வரலாறு புதினை விடுதலை செய்யுமா?

By சு.அருண் பிரசாத்

இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் நிகழ் வரலாற்றைப் பின்தொடர்வதற்கான திசைவழிகளில் ஒன்றாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2005இல் ஆற்றிய உரை ஒன்றில் இடம்பெற்ற இந்தக் கூற்று பரவலாகச் சுட்டப்படுகிறது: “சோவியத் ஒன்றியத்தின் உடைவு இருபதாம் நூற்றாண்டின் பெரும் புவிஅரசியல் பேரழிவு.”

1921-22ஆம் ஆண்டுகளில், ஒரு புதிய அரசுக் கட்டுமானமாகச் சோவியத் ஒன்றியம் நிர்மாணிக்கப்பட்டது. பெருங்கனவுடன் உருப்பெற்ற அந்தக் கட்டமைப்பு, 20ஆம் நூற்றாண்டின் திசைவழியைத் தீர்மானித்த சக்திகளுள் முதன்மையானது. என்றபோதிலும், அந்த நூற்றாண்டின் இறுதியைக்கூட எட்ட முடியாத அளவுக்கு உள்ளும் புறமுமாகப் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டதால், 1991இல் சோவியத் கட்டுமானம் உடைந்து சிதறியது.

சோவியத் ஒன்றியம் உடைந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும், உலக அரசியலின் போக்கைத் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாகவே அதன் விளைவுகள் இருந்துவருகின்றன. சோவியத்தின் ஆவி புகுந்துவிட்ட மேற்குலகின் ஆன்மா, சோவியத் பேரரசை மீண்டும் கட்டியெழுப்ப புதின் விரும்புவதாக நம்புகிறது.

சோவியத்துக்குப் பிந்தைய ரஷ்யாவை நோக்கிய மேற்குலகின், குறிப்பாக அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை ஆழம்கொண்டிருப்பது இந்தப் புள்ளியில்தான். ஆனால், இந்தப் புள்ளியைச் சுவடு தெரியாமல் அழிக்கிறது புதினின் மற்றொரு கூற்று: “சோவியத் ஒன்றியம் குறித்த நினைவேக்கம் இல்லாதவர்களுக்கு இதயம் கிடையாது; சோவியத் ஒன்றியத்தைத் திரும்பப் பெற விரும்புகிறவர்களுக்கு மூளையே கிடையாது.”

சோவியத்துக்குப் பிந்தைய உலகத்தை ஒற்றைத் துருவ மேலாதிக்கத்துக்குள் கொண்டுவருவதற்கு அமெரிக்காவை மையப்படுத்திய மேற்குலகம், புதினின் சொற்கள் வழி அதற்குரிய நியாயத்தைக் கட்டமைக்க முயல்கிறது. கடந்த நான்கு மாதங்களில் இஸ்ரேல் கொன்றுகுவித்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 30,000-ஐத் தொட்டிருக்கும் நிலையிலும், ஐ.நா.வில் போர் நிறுத்தத் தீர்மானத்தை ‘வீட்டோ’ அதிகாரம் மூலம் முறியடித்தது, அமெரிக்கா முன்வைக்கும் ‘நியாய’த்தின் சமீபத்திய உதாரணங்களில் ஒன்று; அமெரிக்கா ‘வீட்டோ’ செய்த மூன்றாவது போர் நிறுத்தத் தீர்மானம் இது.

இந்தப் பின்னணியில்தான், புதினின் உரைகளில் வெளிப்படும் அவரது மனம், மேற்குலகம் முன்வைக்கும் நியாயத்துக்கும் கட்டமைக்கும் வரலாற்றுக்கும் மாறான ஒன்றைப் பரிசீலிக்கும் சாத்தியத்தை நமக்கு வழங்குகிறது.

புதினுக்குத் தற்போது 71 வயதாகிறது; அவர் தன் வாழ்நாளில் 39 ஆண்டுக்காலம் சோவியத்தில் வாழ்ந்திருக்கிறார் (இது சோவியத்தின் ஒட்டுமொத்தக் காலத்தில் பாதிக்கும் சற்று அதிகம்). சோவியத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில், 2000ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ரஷ்யா அவரது ஆளுகையில்தான் உள்ளது (2000-2008 - அதிபர், 2008-2012 - பிரதமர், 2012 முதல் தற்போது வரை அதிபர்).

சோவியத் பேரரசை மீண்டும் கட்டமைக்கும் நோக்கம் தனக்கு இல்லையென்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் திட்டவட்டமாக அவர் வெளிப்படுத்திவந்தாலும், ரஷ்யாவை நோக்கிய மேற்குலகின் அணுகுமுறைக்கு எதிர்வினையாக அமையும் அவரது செயல்பாடுகளை, சோவியத்தின் மகோன்னதத்தில் ஒரு மாற்றுக் குறையாமல் இன்றைய ரஷ்யாவை நிலைநிறுத்தும் நடவடிக்கைகள் என்றே கருத இடமுண்டு.

அந்த வகையில், பாதுகாப்புக் கொள்கைக்கான மியூனிக் மாநாட்டில் 2007 மார்ச் 10 அன்று புதின் ஆற்றிய உரை, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ மூன்றாம் ஆண்டைத் தொட்டிருப்பதன் பின்னணியில் வரலாற்றில் அதன் இடத்தை மேலும் திடப்படுத்திக் கொண்டிருக்கிறது; 21ஆம் நூற்றாண்டின் வரலாற்றுக்கான ஆவணங்களில் ஒன்றாக அதன் கனம் கூடியிருக்கிறது.

அமெரிக்கா என்கிற ஒற்றைத் துருவத்தின் கீழ் சர்வதேச அமைப்பு உள்ளது; அமெரிக்காவின் பலம் எதிர்கொள்ள முடியாதது என 1990களின் இறுதி-2000இன் தொடக்கத்தில் மேற்கில் பரவலாக நிலவிய கருத்தாக்கத்தை அந்த உரையில் புதின் நேரடியாகத் தாக்கிப் பேசினார். நேட்டோவின் செயல்பாடுகள் பற்றிப் பேசும்போது, “நேட்டோ அதன் முன்னணிப் படையை எங்கள் எல்லைகளில் நிறுத்தியுள்ளது, இருந்தபோதிலும் நாங்கள் இதுவரை அதற்கு எதிர்வினை ஆற்றவில்லை.

நோட்டோ விரிவடைந்துவருவது ஆத்திரமூட்டும் வகையில் பரஸ்பர நம்பிக்கையைக் குலைக்கிறது. இது யாருக்கு எதிரான விரிவாக்கம் என்று கேட்கும் உரிமை எங்களுக்கு உள்ளது. வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டபோது, மேற்குலகக் கூட்டாளிகள் அளித்த உத்தரவாதங்கள் என்னவாகின?” எனச் சரமாரியான கேள்விகளால் புதின் மேற்குலகைத் துளைத்தார்.

சர்வதேச அரசியலில் மிகுந்த விவாதத்துக்கு உள்ளான இந்த உரை, அமெரிக்கா-அதன் கூட்டாளிகளுக்கு எதிரான ராஜாங்கரீதியிலான எச்சரிக்கை என்றும் விரிவடைந்து வரும் நேட்டோவுக்கு எதிராக ரஷ்யா பொறுமையிழந்து வருவதை உணர்த்துவதாகவும் அரசியல் நோக்கர்கள் அவதானித்தனர்; புதிய பனிப் போரின் தொடக்கம் என்றுகூடக் கருதினர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகின் பெரும்பான்மை நாடுகள் அமெரிக்கா தலைமையிலும் சோவியத் ஒன்றியத்தின் தலைமையிலும் இரண்டு முகாம்களாகப் பிரிந்தன. பாதுகாப்பை முன்னிறுத்தி அமெரிக்கா தலைமையில் நேட்டோவும் (North Atlantic Treaty Organization, NATO) சோவியத் ஒன்றியத்தின் தலைமையில் வார்சா ஒப்பந்தமும் உருவாக்கப்பட்டன; 1986இல் வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது.

நோட்டோ உருவாக்கப்பட்டதன் நோக்கம் சோவியத் உடைவுக்குப் பிறகு காலாவதி ஆகிவிட்டபடியால், அதுவும் கலைக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், ரஷ்யாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மேற்குலகம் நேட்டோவைக் கலைக்கவில்லை. மாறாக, சோவியத் முகாமில் இருந்த நாடுகளை நேட்டோவுக்குள் கொண்டுவந்தது. 1990களில் தொடங்கிய இந்தப் போக்கு, 2007-2008 காலகட்டத்தில் ரஷ்யாவின் எல்லைக்கு - உக்ரைன், ஜார்ஜியா - வந்து நின்றது. மியூனிக்கில் புதின் கொந்தளிக்க இதுதான் காரணம்.

1990கள் தொடங்கி அமெரிக்க அரசாங்கத்தில், அதன் வெளியுறவுத் துறையில் இடம்பெற்றிருந்தவர்களில் சிலர் நேட்டோவைக் கொண்டு ரஷ்யாவை நெருக்குவது குறித்துத் தொடர்ச்சியாக எச்சரித்துவந்துள்ளனர். 2008இல் ருமேனியத் தலைநகர் புஷாரெஸ்ட்டில் நடைபெற்ற நேட்டோ ஆண்டுக் கூட்டத்தில், அப்போதைய ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல், அப்போதைய பிரான்ஸ் அதிபர் நிகொலஸ் ஸர்கோஸி ஆகியோர் ‘உக்ரைனும் ஜார்ஜியாவும் நோட்டோவில் இணைவதை ரஷ்யா ஏற்காது; அதைத் தன்னுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கும்’ என்று எச்சரித்தனர்.

அதே காலகட்டத்தில், ரஷ்யாவுக்கான அமெரிக்கத் தூதராக இருந்தவரும் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ-வின் தற்போதைய இயக்குநருமான வில்லியம் பேர்ன்ஸ், அமெரிக்க அரசுக்கு அனுப்பிய ரகசிய அறிக்கையில், உக்ரைனும் ஜார்ஜியாவும் நோட்டோவில் இணைவதை ரஷ்யாவின் அரசியல்வாதிகள் கட்சிப் பாகுபாடின்றி எதிர்க்கின்றனர், இக்கொள்கை நிலை தொடரும்பட்சத்தில், ரஷ்யா ராணுவ நடவடிக்கையில் இறங்கும் என்றும் எச்சரித்திருந்தார்.

எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் ஜார்ஜியாவை நேட்டோவில் இணைப்பதற்காக 2009இல் அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. எனினும் ஜார்ஜியாவில் விட்டதை உக்ரைனில் பிடிப்பதற்காக அப்போது தொடங்கிய நடவடிக்கைகள், பல்வேறு நிலைகளைக் கடந்து 2022 பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது ரஷ்யாவைப் போர் தொடுக்கவைப்பதில் வந்து நின்றன.

இந்த இரண்டு ஆண்டுகளில், உறவு நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கிய ராணுவ உதவியில் 44% (சுமார் ரூ.4,400 கோடி) உக்ரைனுக்குச் சென்றுள்ளது. 2023 செப்டம்பர் வரை ரூ.8,000 கோடி அளவுக்கு ஆயுத ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதில் ரூ.5,000 கோடிக்கு மேல் ஐரோப்பியக் கூட்டாளிகளுக்குச் சென்றிருப்பதாகவும் (வழக்கத்தைவிட ஐந்து மடங்கு அதிகம்) அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கிறது. ஆக, இந்தப் போர் உண்மையில் யாருக்கு இடையிலானது?

2015இல், ஐ.நா.வின் 70ஆம் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய புதின், மேற்குலகை நோக்கி எழுப்பிய கேள்வி இன்று இன்னும் கூர்மையடைந்திருக்கிறது. “இந்த நிலையை உருவாக்கியவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்: நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதைக் குறைந்தபட்சம் இப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா?”

வரலாறு இன்று வந்தடைந்திருக்கும் புள்ளி இதுதான்.

- தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in

To Read in English: Will history liberate Putin?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்