ஐரோப்பிய நாடுகளில் பாரம்பரிய அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்கள்தான் நவீன விஞ்ஞானிகளாகவும் முதலாளிகளாகவும் உருமாறினர். அந்நாடுகளின் பாரம்பரியச் சலவைத்தொழிலாளர்கள் நவீன சோப்பு, சலவை இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில்களில் ஈடுபட்டதுபோல், இந்தியாவில் நிகழவில்லை.
இங்கு உவர்நீராலும் வெள்ளாவித் தொழில்நுட்பத்தாலும் சலவைத் தொழில் செய்தோருக்கு, நவீன சோப்பு, சலவை இயந்திரங்களைத் தயாரிக்கும் வாய்ப்பு மட்டுமல்ல, அவை தொடர்பான தொழில்நுட்பப் படிப்புகளைப் படிக்கும் வாய்ப்புகூட மறுக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சியின்போதும் சுதந்திர இந்தியாவிலும் உருவான நவீனத் தொழில்களில் தினக் கூலியாளராகவும் மாதாந்திர ஊதியம் பெறும் சேவையாளராகவும் உருமாறத் தேவையான கல்வியைப் பெற பட்டியல் சாதியினர் போராடுகின்றனர். இதற்குக் கல்வி நிலையங்கள் உள்பட பொதுக் களங்களிலும் வெளிகளிலும் புழங்குரிமைகளைப் பெறுவது தவிர்க்க இயலாத இலக்காக இருந்ததால், தொழில் முனைவோராகப் பரிணமிக்கும் சிந்தனைகூட உருவாகியிருக்கவில்லை.
இந்தியாவில் கண்ணியமான வாழ்வுக்கான உடைமைகள் இருப்பதையும் - இல்லாததையும் படிநிலை சாதியக் கட்டமைப்பு தீர்மானிப்பதாக அம்பேத்கர் விளக்குகிறார். விவசாய உற்பத்தி முறையில்ஒரு சமூகம் இயங்குவதற்குத் தேவையான உணவு,உடை, உறைவிடம் போன்றவற்றுக்கான உணவுதானியங்கள், துணி, சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்திசெய்யும் அறிவியல் தொழில்நுட்ப அறிவு ஒடுக்கப்பட்ட சமூகங்களிடம் இருந்தபோதிலும் அவ்வறிவைத் தீட்டென்றும் அவர்களைத் தீண்டத்தகாதோர் என்றும் முத்திரை குத்தி, உடைமையுரிமை மறுக்கப்பட்டதால் அவர்கள் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் நீடிக்கிறது.
தனித்துவ நிகழ்வு: பிரிட்டிஷ் ஆட்சி காலந்தொட்டு நடைபெறுகின்ற முதலாளித்துவ அரசியல், பொருளாதார மாற்றத்தால் பாரம்பரியக் கட்டுத்தளைகளிலிருந்து விடுபட்டு, மாற்றுத் தொழில்களில் ஈடுபடுவதாலும், 1990களில் அம்பேத்கர் நூற்றாண்டு விழா பேரெழுச்சியை உருவாக்கிய நிலையில், தனியார்மயக் கொள்ளையும் பரவலானதால் பட்டியல் சாதி, பழங்குடியினச் சமூகங்களில் முதலாளிகள் ஏன் உருவாகக் கூடாது என்ற கேள்வி விவாதமானது.
இச்சமூகங்களில் ஏற்கெனவே தொழில் முனைவோர்களானோர், அச்சமூகங்களின் வரலாற்றில் முதன்முறையாக அதற்கெனக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, தங்கள் சமூகத்தினரை முதலாளிகளாக்க முனைகின்றனர். பிற சாதிகளில் ஏற்கெனவே முதலாளிகளானோர் சாதி அமைப்புகளின் பின்னணியிலேயே நிலைகொண்டதுபோல், பட்டியல் சாதியினரிடமும் அவ்வாறேநிகழத் தொடங்கியது.
ஆனால், தங்கள் உற்பத்திப் பொருள்களைக் காட்சிப்படுத்தும் முயற்சியை முன்னெடுக்காததால் முதலாளிகளாக உருமாறும் ஊக்கம் பட்டியல் சாதியினரிடம் குறிப்பிடும் அளவுக்கு இல்லை. இப்பின்னணியில், தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத் துறையின்வழிகாட்டலில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி - மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ), அரசின் நிதியுதவியில் சென்னைநந்தம்பாக்கம் வணிக வளாகத்தில் இம்மாதம் 26, 27 ஆகிய இரு நாள்களில் பட்டியல் சாதி,பழங்குடியின தொழில் முனைவோரின் உற்பத்திகளைக்காட்சிப்படுத்தி, கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகளைநடத்தியது.
இது, இந்தியக் குடியரசின் வரலாற்றில் முதன்முறையாகத் தமிழகத்தில் நடத்தப்பட்ட தனிச்சிறப்பான நிகழ்வு. அச்சமூகங்களிடம் தொழில்முனைவோராக உருவாகும் சிந்தனையற்ற போக்கில் இந்நிகழ்வு உடைப்பை ஏற்படுத்தி முதலாளிகளாகும் எண்ணத்தை விதைத்துள்ளது.
இந்நிகழ்வை ஒருங்கிணைத்த தாட்கோ மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி, அரசுத்துறைகளின் செயலர்கள் ஜி.லட்சுமி பிரியா, அருண்ராய், த.உதயச்சந்திரன், ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர் ஆனந்த், பழங்குடியினத் துறை இயக்குநர் அண்ணாதுரை, தாட்கோ தலைவர் மதிவாணன், மாநிலத் திட்டக் குழு உறுப்பினர் எம்.விஜயபாஸ்கர், முக்கியத் தொழில் ஆளுமைகள் பங்கேற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள் என்.கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ், த.மோ.அன்பரசன் பங்கேற்க, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தொழில் தொடங்குவது தொடர்பான 20 தலைப்புகளில் தொழிலதிபர்களும் பேராசிரியர்களும் உரையாற்றினர். தொழில் முனைவோருக்கான அமைப்புகள் வழி கண்காட்சியாளர்களை தாட்கோ திரட்டியது. நிதி மூலதன அறிமுகத்துக்காக தேசிய, தனியார் வங்கிகள், அரசின் கடனுதவி அரங்குகளும், விற்பனையாளரும் வாங்குவோரும் கலந்துரையாடும் பொதுக்களமும், விற்பனைக் காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.
ஊதியம் கொடுப்போர்: பட்டியல் சாதி, பழங்குடியினச் சமூகங்களின் பாமரரும் படித்தோரும் ஆண்களும் பெண்களும் தொழில்முனைவோராக இருப்பதை இக்கண்காட்சி காட்டியது. திருப்பத்தூர் தூய நெஞ்சகக் கல்லூரியில் இளங்கலை அறிவியல், எம்.ஐ.டி.யில் பி.டெக்., பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி.யில் எம்.டெக்., எம்பிஏ பட்டங்களைப் பெற்ற ஒருவர், சுமார் 20 ஆண்டுக் காலம் மாதாந்திர ஊதியக்காரராகப் பணியாற்றியதில் சேமித்த நிதி - உறவினர்களிடமும் வங்கியிலும் பெற்ற கடனைக் கொண்டு ஆட்டோமொபைல், ஹைட்ராலிக் உதிரிப் பாகங்களைத் தயாரிப்பவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து ரோபாட்டிக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள துப்புரவுத் தொழிலாளியின் மகன், சென்னை சமூகப் பணி கல்லூரியில் முதுகலைச் சமூகத் தொழில்முனைவு பட்டம் படித்துக்கொண்டு உற்பத்தியில் ஈடுபடுபவர், எட்டாம் வகுப்புவரை படித்துவிட்டு தோல் பொருள் உற்பத்தியில் ஈடுபடுவதோடு, இத்தொழில் குறித்துப் பயிற்சியும் கொடுப்பவர் என முதல் தலைமுறையாக ஊதியம் கொடுக்கும் தொழில் முனைவோர் அரங்குகளை அமைத்திருந்தனர்.
இக்கண்காட்சி, புதிய விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் சிந்தனையையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சமூகங்களைச் சேர்ந்த தொழில்முனைவோரிடம் 4% பொருள்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டுமென்ற விதியையும், தொழிலை மேம்படுத்த தகுதியும் திறமையும் மட்டுமல்லாது, தொடர்பும் வலைப்பின்னல் உறவும் அவசியம் என்பதையும், அரசின் கடனுதவித் திட்டங்களையும் இந்நிகழ்வில்தான் முதன்முறையாகச் சிலர் அறிந்துள்ளனர்.
தங்களின் சுயத் தூண்டலாலும் மூலதனத் திரட்டலாலும் முதல் தலைமுறைத் தொழில் முனைவோர்களான இவர்களின் சமூக அடையாளங்களை நன்கறிந்தாலும்கூடப் பிற சாதித் தொழில் முனைவோர் ஆதரவளிக்கின்றனர். அதேவேளை, இச்சமூக அடையாளங்களால் ஒடுக்கப்பட்டோர் இடர்பாடுகளையும் எதிர்கொள்கின்றனர்.
தரமான பொருள்களை உற்பத்தி செய்தாலும் இப்பொருள்களை வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரிடம் கொண்டுசென்றால் பட்டியல் சாதி, பழங்குடியின அடையாளம் தெரிந்தபின் அவர்கள் வாங்குவதில்லை. பிற சாதிகளின் ஆதரவை வரவேற்கின்ற அதேவேளையில், இடையூறுகளைக் களைவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
விதை பரவட்டும்: பட்டியல் சாதி, பழங்குடியினத் தொழில்முனைவோர் முதல் தலைமுறையினராக இருப்பதால், அவர்களுக்கு அரசு பல நிலைகளிலும் துணைநிற்க வேண்டும். உலகெங்கிலும், முதலாளித்துவமானது அரசின் துணையுடனேயே காலூன்றுவதால், இச்சமூகங்களுக்கும் அரசு சிறப்புக் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
தொழில்முனைவோருக்கான ஊக்கத்தையும், அரசின் கடனுதவி சார்ந்த விழிப்புணர்வையும் நேரடியாகவும், ஊடகங்கள் வழியாகவும் வெளிப்படுத்துதல் அவசியம். அரசின் தாட்கோ உள்படப் பிற நிறுவனங்கள் வழி தேசிய வங்கிகள் வழங்கும் கடன்கள் அம்மக்களுக்குக் கிடைப்பதை உத்தரவாதம் செய்வதற்கெனத் தனிப் பிரிவுகள் தேவை.
அவர்களின் உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்த மாநில, மாவட்ட, வட்டம் வரை வாரச் சந்தைபோல் குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காட்சிகளை நடத்துதல், பொதுத் தொழில் முனைவோரின் கண்காட்சிகளில் இவர்களும் பங்கேற்பதை உறுதிசெய்தல் போன்ற முன்னெடுப்புகள் அவசியம். சுற்றுலாத் தலம், பேருந்து நிலையம், கோயில் வளாகம் போன்ற அரசின் முக்கியப் பொதுவெளிகளில் கடைகள் கிடைக்க இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும்.
பட்டியல் சாதி, பழங்குடியின சமூகங்களின் இயக்கங்களில் சுமார் இரு நூற்றாண்டுகளாகக் குறிப்பிடும் அளவுக்கு இல்லாத தொழில்முனைவோருக்கான சிந்தனையைத் தாட்கோவின் இக்கண்காட்சி பற்றவைத்துள்ளது. இது ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை உள்பட அரசின் அனைத்துத் துறைகளும் இச்சமூகங்களில் தொழில்முனைவோர்களை உருவாக்க முனைப்புடன் செயலாற்றி இயக்கமாகப் பரவ வேண்டும்.
எல்லா சாதிகளிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் முதலாளிகளாக இருக்கிறபோது பட்டியல் சாதி, பழங்குடியினச் சமூகங்களிலும் அத்தகைய எண்ணிக்கையில் முதலாளிகளாகி அவர்களும் சம்பளம் கொடுப்போராக உருமாறுவதே தொழில் முனைவோரில் சமூக நீதி நிலவச்செய்வதன் ஓர் அங்கமாகும்.
தொழில்முனைவோருக்கான ஊக்கத்தையும், அரசின் கடனுதவி சார்ந்த விழிப்புணர்வையும் நேரடியாகவும், ஊடகங்கள் வழியாகவும் வெளிப்படுத்துதல் அவசியம். அரசின் தாட்கோ உள்படப் பிற நிறுவனங்கள் வழி தேசிய வங்கிகள் வழங்கும் கடன்கள் அம்மக்களுக்குக் கிடைப்பதை உத்தரவாதம் செய்வதற்கெனத் தனிப் பிரிவுகள் தேவை.
அவர்களின் உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்த மாநில, மாவட்ட, வட்டம் வரை வாரச் சந்தைபோல் குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காட்சிகளை நடத்துதல், பொதுத் தொழில் முனைவோரின் கண்காட்சிகளில் இவர்களும் பங்கேற்பதை உறுதிசெய்தல் போன்ற முன்னெடுப்புகள் அவசியம்.
சுற்றுலாத் தலம், பேருந்து நிலையம், கோயில் வளாகம் போன்ற அரசின் முக்கியப் பொதுவெளிகளில் கடைகள் கிடைக்க இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும். பட்டியல் சாதி, பழங்குடியின சமூகங்களின் இயக்கங்களில் சுமார் இரு நூற்றாண்டுகளாகக் குறிப்பிடும் அளவுக்கு இல்லாத தொழில்முனைவோருக்கான சிந்தனையைத் தாட்கோவின் இக்கண்காட்சி பற்றவைத்துள்ளது.
இது ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை உள்பட அரசின் அனைத்துத் துறைகளும் இச்சமூகங்களில் தொழில்முனைவோர்களை உருவாக்க முனைப்புடன் செயலாற்றி இயக்கமாகப் பரவ வேண்டும். எல்லா சாதிகளிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் முதலாளிகளாக இருக்கிறபோது பட்டியல் சாதி, பழங்குடியினச் சமூகங்களிலும் அத்தகைய எண்ணிக்கையில் முதலாளிகளாகி அவர்களும் சம்பளம் கொடுப்போராக உருமாறுவதே தொழில் முனைவோரில் சமூக நீதி நிலவச்செய்வதன் ஓர் அங்கமாகும்.
- தொடர்புக்கு: ko.ragupathi@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago