பொருளாதாரத் தலைநகராகத் தூத்துக்குடியை அறிவிக்கலாமா?

By கௌதம சன்னா

சென்னையில் 2015 இல் கடும் வெள்ளம் ஏற்பட்டது; 2023 டிசம்பரில் சென்னை மீண்டும் வெள்ளக்காடானது. இதையடுத்து, தலைநகரை வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்று பலர் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எழுதினார்கள். தலைநகரை மாற்றுவது அவ்வளவு எளிதானதா?

தெலங்கானா உதாரணம்: ஆந்திரம் பிரிக்கப்பட்டு, தெலங்கானா என்ற மாநிலம் உருவாக்கப்பட்டபோது, அதற்குத் தலைநகராக ஹைதராபாத் அமைந்தது. தலைநகர் இல்லாமல் தள்ளாடிய ஆந்திரத்துக்குப் பத்தாண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது; ஆயினும் அமராவதியைத் தலைநகராக ஏற்றுக்கொண்டு, நிர்வாகத்தைக் கவனிக்கத் தொடங்கியது.

இதனால் நேர்ந்த சிக்கல்கள் அதிகம். ஹைதராபாத்தை இழந்த பிறகு, தனது தலைநகர் மூலதனத்தை மட்டுமல்ல, வணிகக் குறியீட்டு மதிப்பையும் (Brand value) ஆந்திரம் இழந்தது. ஒருகாலத்தில் பன்னாட்டளவில் நன்கு அறியப்பட்டு வணிக நிறுவனங்களை ஈர்த்த அந்நகரம், முதலீடுகளைப் பெறுவதற்காகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறது.

இன்னும் பத்தாண்டுகள் அது ஹைதராபாத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாலும்கூட, அதனால் பெரிய பயனில்லை. ஹைதராபாத் நிலையாக தெலங்கானாவுக்கு உரியது என்பதால், அதை நோக்கி வரும் அனைத்துப் பயன்களும் இயல்பாகவே தெலங்கானாவுக்குப் போய்ச் சேரும்.

அமராவதியைப் புதிய தலைநகராக அறிவித்தபோதிலும் தலைநகர் எனும் குறியீட்டு மதிப்புப் பிரச்சினையிலிருந்து முழுமையாக மீளவில்லை. அதனால், பன்னாட்டளவில் அமராவதியை இன்னும் நிலைநிறுத்தவும் முடியவில்லை. எனவே, அமராவதி சட்டமன்றத் தலைநகராகவும், கர்னூல் நீதித் துறைத் தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும் அறிவிக்கப்பட்டன. மகாராஷ்டிரத்துக்குத்தான் மும்பை, நாக்பூர் என இரண்டு சட்டமன்றத் தலைநகரங்கள் உள்ளன.

கிழக்கிந்தியக் கம்பெனி தனது நிர்வாகத்தில் 1853இல் நாக்பூரை மையமாக வைத்து ஒரு மாகாணத்தை உருவாக்கியதன் தொடர்ச்சிதான் அது. ஆனால், புதிய ஆந்திரத்தின் புதிய தலைநகரங்கள் நவீனக் காலத்தின் வளர்ச்சி; சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் அது நிச்சயம் பலன் கொடுக்கும். புதிய தலைநகரங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் ஓரளவு தன்னிறைவு பெறும்போது மாநிலம் முழுமைக்கும் அதன் தாக்கம் எதிரொலிக்கும்.

தமிழ்நாட்டின் தேவை: வெள்ளப் பாதிப்பின்போது மட்டும் தலைநகர் நலனைப் பற்றி யோசிப்பதால் பயனில்லை. தொலைநோக்குச் சிந்தனையோடு இப்பிரச்சினையை அலச வேண்டியது அவசியம். ஐரோப்பிய, அமெரிக்க மாதிரிகளை எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் தமிழ்நாட்டுக்கான ஒரு பொருளாதாரத் தலைநகர் இன்றைய முதன்மையான தேவை எனலாம்.

உலகின் பல நாடுகள் தங்களுக்கான பொருளாதார மாநிலத்தை அல்லது பெருநகரை அடையாளம் கண்டு முன்னிறுத்தியிருக்கின்றன. ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட், அமெரிக்காவின் நியூ யார்க் நகரம், ஜப்பானின் டோக்கியோ, இங்கிலாந்தின் லண்டன், ஆஸ்திரேலியாவின் சிட்னி, இந்தியாவுக்கு மும்பை போன்றவை உதாரணங்கள்.

இவற்றில் லண்டனைத் தவிர மற்ற நகரங்கள் அந்நாடுகளின் தலைநகரங்கள் அல்ல; தங்களது தொழில் வளத்தினால் அத்தகுதியைப் பெற்றவை. ஆனால், ஷாங்காய் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தொழில் தலைநகரமாகச் சீனாவுக்குத் திகழ்கிறது. இந்த வரிசையில்தான் சென்னை மாநகர் இயல்பான தலைநகரமாகப் பரிணமித்தது.

இந்தியாவில் மிக வேகமாக வளர்ச்சி காணும் ஐந்தாவது நகரமாகச் சென்னை அமைந்துள்ளது. இதனாலேயே சென்னையை நோக்கி மக்கள் இடம்பெயர்வது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.வளர்ச்சியே அதன் வேதனையாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை மழை நேரத்தின்போது பார்க்கிறோம்.

ஆந்திரத்தைப் போல மூன்று தலைநகரங்களை நாம் யோசிக்கவில்லை என்றாலும், பொருளாதாரத் தலைநகராக ஒரு நகரை இப்போதே அறிவித்துத் திட்டங்களைத் தொடங்குவதன் மூலம், எதிர்காலத்தில் எழக்கூடிய பெரும் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம்; பரந்துபட்ட அளவில் பெரும் வளர்ச்சியையும் காணலாம். அந்த வகையில், இன்றைய நிலையில் தூத்துக்குடி மாநகரும் அதன் மாவட்டமும்தான் தமிழ்நாட்டின் பொருளாதாரத் தலைநகரமாக இருக்க முடியும். இது எப்படிச் சாத்தியம்?

தூத்துக்குடியின் சாதக அம்சங்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்பட்டதன் மூலம் மதுரை ஏறக்குறைய தமிழ்நாட்டின் நீதித் துறையின் தலைநகராக மாறியிருக்கிறது. வழக்கு தொடர்பாகச் சென்னைக்கு வந்துபோகும் மக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. வளர்ச்சி அதிகரித்திருக்கிறது. மேற்கு மாவட்டங்களைப் பொறுத்தவரையில் சேலம், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர் ஆகியன ஒருங்கிணைந்த தொழில் மாவட்டங்களாகப் பரிணமித்துள்ளன.

எனவே, அவற்றைப் பொருளாதார நகரமாக அறிவித்தாக வேண்டிய அவசியம் எழவில்லை. திருச்சியைப் பொறுத்தவரை, ஏற்றுமதி இறக்குமதிக்கான உள்கட்டமைப்புச் சூழலே அங்கு இல்லை. இது தஞ்சை, நெல்லைக்கும் பொருந்தும். சரி, தூத்துக்குடிக்கு மட்டும் என்ன தகுதி இருக்கிறது என்னும் கேள்வி எழலாம்.

தூத்துக்குடி வரலாற்றுக் காலம் தொட்டே அயல்நாட்டினர் வந்து சென்ற துறைமுக நகரம்; முத்து வணிகத்தில் ஒருகாலத்தில் உலகப் புகழ்பெற்றதும்கூட. ஒரு வணிக அல்லது பொருளாதார நகரமாக வளர்வதற்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளான துறைமுகம், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து-சரக்குப் போக்குவரத்துக்கான சாலைக் கட்டமைப்பு ஆகியவை தற்போது இருக்கின்றன.

பெருநகரமாக வளரும்போது இவற்றை விரிவாக்குவதற்கான நிலமும் அங்கே இருக்கிறது. ஒரு பெருநகருக்குத் தேவையான மக்கள், சுமார் 3.5 லட்சம் பேர் அங்கு வசிக்கிறார்கள். கல்லூரிகள், பள்ளிகள் தேவையான அளவு இருக்கின்றன. புலம்பெயர்ந்து படிப்பதற்கு மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களும் இருக்கின்றன.

தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் தொழிற்சாலை அமைக்கப்படுவது அந்நகரின் முக்கியத்துவத்துக்குச் சமீபத்திய சாட்சியம். மத்தியஅரசு தொடங்கிவைத்துள்ள புதிய திட்டங்கள் இதற்கு ஊக்குவிப்பாக அமையும்.

அது மட்டுமின்றிப் பெருநகரமாக அது வளரும்போது, சென்னையைப் போல அரை வட்டமாக வளர்வதற்குத் தேவையான ஏராளமான நிலங்கள் தூத்துக்குடியில் இருக்கின்றன. தூத்துக்குடி துறைமுகம் கையாளும் சரக்குப் போக்குவரத்தைக் கவனித்துப் பாருங்கள். தென்கிழக்காசிய நாடுகளை இணைக்கும் இந்தியக் கடல் மையமாக அது விளங்கப்போவது புரியும்.

தூத்துக்குடியைப் பொருளாதாரத் தலைநகராக இப்போது அறிவித்தால்கூட, அடுத்த பத்தாண்டுகளில் அதன் மக்கள்தொகை மூன்று முதல் ஐந்து மடங்காகப் பெருகிவிடும். தொழில் தேடி சென்னை வரத் துடிக்கும் தென்னகத்து மக்களின் மாற்று இலக்காக அந்நகரம் மாறிவிடும். சாதிய வன்முறைகளும் பிற்போக்குத்தனங்களும் குறைந்து, மேம்பட்ட நகர வாழ்க்கையைத் தூத்துக்குடி மக்களும் அனுபவிப்பார்கள்.

சரி, தூத்துக்குடியில் கோடைக் காலத்தில் கடும் வெயிலும் குடிநீர்த் தட்டுப்பாடும் அதிகம் இருக்குமே, மக்கள்தொகைப் பெருக்கத்தினால் இது இன்னும் கூடுதலாகுமே என்று சிலர் கேட்கலாம். தூத்துக்குடி தாமிரபரணித் தண்ணீரை மட்டும் நம்பி இருக்க வேண்டும் என்பதில்லை.

துளி நீர்வளம் இல்லாத துபாய் நகரம் எப்படித் தனது குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்துகொள்கிறது? கடல் நீரைச் சுத்திகரித்துத்தானே? அது மட்டுமின்றி, சீமைக் கருவேல மரங்களால் சூழப்பட்டுள்ள தூத்துக்குடி விரைவில் பசுமைச் சோலையாக மாறிவிடும்.

தொழில், பொருளாதாரத் தலைநகராக அறிவிக்கப்படும்போது அதை நோக்கி வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெருந்தொழில் நிறுவனங்களுக்கும் தரிசு நிலங்கள்தான் இலக்கு. அவர்களின் தேவைக்கு அதைச் சோலையாக்கிவிடுவார்கள். ஏனெனில், அடுத்த பத்தாண்டுகளில் மரம் வளர்ப்பு பெரும் வணிகத் தொழிலாக மாறவுள்ள நிலையில், அதன் பயனாகத் தூத்துக்குடி நகரம் மட்டுமல்ல, அந்த மாவட்டமே வளம் பெறும்.

எனவே, இப்போதே விழித்துக்கொள்வது நல்லது. பொருளாதாரத் தலைநகரை உருவாக்கச் சில இணை அமைச்சர்களை உருவாக்கி, அவர்களின் மேற்பார்வையில் ஒரு துணைத் தலைமைச் செயலகத்தையும் அமைத்தால், தென் மாவட்டங்கள் விரைவாக வளர்ச்சி பெறும். தமிழ்நாட்டைத் துரிதப் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல இந்தப் பரிந்துரை வழிகோலும்!

- தொடர்புக்கு: writersannah@gmail.com

To Read in English: Will Thoothukudi be made TN’s economic capital?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்