இந்திய அரசியலில் 1920களில் பல முக்கியமான அரசியல் நிகழ்வுகள் அரங்கேறின. இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் நுழைவு, அண்ணல் அம்பேத்கர் ஐரோப்பியக் கல்வி நிறுவனங்களில் உயர் படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பியது, தந்தை பெரியார் காங்கிரஸில் இணைந்து பின் வெளியேறி... சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தது, ஆர்எஸ்எஸ் எனும் இந்துத்துவ அரசியல் அமைப்பின் தோற்றம், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தொடக்கம் என அந்த சகாப்தமே பல்வேறு அரசியல் சித்தாந்தங்களின் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.
அப்போதுதான் இந்திய அரசியலில் திராவிடம், தலித்தியம், இந்துத்துவம், கம்யூனிசம் எனப் பல்வேறு அரசியல் தத்துவப் போக்குகள் அமைப்புரீதியாக உருவம்பெறத் தொடங்கியிருந்தன. ஆனால், அவற்றில் கம்யூனிசம் மட்டும்தான் அன்றைய பிரிட்டிஷ் அரசால் அதிக அளவில் ஒடுக்குமுறைகளையும் அடக்குமுறைகளையும் சந்தித்தது.
1917இல் லெனின் தலைமையில் ரஷ்யாவில் ஏற்பட்ட சோஷலிசப் புரட்சியானது கம்யூனிசத்தையும் மார்க்சியத்தையும் உலகம் முழுமைக்கும் எடுத்துச்சென்றது. இதையடுத்து, இந்தியாவிலும் கம்யூனிசத்தின் தாக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில், ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கமும் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கமும் மிகத் தீவிரமாக இருந்தன.
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்: மீரட் சதி வழக்கு, பெஷாவர் சதி வழக்கு எனப் பொதுவுடைமை சித்தாந்தங்களைப் பேசுபவர்கள் அனைவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல்,“உழைக்கும் தொழிலாளர்களே! விவசாயிகளே! இன்று உங்கள் சார்பாக உங்களுடன் உழைப்பவன் என்ற முறையில் உங்கள் முன் பேச வந்துள்ளேன்.
உலக கம்யூனிஸ்ட்டுகளின் சிறப்புக்குரிய வரிசை முறையில் உலக நலனில் அக்கறையுள்ள மாபெரும் இயக்கத்தின் பிரதிநிதியாக இங்கு வந்துள்ளேன். உலகத் தொழிலாளர்களுக்குக் கம்யூனிசம் தரும் உயரிய வாழ்த்துச் செய்தியை உங்களுக்குத் தர நான் வந்துள்ளேன்” என 1922இல் கயையில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் தன்னை ஒரு ‘கம்யூனிஸ்ட்’டாகப் பிரகடனப் படுத்திக்கொண்டவர்தான் தோழர் சிங்காரவேலர்.
அது மட்டுமின்றி, 1925இல் கான்பூரில் நடைபெற்ற முதலாவது கம்யூனிஸ்ட் மாநாட்டுக்குத் தலைமை வகித்து அவர் உரையாற்றினார். ஆரம்பக் காலத்தில் காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டு காந்தியின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்ற தோழர் சிங்காரவேலர், 1917இல் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் மார்க்சியம் குறித்துப் படிக்கத்தொடங்கியுள்ளார்.
‘தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’ எனப் போற்றப்படும் தோழர் சிங்கார வேலர்தான் இந்தியாவில் முதன்முதலில் மே தின அணிவகுப்பை நடத்தியவர். மேலும், இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சியை ஆரம்பித்து பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னின்று நடத்தி ஆலோசனைகளையும் வழங்கினார்.
ஈரோட்டுப் பாதை: தந்தை பெரியாருடன் ஏற்பட்ட நட்பால் சுயமரியாதை இயக்கத்தின் ‘குடிஅரசு’ பத்திரிகையில் சமதர்மம் குறித்துக் கட்டுரைகள் எழுத ஒப்புக்கொண்டார். மேலும், ‘ஈரோட்டுப் பாதை’ எனும் அரசியல் திட்டத்தின் மூலம் சமதர்மக் கொள்கைகளை மக்களிடையே பிரச்சாரம் செய்வதோடு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற ‘சுயமரியாதை சமதர்மக் கட்சி’யை ஆரம்பிக்கவும் திட்டமிட்டனர்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் காரணமாகப் பெரியார் தனது சமதர்மக் கோட்பாட்டுப் பிரச்சாரத்தைக் கைவிட்டார். ஆனாலும், தோழர் சிங்காரவேலர் பற்றவைத்த சமதர்மம் என்னும் கோட்பாட்டு நெருப்பு, தமிழ்நாட்டு இளைஞர்களிடையே பற்றி எரிய ஆரம்பித்தது.
பெரியாரின் சமதர்மக் கோட்பாட்டுப் பிரச்சாரத்தைக் கைவிடுதல் என்கிற முடிவால் அதிருப்தியுற்ற சுயமரியாதை சமதர்மத் தோழர்கள் 1936இல் சோஷலிஸ்ட் கட்சியை நிறுவினர். ப.ஜீவானந்தம் அதன் செயலாளராகச் செயல்பட்டார். 1935இல் தொடங்கப்பட்ட ‘புது உலகம்’ என்கிற மாதம் ஒருமுறை வெளியாகும் பத்திரிகையில், சிங்காரவேலர் தனது சோஷலிசத் தத்துவத்தை மக்களுக்குப் பயிற்றுவிப்பதற்காகப் பயன்படுத்தினார்.
1932இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த நிலையில், சிங்காரவேலரின் இந்த சோஷலிசப் பிரச்சாரம் பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுவதற்குப் பெரும் பங்காற்றியது.
தவறவிடப்பட்ட வாய்ப்பு: தொடக்கக் கால இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் தோழர் சிங்காரவேலர் மிகவும் தனித்துவமானவராக விளங்கினார். 1990கள் வரையிலுமே இந்தியப் பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் அனைவரும் பொருளாதார அடிப்படையில் வர்க்கத்தினை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்தியச் சமூகத்தை ஆய்வுசெய்தனர்.
அந்த ஆய்வு முடிவுகளின் வழி தங்கள் வேலைத் திட்டத்தை வகுத்துக்கொண்டனர். இந்தியசமூகத்துக்கென்றே பிரத்யேகமாக உள்ள சாதியை முதன்மை முரண்பாடாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறியதன் விளைவாகத்தான், இன்று ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, மிகப்பெரிய பின்னடைவை அவர்கள் சந்தித்துள்ளனர்.
1920களில் ஆரம்பிக்கப்பட்ட இந்தியப் பொதுவுடைமை இயக்கம் சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகே சாதியை ஒரு முதன்மை முரண்பாடாக, சமூகப் பகுப்பாய்வின் அடித்தளமாகக் கணக்கில் கொண்டது. ஆனால், தோழர் சிங்காரவேலர் அன்றைய காலகட்டத்திலேயே சமதர்மக் கொள்கையை மக்களிடம் பரப்புரை செய்யும்போதே சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்.
இந்தியப் பொதுவுடைமை இயக்கங்கள் சிங்காரவேலரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய படிப் பினைகளைத் தவறவிட்டுவிட்டதன் விளைவை இன்று எதிர்கொண்டிருக்கின்றன.
தந்தை பெரியாருடன் இணைந்து சிங்காரவேலர் முன்னெடுத்த சாதி ஒழிப்புடன் கூடிய பொதுவுடைமைச் சமூகத்துக்கான ‘ஈரோட்டுப் பாதை’ திட்டமானது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருக்குமேயானால், இந்தியப் பொதுவுடைமை இயக்கங்களுக்கான அரசியல் திசைவழிகாட்டியாக தோழர் சிங்காரவேலர் இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.
- தொடர்புக்கு: vijaydharanish@gmail.com
(பிப்ரவரி 11 – ம.சிங்காரவேலரின்78 ஆவது நினைவுநாள்)
To Read in English: Singaravelar: Lessons left unlearnt
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago