2014 மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானின் 25 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோற்றது. சமீபத்தில் அம்மாநிலத்தின் இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும், ஒரு சட்ட மன்றத் தொகுதியிலும் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தனது வெற்றிக் கணக்கை மீண்டும் தொடங்கியிருக்கிறது காங்கிரஸ். கட்சிக்குக் கிடைத்திருக்கும் புத்துணர்வு, வெற்றிக்கான காரணங்கள் குறித்துப் பேசுகிறார் அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட். அவருடனான பேட்டி:
தேர்தல் முடிவுகளுக்கு முக்கியக் காரணம் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசுக்கு எதிரான வாக்குகளா அல்லது காங்கிரஸுக்கு ஆதரவான வாக்குகளா?
இதை அத்தனை எளிதாக விளக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஏனெனில், வசுந்தரா அரசுக்கு எதிராகவும், ராஜஸ்தான் மாநில அரசின் மொத்த வீழ்ச்சியைக் காட்டும் வகையிலும் இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. அதேசமயம், இத்தனை ஆண்டுகளாகக் காங்கிரஸ் பின்பற்றிவரும் கொள்கைகளையும் நிலைப்பாடுகளையும் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.
ஏதோ இரண்டு வாரகாலப் பிரச்சாரத்தின் காரணமாகத்தான் இந்த இடைத்தேர்தல்களின் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமைந்தன என்று நான் கருதவில்லை. கடந்த பல ஆண்டுகளாகத் தொடர் நடவடிக்கைகள் மூலம், ராஜஸ்தான் மக்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
ராஜஸ்தானில் இன்னும் எட்டு மாதங்களில் சட்ட மன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மக்கள் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன.
உங்கள் சொந்தத் தொகுதியான அஜ்மீரில் ஏன் நீங்கள் போட்டியிடவில்லை?
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நியமிக்கப்பட்டேன். கட்சிக்குப் புத்துயிர் ஊட்டுவதுதான் எனது ஒரே வேலை. 2013 சட்ட மன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் காங்கிரஸ் 21 இடங்களில்தான் வென்றது. சுதந்திரத்துக்குப் பிறகு, ராஜஸ்தானில் காங்கிரஸ் இத்தனை பெரிய வீழ்ச்சியைச் சந்தித்ததில்லை. அந்தச் சூழலில் காங்கிரஸ் வலுவான நிலையில் இல்லை. கட்சியை மறுகட்டமைக்கும் பணி எனக்கு வழங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக நான் செய்துவருவது அதைத்தான். இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸுக்கு அதில் சிறப்பான வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும் என்பது எனது பொறுப்பு என்றானது.
ராஜஸ்தான் சட்ட மன்றத் தேர்தலில், முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்துவது கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் என்பதால் அதை காங்கிரஸ் தவிர்க்கிறது. இது பின்னடைவை ஏற்படுத்துமா?
இல்லை. தனிநபரை முன்னிறுத்தும் கொள்கையை காங்கிரஸ் பின்பற்றுவதில்லை. ஒன்றிரண்டு பிறழ்ச்சிகள் இருக்கலாம். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள்தான் தங்கள் தலைமையை முடிவுசெய்வார்கள். ஆனால், இப்படித் தனிநபர்களை முன்னிறுத்துவதைப் பெருமையாகக் கருதும் பாஜக, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகத்தில் அப்படிச் செய்திருந்தாலும், வசுந்தரா ராஜேயை முதல்வர் வேட்பாளராகத் தற்போது முன்னிறுத்தவில்லை. எனவே, இந்தக் கேள்வி பாஜகவுக்குத்தான் பொருத்தமானது.
நாங்கள் ஒரு அணியாக நின்று தேர்தலை எதிர்கொள்வோம். அதுதான் காங்கிரஸின் வழக்கம். யார் என்னவாக ஆகிறார் என்பதல்ல கட்சிக்கு என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
இந்தத் தேர்தல்களில் ராஜபுத்திரர்களின் வாக்குகளைப் பெறுவதில் காங்கிரஸ் வெற்றிபெற்றுவிட்டது என்றே தெரிகிறது. ‘பத்மாவத்’ திரைப்படம் தொடர்பான பிரச்சினையில் காங்கிரஸ் மெளனம் காத்ததற்கு இதுதான் காரணமா?
நிச்சயமாக இல்லை. திரைப்படம், நாடகம், இலக்கியம் என்று கலையின் எந்த வடிவமும் குறிப்பிட்ட சமூகத்தினரைப் புண்படுத்துகிறது என்றால் நாம் அவ்விஷயத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்தத் திரைப்படம் தயாராகிவந்த நிலையில் உருவான பிரச்சினைகளை வசுந்தரா ராஜே அரசு கண்டுகொள்ளவேயில்லை. அப்போதே அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தால் ஒரு தீர்வைக் கொண்டுவந்திருக்க முடியும்.
காங்கிரஸ் தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறது. சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்பவர்களைச் சட்டத்தின் மூலம்தான் அணுக வேண்டும். எங்கள் நிலைப்பாட்டில் குழப்பமே இல்லை.
சில மாதங்களுக்கு முன்னர் விவசாயிகள் நடைபயணத்தில் கலந்துகொண்டீர்கள். ராஜஸ்தான் அரசு விவசாயிகளுக்கு ஆதரவான பட்ஜெட் அளித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்த பட்ஜெட்டை விவசாயிகளுக்கு ஆதரவான பட்ஜெட்டாகக் காட்ட பாஜகவினர் முயற்சிக்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக அவர்கள் இதைச் செய்யாதது ஏன்? முதல் பட்ஜெட்டில் பெருநிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்தார்கள். தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதால் அவர்கள் இப்போது இதையெல்லாம் செய்கிறார்கள். பாஜகவுக்குப் பெரிய அளவில் எதிர்ப்பு உருவாகியிருக்கிறது. விவசாயிகள் பிரச்சினை அரசியல்ரீதியாகத் தங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை பாஜக உணர்ந்திருக்கிறது.
மக்களவைத் தேர்தலுடன் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்ட மன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் ஒரு பேச்சு நிலவுகிறது. காங்கிரஸுக்கு இது எப்படியான விளைவுகளைத் தரும்?
ஊழல், விவசாயிகள் தற்கொலை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று ராஜஸ்தான் அரசின் செயல்பாடுகள் படுமோசமாக உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி வோட்டு கேட்கிறீர்கள் எனும் பெயரில் அரசுக்கு எதிரான அதிருப்தி நிலை இல்லை என்று சப்பைகட்ட முடியாது.
அதாவது, பிரதமரின் பெயரால் வோட்டு கேட்க முடியாது என்கிறீர்கள்…
ஆமாம். ராஜஸ்தானில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலைக்கு யார் காரணம்? தாங்கள் விரும்பியவாறு அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். ஆனால், காங்கிரஸ் தலைவர் எனும் முறையில் சொல்கிறேன். நிலைமை அவர்கள் கைமீறிச் சென்றுவிட்டது!
© தி இந்து ஆங்கிலம்
தமிழில்: வெ.சந்திரமோகன்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago