“தேர்தலுக்குப் பிறகே ‘இண்டியா’ கூட்டணி வலிமை பெறும்” - திருமாவளவன் லாஜிக் | நேர்காணல் பகுதி 2

By நிவேதா தனிமொழி

“எண்ணிக்கை மட்டுமே கட்சியின் வலிமை தீர்மானிப்பது அல்ல. 25 இடங்களில் போட்டியிடுவது மட்டுமே நம்முடைய அரசியல் தகுதி இல்லை. கூட்டணி வைப்பதன் நோக்கமே நாமும் வெற்றி பெற வேண்டும்; கூட்டணி கட்சிகளும் வெற்றிப்பட வேண்டும். அதைவிட நம்மை எதிர்த்து நிற்கக்கூடிய அரசியல் பகைவர்கள் வீழ்த்த வேண்டும்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது நேர்காணல் - முதல் பகுதியில் விவரித்திருந்தார். ‘இண்டியா கூட்டணியின் விரிசல், 400 இடங்களில் பாஜக வெற்றி என்ற கணிப்பு, உதயநிதியின் சனாதன பேச்சு சர்ச்சை, ராமர் கோயில் திறப்பு ஏற்படுத்தும் தாக்கம்’ தொடர்பான கேள்விகளுக்கு இந்த நேர்காணலின் இரண்டாம் பகுதியின் அவர் அளித்த பதில்கள்:

பட்டியலின விவகாரத்தில் திமுக மீது அதிருப்தி இருந்தும், திமுகவுடன் விசிக கூட்டணியில் தொடர்வது ஏன்? சுயலாபமா..?

“ஈழத் தமிழர்கள் பிரச்சினையை மையமிட்டுப் பார்த்தால், தமிழகத்தில் காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி வைக்க முடியாது . பல தளங்களில் நின்று போராட வேண்டிய நிலை ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கின்றது. சாதி வன்முறை, பெண்கள் தொடர்பான பிரச்சினை, மொழி, இனம் அடிப்படையிலான பிரச்சினை, வர்க்கப் பிரச்சினைகள் எனப் பல தளங்களிலும் முரண்பாடுகள் இருக்கின்றன. அதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க முடியாது.

வாக்கு வங்கி சிதறக் கூடாது என்பதற்காகவும், மிக மோசமான ஓர் எதிரியை வீழ்த்த வேண்டும் என்னும் நோக்கத்துக்கும் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். திமுகவுடன் சமூக நீதி, மாநில உரிமைகள், மொழி உரிமை என கருத்தியல் ரீதியாக உடன்பாடு இருக்கிறது. இருப்பினும், திமுக கூட்டணியில் நடைமுறை சிக்கல்களும் இருக்கத்தான் செய்கிறது. அந்த உடன்படும் புள்ளியில் திமுகவுடன் விசிக நீடிக்கிறது. அதனால் திமுகவுடன் இணைந்து பயணம் செய்கிறோம்.”

சனாதனம் விவகாரத்தில் இண்டியா கூட்டணிக்குள் விமர்சனம் எழுந்ததே... இங்கு கருத்தியல் ரீதியாகக் கூட உடன்படும் புள்ளி இல்லையே?

“சனாதனப் பேச்சுக்குப் பெரிய எதிர்ப்பு வரவில்லை. மம்தா பானர்ஜி, ‘உதயநிதி தெரியாமல் பேசுகிறார்’ எனச் சொன்னார். வடமாநிலத்தைப் பொறுத்தவரை சனாதனத்தை ’உயர்ந்த தர்மம்’, ’மனிதநேயத்துக்கான தர்மம்’ என நினைக்கிறார்கள்.ஆனால், இங்கு ’சனாதன தர்மம்' என்பது பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு ஏற்படுத்துவது. எனவே, அதனை எதிர்க்க வேண்டுமென பேசுகிறோம்.

இந்தச் சனாதனம் குறித்து நான் பேசும்போது பெரிதாக எதிர்ப்பில்லை. ஆனால், உதயநிதி பேசும்போது இந்திய அளவில் எதிர்க் கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. காரணம், ’இண்டியா கூட்டணி’ உருவாக முக்கிய காரணமாக திமுக இருந்தது. ஆகவே, இண்டியா கூட்டணியில் இருக்கும் திமுகவைச் சேர்ந்தவர்கள் சனாதனத்தைக் குறித்து இப்படி பேசியிருக்கிறார்களே என அவருக்கு எதிராக இந்து மதம் மீது நம்பிக்கை வைத்துள்ள இண்டியா கூட்டணி தலைவர்களை பாஜக தூண்டியது. இதனால், இண்டியா கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என திட்டமிட்டது. ஆனால், அப்படி எந்த உடைசலும் ஏற்படவில்லை."

ஆனால், வேறு காரணங்களுக்கு இண்டியா கூட்டணியில் உடைசல் ஏற்பட்டிருக்கிறது. கூட்டணியிலிருந்து மம்தா, கெஜ்ரிவால், நிதிஷ் குமார் வெளியேறி இருக்கிறார்களே?

“தேசிய கட்சி தலைமையின் கீழ் இண்டியா கூட்டணி ஒருங்கிணைக்கப்படவில்லை. மாநில கட்சிகள் ஒன்றிணைந்துதான் இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. எனவே, இண்டியா கூட்டணி என்பது ஒரு தேசிய பார்வையோடு மாநில கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்டது. நிதிஷ் குமாருக்கு கட்சிக்கு சிக்கல் எழுந்தது. ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள கூட்டணியில் இருந்து வெளியேறினார். ஆனால், நிதிஷ் குமார் வெளியேறி இருப்பதால் இண்டியா கூட்டணிக்கு கிடைக்கும் வாக்குகள் சிதறும் என சொல்வதில் உண்மை இல்லை. பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க நினைப்பவர்கள் நிச்சயம் இண்டியா கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். மம்தா பானர்ஜியுடன் இருப்பது தொகுதிப் பங்கீடு சிக்கல்கள் தான். அது பேச்சுவார்த்தை மூலமாக சரி செய்யப்படும்.”

ஆனால், இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டைக் கை காட்டுகிறார்களே... தேசிய கட்சியான காங்கிரஸை ஏற்றுக்கொள்வதில் மாநில கட்சிகளுக்கு சிக்கல் இருக்கிறதோ?

“தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினையை மாநில கட்சிகள் பேசி சரிசெய்து கொள்ளவேண்டும். இண்டியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகளுக்கு எந்த விதிமுறைகளும் தேசிய அளவில் பின்பற்றப்படுவதில்லை. தமிழகத்தில் திமுக, கர்நாடகத்தில் காங்கிரஸ், கேரளாவில் சிபிஎம் தான் முடிவு எடுக்கவேண்டும். எனவே, தனித்துப் போட்டிகளைச் சந்திக்க திட்டமிட்டிருக்கும் கட்சிகள், தேர்தலுக்குப் பின் இண்டியா கூட்டணியில் இணைவார்கள். ஏனென்றால், பாஜகவை அதிகாரத்தில் இருந்து இறக்க நினைக்கும் கட்சிகள் மீண்டும் ஒன்றிணைவார்கள். தேர்தலுக்கு முன்பு கூட்டணி உருவாக்கப்பட்டிருக்கிறது. தேர்தலுக்குப் பின்புதான் அது வலிமை பெறும். எனவே, தொகுதிப் பங்கீடு பெரும் சிக்கல் அல்ல.”

மக்களவையில் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கிறார். அதன் பின்னணி என்ன?

“குடியரசுத் தலைவர் மீதான நன்றி தெரிவிக்கும் உரையில் காங்கிரசைக் கிண்டலடித்து பேசினார் பிரதமர். குறிப்பாக, அடுத்த முறையும் எதிர்க்கட்சியாக அமர திட்டமிட்டுவிட்டீர்கள். ஆனால், சற்றே உயரமான இடத்துக்கு, கேலரியில் உட்காருங்கள் என நக்கலாகப் பேசுவது பிரதமர் பொறுப்பில் இருப்பவருக்கு அழகல்ல. அது அவரின் அதிகார அகந்தையை வெளிக்காட்டுகிறது. அரசியலில் தலைகீழ் மாற்றம் தீடிரென நடக்கும். ’இந்தியாவில் காங்கிரஸிற்கு எதிரியே இல்லை’ என்னும் நிலை இருந்தது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நேர்மையாக ஆட்சியைப் பிடித்து காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்தது. பாஜகவைப் போல குறுக்கு வழியில் உள்ளே வந்து மாநிலத்தை ஆட்சி செய்யவில்லை. இப்படி ஒரு காலத்தில் ஓஹோ’வென இருந்த காங்கிரஸ் பலவீனமாகியது. இதே வீழ்ச்சி பாஜகவுக்கும் விரைவில் ஏற்படும்.”

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு?

“உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் அருகில் மசூதியையும் அமைக்க உத்தரவிட்டது. பாஜக நேர்மையாக செயல்படும் அரசாக இருந்தால், ராமர் கோயிலுடன் மசூதியைக் கட்டித் திறந்திருக்க வேண்டும். ஆனால், ’பெரும்பான்மைவாதம்’ என்னும் அடிப்படையில் இந்து மக்கள் வாக்குகளைக் கவர ராமர் கோயிலைப் பாஜக திறந்திருக்கிறது. இது வெறும் அரசியல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.”

ராம் கோயில் திறப்புக்குப் பின் பாஜக பலம் வட இந்தியாவில் கூடியிருப்பதாக சொல்லப்படுகிறதே... தென்னிந்தியாவில் மாற்றம் ஏற்படுமா?

“தென்னிந்தியாவில் ராமன் கோயில் திறப்பு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ராமர் பெயர் இல்லாத குடும்பங்கள் தமிழகத்தில் இல்லை. பெரியாரின் பெயர் ராமசாமிதான். தவிர, அம்பேத்கர் அப்பாவின் பெயர் ராம்ஜி சக்பால், அண்ணன் பெயர் பலராமன். கம்யூனிஸ்ட் தலைவர் பெயர் சீதாராம் யெச்சூரி. இடதுசாரி சிந்தனை கொண்ட இந்து என்.ராம் எனப் பலருக்கும் ராமர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனவே, ’ராமர் நம்பிக்கை’ இல்லாமல் இந்தியா இல்லை. ஆனால், அதை அரசியலாக மாற்றப் பார்க்கிறது பாஜக. ராமர் பெயர் பயன்படுத்தி ஆட்சிக்கு வர பாஜக நினைக்கிறது. எனவேதான் ராமர் பக்தியை நாங்கள் எதிர்க்கவில்லை; ராமர் அரசியலை எதிர்க்கிறோம் என மீண்டும் வலியுறுத்துகிறோம்.”

பிரதமர் மோடி பாஜக 400 இடங்களில் வெல்லும் என நம்பிக்கை தெரிவிக்கிறாரே? உங்க கருத்து என்ன?

“மக்களவையிலே இ.வி.எம் இயந்திரத்தை நம்பிதான் இந்த வார்த்தையைக் குறிப்பிடுகிறீர்கள். ஆகவே, நீங்கள் ’இவிஎம் பிரதமர்’ என அழைக்கப்படுவீர்கள் என்று விமர்சிக்கப்பட்டார். ஆகவே, பாஜக தில்லு முல்லு செய்வதற்கு தயாராகித்தான் இப்படியான வார்த்தை முன்வைத்திருக்கிறது. ஆனால், இண்டியா கூட்டணி வாயிலாக விவிபேட்டின் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கைகளை மட்டுமே கொண்டு முடிவுகள் வெளியிட வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.”

நிதிப் பங்கீடு தொடர்பான பிரச்சினைக்கு கேரளா, கர்நாடகம், தமிழகம் ஒன்றிணைந்திருக்கிறது... இது மாநில நலனா? தேர்தல் வியூகமா?

“பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்கள் பேரிடர் நிதி ஒதுக்காதது, வரி வருவாய் நிதி ஒதுக்காதது எனப் பல சிக்கல்களைத் திணிக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும்போது போராட்டத்தை மாநிலங்கள் கையிலெடுத்தனர்.”

ஒருவேளை, பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால், இந்தியாவில் என்ன நடக்கும்?

“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதைக் கற்பனை கூட செய்ய முடியாது. பாகிஸ்தான், வங்கதேசம் இஸ்லாமிய நாடாகவும், சீனா, இலங்கை பௌத்த நாடாகவும் இருக்கும்போது இந்தியா ஏன் இந்து நாடாக இருக்கக் கூடாது என்னும் கேள்வி எழுப்புவார்கள். ஆனால், இந்து மதம் மக்களை சகோதரத்துவத்துடன் அணுகவில்லை. பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வைப் புகுத்துகிறது. அதனால், நேரு, அம்பேத்கர், காந்தி என அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து விவாதித்து ’இந்தியா ஒரு மதச்சார்பின்மை’ நாடாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தனர்.

பிராமணர்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ், காந்தி மதச்சார்பின்மையை வலியுறுத்திய காரணத்தால் படுகொலை செய்தது. எனவே, ’மதச்சார்பின்மையை வலியுறுத்தும் சட்டத்தை தூக்கி எறிய வேண்டும்’ என்பதுதான் ஆர்எஸ்எஸ், பாஜகவின் நோக்கம். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், மாநிலங்கள் இருக்காது, தேர்தல் இருக்காது, இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம் மதங்கள் இருக்காது, ஒன் இந்தியா, ஒன் நேசன் ஒன் கல்ச்சர், ஒன் எலக்சன், ஒன் பார்ட்டி என ஆபத்தான நிலையை இந்தியா எட்டும் . மறுபக்கம் கார்ப்பரேட்டுகள் வளர்ச்சி இந்தியாவில் உச்சம் தொடும். எனவே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.”

இந்த நேர்காணலின் முதல் பகுதி > “25 இடங்களில் போட்டியிடுவது மட்டுமே நம் அரசியல் தகுதி அல்ல” - திருமாவளவன் நேர்காணல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்