ஞானபோதினி’ (1902), புராணங்களில் வரும் பதினாறு பெண்களைப் பற்றிய ‘ஸ்திரீகள் பக்தவிஜய மென்னும் பதிவிரதைகள் சரித்திரம்’ (1917), ‘பதிவிரதா பூஷணம் எனும் ஓர் நீதிநூற் கதாவாசகம்’ (1923), ஆரோக்கியமாக இருக்கும் கணவனுக்கு மனைவி நோவுற்று இருந்தாலும் பணிவிடை செய்து பதிவிரதையாக வாழ வேண்டும் எனச் சொல்லும் ‘ஒரு பதிவிரதை சரித்திரம்’, ‘பதிவிரதா பராக்கிரமம் அல்லது சாவித்திரி சத்யவான்’ (1932) முதலிய நூல்கள் வெளியாயின.
இந்தச் சூழலை நன்கு அறிந்திருந்த பாரதியாரும்கூட பதிவிரதை குறித்த வெகுஜன மனநிலையை உள்வாங்கி, விமர்சனத் தொனியில் ‘பதிவிரதை’ என்றொரு குறுங்கட்டுரை எழுதியுள்ளார்.
சமூகக் கட்டமைப்பு: மொத்தத்தில், அந்த நூல்களின் உள்ளடக்கங்கள், ரயிலும் கல்வியும் ஏற்கெனவே இருக்கும் சமூகக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்திவிடுமோ என்கிற எண்ணத்தின் பிரதிபலிப்பாக இருந்தன. சில நூல்களில் ரயிலின் மீதான அதிருப்தி வெளிப்படையாகவே சொல்லப்பட்டது. சமூகத்தின் ஒழுங்குகள் பெண்களைச் சார்ந்ததாகவே பார்க்கப்பட்டு வந்தமையின் விளைவால் ரயில், நவீனக் கல்வி ஆகியவற்றின் வரவையொட்டி இத்தகைய நூல்கள் தோற்றம் பெற்றன.
பெண்கள் ரயிலைப் பயன்படுத்தியும் நவீனக் கல்விக்குள் வந்தும் மாறிய சூழலுக்கு ஏற்பத் தம்மைத் தகவமைத்துக்கொள்ளும்போது, அதற்கேற்றவாறு நூல்கள் வெளியாயின என்பதற்கு மற்றொரு உதாரணமாக, ‘Advice to Educated women’ (1870) என்னும் நூலைச் சொல்லலாம். இந்நூல் தமிழில் ‘பெண்டீர் ஒழுக்கம்’ என்னும் தலைப்பில் வெளியானது.
பிரிட்டிஷ் இந்தியாவின் சட்ட ஆலோசகரும் வரலாற்று அறிஞருமான சர் ஹென்றி மெய்ன், தன்னுடைய The Early History of the Property of Married Women (1873) என்னும் நூலில், “ஆணாதிக்கம் உள்ள குடும்பத்தில் பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட பெண் குழந்தை, யாராலும் பயிற்றுவிக்கப்படாமலேயே ஆணாதிக்கத்துக்குள் உள்ளடங்கிவிடுகிறது. காரணம், பழைமையைப் பாதுகாக்க விரும்பும் பெரிய குழுக்கள் யாவும் ஆணாதிக்கம் கொண்டதாகவே உள்ளன” என்கிறார்.
இந்திய, ரோமானிய இலக்கிய, புனித நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு எழுதப்பட்ட அந்நூலில், மெய்ன் குறிப்பிடும் - பெண்களை ஒடுக்குவதற்கான காரணங்கள், அக்காலத்திய தமிழ்ச் சூழலில் எழுதப்பட்ட ஒழுக்கவியல் நூல்களின் உள்ளடக்கத்தை ஒத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பு பெண்கள் குறித்துச் சமூகத்திடமிருந்த ஒருவகைப் புரிதல்; அது இன்று வெகுவாக மாறியிருக்கிறது.
சமகாலத்தில் சமூக வலைதளங்களைப் பெண்கள் பயன்படுத்தத் தொடங்கியதும் பத்தொன்பதாம் நூற்றாண்டு அளவுக்குச் சமூகம் பதற்றமடையவில்லை. மிக இயல்பாகவும் எச்சரிக்கை உணர்வோடும் எதிர்கொண்டது. ஒழுக்கவியல் நூல்கள் வெளியாகவில்லை.
காரணம், நூற்றாண்டு கால இடைவெளியில் ‘சமூகத்தின் ஒழுங்குகளுக்குப் பெண்கள் மட்டும்தான் பொறுப்பு’ என்கிற மனநிலை மாறியிருக்கிறது. அந்த மாற்றம் இன்னும் பற்றிப் படர வேண்டும். அது சாத்தியப்படும்போதுதான் சமூகத்தின் பார்வைக் கோணம் நேர்செய்யப்பட்டதாகச் சொல்ல முடியும். இந்த ‘நேர்செய்யப்படல்’ நோக்கிய நகர்வே பெண்களுக்குச் சமூகம் வழங்கும் நியாயமாக இருக்க முடியும்.
மார்ச் 8: சர்வதேச உழைக்கும் மகளிர் நாள்
- தொடர் புக்கு: jeyaseelanphd@yahoo.in
To Read in English: Change in women’s social standing: Past tension and present normalcy
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago