குலசேகரப்பட்டினம்... தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் அமைந்துள்ள இந்த சிறிய ஊர் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) இரண்டாவது ராக்டெட் ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைப்பதற்காக கடந்த 28-ம் தேதி தூத்துக்குடியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.
ஏற்கெனவே, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் ஏவுதளம் உள்ளது. அங்கிருந்துதான் தற்போது ராக்கெட்கள் ஏவப்படுகின்றன. குலசேகரப்பட்டினத்தில் அமைய இருப்பது நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம்.என்றாலும், ஹரிகோட்டாவைவிட குலசேகரப்பட்டினம்தான் ராக்கெட் ஏவுவதற்கு பொருத்தமான இடம். எப்படி?
பொதுவாக, ராக்கெட் ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு அருகே அமைந்திருக்க வேண்டும். ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்கள் தென்துருவத்தை நோக்கி, கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து ஏவப்படும். இவ்வாறு ஏவப்படும் ராக்கெட்டின் முழு ஆற்றலும் பயன்படுத்தப்படும் என்பதால் அதிக எடை கொண்ட ராக்கெட்களைக் கூட எளிதாக ஏவ முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்களின் பாகங்கள் இலங்கை மீது விழுந்து விடக்கூடாது என்பதால் முதலில் கிழக்குநோக்கி ஏவப்பட்டு பின்னர், தென்துருவம் நோக்கித் திருப்பப்படுகிறது. இந்த முறையில் ஏவும்போது அதிகம் எரிபொருள் செலவாகும். ஹரிகோட்டா, பூமத்திய ரேகை பகுதியிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது.
ஆனால், குலசேகரபட்டினம் 8.36 டிகிரி வடக்கில் உள்ளது. எனவே, குலசேகரபட்டினத்தில் இருந்து ஏவும்போது ராக்கெட்கள் நேராக தென் திசையை நோக்கி ஏவப்படும். இதனால் எரிபொருளும் அதிகளவில் மிச்சமாகும்.
ஏவுதளம் அமைக்கப்படும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீ.க்கும் குறைவாக இருக்கவேண்டும். புயல், மழை தாக்கமும் குறைவாக இருக்க வேண்டும்.குலசேகரப்பட்டினம் இந்த அனைத்து அம்சங்களையும் பூர்த்திசெய்யும் இடமாக உள்ளதால்தான் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்துக்கு ராக்கெட்ஏவுதளம் வந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்பு வந்தும் கைநழுவிப் போனது சோகம். 1960-களில் சாதகமான நில அமைப்பும் தட்பவெப்பமும் கொண்ட தமிழகத்தின் தென்பகுதியில்தான் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க ‘விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் கமிட்டி’ திட்டமிட்டது. இந்தக் கமிட்டிதான் பின்னர் 1969-ல் இஸ்ரோ-வாக உருவானது. அப்போது என்ன நடந்தது என்பதை இஸ்ரோவில் பணியாற்றிய மூத்த விஞ்ஞானி நம்பிநாராயணன் தனது ‘Ready to Fire’என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் அண்ணா. தமிழகத்தில் விண்வெளி ஏவுதளம் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரோவின் தலைவராக இருந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் தலைமையிலான குழுவினர் வந்துள்ளனர். ஆனால், அண்ணாவுக்கு அப்போது கடுமையான தோள்பட்டை வலி. எனவே, வருவாய்த் துறை அமைச்சராக இருந்த கே.ஏ.மதியழகனை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், நீண்டநேரமாக விக்ரம் சாரபாய் காக்கவைக்கப்பட்டார். பிறகு, அமைச்சர் வந்துள்ளார். அவரை அவரது உதவியாளர்கள்தான் ‘அழைத்து’ வந்தனர். பேச்சுவார்த்தையின்போது பொருத்தமில்லாத, சாத்தியமற்ற கோரிக்கைகளை அமைச்சர் மதியழகன் வைத்துள்ளார். இதனால், எரிச்சலடைந்த விக்ரம் சாராபாய், ராக்கெட் ஏவுதளம் அமைவதற்கான இடம் தமிழகம் அல்ல என்று முடிவு செய்துள்ளார். அப்போது ஆந்திர அரசு ஸ்ரீஹரிகோட்டாவில் 26,000 ஏக்கர் நிலம் வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தது. இதையடுத்துதான், ஏவுதளம் அங்கு சென்றதாக தனது புத்தகத்தில் கூறுகிறார் நம்பி நாராயணன்!
50 ஆண்டுகளுக்கு முன்பே ராக்கெட் ஏவுதளம் தமிழகத்துக்கு வந்திருக்க வேண்டும். அவ்வாறு வந்திருந்தால் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள், தொழில் வளர்ச்சி என்று தென் தமிழகம் தற்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றிருக்கும். பின்னர், தமிழகத்துக்கு கனவாகவே இருந்த ராக்கெட் ஏவுதளம் தற்போதுதான் நனவாகி உள்ளது
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago