க
மல்ஹாசனால் நிஜமாகவே தேர்தல் அரசியலில் நிலைத்து நிற்க முடியுமா, தன் திரை பிம்பத்தைப் பயன்படுத்தி வாக்குகளைச் சேகரிக்க முடியுமா, செலவழிக்க முடியுமா, முதல்வராக முடியுமா, அப்படியே முடிந்தாலும் மாற்றங்களைக் கொண்டுவர முடியுமா என்பன போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகளைச் சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு மிகவும் ஆதாரமான, அடிப்படையான ஒரு கேள்வியை எழுப்பி விடை தேட முயல்வது இப்போதைக்கு அவசரத் தேவையாக இருக்கிறது. எது கமல்ஹாசனை அரசியலுக்கு அழைத்துவந்திருக்கிறது? கொள்கை, சித்தாந்தம், செயல்திட்டம் எதையும் முழுமையாகவோ, தெளிவாகவோ வடிவமைக்காமல் எடுத்த எடுப்பிலேயே நேரடியாக மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கும் துணிவை அவர் பெற்றது எப்படி?
சுருக்கமாகச் சொல்வதானால், சூழல். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் தமிழக அளவில் மட்டுமின்றி, இந்திய அளவிலும், ஒரு வகையில் உலகளவிலும் பரவிக்கிடக்கும் அரசியல் வெறுமையே கமல்ஹாசனை முதல்வர் கனவுடன் மேடையேற்றியிருக் கிறது. கொள்கைகளோ சிந்தாந்தங்களோ அல்ல.. ஆட்சியைப் பிடிப்பதும் மாற்றங்களைக் கொண்டு வருவதும்தான் இப்போதைக்குத் தேவை என்கிறார் கமல்ஹாசன். நான் இடதும் அல்ல, வலதும் அல்ல என்கிறார் அவர். பேசிக்கொண்டிருக்கப்போவதில்லை, செயலில் இறங்கப்போகிறோம் என்றும் அவர் அறைகூவல் விடுக்கிறார். அரசியலற்ற அரசியல் என்று இதனை அழைக்க முடியும்.
அமெரிக்க உதாரணம்
இதை ஓர் உத்தியாகவே கையாண்டு சமீபத்தில் பெரும் வெற்றி பெற்றவர், டொனால்டு டிரம்ப். ஜன நாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனிடம் குறைகள் பல இருந்தாலும், அமெரிக்கா குறித்தும் சர்வதேச அரசியல் குறித்தும் தெளிவான பார்வையை அவர் கொண்டிருந்தார். ஏராளமான சுதந்திரச் சிந்தனையாளர்களைக் கொண்டிருக்கும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர் அவர். ஆனால், எதிர்த்துப் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், ஹிலாரியின் ஜனநாயகக் கட்சியை மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் குடி யரசுக் கட்சியின் கொள்கைகளையும் சேர்த்தே நிரா கரித்துக் களமிறங்கியவர்.
கொள்கை, சித்தாந்தம் எதுவும் தேவையில்லை, “இதுவரை ஆட்சி செய்தவர்கள் உங்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள். அமெரிக்காவின் பழம் பெருமையை நிலைநாட்ட வேண்டுமானால், எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்” என்று மட்டுமே எளிமையாக அவர் கேட்டார். அப்படிக் கேட்க மட்டுமே அவருக்குத் தெரியும். ஆனால், அதையே அவருடைய பலமாகக் கண்டவர்கள் பலர். பொருளாதாரம், அரசியல், சமூகம் என்றெல்லாம் உரையாடத் தயாராகயில்லை அவர். தோண்டித் தோண்டி கேட்கப்பட்டபோது துண்டுத் துண்டாக வந்துவிழுந்த அவருடைய உலகப் பார்வை ஏராளமான பொத்தல்களைக் கொண்டதாகவும் நகைப்புக்குரியதாகவும் பல சமயங்களில் அச்சுறுத்தக்கூடியதாகவும் இருந்தது.
மனநிலை மாற்றம்
இருந்தாலும், இறுதியில் வென்றவர் அவர்தான். பெரும் கதையாடல்களையும் சித்தாந்தங்களையும் அறிவுபூர்வமான விவாதங்களையும் கேட்டுக் கேட்டுச் சலித்துப்போயிருந்த அமெரிக்கச் சமூகம், கொள்கைகள் ஏதுமற்ற ஒரு ரியல் எஸ்டேட் வர்த்தகரை ஒரு மாறுதலுக்குப் பதவியில் அமர்த்திப் பார்க்க விரும்பியது.
திரும்பத் திரும்ப வலது அல்லது இடது, சுதந்திரச் சிந்தனை கொண்ட வேட்பாளர்களைத் தேர்ந் தெடுத்து என்ன பலனைப் பெரிதாகக் கண்டுவிட்டோம்? முற்றிலுமாக வெளியிலிருந்து வரும் ஒருவருக்கு நாம் ஏன் இந்தமுறை ஒரு வாய்ப்பு வழங்கக் கூடாது? இந்தப் பாழாய்ப் போன அரசியலில் அவருக்குப் பரிச்சயமில்லை என்பது உண்மையிலேயே அவரைத் தனித்துக் காட்டுகிறது அல்லவா? அதுவே தான் அவருடைய பலமும்கூட, இல்லையா? ஆம், அவர் இதுவரை வர்த்தகத்தில்தான் ஈடுபட்டுவந்தார், லாபம்தான் ஈட்டிக்கொண்டிருந்தார். ஆம், அவருடைய வார்த்தைகளில் தெளிவில்லை. சில சமயம் முகஞ்சுளிக்கவும் வைக்கிறார். அதனாலென்ன?
பொதுமக்களிடையே படர்ந்து வளர்ந்திருக்கும் இந்த வெறுப்புணர்வுதான் அரசியலற்ற அரசியலை அமெரிக்காவில் வெற்றி பெற வைத்திருக்கிறது. கமல்ஹாசன் தன்னுடைய ஆதர்சங்களில் ஒருவராகக் குறிப்பிட்ட, அவருடன் நேற்று மேடையைப் பகிர்ந்துகொண்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் அசாதாரணமான வெற்றிக்கு காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளின் மீதான டெல்லி மக்களின் வெறுப்புணர்வே முக்கியக் காரணம். அவர்கள் வலதுசாரிகளைப் பார்த்துவிட்டார்கள், இடதுசாரிகளையும் லிபரல் களையும் பார்த்துவிட்டார்கள். பிரச்சினைகள் அவர்களால் தீர்வதாகயில்லை. இந்தச் சலிப்பும் வெறுப்புமே அவர்களை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அல்லது டொனால்டு டிரம்பிடம் தள்ளுகிறது. அரசியலைக் கண்டு வெறுத்துப்போயிருக்கும் மக்கள் அரசியலற்ற அரசியலுக்கு ஒரு வாய்ப்பை அளிக்க விரும்புகிறார்கள்.
எனக்கு ஒபாமாவும் பிடிக்கும் என்று கமல்ஹாசன் அறிவித்தாலும், அவர் உண்மையில் டொனால்டு டிரம்ப் ஈட்டியதைப் போன்ற வெற்றியைத்தான் எதிர்பார்க்கிறார். சலிப்புற்றிருக்கும் மக்களுக்கு அவர் அரசியலற்ற அரசியலையே ஒரு மாற்றாக அறிமுகப்படுத்துகிறார்.
குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டும் வேண்டாம் என்று அதே குடியரசுக் கட்சியின் மாறுபட்ட வேட்பாளராகக் காட்சியளித்த டிரம்பை அமெரிக்கா தேர்ந்தெடுத்ததுபோல்; காங்கிரஸ், பாஜக இரண்டும் வேண்டாம் என்று நிராகரித்து ஆம் ஆத்மியை டெல்லி தேர்ந்தெடுத்ததுபோல்; திமுக, அதிமுக இரண்டையும் நிராகரித்துவிட்டுத் தன்னைத் தமிழகம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது கமல் ஹாசனின் கணக்கு. ரஜினிகாந்தின் கனவும் எதிர்பார்ப்பும்கூட இதுவேதான்.
வெறுமைக்குக் காரணம்
அரசியலுக்கு மாற்றாக அரசியலற்ற அரசியலை முன்வைக்கும் போக்கு தமிழகத்தில் வலுபெற்றுவருவதற்கு திராவிடக் கட்சிகள் மட்டுமல்ல, இடது சாரிகளும்கூடப் பொறுப்பேற்க வேண்டும்.
ஜனநாயகம், குடியரசு, மதச்சார்பின்மை, சிறுபான்மை நலன், வேற்றுமையில் ஒற்றுமை, சமூகநீதி, மாநில சுயாட்சி, வர்க்கப் போராட்டம் போன்ற ஒரு காலத்தில் மக்களைக் கவர்ந்த பதங்கள் அனைத்தும் இன்று தீவிரமிழந்துபோயிருக்கின்றன. அவற்றுக் கான உண்மைப் பொருளை மீட்டெடுத்து மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டிய பணியைப் போதுமான அளவுக்குச் செய்யாததால்தான் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வெறுமை இங்கே ஏற்பட்டிருக்கிறது.
இந்த வெறுமையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்பவர்கள் இறுதியில் மக்கள் விரோத ஆட்சியையே அளிக்கிறார்கள் என்பதற்கு அதே டிரம்பை உதாரணமாகச் சொல்லலாம். மிகுந்த நம்பிக்கையுடன் கெஜ்ரிவாலை வெற்றிபெறச் செய்த டெல்லி மக்கள், இதுவரை அடிப்படையான மாற்றம் எதையும் அங்கே கண்டதாகத் தெரியவில்லை.
அரசியலற்ற அரசியலின் இயல்பு இதுதான் என்பதை நாம் புரிந்துகொண்டுவிட்டால், கமல்ஹாசன் என்ன சொல்லவருகிறார் அல்லது சொல்ல மறுக்கிறார் என்பதையும் நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். சரியாக முடிவெடுக்கவும் முடியும்!
- மருதன், எழுத்தாளர்,
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago