காங். செல்வாக்கு Vs பாஜக வியூகம்... ‘ஹீட்’டான இமாச்சல் | மாநில நிலவர அலசல் @ மக்களவைத் தேர்தல்

By பால. மோகன்தாஸ்

மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் கள நிலவரம் குறித்து அலசி வருகிறோம். அந்த வகையில், தற்போது இமாச்சலப் பிரதேசம் குறித்து பார்க்கலாம். ஒருபக்கம் காங்கிரஸ் முன்வைக்கும் தனது மாநில ஆட்சியின் செல்வாக்கு, மறுபக்கம் ‘வாக்குச்சாவடி வாரியாக வாட்ஸ்அப் குழு’ உள்ளிட்ட பாஜகவின் வியூகம் என குளிர்மிகு இமாச்சலப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் களம் ‘ஹீட்’டாகியிருக்கிறது. வாருங்கள், சற்றே விரிவாகப் பார்ப்போம்.

இமயமலையில் அமைந்துள்ள மாநிலம் என்பதால் இமாச்சலப் பிரதேசம் மலையும் மலை சார்ந்த பகுதிகளாகவுமே இருக்கின்றன. கோடைக்காலத்தில் சிம்லா தலைநகராகவும், குளிர்காலத்தில் தரம்சாலா தலைநகராகவும் இருக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தின் ஆட்சி மொழி இந்தி. கூடுதல் அலுவல் மொழி சமஸ்கிருதம். கல்வி அறிவு 82.80%. ஆண்களின் கல்வி அறிவு 89.53%. பெண்களின் கல்வி அறிவு 75.93%.

ஆப்பிள் உள்ளிட்ட பழ வகைகள், பயிறு வகைகள், சிறுதானியங்கள், இஞ்சி, உருளைக்கிழங்கு ஆகியவை இங்கு அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதோடு, மாநிலத்துக்கு அதிக வருவாயை ஈட்டித் தருவதில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த மாநிலத்தில் பிலாஸ்பூர், சம்பா, ஹமிர்பூர், கங்ரா, கின்னோர், ஷிம்லா, உனா என 12 மாவட்டங்கள் உள்ளன. கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 68 லட்சத்து 64 ஆயிரத்து 602 பேர் வசிக்கிறார்கள். பாலின விகிதத்தை எடுத்துக்கொண்டால், ஆயிரம் ஆண்களுக்கு 972 பெண்கள் இருக்கிறார்கள்.

இந்த மாநிலத்தில் சம்பா, டல்ஹவுசி, பாட்டியாட், ஃபதேபூர், ஜாவாலி, தரம்சாலா, குல்லு, மணாலி, பர்சார், ராம்பூர் என 68 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில், 17 எஸ்சி தொகுதிகளும், 3 எஸ்டி தொகுதிகளும் அடங்கும். இதேபோல், கங்ரா, மாண்டி, ஹாமிர்பூர், ஷிம்லா என 4 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஒன்று எஸ்சி தொகுதி. இந்த மாநிலத்தில், இந்துக்கள் - 95.17%, முஸ்லிம்கள் - 2.18%, சீக்கியர்கள் - 1.16%, புத்த மதத்தவர்கள் - 1.15%, கிறிஸ்தவர்கள் - 0.18% என வசிக்கிறார்கள்.

இமாச்சலப் பிரதேசத்தில் 28 லட்சத்து 54 ஆயிரத்து 945 ஆண் வாக்காளர்கள், 27 லட்சத்து 37 ஆயிரத்து 845 பெண் வாக்காளர்கள், 38 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 55 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2022-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 73.71 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் 72.42 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அந்த வகையில் தேசிய சராசரியைவிட அதிக அளவில் மக்கள் வாக்களிக்கக்கூடிய மாநிலங்களில் ஒன்றாக இமாச்சலப் பிரதேசம் உள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுக்விந்தர் சிங் சுகு, மாநிலத்தின் முதல்வராக உள்ளார். பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வரான ஜெய்ராம் தாக்கூர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். இந்த மாநிலத்தில், காங்கிரஸும் பாஜகவுமே பிரதான கட்சிகளாக உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகள் தேர்தல் களத்தில் போட்டியிட்டாலும், அவற்றுக்கு மக்கள் ஆதரவு பெரிதாக இல்லை. ஒரு சதவீதம், இரண்டு சதவீதம் என்ற அளவிலேயே இக்கட்சிகளுக்கு வாக்கு வங்கி உள்ளது. 1985 முதல் காங்கிரஸும், பாஜகவுமே மாநிலத்தை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. அதேநேரத்தில், கடந்த 25 ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல்களில், காங்கிரஸைவிட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: 2019 மக்களவைத் தேர்தலில், மொத்தமுள்ள 4 தொகுதிகளிலும் பாஜகவே வெற்றி பெற்றது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக இந்த மாநிலத்தில் 69.70% வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 27.53% சதவீத வாக்குகளைப் பெற்ற போதிலும், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இந்தத் தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி 0.85% வாக்குகளையும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0.39% வாக்குகளையும் பெற்றன.

2014 மக்களவைத் தேர்தலில், மொத்தமுள்ள 4 தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றியது. இந்த தேர்தலில் அக்கட்சி 53.85% வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் கட்சி 41.07% வாக்குகளைப் பெற்றது. எனினும், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி 0.75% வாக்குகளையும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0.83% வாக்குகளையும் பெற்றன.

2009 மக்களவைத் தேர்தலில், 49.58 சதவீத வாக்குகளுடன் 3 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. 45.61 சதவீத வாக்குகளுடன் காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. 2004 மக்களவைத் தேர்தலில், 51.89 சதவீத வாக்குகளுடன் காங்கிரஸ் 3 இடங்களிலும், 44.24 சதவீத வாக்குகளுடன் பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. 1999 மக்களவைத் தேர்தலில், 46.27% வாக்குகளுடன் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக கூட்டணியில் போட்டியிட்ட இமாச்சல் விகாஸ் காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 39.52% வாக்குகளைப் பெற்றது. எனினும், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: அடுத்ததாக சில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து பார்ப்போம். கடந்த 2022 சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 43.90% வாக்குகளுடன் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக 43% வாக்குகளுடன் 25 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 0.35 சதவீத வாக்குகளையும், சிபிஎம் 0.66% வாக்குகளையும் பெற்றன. எனினும், இவ்விரு கட்சிகளும் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.

2017 சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜக 48.79% வாக்குகளுடன் 44 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி 41.68% வாக்குகளுடன் 21 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில், 1.47% வாக்குகளைப் பெற்ற சிபிஎம் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 0.49% வாக்குகளைப் பெற்றது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

2012 சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 42.81% வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பாஜக, 38.47% வாக்குகளுடன் 26 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. 4.52% வாக்குகளைப் பெற்ற இமாச்சல் லோகித் கட்சி ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ், சிபிஎம் போன்ற கட்சிகள் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

2007 சட்டமன்றத் தேர்தலில், 43.78% வாக்குகளுடன் 41 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. 38.90% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் 23 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 7.26% வாக்குகளைப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. சிபிஎம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

2003 சட்டமன்றத் தேர்தலில், 41% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 35.38% வாக்குகளைப் பெற்ற பாஜக, 16 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக செயல்பட்டது. இந்த தேர்தலில், இமாச்சல் விகாஸ் காங்கிரஸ் 5.87% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி, சிபிஎம் ஆகியவை ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

1998 சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 43.51% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 39.02% வாக்குகளைப் பெற்ற பாஜக 31 தொகுதிகளைப் பெற்ற போதிலும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. இமாச்சல் விகாஸ் காங்கிரஸ் 9.63% வாக்குகளுடன் 5 இடங்களில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி, சிபிஎம் ஆகியவை ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

வெற்றிக்கு வியூகம் வகுக்கும் பாஜக: கடந்த 1999 முதல் பெரும்பாலான மக்களவைத் தேர்தல்களில் பாஜகவே அதிக இடங்களில் வெற்றி பெற்றதைப் பார்த்தோம். பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர். அந்த வகையில், இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது நட்டாவுக்கு மிகவும் முக்கியம். இதைக் கருத்தில் கொண்டு அவர் கடந்த ஜனவரி முதல் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். தேர்தல் வியூகம் தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கட்சிக் கூட்டத்திலும் பங்கேற்று, 4 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான அவசியம் குறித்து நட்டா பேசி உள்ளார்.

திட்டங்களை அறிவித்து வரும் காங்கிரஸ் அரசு: அதேநேரத்தில், மிகுந்த நம்பிக்கையுடன் தனக்கு முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டதால், இந்தத் தேர்தலில் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுக்கு உள்ளது. பல்வேறு பெரிய வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. என்றாலும், அவற்றை அக்கட்சி நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், 1.36 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அடுத்ததாக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,500 நிதி உதவி அளிக்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கணவரை இழந்த பெண்களின் குழந்தைகளின் உயர் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். அதோடு, ஊழல் குற்றச்சாட்டு இல்லாத ஆட்சியை சுக்விந்தர் சிங் சுகு நடத்தி வருகிறார் என்ற நற்பெயரும் இருக்கிறது/

படஜெட்டில் விவசாயத்துக்கு முக்கியத்துவம்: இந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டில் விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. பிப்.17-ம் தேதி முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தாக்கல் செய்த 2024-25-க்கான நிதி நிலை அறிக்கையில், பசும்பாலுக்கான கொள்முதல் விலையை 38 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக உயர்த்தி அறிவித்திருக்கிறார். எருமைப் பாலுக்கான கொள்முதல் விலையை ரூ.38-ல் இருந்து ரூ.55 ஆக உயர்த்தி அறிவித்திருக்கிறார். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 10 விவசாயிகளுக்கு இயற்கை விவசாய தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிப்பதற்கான திட்டத்தையும் அறிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் சிறப்பு நிதியாக ரூ.4,500 கோடி ஒதுக்கி உள்ளார். இதுபோன்ற அறிவிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் பாஜக: அதேநேரத்தில், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருக்கின்றன என்றும், மக்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறி வரும் பாஜக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய உதவிகளை மாநில அரசு செய்யவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறது.

அதோடு, ஆட்சிக்கு வந்தால் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும், வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்றும் பாஜக குற்றம் சாட்டுகிறது.

இமாச்சல் பிரதேசத்தில் மொத்தம் 7,990 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வாட்ஸ்அப் குழுவை பாஜக உருவாக்கி இருக்கிறது. இக்குழுவின் மூலம் வாக்குச்சாவடி அளவில் மக்களோடு இணைப்பை வலுப்படுத்த அக்கட்சி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. பாஜகவின் தேர்தல் வியூகம் வெற்றி பெறுமா அல்லது ஆட்சி அதிகாரத்தில் உள்ள காங்கிரஸ் தனது செல்வாக்கை நிரூபிக்குமா என்பது போகப் போகத் தெரியும்.

முந்தைய அலசல்: பாஜக Vs காங்கிரஸ் - வலுவான மோதல் களமாக ராஜஸ்தான் | மாநில நிலவர அலசல் @ மக்களவைத் தேர்தல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்