“அன்புள்ள ராகுல்ஜி! இந்தியாவை ஒருங்கிணைக்கும் பயணத்தை விட்டுவிட்டு, ‘இண்டியா’ கூட்டணியைக் காப்பாற்றும் பயணத்தைத் தொடங்குங்கள்” என்று பாஜகவினர் கேலி செய்யும் அளவுக்குக் காங்கிரஸ் பல்வேறு சோதனைகளைச் சந்தித்து வருகிறது. ஒருபுறம் கமல் நாத் உருவாக்கிய களேபரம், கட்சியிலிருந்து மேலும் பல முக்கியத் தலைகள் விலகலாம் என்கிற சூழல்; இன்னொரு புறம் யாத்திரையில் பங்கேற்க அகிலேஷ் யாதவ் விதித்த நிபந்தனை எனப் பல சவால்கள்.
இவ்வளவுக்கும், சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு விவகாரத்தில் பாஜகவுக்குத் சட்ட ரீதியிலும், தார்மிக ரீதியிலும் ஏற்பட்ட பின்னடைவு, விவசாயிகள் போராட்டத்தால் பாஜக அரசுக்கு எதிராக எழுந்திருக்கும் விமர்சனங்கள் எனப் பல சாதக அம்சங்கள் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் திணறுகிறது இண்டியா கூட்டணி.
கலகம் செய்த கமல் நாத்: மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுஹான் ஆட்சிக்கு எதிரான மனநிலை பரவலாக எழுந்த நிலையில், 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. ஆனால், தலைமைக்குக் கட்டுப்படாமல் கமல் நாத் தன்னிச்சையாகச் செயல்பட்டு வெற்றிவாய்ப்பைத் தவறவிட்டுவிட்டார் எனப் பேசப்பட்டது.
உடனடியாக, காங்கிரஸ் தலைவர் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டு ஜிட்டு பட்வாரிக்குக் கொடுக்கப்பட்டது. அதிருப்தியடைந்த கமல் நாத், மாநிலங்களவையிலாவது இடம் கிடைக்குமா எனக் காத்திருந்தார். அதுவும் இல்லை என்றானதும் கலகம் பண்ணத் துணிந்தார்.
தனது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் டெல்லியில் முகாமிட்டு பாஜக தலைவர்களிடம் அவர் பேச முயல்வதாகத் தகவல்கள் வெளியாகின. திக் விஜய் சிங் மூலம் கமல் நாத்தைச் சமாதானப்படுத்த பெரும் முயற்சிகள் நடந்தன. டெல்லியில் கமல் நாத்தின் நம்பிக்கைக்குரிய காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் வர்மா ஒன்றரை மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ஒருவழியாக அவர் இறங்கிவந்திருக்கிறார். மத்தியப் பிரதேசத்துக்குள் மார்ச் 2ஆம் தேதி நீதி யாத்திரை நுழையும் எனத் திட்டமிடப்பட்ட நிலையில்தான் இவ்வளவு களேபரங்கள் நடந்தேறியிருக்கின்றன.
தொடர் நெருக்கடிகள்: உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதியுடன் தொகுதிப் பங்கீட்டில் இன்னமும் தாமதம் செய்கிறது காங்கிரஸ். 2009இல் தனித்து நின்று காங்கிரஸ் வென்ற 21 இடங்கள் வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய் வலியுறுத்திவந்தார். இத்தனை ஆண்டுகளில் அரசியல் களம் எவ்வளவோ மாறிவிட்டது என்று சமாஜ்வாதி தலைவர்கள் சொன்னாலும் காங்கிரஸ் விடாப்பிடியாக நிற்கிறது. உத்தரப் பிரதேசத்துக்குள் ராகுலின் நீதி யாத்திரை நுழைந்துவிட்டாலும், தொகுதிப் பங்கீட்டில் ஒரு முடிவுக்கு வந்தால்தான் அந்தப் பயணத்தில் பங்கேற்போம் என்று அகிலேஷ் யாதவ் ஆணித்தரமாகச் சொல்லிவிட்டார்.
ரேபரேலிக்கு ராகுல் சென்றபோதே அவருடன் பயணத்தில் பங்கேற்க அகிலேஷ் பிற அலுவல்களைத் தவிர்த்துவிட்டு ஆயத்தமாகவே இருந்தார். எனினும் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் இறங்கிவராததால், அந்த முடிவைக் கைவிட்டார் என்கிறார்கள். கடைசியில் பிரியங்கா காந்தியின் முயற்சியால் 17 தொகுதிகள் காங்கிரஸுக்குக் கிடைக்கும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, அமேதியில் ராகுல் மீண்டும் போட்டியிட வேண்டும்; 2019 தேர்தலில் செய்த தவறை அமேதி மக்கள் திருத்திக்கொள்ள அவர் வாய்ப்பளிக்க வேண்டும் என்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து வற்புறுத்துகிறார்கள். எனினும், இவ்விஷயத்தில் ராகுல் தொடர்ந்து மெளனம் காக்கிறார். சென்ற முறை அமேதியில் ராகுலுக்குக் கிடைத்த தோல்வியை வைத்து அவரைப் பங்கம் செய்கிறது பாஜக. “மீண்டும் வயநாட்டுக்கு ஓடாதீர்கள். தைரியமிருந்தால் அமேதியில் மீண்டும் என்னுடன் போட்டியிடுங்கள்” என ஸ்மிருதி இரானி ராகுலைச் சீண்டுகிறார்.
கேரளத்தின் வயநாடு தொகுதி எம்.பி-யான ராகுல், அங்கு யானை-மனிதர் எதிர்கொள்ளல் பிரச்சினையை முன்னிட்டு உத்தரப் பிரதேசத்தில் நீதி யாத்திரைப் பயணத்தை ஒத்திவைத்துவிட்டு சென்றுவந்தார். உடனே, “ஒரு தொகுதியின் எம்.பி இப்படித்தான் சுற்றுலாப் பயணி போல எப்போதாவது அங்கு சென்றுவருவதா?” என அதையும் கேலி செய்கிறார்கள் பாஜகவினர்.
இன்னலில் ‘இண்டியா’: இண்டியா கூட்டணியின் பிரதானக் கட்சிகள் அடுத்தடுத்துப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே, கூட்டணியிலிருந்து வெளியேறிய - ஜாட் ஓபிசி ஆதரவுத் தளம் கொண்ட - ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி, பாஜக பக்கம் சென்றுவிட்டதால் சமாஜ்வாதி கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. இப்போது மேலும் பல சிக்கல்கள் முளைத்திருக்கின்றன.
இந்து மதம் தொடர்பாக அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடும் சுவாமி பிரசாத் மெளரியா, அகிலேஷ் யாதவ் தன்னை அவமதித்துவிட்டதாகக் கூறி சமாஜ்வாதி கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியும் தொடங்கிவிட்டார். தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையில் இழுபறி நீடித்துவரும் நிலையில், ராகுலின் நீதி யாத்திரையில் பங்கேற்கப்போவதாக அவர் கூறியிருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முஸ்லிம்களின் கணிசமான ஆதரவைப் பெற்ற கட்சியான சமாஜ்வாதி தற்போது முஸ்லிம்களைப் புறக்கணிப்பதாகக் கூறி அதன் தேசியப் பொதுச் செயலாளர் சலீம் ஷெர்வானி கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
மேற்கு வங்கத்தில் சந்தேஷ்காளி விவகாரத்தில் பாஜகவின் கடும் எதிர்ப்பைச் சந்திக்கும் திரிணமூல் காங்கிரஸ், கூடவே மார்க்சிஸ்ட் கட்சியின் கண்டனத்தையும் பெற்றுவருகிறது. அம்மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரிக்கும் மம்தாவுக்கும் இடையே ஏற்கெனவே கடும் பகை நிலவும் நிலையில், காங்கிரஸும் சந்தேஷ்காளி விவகாரத்தை வைத்து திரிணமூல் காங்கிரஸைச் சாடுகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, வரும் மக்களவைத் தேர்தலிலும், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிக இடங்களைக் கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்துவருகிறது பாஜக.
போதாக்குறைக்கு, காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஃபாரூக் அப்துல்லா தெரிவித்துவிட்டார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி. “மீண்டும் அக்கூட்டணிக்குச் செல்வீர்களா?” என்ற கேள்விக்கு, “எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது” என்று ஃபாருக் அப்துல்லா கூறியிருக்கிறார். அவர் மீதும் அமலாக்கத் துறை வழக்கு இருப்பது கவனிக்கத்தக்கது.
“பாஜகவும் காங்கிரஸும் தலித்துகளுக்கு ஒன்றுமே செய்யவில்லை” என்று பேசிவரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்த பின்னரும், தனித்துப் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்குவதாகத் தெரியவில்லை.
பாஜகவின் அணுகுமுறை: வெற்றிவாய்ப்புள்ளவர்கள், ஏதேனும் ஒரு வகையில் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்தக்கூடியவர்கள் என யார் தென்பட்டாலும் அவர்களைத் தமது பக்கம் ஈர்த்துக்கொள்வதில் பாஜக தயக்கமே காட்டுவதில்லை. அசோக் சவான், ஆர்பிஎன் சிங் என வெளியில் இருந்து வந்தவர்களுக்கு உடனடியாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கும் பாஜக, இதனால் கட்சிக்குள் அதிருப்தி முளைத்துவிடாமலும் பார்த்துக்கொள்கிறது.
இதற்கிடையே, காங்கிரஸின் மணீஷ் திவாரி பாஜகவுக்குத் தாவலாம் என வதந்திகள் வெளியாகின. அவர் அதை மறுத்துவிட்டார். அடுத்து, காங்கிரஸில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மீண்டும் பாஜகவுக்குச் செல்லலாம் எனச் செய்திகள் வெளியாகின்றன. சரத் பவாரின் நம்பிக்கைக்குரிய தலைவர் ஜெயந்த் பாட்டீல் பாஜகவுக்குத் தாவக்கூடும் என்ற ஊகங்கள் வெளியாவது எதிர்க்கட்சியினரை வளைப்பதில் அக்கட்சி காட்டும் தீவிரத்தை உணர்த்துகிறது.
“400 இடங்களில் வெல்வோம் என்று பாஜக கூறிவந்தாலும், 100 இடங்கள்தான் அக்கட்சிக்குக் கிடைக்கும்” என்று மல்லிகார்ஜுன கார்கே பேசிவருகிறார். பாஜகவோ ஏற்கெனவே விட்ட இடங்களை இந்த முறை எப்படியாவது கைப்பற்றத் துடிக்கிறது. 2014, 2019 தேர்தல்களில் தோல்வியடைந்த 206 தொகுதிகளை இந்த முறை எப்படியேனும் கைப்பற்றியாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது பாஜக.
பஞ்சாபில் 13 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூறும் ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் பலத்த போட்டியை பாஜக தரும் என்பதால் காங்கிரஸின் கூட்டணி அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.
அதையெல்லாம் பரிசீலிக்க நேரம் ஒதுக்காமல் நடந்துகொண்டே இருக்கிறார் ராகுல்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago