பங்குச் சந்தை சரிவும் பொருளாதாரமும்

By பால் க்ரூக்மேன்

ங்குச் சந்தைகளைப் பற்றி விவாதிக்கும்போது நீங்கள் மூன்று விதிகளை நினைவில் வைக்க வேண்டும். முதலாவது, பங்குச் சந்தை என்பதே பொருளாதாரம் கிடையாது. இரண்டாவது, பங்குச் சந்தை என்பதே பொருளாதாரம் கிடையாது. மூன்றாவது, பங்குச் சந்தை என்பதே பொருளாதாரம் கிடையாது. எனவே, கடந்த சில ஆண்டுகளாகப் பங்குச் சந்தையில் ஏற்படும் சரிவுக்கும் பொருளாதாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்படுவதற்கு ஏதாவது முக்கியக் காரணம் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். 1987-ல் பங்குச் சந்தை சரிந்தபோது, உண்மையான நிலையைப் பொருளாதார அறிஞர் ராபர்ட் ஷில்லர் ஆய்வுசெய்தார். முதலீட்டாளர்களின் மனதில் உண்மையில் என்ன இருக்கிறது என்று விசாரித்தார். சுய பீதியின் காரணமாகத்தான் முதலீட்டாளர்கள் பங்குகளைக் குறைந்த விலைக்கு விற்றுக்கொண்டிருந்ததைக் கண்டுபிடித்தார். பங்குகளின் மதிப்பு சரிந்துவிடும் என்று எந்தப் பத்திரிகையும் செய்தியோ, கட்டுரையோ, கிசுகிசுவோ வெளியிடவில்லை. யாரோ சிலர் சந்தைக்குச் சென்று தங்களிடம் இருந்த பங்குகளை விற்றார்கள், அதைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்களும் விற்க ஆரம்பித்தனர்.

என்னவாகும் அமெரிக்கா?

பங்குகளின் முக மதிப்பு அல்லது விற்பனை மதிப்பு குறைவதால் எதிர்காலப் பொருளாதாரப் போக்கை ஊகித்துவிட முடியும் என்றும் கற்பனை செய்துகொள்ளாதீர்கள். பொருளாதார அறிஞர் பால் சாமுவேல்சன் கேலியாகக் கூறுகையில், ‘‘கடந்த ஒன்பது பொருளா தார வீழ்ச்சியில் ஐந்தை பங்குச் சந்தைகள்தான் முன்கூட்டியே தெரிவித்தன’’ என்றார். அதாவது, சந்தை சரிந்ததால்தான் வீழ்ச்சி என்பதை அப்படி மறைமுகமாகக் குறிப்பிட்டார். 1987-ல் பங்குச் சந்தை சரிந்த பிறகு, நடந்ததென்னவோ பொருளாதாரம் வளர்ந்ததுதான்!

இருந்தாலும் பங்குச் சந்தையில் அதகளம் நிகழும்போதெல்லாம் பொருளாதார நிலைமையைப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. தரவுகளை ஆராய்ந்தால் அமெரிக்காவின் வளர்ச்சி சரியும் என்று தோன்றவேயில்லை. அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 1.5% ஆக இருக்கும். டொனால்ட் டிரம்பும் அவருடைய அடிவருடிகளும் கூறுவதைப் போல 3% அல்ல என்று தெரிகிறது.

பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் நிலம்-வீடு விற்பனைத் துறையின் பங்குகள் ஆகியவற்றின் உண்மை மதிப்பைவிட சற்றே அதிகமாக உயர்த்தி விற்கப்படுகின்றன என்றும் தெரிகிறது. பிட் காயினைப் பெரிய சொத்தாக நினைக்கும் முட்டாள்தனத்தை இதில் சேர்க்க வேண்டாம். பொருளாதாரத்தின் அனைத்துக் காரணிகளுமே வழக்கத்தைவிட நன்றாகவே இருக் கின்றன. ஒருவேளை பங்குச் சந்தை சரிவுக்குக் காரணம் என்று பார்த்தால் வேலைவாய்ப்பைப் பற்றி பத்திரிகைகளில் வந்த ஒரு செய்தியாக இருக்கலாம். அதாவது, பெருமளவிலாக இல்லையென்றாலும், குறிப்பிட்டுச் சொல்லும்படியாகத் தொழிலாளர்களின் ஊதியம் உயர்ந்திருக்கிறது என்ற செய்திதான் அது. ஊதியம் உயர்வது நல்ல செய்தி. ஊதியம் உயரவேயில்லை என்பது இதுவரை விரக்தியை ஏற்படுத்தி வந்தது. பொருளாதாரம் மீட்சியடையும்போது ஊதிய மும் உயர்வதுதான் சரி. ஒபாமா நிர்வாகத்திலேயே பொருளாதாரம் மீட்சி அடையத் தொடங்கியது.

அமெரிக்காவில் அனைவருக்குமே வேலைவாய்ப்பு கள் கிடைத்துவிடக்கூடிய நிலைமையைப் பார்க்கிறோம். தொழிலாளர்கள் இப்போது பார்த்துவரும் வேலையை விட்டுவிடலாம் என்று நினைக்கும் நிலையில் இருக்கின்றனர். இருக்கும் வேலையை விட்டால், வேறு நல்ல வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வந்தால்தான் இப்படிப்பட்ட சிந்தனையே வரும்.

ஊதியம் உயர்வதிலிருந்து தெரிவது என்னவென்றால், தொழிலாளர்கள் தங்களுக்குரிய ஊதியத்தை பேரம் பேசி வாங்கும் நிலைக்கு வந்துள்ளனர். இவையெல்லாமே நல்ல செய்திகள்தான். எதிர்காலத்தில் அமெரிக்காவின் வளர்ச்சி வேலை இல்லாதவர்களுக்கு வேலை தருவதால் வந்துவிடாது. வேலை செய்யக்கூடிய திறன் படைத்த தொழிலாளர்கள் அதிகம் கிடைப்பதன் மூலமும், தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதன் மூலமும்தான் சாத்தியம். அதாவது, ஒவ்வொரு தொழிலாளியும் நபர்வாரியாக அதிக உற்பத்தியைத் தர வேண்டும்.

கவலைக்குக் காரணம்

அமெரிக்காவில் 1946 முதல் 1965 வரையில் பிறந்தவர் கள் முதுமை காரணமாக வேலையிலிருந்து ஓய்வுபெறத் தொடங்கியுள்ளனர். உற்பத்தித் திறன் வளர்ச்சி ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. இவ்விரண்டையும் சேர்த்துப் பார்க்கும்போது டிரம்ப் கூறியதைப் போல அல்லாமல், அதில் பாதியளவுக்குத்தான் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்பது தெளிவாகிறது. பங்குச் சந்தைகள் டிரம்பை நம்புகின்றனவா? ஆனால், அமெரிக்கப் பொருளாதாரம் என்னவோ தனக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதைப்போலச் செயல்படுகிறது. அதன் நினைப்பில் நீரை ஊற்றுவதைப் போல வட்டி வீதம் அதிகமாகவும் பங்குகளின் விலை குறைவாகவும் இருக்கின்றன.

வளர்ச்சி வீதம் சற்றே குறைகிறது என்பதைத் தவிர, நாம் கவலைப்பட வேறு ஏதும் இருக்கிறதா? வீடு உள்ளிட்ட சொத்துகளின் மதிப்பு அதிகம்தான். கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது. வீடுகளின் விலை உயர்ந்து இப்போது லேசாக இறங்கியிருக்கிறது. தனிப்பட்ட முறையில் இவை பீதியளிக்கும் அளவுக்கு இல்லை.

பங்குகளின் மதிப்பு 2000-ல் இருந்ததைப் போல அபரிமிதமாக உயர்த்தி வைக்கப் படவில்லை. வீட்டு விலையும் 2006-ல் இருந்ததைப் போல அதிகமாக இல்லை. இரு சந்தைகளுமே சற்று விலை அதிகமாக ஏற்றப்பட்டதைப் போலவே காணப் படுகின்றன. ஜப்பானில் 1980-களின் இறுதியில் இப்படி இருந்தபோதுதான் பொருளாதாரம் அங்கே சரிந்தது.

சொத்துகளின் மதிப்பு சரிந்தால் நுகர்வோர்கள் தங்களுடைய செலவுகளைக் குறைத்துக்கொண்டு சற்று சேமிக்கத் தொடங்குவார்கள். கொள்கை வகுப்பவர்கள் திறமையானவர்களாக இருந்தால் இந்த எல்லாப் பிரச்சினைகளையுமே சமாளித்துவிடலாம். என்னுடைய கவலையெல்லாம் அவர்களைப் பற்றித்தான். ஜேனட் எல்லனுக்குப் பதிலாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெரோம் பாவெல் திறமைசாலிதான். ஆனால், நெருக்கடி ஏற்பட்டால் எப்படிச் சமாளிப்பார் என்று யாருக்கும் தெரியாது.

சமீபத்தில் டாவோஸ் நகரில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து அமெரிக்க நிதியமைச்சரிடம் கேட்டபோது, அது ஒன்றும் உலக முதலீட்டாளர் களுடைய கூட்டம் என்று நினைக்கவில்லை என்றிருக் கிறார். இப்படிப்பட்ட ஞானம் உள்ளவரைக் கொண்டு தான் நாம் எதிர்கால நெருக்கடிகளைச் சமாளிக்கப் போகிறோம். அப்படியானால், நாம் சிக்கலில் மாட்டிக்கொள்ளப்போகிறோமா? அவ்வளவு விரைவாகச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட சூழலில் நம்மிடம் இருப்பவர்கள் மோசமாகத்தான் முடிவெடுப்பார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

தமிழில்: சாரி,

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

40 mins ago

கருத்துப் பேழை

48 mins ago

கருத்துப் பேழை

53 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்