நனவாகின்றனவா பள்ளி மாணவிகளின் கனவுகள்?

By த.வி.வெங்கடேஸ்வரன்

மருத்துவராக, பொறியாளராக வலம்வர வேண்டும் எனப் பல மாணவிகள் பள்ளி நாள்களில் கனவு கண்டாலும், நடைமுறையில் அது சாத்தியம் இல்லாமல் போகிறது என்கிறது சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆண்டுக் கல்வி நிலை அறிக்கை (ASER 2023).

கடந்த காலத்தில் பெண்களுக்குக் கல்வி எட்டாக்கனியாக இருந்தது. சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் காரணமாக மெல்ல மெல்லப் பெண்கள் கல்வி கற்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஆரம்பக் கல்வி வரை கற்பதற்கு மட்டுமே பெரும்பாலான பெண்கள் பள்ளிக்கு வருவார்கள். இன்று அதுவும் மாறிவருகிறது. எனினும் இன்றும் தமது உயர் கல்வி, வேலைக் கனவுகளை நனவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்படும் நிலையே தொடர்கிறது.

இடைநிற்றல் நிலவரம்: இந்தியா முழுவதிலும் இருந்து 26 மாநிலங்களைச் சேர்ந்த 28 மாவட்டங்களில் 14 முதல் 18 வயது கொண்ட 34,745 பள்ளி மாணவ-மாணவியரிடம் நடத்தப்பட்ட மாதிரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில், ஆண்டுக் கல்வி நிலை அறிக்கை ஜனவரி 2024இல் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையின்படி, 14 முதல் 18 வயதுடைய மாணவ-மாணவியர்களில் 86.8% பேர் பள்ளிகளில் கல்வியைத் தொடர்கின்றனர். 14 வயது உள்ளவர்களில் 3.9% பேர் மட்டுமே பள்ளிப் படிப்பை நிறுத்தியுள்ளனர். 18 வயதுடையவர்களில் பள்ளிப் படிப்பை நிறுத்தியவர்களின் எண்ணிக்கை 32.6%ஆக உயர்கிறது. அதாவது, ஆணும் பெண்ணும் குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுவருகிறது.

முன்னர் பரவலாக இருந்த பெண்களின் கல்வி இடைநிற்றல், காலப்போக்கில் குறைந்துவருகிறது. 2017இல் 14 முதல் 18 வயது கொண்ட ஆண் / பெண்களில் 14.4% பேர் கல்வி நிலையங்களில் சேரவில்லை. வீட்டு வேலை, வருமானம் தரும் வேலை, குடும்ப வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுவந்தனர்.

ஆனால், இந்த நிலை மாறி தற்போது வெறும் 13.2% மட்டுமே கல்வி நிலையங்களுக்கு வெளியே உள்ளனர். 2017இல் 14 முதல் 18 வயது கொண்ட இளம் பெண்களில் 16% பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டனர். ஆண்களில் இது வெறும் 11.9%ஆக இருந்தது. அதாவது, பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவ - மாணவிகளிடையே 4.1% இடைவெளி இருந்தது.

ஆனால், 2023இல் இந்த இடைவெளி வெறும் 0.2% மட்டுமே. அதாவது, பெண்களும் ஆண்களைப் போலத் தொடர்ந்து கல்வி கற்கிறார்கள். இடைநிறுத்தத்தில் ஆண்-பெண் பேதம் குறைந்துவருகிறது.

‘பள்ளிக் கல்விக்குப் பின் என்ன கல்வி / தொழில் கற்க விரும்புகிறீர்கள்?’ என்கிற கேள்விக்கு, எதுவும் யோசிக்கவில்லை என 21.0% பேர் (ஆண்கள் 19.9% - பெண்கள் 22.0%) கூறுகின்றனர். அதாவது, ஐந்தில் ஒருவருக்கு அடுத்து என்ன செய்வது என்பது குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லை.

கல்வி கற்ற பின்னர் என்ன பணியைத் தெரிவுசெய்வது என்பதில் ஆண்களின் தெரிவுகளாக ராணுவமும் (13.8%), காவல் துறையும் (13.6%) முதன்மையாக இருக்கின்றன. பெண்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் பணி (16%), மருத்துவர் (14.8%) ஆகியவை முதல் இரண்டு தெரிவாக இருந்தாலும், வியப்பளிக்கும் வகையில் காவல் துறையும் (12.5%) மூன்றாவது இடத்தில் உள்ளது.

உடலை வருத்திச் செய்யும் வேலைகளுக்குச் சமூக மதிப்பு இல்லை என்பதாலேயே இந்தத் துறைகளை அவர்கள் தெரிவுசெய்கிறார்கள். கல்வி மூலம் தமது நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்கிற உத்வேகம்தான் இந்தத் தெரிவுகளை நோக்கி அவர்களைச் செலுத்துகிறது என்கிறது இந்த ஆய்வு.

விருப்பமும் நிதர்சனமும்: மாணவிகளில் 18.2% பேரும் மாணவர்களில் 16.7% பேரும் பொறியாளர் அல்லது மருத்துவராக விருப்பம் கொண்டிருந்தாலும் பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பிரிவைத் தெரிவு செய்கிறார்கள்? மாணவர்களில் 36.3% STEM எனப்படும் அறிவியல்- தொழில்நுட்பம்-பொறியியல்-கணிதம், மருத்துவம் சார் பிரிவில் சேர்கிறார்கள்.

ஆனால், மாணவிகளில் இது வெறும் 28% மட்டுமே. பொதுவாகவே, தென்னிந்தியாவில் STEM துறை கல்வியில் சேர்க்கை மிக அதிகம் - சுமார் 60%. ஆனால், உத்தரப் பிரதேசம் போன்ற பகுதிகளில் 30%க்கும் குறைவு. ஏனைய மாணவ- மாணவிகள் கலை-சமூக அறிவியல் பிரிவுகளில் சேர்கிறார்கள்.

“தமது எதிர்காலப் பணி குறித்து மாணவிகள் வெளிப்படுத்தும் ஆர்வம், லட்சிய உலகில் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதையே பெரும்பாலும் பிரதிபலிப்பதாக இருக்கிறது” என்கிறார் ஆய்வாளர் சுமன் பட்டாசார்ஜியா. நடைமுறை வாழ்க்கையில் வீட்டு வேலைச் சுமை, குடும்ப எல்லை, பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் சமூக எதிர்பார்ப்பு முதலியவை அவர்களது சுதந்திரத்திலும் உயர் கல்வியிலும் பெருமளவு தாக்கம் செலுத்துகின்றன என்கிறார் சுமன்.

அதாவது, மாணவிகளின் கனவு நனவாகும் சமூக-குடும்பச் சூழல் இன்னமும் உருவாகவில்லை. மேலும், உயர் கல்வி வணிகமயமான சூழலில் கல்விக் கட்டணம் செலுத்திப் பெண்களைப் படிக்கவைக்கப் பல பெற்றோருக்குப் பொருளாதாரம் தடையாக உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாணவிகளிடையே சிறகடித்துப் பறக்க வேண்டும் என்ற அவா இருந்தாலும் சமூக-குடும்பச் சூழல் சிறகுகளைக் கயிறுகளால் கட்டிப்போட்டுவிடுகிறது. மேலும், வாழ்க்கைத் திறன்களைக் கற்க வாய்ப்பு இல்லை என்பதால், அந்தச் சிறகுகள் வலிமை குன்றியவையாக இருக்கின்றன. எனவே, ‘ஆணுக் கிங்கே பெண் இளைப்பில்லை காண்!’ என்பது பெருமளவு மாணவிகளின் வாழ்வில் நடைமுறைச் சாத்தியமற்றதாகவே உள்ளது.

எடுத்துக்காட்டாக, 18 வயதுள்ள மாணவன், தான் குடியிருக்கும் ஊரில் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கான திறன் பெற்றிருப்பதுபோலப் பெரும்பாலும் மாணவிகளுக்கு வாய்ப்பதில்லை. அதேபோலத் திறன்பேசி பயன்படுத்த வாய்ப்பு இருந்தாலும் 17-18 வயது மாணவர்களிடையே 77.1% பேருக்கு ‘கூகிள் மேப்’ பயன்படுத்தும் திறன் உள்ளது என்கிறது இந்த அறிக்கை. மாணவிகளிடம் இது வெறும் 34% மட்டுமே. அதாவது, நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சொந்தக் காலில் நிற்கும் திறன் மாணவர்களுடன் ஒப்பிடும்போது மாணவிகளிடையே மிகக் குறைவு.

சிறகுகள் வலிமை பெறட்டும்: கல்விக்குப் பிறகு எந்தப் பணி - தொழிலில் ஈடுபடுவது என்பதைச் சமூக அந்தஸ்து, பொருளாதாரச் சூழல், வேலைவாய்ப்புச் சூழல் எனப் பல்வேறு அம்சங்கள் தீர்மானிக்கின்றன. எனினும் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் பள்ளிகள் கணிசமான பங்கை வகிக்க முடியும்.

தென்னிந்தியாவில் சற்றே வித்தியாசமான சூழல் நிலவினாலும், பெருமளவு மாணவிகளுக்குப் பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியை மட்டுமே முன்மாதிரி. அரிதாகப் பெண் மருத்துவர், பெண் அதிகாரிகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

மாணவ-மாணவியர்களின் எதிர்காலத் திட்டமிடல் குறித்துப் பெரும்பாலான பள்ளிகளில் எந்தவித உள்ளீடும் தரப்படுவதில்லை. பல்வேறு பணி வாய்ப்புகள் குறித்து அறிமுகம் செய்தல், பல்வேறு தொழில் செய்பவர்களை வருவித்து மாணவ - மாணவிகளுடன் கலந்துரையாடச் செய்தல் என்பன போன்ற எளிய முயற்சிகள்கூடப் பள்ளிகளில் முன்னெடுக்கப்படுவதில்லை.

குறிப்பாக, மாணவிகளுக்குப் பல்வேறு வாழ்க்கைத் திறன்களை வளர்க்க வாய்ப்புகளை ஏற்படுத்துவது அவசியம். சிறகுகள் வலிமைப்படுத்தப்பட வேண்டும். பள்ளிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கவனம் செலுத்த வேண்டிய பகுதி இது.

- தொடர்புக்கு: tvv123@gmail.com

To Read in English: Do school girls’ dreams come true?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்