காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு பல்வேறு பாதிப்புகளுக்கு வித்திடும். இது ஏதோ இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான நீராதாரப் பிரச்சினை அல்ல. வாழ்வாதாரரீதியில், பண்பாட்டுரீதியில், சுற்றுச்சூழல்ரீதியில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் விஷயம் இது.
பெங்களூருவில் குடிநீர்த் தேவை, கர்நாடகத்தில் தொழிற்சாலைகளின் தேவைக்குக் கூடுதல் நீர் தேவை என்பதால்தான் கர்நாடகத்துக்குக் கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது என்கிறது உச்ச நீதிமன்றம். இது பண்பாடு, கலாச்சாரத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் விளைவு என்றே சொல்லலாம். அதாவது, மிக வேகமாக நடந்துவரும் நகரங்களின் பெருக்கத்தின் விளைவு இது. தமிழகத்திலும் இந்தப் பிரச்சினைதான். மேட்டூரிலிருந்து 5,000 கன அடி தண்ணீர் திறந்தால், கல்லணைக்கு 2,000 கன அடி தண்ணீர்தான் வருகிறது. இடையில் எத்தனையோ குடிநீர்த் திட்டங்களுக்குக் காவிரி நீர் பயன்படுத்தப்படுகிறது.
உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் கலப்பது வரை 800 கி.மீ. தூரம் பயணம் செய்கிறது காவிரி. இதில் 416 கி.மீ. தமிழகத்தில்தான் செல்கிறது. நடந்தாய் வாழி காவிரி என்கிறோம். உண்மை. தமிழ்நாட்டில்தான் அதிகம் பயணிக்கிறது காவிரி. அதேபோல், டெல்டாவில் மட்டுமே சுமார் 25,000 கி.மீ. தொலைவுக்குக் காவிரியின் கிளை நதிகள், வாய்க்கால் பிரிவுகள் உண்டு. இவற்றில் தண்ணீர் இல்லாமல் போனால் என்னவாகும் என்று நினைத்துப்பாருங்கள்!
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால், தமிழகத்தில் இருக்கும் இயற்கைச் சூழல் பெருமளவில் பாதிக்கப்படும். டெல்டா பகுதி என்பது ஒரு ஈர நிலம். புனல் நாடு என்றுதான் இதைச் சொல்கிறோம். நீர் பரவிக் கிடந்த அந்தப் பகுதியில் இன்றைக்கு இயற்கைச் சூழல் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்திருக்கிறது. இங்குள்ள வாய்க்கால் பகுதிகளில் முன்பு அத்தனை மீன்கள் இருக்கும். நீர்த்தாவரங்கள் இருக்கும். இப்போதெல்லாம் அவை அருகிவிட்டன. மேலும், ‘தமிழகத்தில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் இருக்கிறது. அதில் 10 டிஎம்சியை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்கிறது உச்ச நீதிமன்றம். இது துல்லியமான கணக்கீடு இல்லை. காவிரி டெல்டாவை காவிரிப் பிரிவு, வெண்ணாற்றுப் பிரிவு, புதுஆற்றுப் பிரிவு என்று மூன்றாகப் பிரிக்கலாம். இவை எல்லாவற்றிலும் நிலத்தடி நீராதாரம் மேம்பட்ட அளவுக்கு இருப்பதாகச் சொல்ல முடியாது. உதாரணமாக, காவிரிப் பாசனப் பகுதியில் கொஞ்சம் நிலத்தடி நீர் உண்டு. வெண்ணாற்றுப் பாசனப் பகுதியில் அது குறைவு. புது ஆற்றுப் பாசனப் பகுதியில் நிலத்தடி நீர் மிகக் குறைவு. இதில் 10 டிஎம்சி நிலத்தடி நீரை எங்கிருந்து எடுப்பது?
மட்டுமல்ல, நிலத்தடி நீர் என்பது தொடர்ந்து சுரக்க வேண்டும். ஆற்றில் நீர் இல்லாமல் அது எப்படிச் சாத்தியமாகும்? மழையும் குறைந்துவருகிறது. நன்னிலம், கொரடாச்சேரி, மன்னார்குடி வரைக்குமே நிலத்தடி நீர் அதிகம் எடுக்கப்படுவதால் உப்புத் தண்ணீர் கலந்துவிட்டது. மேலும், நிலத்தடி நீரை எடுத்தால் இனிமேலும் பாதிப்புகள் அல்லவா ஏற்படும்!
ஆற்றில் தண்ணீர் குறைவது என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, பிற உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம். டெல்டா பகுதிகளில் முன்பு அத்தனை எருமை மாடுகள் இருக்கும். இப்போது அவை கண்ணில் படுவதேயில்லை. எருமை மாடுகளுக்குத் தண்ணீரும் சேறும் நிறைய தேவை. இப்போது அதெல்லாம் எங்கே?
இயற்கைச் சூழலில் ஏற்படும் பாதிப்புகள் பண்பாட்டுரீதியிலும் வெளிப்படும். டெல்டாவை மருதநிலப் பகுதி என்பார்கள். இங்கிருக்கும் சிந்தனைக் கூறுகள், பண்பாட்டுக் கூறுகள் எல்லாம் இனி படிப்படியாக மறையும். இந்தப் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களை மக்கள் உடனடியாகக் கைவிட்டுவிடுவார்கள் என்பதல்ல. அந்தப் பண்பாடுகள் தொடரும். ஆனால், மாறிவரும் நிலப் பகுதிகளுக்குப் பொருந்தாமல் போகும். ஒரு பொருத்தமின்மை உருவாகும். ஆடிப்பெருக்குக் கொண்டாட்டத்தை ஓர் உதாரணமாக இங்கே காண்போம். டெல்டா பகுதிகளில் எல்லாப் பெண்களும் இதைக் கொண்டாடுவார்கள். இன்றைக்கு ஆற்றில் தண்ணீர் வருவதில்லை என்பதால், குழாயடி, ஆழ்துளைக் கிணறு, வீட்டுக் கிணறு ஆகியவற்றில் நீர் எடுத்துத்தான் இதைக் கொண்டாடுகிறார்கள். அதாவது, ஒரு பண்பாட்டுப் பழக்கம், மாறிவரும் சூழல் காரணமாக தன் பொருத்தப்பாட்டை இழக்கிறது. எத்தனை வேதனையான விஷயம் இது!
கிராமங்கள் என்பவை விவசாய அலகுகள். ஒரு கிராமத்தில் எத்தனை வேலி பயிர் செய்கிறார்களோ அதைப் பொறுத்துத்தான் மக்கள்தொகை உட்பட எல்லா விஷயங்களும் அந்தக் கிராமத்தில் அமையும். ஆற்றிலிருந்து கிராமத்துக்குத் தண்ணீர் கொண்டுவருவதற்குப் பாசன வாய்க்கால் இருக்கும். இன்றைக்கு, பாசன வாய்க்கால்கள் பாதி கிராமத்துக்குக்கூடத் தண்ணீர் கொடுப்பதில்லை. மேல்மடையில் மட்டும்தான் தண்ணீர் நின்றுகொள்கிறது. இனி கீழ்மடையில் இருக்கும் விவசாயிகளுக்கு அதிகமான விவசாயச் செலவும் குறைச்சலான விளைச்சலும் ஏற்படும். அதாவது, ஒரே விவசாய அலகாக இருந்த கிராமம், கொஞ்சம் ஆற்றுப் பாசனம் உள்ள பகுதி, ஆற்றுப் பாசனமே இல்லாத பகுதி என்று இரண்டு அலகுகளாகப் பிரியும். கிராமங்களின் அமைப்பே குலையும்.
ஆற்றுப் பாசனம் குறைந்து, இனி ஆழ்துளைக் கிணறு, மழையை நம்பித்தான் விவசாயம் எனும் நிலை உருவானால் பெரிய அளவிலான இடப்பெயர்ச்சி, நகரங்களில் அழுத்தம், மாற்றுத் தொழில் என்று பல்வேறு விஷயங்களை நாம் எதிர்கொள்ள நேரும். நாம் என்ன செய்யப்போகிறோம்?
இயற்கைச் சூழலில் ஏற்படும் பாதிப்புகள் பண்பாட்டுரீதியிலும் வெளிப்படும்.
டெல்டாவை மருதநிலப் பகுதி என்பார்கள். இங்கிருக்கும் சிந்தனைக் கூறுகள்,
பண்பாட்டுக் கூறுகள் எல்லாம் இனி படிப்படியாக மறையும்.
-தங்க. ஜெயராமன், ‘காவிரிக் கரையில் அப்போது...’ நூலின் ஆசிரியர்,
ஆங்கிலப் பேராசிரியர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago