தன் துணையைத் தானே தேர்வுசெய்யும் காதலுரிமையை, சங்க இலக்கியங்களின் உடன்போக்கும், ஐரோப்பியர்களின் மானுடவியல் ஆவணங்களும் என்றைக்கோ பதிவுசெய்திருக்கின்றன. ஆனால், சமகாலத்தில் காதலர் தினம் கொண்டாடுவதை, ‘நாய்க் காதல்’, ‘நாடகக் காதல்’ என இழிவாக்குவதும் வாக்கு அரசியலாக்குவதும் ஆணவக் கொலை செய்வதும் தொடர்கின்றன.
ஐந்திணைச் சமூகங்களுக்குப் பிந்தைய காலத்தில் உருவான சாதிய நிலவுடைமை உற்பத்தி முறையானது, உடலுழைப்பாளர் சமூகங்களிடம் காதலுக்கான சுதந்திரத்தைத் தக்கவைத்த அதேவேளை, சொத்துடைமை சாதிகளிடம் குழந்தைப் பருவத்திலேயே திருமணங்களை ஏற்படுத்தியது.
‘காலை 5.30 மணிக்கு எழுந்து வீட்டுவேலை செய்து, கணவனுக்குக் குளிக்கத் தண்ணீரும் உண்ண உணவும் உடுக்க உடையும் எடுத்துக் கொடுத்து, கணவரும் மாமியாரும் உண்ட பின் மனைவி உண்பாள்’ என 1901இல் ஒரு பத்திரிகை எழுதியது. ஆண்கள், பெண்களை ஆடுமாடுகள் போல நடத்தியதாக ருக்குமணியம்மாள் என்பவர் 1901இல் எழுதியிருக்கிறார். பெண்கள் காதலை உளமாற உணரக்கூட மறுக்கப்பட்டதை இவையெல்லாம் காட்டுகின்றன.
கல்கத்தா பால்ய விவாக நிவர்த்தி சங்கம் 1911ஆம் ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஒரு வயதில் 859 பேர்; 2 முதல் 3 வயதில் 1,886 பேர்; 3 முதல் 4 வயதில் 3,732 பேர்; 4 முதல் 5 வயதில் 8,180 பேர்; 5 முதல் 10 வயதில் 78,407 பேர்; 10 முதல் 15 வயதில் 2,27,367 பேர் என ஒன்று முதல் பதினைந்து வயதுவரை மொத்தம் 3,20,431 விதவைக் குழந்தைகள் இருந்தது தெரியவந்தது.
சென்னை மாகாணத்தில் ஒரு கணக்கெடுப்பின்படி 1920களில், ஆயிரம் குழந்தைகளில் 10 வயதுக்கும் கீழுள்ளோரில் 664 குழந்தைகளுக்குத் திருமணம் செய்யப்பட்டது பதிவாகியிருக்கிறது. காதலை உணர இயலாத பருவத்திலேயே மணமாகி விதவைகளான குழந்தைகளின் அக்கால வாழ்வைக் கற்பனை செய்தால் பெருந்துயரம் மேலிடுகிறது.
காதலுரிமை உரையாடல்: இந்தியாவில், ஐரோப்பியக் கிறிஸ்துவ மிஷனரிகளும் ஆட்சியாளர்களும் முன்னெடுத்த சீர்திருத்தங்களும் ஆட்சிமுறைகளும் அவர்களின் வாழ்க்கைமுறைகளும் குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் உள்பட சில வழக்கங்களைத் தவறென்று உணர்த்தின.
இதுதொடர்பாக, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பத்திரிகைகளில் எழுதப்பட்ட பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. 1901ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி பெண்களின் எண்ணிக்கை குறைந்தது தெரியவந்தது. பெண்களுக்கு இளம்வயதில் திருணம் செய்வதும், இவ்வயதில் பிள்ளைபெறும் உடற்தகுதி இல்லாததும் இறப்புக்குக் காரணம் என்று பலர் சுட்டிக்காட்டினர்.
குழந்தைத் திருமணத்துக்கு, ‘தர்மசாஸ்திரத்தில் 8ஆவது வருஷத்தில் கன்னிகாதான விதிப்படி கன்னிகாதானம் செய்ய வேண்டும்’ என்று விதித்திருப்பதைக் காரணமென்று குறிப்பிட்டு விமர்சித்த திருமதி ஜகந்நாதன், 1913இல் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார்.
முன்கூட்டிய தாய்மையால் பெண்ணுடல்கள் ஊனமுறச் செய்யப்பட்டு, பாரம்பரியமான கொடூரங்களுக்கு ஏற்றவாறு பெண்களின் மூளைகள் முறுக்கப்பட்டு நயவஞ்சகத்துக்கு ஆளாக்கப்பட்டதாக 1933இல் ராஜேஸ்வரி எழுதினார். பெண்களின் அவலத்தை உணர்ந்த நவீனக் கல்வி கற்ற ஆண்களும் பெண்களும் குழந்தைத் திருமணம், உடன்கட்டை போன்றவற்றை எதிர்த்ததோடு, பருவமெய்திய பின் மனதுக்கினிய மணமகனைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பெண்களுக்கு வேண்டும் என்றும் குரலெழுப்பினர்.
1875இல் பிறந்து, எட்டு வயதில் விதவையான அசலாம்பிகை, பாலம்மாள், ஆதிநாதன், சரோஜினிதேவி போன்றோர் பெண்கள் காதலித்து மணமுடிக்கும் உரிமை வேண்டுமெனக் கோரினர்.
கல்வியிலும் இசையிலும் இணையற்ற பெண், தன் சாதியில் இசையின்பத்தைச் செவிமடுக்காத மூடனை மணக்க வேண்டிய அவலத்தைக் கூறிய செல்லையா, காதல் மணமில்லா வாழ்க்கை பிண வாழ்க்கையே எனச் சாடினார். “அறிவினாலும் அபீஷ்டங்களினாலும் நெஞ்சொற்றுமை ஏற்பட்டு, அன்றிற் பறவைகள்போல் உடற் பிணைப்பிற்றிருப்பதுபோல் எப்போதும் அறிவுப் பிணைப்புண்டாகி வாழும் வாழ்க்கையே பிரேமை வாழ்க்கையாகும்.
உடல்பற்றிய காதலைப் போல் அறிவுபற்றிய காதலானது நிலைப்பற்றும் இழிவுடையது(ம்) மகாமாட்டா (ஆக மாட்டா). சுத்தமான அறிவுக்காதல் எத்தனை அருமையான பதார்த்தமென்பதை நாம் நன்றாக அறிவோம்” என ஒரு பத்திராதிபர் காதல் மணத்தை ஆதரித்தார். ‘கருத்தொருமித்து, ஒருவரையொருவர் நேசித்து வாழ்க்கை நடத்த விரும்புவோர் சாதி, சமய வேற்றுமைகள் குறுக்கீட்டை உதறித் தள்ளுங்கள்’ என 1936ஆம் ஆண்டு காரைக்குடி மாநாட்டில் விசாலாக்ஷி அம்மாள் பேசினார்.
பெண்களின் சுதந்திரம், சாதி ஒழிப்பு நோக்கில் காதல் திருமண உரையாடல் கூர்மைப்பட்டதால் காதல் திருமணங்களுக்கு ஆதாரமான சங்க இலக்கியங்களையும் புராண இதிகாசங்களையும் எடுத்துரைத்தனர். காதல் குறித்த கலை இலக்கியப் படைப்புகளும் உரைநடைகளும் ஏராளம் வெளியாயின.
அரசியல் ஆளுமைகளும் காதல், சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரித்தனர். வேற்றுச் சாதி ஆண்களைக் காதலித்ததைப் பெற்றோர் எதிர்த்ததால், காந்தி உள்பட முக்கிய ஆளுமைகளுக்குக் கடிதமெழுதி ஆதரவு திரட்டினார் சத்தியவதி. சிவகங்கையைச் சேர்ந்த ஏ.எஸ்.மணிபாய், தான் காதலித்த வேற்றுச் சாதி ஆண் நண்பரைத் கரம்பிடிக்கவிருப்பதாகவும், இல்லையென்றால் உயிரையே மாய்த்துக்கொள்ளப்போவதாகவும் ‘எனது காதல்’ எனத் தலைப்பிட்டு ‘குடிஅரசு’ பத்திரிகையில் எழுதினார்.
சாதியைப் பாதுகாக்கக் காதல் திருமணங்கள் எதிர்க்கப்பட்டபோதிலும் ஆணவக் கொலைகள் அரங்கேறவில்லை. காதல் திருமணத் தம்பதியினரை ஆணவக் கொலை செய்யும் போக்கு 2000ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரே தோன்றியது. உலகமயமாக்கல் அரசியல் பின்னணியில் செல்வந்தர்களாக உருவானோர் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் உருவாக்கிய சாதிக் கட்சிகள் தத்தம் சாதி வாக்குகளைப் பெறுவதற்காகக் காதல் திருமணங்களுக்கு எதிரான அரசியலைக் கைக்கொண்டு, ஆணவக் கொலைகளுக்கு வித்திட்டனர்.
உயிரினங்களின் உன்னதம்: ஆணவக் கொலைகள் கொடூரமாக நிகழ்ந்தாலும்கூட காதலர்கள் தோன்றிக்கொண்டே இருப்பதானது, காதலின் அழியா நிலையைக் காட்டுகிறது. உலக இயக்கத்தின் அடிப்படையாக இருக்கின்ற உயிருள்ள, உயிரற்ற எதிரெதிர் பொருள்களின் இயல்பான பிணைப்புக்கு மனிதர்கள் விலக்கல்ல.
இயற்கையான உடலென்ற உயிரியலில் சாதி, மதம் இன்னபிற செயற்கையான அடையாளங்களைக் கட்டமைத்ததால் திருமணமானது அரசியல் பொருளாதாரமாக இருக்கிறது. இது, தொழிற்சாலையைப் போல் சாதி, மதங்களை மறுஉற்பத்தி செய்யும் உயிராலையாக இயங்குகிறது.
வரலாற்றுப்போக்கில் தோன்றிய சொத்துடைமையும் சாதியும் குடும்பத்தையும் காதலையும் விளைவித்தபோதிலும், நாகரிக உலகில் காதல் தனிப்பட்ட இரு எதிர்ப்பாலின நபர்களுக்கு இடையேயான உணர்வாகும். செயற்கையான கட்டமைப்புகளுக்கு ஆட்படாத உடல்களின் உள்ளங்களும் ரசனைகளும் அவற்றுக்குப் பிடித்தமான எதிர்ப்பாலினத்தை இயல்பாக ஈர்க்கின்றன.
பிற எவரிடமும் உணராததைச் சம்பந்தப்பட்ட நபர்களுக்குள் உணர்கின்றனர். ஒருவருக்கொருவர் உயிர்ப்பாக இருந்து தங்களுக்குள் உன்னதங்களை உணர்கின்றனர். சாதியைப் பாதுகாக்கும் ஏற்பாட்டுத் திருமணம், அதை ஒழிக்கும் இணையர் ஒப்பந்த முறை, இவ்வரசியலுக்கு அப்பாற்பட்ட காதல் திருமணங்கள் ஆகியவற்றில் ஆணும் பெண்ணும் ஒத்திசைந்து வாழ அடித்தளமான காதல், ஆகப் பெரும்பாலானோரிடம் இல்லை. சில விதிவிலக்குகள் உண்டு.
குழந்தைகளைப் பெற்று வளர்த்தல், சமையல் உள்பட வீட்டைப் பராமரித்தல் எனப் பாரம்பரியமான வேலைகளுடன் பொருளீட்ட வேண்டும் என ஆணாதிக்கம் பெண்களை நிர்ப்பந்திப்பதால் காதல் தாக்குதலுக்கு உள்ளாகிறது. உடல், உள நிலையில் பெண் தளர்கிறாள்; இல்லறத்தில் காதலின் உன்னதங்களை அறியாமலேயே இறக்கிறாள்.
இது, குழந்தைத் திருமணத்திலிருந்த காதலற்ற நிலை இக்காலத்திலும் தொடர்வதைத்தான் உணர்த்துகிறது. ஏதேதோ காரணங்களைக் கூறி காதலர் தினத்தை ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம். செயற்கையான அடையாளங்கள் உடலோடு உறவாடினால் காதலுக்கு ஊறு விளையும். உடலை உயிரியலாக உணர்ந்து உயிரோட்டமாக வாழ பெண்களின் நிலையிலிருந்து காதல் குறித்து உரையாட வேண்டிய காலமிது.
- தொடர்புக்கு: ko.ragupathi@gmail.com
To Read in English: Love, a sublime feeling of all creatures
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago