காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள 465 பக்கங்கள் கொண்ட இறுதித் தீர்ப்பானது நாம் அஞ்சியதுபோலவே தமிழ்நாட்டுக்குப் பாதகமாக அமைந்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் 2007-ல் தனது இறுதித் தீர்ப்பில் வழங்கிய 192 டிஎம்சியிலும் இப்போது 14.5 டிஎம்சியைக் குறைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். காவிரி நடுவர் மன்றம் 1991-ல் வழங்கிய தனது இடைக்காலத் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு 205 டிஎம்சி தண்ணீர் தர உத்தரவிட்டது. அதே நடுவர் மன்றம் 2007-ல் அளித்த தனது இறுதித் தீர்ப்பில், தமிழ்நாட்டின் பங்கை 192 டிஎம்சியாகக் குறைத்தது. இப்போது அதையும் 177.25 டிஎம்சியாக உச்ச நீதிமன்றம் குறைத்திருக்கிறது.
மு
க்கியமான கேள்வி என்னவென்றால், 1991-க்கும் 2018-க்கும் இடையில், தமிழ்நாட்டின் தண்ணீர் தேவை குறைந்துவிட்டதா அல்லது தமிழ்நாட்டு மக்களின் குரலுக்கு இருந்த முக்கியத்துவம் குறைந்துவிட்டதா?
காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு அளித்த தண்ணீரே போதுமானதல்ல, அது தமிழ்நாட்டில் ஒருபோகம் மட்டுமே சாகுபடி செய்யப்படுவதாக தவறாகக் கணக்கிட்டு வழங்கப்பட்டதாகும். டெல்டா பகுதியில் இரண்டு போகம் சாகுபடி நடைபெறுவதால் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நீரின் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் எனத் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இப்போதோ ‘உள்ளதும் போச்சுடா’ என்ற கதையாக இருந்ததிலும் மேலும் இழந்துவிட்டு நிற்கிறது தமிழ்நாடு.
நடுவர் மன்றம் வழங்கிய 192 டிஎம்சியிலிருந்து 14.75 டிஎம்சி தண்ணீரை உச்ச நீதிமன்றம் எடுத்து கர்நாடகத்துக்குக் கொடுத்துள்ளது. அதற்கான காரணத்தை விளக்கியிருக்கும் உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டில் 20 டிஎம்சி வரை நிலத்தடிநீர் இருப்பதாகவும் அதை நடுவர் மன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்றும், நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் நேரும் பாதிப்பைக் கவனத்தில் கொண்டு 10 டிஎம்சி தண்ணீரைத் தமிழ்நாட்டின் பங்கில் சேர்ப்பதாகவும் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் நிலத்தடி நீரைக் கணக்கில் கொண்ட உச்ச நீதிமன்றம், ஏன் கர்நாடகத்தில் இருக்கும் நிலத்தடிநீரைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை? கர்நாடக அரசின் நிலத்தடிநீர் குறித்த 2016-ம் ஆண்டுக்கான அறிக்கை, அங்கு சுமார் 66% கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதாகக் கூறுகிறது.
அங்கு கிடைக்கும் நிலத்தடி நீரில் 97% குடிப்பதற்கு உகந்தது எனவும் அது தெரிவிக்கிறது. தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் இருப்பைக் கணக்கிட்டு, அதை நமக்குச் சேர வேண்டிய பங்கிலிருந்து கழித்த உச்ச நீதிமன்றம் கர்நாடகத்தின் நிலத்தடி நீர் இருப்பையும் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்க வேண்டுமில்லையா? ஏன் அப்படிச் செய்யவில்லை?
தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் மிக வேகமாகக் குறைந்துகொண்டே போகிறது என்பதே உண்மை. தமிழ்நாட்டில் இருக்கும் 384 வட்டங்களில் 142 வட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அபாய அளவை எட்டிவிட்டதாகவும், 33 வட்டங்களில் மிகக் குறைவாக இருப்பதாகவும் 57 வட்டங்களில் குறைவாக இருப்பதாகவும் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை தெரிவிக்கிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூரில் நிலத்தடி நீர்மட்டம் தரைமட்டத்திலிருந்து 21.5 மீட்டர் அளவுக்குக் கீழே சென்றுவிட்டது. நாகப்பட்டினத்தில் 6.5 மீட்டருக்குக் கீழே உள்ளது. திருவாரூரில் 9.2 மீட்டருக்குக் கீழே போய்விட்டது. கடலூர் மாவட்டத்திலோ அது 25.5 மீட்டருக்கும் கீழே சென்றுவிட்டது.
தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகப் பருவமழை பொய்த்துப்போனதால், பாதி அளவுகூட நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள 8 வட்டங்களில் நிலத்தடிநீர் உப்பு நீராக மாறிவிட்டது.
உண்மை நிலை இப்படியிருக்க, 10 டிஎம்சி நிலத்தடிநீரைக் கணக்கிட்டு உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிற தீர்ப்பு தமிழகத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி என்பது தவிர வேறில்லை. பெங்களூரு நகரத்துக்குக் குடிநீர் வழங்குவது பற்றி உச்ச நீதிமன்றம் மிகவும் அக்கறை காட்டியிருக்கிறது. பெங்களூருக்குத் தண்ணீர் தருவதைப் பற்றி நடுவர் மன்றம் கூறியதை விமர்சித்துள்ள உச்ச நீதிமன்றம், ‘பெங்களூரு நகரத்தின் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே காவிரி வடிநிலப் பகுதியில் வருகிறது. அதன் குடிநீர்த் தேவையில் 50%-ஐ அதன் நிலத்தடிநீரைக் கொண்டு சமாளிக்கலாம்’ என்ற நடுவர் மன்றத்தின் கருத்தை நிராகரித்துள்ளது.
பெங்களூரு நகரம் உலகத்தரம் வாய்ந்த நகரம் என்றும் குடிநீர்த் தேவை என்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்று எனவும் விளக்கம் கூறியுள்ள உச்ச நீதிமன்றம் பெங்களூரு குடிநீர்த் தேவைக்காக 4.75 டிஎம்சி தண்ணீரைத் தமிழ்நாட்டின் பங்கிலிருந்து எடுத்து வழங்கியுள்ளது.
பெங்களூரின் உலகத்தரம் குறித்துக் கவலைப்பட்ட நீதிபதிகள், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக காவிரி நீர் இருப்பதையோ, அந்தத் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதையோ கவனத்தில் கொள்ளவேயில்லை. தமிழக விவசாயிகளின் உயிர்களைவிட பெங்களூரு நகரத்தின் தேவைதான் உச்ச நீதிமன்றத்துக்கு முக்கியமானதாகத் தெரிந்திருக்கிறது.
‘புதுச்சேரி மாநிலத்துக்கு 7 டிஎம்சி தண்ணீர் நடுவர் மன்றத்தால் ஒதுக்கப்பட்டது சரிதான் எனக் கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், அங்குள்ள விவசாயிகள் இரண்டு போகம் சாகுபடிசெய்வதற்கான உரிமையை அங்கீகரித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் காவிரி நீரால் விவசாயம் செய்யப்படும் பகுதியான காரைக்கால் என்பது தமிழ்நாட்டின் டெல்டா பகுதியின் ஒரு அங்கம்தான். இரண்டு போகம் சாகுபடிசெய்யும் உரிமை காரைக்கால் விவசாயிகளுக்கு உள்ளதென்றால், அந்த உரிமை தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு எப்படி இல்லாமல் போகும்?
தற்போது உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பும்கூட கர்நாடகத்தால் செயல்படுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது, இதனால் பாதிக்கப்படும் தமிழ்நாட்டுக்கு இனி வேறு போக்கிடம் இல்லை என்பதையே உணர்த்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைப்பது பற்றி இந்தத் தீர்ப்பில் தனியே எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால், நடுவர் மன்றத் தீர்ப்பில் உள்ளதே இப்போதும் பொருந்தும். அவற்றை அமைக்காமல் இத்தனை ஆண்டுகளாக ஏய்த்த பாஜக அரசு, கர்நாடகத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் அவற்றை அமைத்துவிடும் என நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய மாதாந்திரத் தண்ணீரின் அளவு, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் கூறப்பட்ட அளவிலேயே இன்னும் 15 ஆண்டுகளுக்குத் தொடரும் என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. தமிழகத்தின் பங்கில் 14.5 டிஎம்சி குறைக்கப்பட்டுவிட்ட நிலையில், எப்படி அதே அளவைத் தொடர முடியும் என்பதை நீதிபதிகள்தான் விளக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகத்தில் இருக்கும் விவசாய சங்கங்கள் வரவேற்பதிலிருந்து அது அவர்களுக்குச் சாதகமாக இருப்பது வெளிப்படையாகத் தெரியவருகிறது. கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருக்கின்ற பாஜகவின் அரசியலும்கூட நமக்குப் புரியவே செய்கிறது. ஆனால், இந்திய மக்களையெல்லாம் சமமாகப் பாவிக்க வேண்டிய உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பில் ஏன் இப்படிப் பாரபட்சம் வெளிப்படுகிறது என்பதைத்தான் நம்மால் புரிந்துகொள்ளவே முடியவில்லை!
தமிழ்நாட்டில் இருக்கும் நிலத்தடிநீரைக் கணக்கில் கொண்ட உச்ச நீதிமன்றம்,
ஏன் கர்நாடகத்தில் இருக்கும் நிலத்தடிநீரை கவனத்தில்
கொள்ளவில்லை?
கர்னாடக அரசின் நிலத்தடிநீர் குறித்த 2016 -ம்
ஆண்டுக்கான அறிக்கை அங்கு சுமார் 66% கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதாகக் கூறுகிறது.
அங்கு கிடைக்கும் நிலத்தடிநீரில்
97% குடிப்பதற்கு உகந்தது எனவும் அது தெரிவிக்கிறது!
-ரவிக்குமார், எழுத்தாளர், விசிக பொதுச்செயலாளர்.
தொடர்புக்கு: adheedhan@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago