ஒரு தனிநபரின் மனநலம் என்பது அவரது மரபணுக்களாலும், மனோபலத்தாலும் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. சமூக உளவியல், தனிநபரின் மனநலத்தில் பெரும் பங்காற்றுகிறது. அதில் குறிப்பாக அரசியல் சூழல், அரசின் மீதுள்ள நம்பிக்கை போன்றவை சமுதாயத்தை மட்டுமல்லாமல், தனிநபரின் மனநிலை, உளவியல், ஆளுமை வளர்ச்சியைத் தீர்மானிக்கும் பெரும்சக்திகளாக இருந்துவருகின்றன.
இந்தியர்களின் சமூக-பொருளாதார நிலையை வகைப்படுத்திய சமூக உளவியல் நிபுணரான பேராசிரியர் குப்புசாமி, பரப்புரை பற்றி எழுதியவை 60 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட இன்றைய அரசியல் பிரச்சாரத்துக்குப் பொருந்துவது, பரப்புரையின் ஸ்திரத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
பரப்புரையில் தலைமைத்துவத்தின் பங்கு: சமுதாயத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் ஒரு பிரச்சினையைத் தீர்க்க ரட்சகன் யாராவது வரமாட்டாரா என்று ஒரு சாரார் ஏங்கிநிற்கும் வேளையில், அவர்களின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்துவைத்து, தீர்வை நோக்கி நகரும் நபரை ஒரு சமூகம் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறது.
ஆனால், தீர்வை நோக்கிய ஆக்கபூர்வமான கருத்துகளைத் தனது பேச்சாற்றல் மூலம் வெளிப்படுத்தி, மக்களைத் தன்பக்கம் ஈர்த்துக்கொள்பவர்கள்தான் தலைவர்களாக நிலைத்து நிற்க முடியும். ஒரு தலைவரின் பரப்புரை எடுபடுவதற்கு அவர் கவர்ச்சிகரமான நபராக மட்டும் இருந்தால் போதாது; மக்களின் வசீகரத்துக்கு ஆட்படத்தக்க மனநிலை (Suggestibility state) மிக அவசியம். அதே நேரத்தில், மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்துவதன் மூலம் மட்டுமே ஒருவர் தலைமைத்துவத்தை அடைந்துவிட முடியாது.
மையப்படுத்தப்பட்டுள்ள பிரச்சினையை ஆதரிக்கும் குழுக்களையும் எதிர்க்கும் குழுக்களையும் உளவியல்ரீதியாக உருவாக்கிய பின்னர், பல வழிமுறைகளில் தீர்வுகளைப் பிரச்சாரம் செய்வதன் மூலமே, வழிநடத்தும் நபர் என்ற அடையாளத்தைப் பெற முடியும்.
வசீகரத்துக்கு ஆட்படத்தக்க மனநிலை: ஒரு நிறுவனத்தின் தயாரிப்புக்காகச் செய்யப்படும் பரப்புரை விளம்பரங்கள் எவ்வளவு வசீகரமாக இருந்தாலும், அதை உள்வாங்கிக்கொண்டு ஏற்றுக்கொள்ளும் வசீகரத்துக்கு ஆட்படத்தக்க மனநிலை உள்ள வாடிக்கையாளர்களோ மக்களோ இல்லாவிட்டால், அந்தப் பரப்புரை வெற்றிபெறாது.
இதற்கு வசீகர முகமுள்ள, பிரபலமான, எல்லாப் பிரிவினருக்கும் நன்கு பரிச்சயமான நபர்கள் விளம்பர நிறுவனங்களுக்குத் தேவை. அப்படியான விளம்பரங்களை, வசீகரத்துக்கு ஆட்படத்தக்க மனநிலை உள்ள நபர்கள் அல்லது குழுக்கள் எந்தவித விமர்சன மதிப்பீட்டையோ பகுத்தறிவையோ பயன்படுத்தாமல் ஏற்றுக்கொள்வார்கள்.
இதற்காகத்தான் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டுசெல்லப் பிரபலமான நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்களை விளம்பரத் தூதுவர்களாகப் பயன்படுத்துகின்றன. இதே உத்தியை அரசியல் கட்சிகளும், கட்சியின் கொள்கை மற்றும் தேர்தல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்துவது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பெருகிவருகிறது.
பெரும்பான்மைக் கவர்ச்சி: பெரும்பான்மைக் கவர்ச்சி (Majority prestige) என்பது மனிதனின் உளவியலோடு கலந்த ஒன்று. ‘இந்தியாவில் பெரும்பான்மையான நபர்கள் இந்தப் பற்பசையைத்தான் பயன்படுத்துகிறார்கள்’ என்று புள்ளிவிவரத்தோடு வெளியிடப்படும் விளம்பரங்கள் எளிதில் வெற்றிபெறும். அதுவும் ஒரு பல் மருத்துவரே ஆய்வுக்கூடத்திலிருந்து பேசுவதைப் போல் சித்தரித்து காட்டப்படும் விளம்பரம் (Expert prestige suggestion) இன்னும் வலிமையாக இருக்கும்.
இது, ‘நீங்களும் இந்தப் பெரும்பான்மைக் கூட்டத்தில் சேர்ந்துவிடுங்கள்’ என்று விடுக்கப்படும் அழைப்பு. இதுபோலவே, ‘வரும் தேர்தலில் இந்தக் கட்சி அல்லது தலைவர்தான் பெரும்பான்மையான இடங்களைப் பெறுவார்’ என்று வெளியிடப்படும் கருத்துக்கணிப்புகள், மக்களின் மனதைப் பெரும்பான்மைக் கவர்ச்சியை நோக்கி திசைதிருப்பும் ஓர் உளவியல் உத்தியே.
கல்வியும் பரப்புரையும்: மேலோட்டமாகப் பார்த்தால் கல்வி, பரப்புரை இரண்டுமே மக்களின் மனநிலையை மாற்றும் குறிக்கோள் கொண்டவையாகவே தெரியும். இருந்தாலும், கல்வியினால் கிடைக்கும் அறிவு மட்டுமே பகுத்துச் சரிபார்க்கக்கூடியது. இந்த வித்தியாசத்தை உணர்ந்த நபர்கள் பொய்யான பரப்புரையை நம்புவதில்லை.
இதை உணர்ந்ததால் இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலி, ஜெர்மனி போன்ற அச்சு நாடுகளும், சோவியத் ரஷ்யா போன்ற நேச நாடுகளும் தங்கள் தலைவர்களைப் புகழ்ந்தும், எதிரிநாட்டுத் தலைவர்களை அழிக்கப்பட வேண்டியவர்களாகச் சித்தரித்தும், தாங்கள் போர் புரிய வேண்டிய அவசியத்தையும் வரலாற்றுப் பாடங்களில் கல்வி வாயிலாகப் புகுத்தி வெற்றியும் கண்டன.
நம்மைக் காலனியாதிக்கத்துக்கு உட்படுத்திய ஆங்கிலேயர்களும் இதே உத்தியைக் கையாண்டனர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களால், ‘இந்திய சுதந்திரப் போராட்டம்’ (war of Independence) என்று அழைக்கப்பட்ட காலனியாதிக்கத்துக்கு எதிரான போரை, ‘சிப்பாய்க் கலகம்’ (Sepoy revolt) என்று இன்றுவரை நம் மனதில் பதியும்படி செய்தது கல்வியின் மூலம் செய்த பரப்புரையினால்தான்.
கல்வியில் புகுத்தப்படும் பரப்புரைகள் உண்மை என்று நம்பும் சாத்தியம் அதிகம் என்ற உளவியலே இதற்கு அடிப்படை. ஆனால், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை வலியுறுத்திய ‘நாம் இருவர், நமக்கு ஒருவர்’ என்ற பரப்புரை முழக்கம் தொடங்கி, பொதுச் சுகாதாரம், தீண்டாமைஎதிர்ப்பு போன்ற பரப்புரைகள் கல்வியின் மூலம் புகுத்தப்பட்டு, மக்களின் உளவியலையும் வாழ்வையும் மாற்றியது இதன் வெற்றியாகவும் கருதப்படுகிறது.
பரப்புரையில் மொழியின் பங்கு: பரப்புரையில் நம்பிக்கையுள்ள தலைவர்களின் முதல் தேர்வு, மொழி. மக்களின் தேவையையும் உளவியலையும் உணர்ந்து, பரிச்சயமான மொழியில் உருவாக்கப்படும் முழக்கங்கள் (Slogans) தனிநபர் தொடங்கி, தேசிய அளவில் அரசியல் மாற்றங்களை விளைவிக்கும் ஆற்றல் படைத்தவை.
‘திராவிடம்’ என்ற வார்த்தை முழக்கம் தென்னிந்திய மாநிலங்களையும், ‘ஒரே தேசம் ஒரே மொழி’ என்ற முழக்கம் பெரும்பான்மை மொழி பேசப்படும் மாநிலங்களையும் உணர்வுபூர்வமாக ஒருங்கிணைக்கும் ஆற்றல் படைத்தவை. மாநிலக் கட்சிகள் மொழிவழி மாநில சுயாட்சியையும், தேசியக் கட்சிகள் ‘ஒரே தேசம் ஒரே மொழி’க் கொள்கையையும் ஆதரிப்பதன் நோக்கம், தங்களது பரப்புரையை மக்களின் மனதில் நிலைநாட்டி, அரசியல் பெரும்பான்மையைத் தக்கவைப்பதாகும். மொழியாற்றல் மிக்கவர்கள் தமிழக திராவிட அரசியலில் பெருந்தலைவர்களாக உருவெடுத்துள்ளது இந்தத் தொடர்புக்கான சிறந்த எடுத்துக்காட்டு.
பரப்புரையின் வெற்றியும் தோல்வியும்: பரப்புரை வெற்றி பெறுவதற்கு நேர்த்தியான முழக்கங்கள் அவசியம். முழக்கங்கள் அந்தந்தக் காலகட்டங்களின் தேவையை மக்களிடம் கொண்டுசேர்த்தன, மக்களைத் தலைமையின் கீழ் ஒருங்கிணைத்தன. ‘வெள்ளையனே வெளியேறு’, ‘வந்தே மாதரம்’ போன்ற முழக்கங்கள் ஆங்கிலேயர்களின் ஆயுதங்களைவிடக் கூர்மையாக இருந்ததால்தான் நாம் சுதந்திரம் பெற்றோம்.
ஒரு சிறு குழுவால் உருவாக்கப்படும், தவறான உள்நோக்கம் கொண்ட அரசியல் பரப்புரையும் சில நேரங்களில் வெற்றிபெற வாய்ப்பு உண்டு. அப்படி நடந்தால், அது நாட்டின் அழிவுக்கு வழி வகுத்துவிடும் என்பதை அச்சு நாடுகள் இரண்டாம் உலகப் போரின்போது செய்த பரப்புரைகளிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
‘வெகுஜன ஊடகங்களில் ஒரு பரப்புரை எந்த அளவுக்குத் திரும்பத் திரும்ப செய்யப்படுகிறதோ, அதைப் பொறுத்தே பரப்புரையின் வெற்றி இருக்கும்’ என்பது ஹிட்லரின் நம்பிக்கை. ஆரம்பத்தில் அச்சு நாடுகள் போர்முனையில் பெரும் வெற்றிகளைப் பெற்றுவருவதாகவும், நேச நாடுகள் தோல்வியைத் தழுவிவருவதாகவும் வானொலி மூலம் செய்யப்பட்ட பரப்புரை மக்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆனால், முடிவுகள் தலைகீழாக இருந்தன.
இன்றைய காலக்கட்டத்தில் அரசியல் கட்சிகளின் கொள்கை, தேர்தல் பரப்புரைகள், தொலைக்காட்சி விவாதங்களையும் சமூக ஊடகங்களையும் மட்டுமே நம்பியிருக்கும் நிலை உருவாகிவருகிறது. பரப்புரையின் சாதகபாதகங்கள் மக்களிடையே உருவாகும் எதிரெதிர் குழுக்களால் விவாதிக்கப்படுமாயின், அது ஆக்கபூர்வமான மாற்றத்தைச் சமூக உளவியலில் ஏற்படுத்தும்.
ஆனால், இந்த விவாதங்கள் செயற்கையாகவும், மக்களின் உளவியலை நோக்கிய மூளைச்சலவையாகவும் இருக்குமாயின் பரப்புரையின் நோக்கம் திரிக்கப்படலாம் அல்லது நீர்த்துப்போகலாம். தேர்தல் காலத்தில் செய்யப்படும் பரப்புரைகள் சாத்தியமானதாக இல்லாவிட்டாலும், வசீகரத்துக்கு ஆட்படத்தக்க மனநிலையில் உள்ளவர்களுக்குத் திருப்தியை ஏற்படுத்தும். அதே நேரம், சாத்தியமான பரப்புரையாக இருந்தாலும், எதிர்மனநிலையில் உள்ளவர்களுக்கு உளவியல் தாக்குதலாகவே அமையும்.
- தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com
To Read in English: Socio-psychological approach to propaganda
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago