கேள்விக்கு உள்ளாகும் உள் இடஒதுக்கீட்டின் எதிர்காலம்

By தி.திருமுருகன்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பட்டியல் சாதியினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டின் பலனை, அப்பிரிவுக்குள் உள்ள சில சமூகங்கள் மட்டுமே அனுபவிப்பதாகவும், ஏனைய பிரிவினருக்கு அதன் பலன்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும் பல ஆண்டுகளாக விமர்சனங்கள் நிலவிவந்தன.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதியரசர் ராமசந்திர ராஜு தலைமையில், 1996இல் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆணையம் பாிந்துரைத்தபடி, 02.05.2000இல் ஆந்திரப் பிரதேசப் பட்டியல் சாதிகள் இடஒதுக்கீடுகளுக்கான பகுத்தறியும் சட்டம் (Andhra Pradesh Scheduled Castes [Rationalisation of Reservations] Act, 2000) இயற்றப்பட்டு, உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

அச்சட்டத்தை, ‘இ.வி.சின்னையா எதிர் ஆந்திர மாநில அரசு’ (E.V.Chinnaiah -Vs.- State of Andhra Pradesh) என்ற வழக்கில் 05.11.2004 அன்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதேபோல் பஞ்சாப் அரசு 2006இல் கொண்டு வந்த பஞ்சாப் பட்டியல் சாதிகள் - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பணிகளில் இடஒதுக்கீடு) சட்டம் (The Punjab Scheduled Castes and Backward Classes [Reservation in Services] Act, 2006) என்னும் உள் இடஒதுக்கீடு சட்டத்தை, தேவிந்தர் சிங் தாக்கல் செய்த வழக்கில், கடந்த 29.03.2010இல் சண்டிகர் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதை எதிர்த்து பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. சின்னையா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபாிசீலனை செய்ய வேண்டும். ஏன்?

உள் இடஒதுக்கீடும் வழக்கும்: ஆந்திரம், பஞ்சாப் மாநிலங்களில் கொண்டுவரப்பட்ட பட்டியல் பிரிவில் உள் இடஒதுக்கீடு சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது போன்ற சூழல் தமிழ்நாட்டில் வந்துவிடக் கூடாது என்பதால், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி, நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தார்.

ஆணையத்தின் பாிந்துரையின்படி, 12.03.2009இல் அருந்ததியர் சட்டம் அமலாக்கப்பட்டது. பின்னர், திருத்த அரசாணை எண் 61ஐ வெளியிட்டு, அருந்ததியினருக்கு முன்னுரிமை அடிப்படையிலான ஒரு வாய்ப்பு (Opportunity on preferential basis) என்ற பொருளில், உள் இடஒதுக்கீட்டை மு.கருணாநிதி உருவாக்கினார்.

இச்சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சில வழக்குகள், உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, மேற்படி பஞ்சாப் மாநில அரசு வழக்குடன் இணைக்கப்பட்டன.

உள் இடஒதுக்கீடு குறித்தான வழக்கில் (State of Punjab and other Vs. Devendra Singh and others) 27.08.2020 அன்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், 1992இல் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் வழங்கப்பட்ட இந்திரா சாஹனி தீர்ப்பில் உள் இடஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், பட்டியல் பிரிவுக்குள் உள்ள மக்கள் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள் (Homogeneous Group) என்ற வாதம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதல்ல என்றும் கூறி, சின்னையா வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு (Larger Bench) மாற்றியது.

இவ்வழக்கு, தலைமை நீதியரசர் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு, 06.02.2024 முதல் 08.02.2024 வரை விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் கூறு 341 (1) குடியரசுத் தலைவரானவர் பட்டியல் சாதியினர் - பழங்குடியினர் ஆகியோரை அடையாளம் காணுதல் - வகைப்படுத்துதல் பற்றி மட்டுமே கூறுகிறது. மேலும், கூறு 341 (2)ஐ மீறிப் பட்டியல் பிரிவுக்குள் சில சமூகங்களைப் பட்டியலிலிருந்து சேர்க்கவோ நீக்கவோ இல்லை.

மேலும், அரசமைப்புக் கூறு 16 (4)இன்படி ஒரு மாநில அரசுக்குப் பின்தங்கிய வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கச் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது.

ஒரே பிரிவைச் சேர்ந்தவர்களா? - இந்திய அளவில் பட்டியல் பிரிவில் உள்ள அனைத்துச் சமூகங்களும் தனித்துவமானவை. தங்களுக்கென்ற உணவு, திருமணம், சடங்கு, வழிபாடு எனத் தனிப்பட்ட பண்பாட்டுக் கூறுகளைப் பட்டியல் பிரிவைச் சேர்ந்த வெவ்வேறு சமூகங்கள் கொண்டிருக்கின்றன. தங்களுக்கென்று தனித்துவமான அடையாளங் களுடன் வாழ்ந்துவருபவர்கள் இவர்கள். முக்கியமாக, இவர்கள் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லர்.

இங்கு சாதியம் ஏணிப்படி நிலையில் உள்ளது என்கிறார் அண்ணல் அம்பேத்கர். ஒவ்வொரு சமூகமும், தனக்குக் கீழ் ஒரு சமூகம் உள்ளதாகக் கருதி வாழ்ந்துவருகிறது. அதே ஏணிப்படி அமைப்பு, பட்டியல் சாதிகளுக்கு இடையிலும் உண்டு. ஏணிப்படியில் கீழ்நிலையில் வாழும் ஊமைச் சமூகங்களுக்கு உரிய வாய்ப்பு அளிப்பதன் மூலம் மட்டுமே விளிம்புநிலையில் உள்ள மக்கள் மையத்துக்கு வர இயலும். அதுவே உண்மையான சமூக நீதியாகும்.

அரசமைப்புச் சட்ட ஷரத்தும் மாநில உரிமைகளும்: 21.05.2007இல் மத்திய அரசு அமைத்த, நீதியரசர் உஷா மெஹரா தலைமையிலான ஆணையம் 01.05.2008இல் பட்டியல் பிரிவில் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்குத் தடையாக உள்ள அரசமைப்புச் சட்டத்தின் கூறு 341இல் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது; அதை அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை.

ஆந்திரம், தெலங்கானாவில் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய, மத்திய அரசின் அமைச்சரவைச் செயலாளர் ராஜிவ் கவ்பா சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

18.01.2024இல் கர்நாடக அமைச்சரவை, உள் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்புச் சட்டக்கூறு 341இல் திருத்தங்கள் செய்து, மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளது. எனவே, உள் இடஒதுக்கீடு விவகாரம் கூட்டாட்சித் தத்துவத்தின் கீழ் இயங்கும் மாநில அரசுகளின் உரிமை தொடர்பானதாகவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

வரலாற்றுக் கடமை: 26.02.2009இல் உடல்நலப் பிரச்சினையால் அருந்ததியினர் உள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் தருணத்தில் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதியால் சட்டமன்றத்துக்கு வர முடியவில்லை. அவர் கைப்பட எழுதிய அந்தச் சட்ட முன்வடிவின் அறிமுக உரையை, உள்ளாட்சித் துறை அமைச்சர் என்ற முறையில் அவையில் மு.க.ஸ்டாலின் வாசித்தார்.

இதற்கிடையே, “உடல்நலம் சரியில்லாத நிலையில் இச்சட்டத்துக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள்?” என மு.கருணாநிதியிடம் அதிகாரிகள் கேட்டபோது, “இது என் சொந்தப் பிரச்சினை” என அவர் பதிலளித்தாராம். பின்னர், மேற்படிச் சட்டம் இயற்றப்பட்டு, அதற்கான பாராட்டு விழாவின் ஏற்புரையில், “இச்சட்டம் எனக்கு நானே கோரிக்கை வைத்து, நானே இயற்றிக்கொண்டது” எனவும் அவர் கூறினார்.

தற்போது மேற்படி உள் இடஒதுக்கீடு வழங்குவதில் தமிழ்நாடு மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களுக்கும் சிக்கல் எழுந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இந்தியாவுக்கே சமூகநீதி, இடஒதுக்கீடு ஆகியவற்றில் முன்னோடியாகத் திகழும் தமிழ்நாடு அருந்ததியர் இடஒதுக்கீடு சட்டத்தைக் காக்கும் விதமாக, உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டி அரசமைப்புச் சட்டக் கூறு 341இல் உரிய திருத்தம் செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தும் அமைச்சரவைத் தீர்மானத்தை அனுப்பித் தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டும். கூடவே, அனைத்திந்திய அளவில் பட்டியல் சாதியினரில் பின்தங்கிய சமூகத்துக்கு உள் இடஒதுக்கீடு சட்டப்படியாகக் கிடைக்கப் பெற உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

- தொடர்புக்கு: thirumuruganbl83@gmail.com

To Read in English: Future of internal reservation in question

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்