தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் என்கிறோம்; முற்போக்கான மாநிலம் என்கிறோம். தமிழர்களின் நாகரிகத் தொன்மை குறித்து சிலாகிக்கிறோம். இங்கு பெண்கள் எவ்வாறு போற்றப்பட்டார்கள்; போற்றப்படுகிறார்கள் என்பது குறித்து வரலாற்றில் இருந்தும் தற்கால நிகழ்வுகளில் இருந்தும் ஏராளமான உதாரணங்களை அடுக்குகிறோம். பெண்ணுரிமையை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெடுப்புகள் குறித்து பட்டியலிடுகிறோம். மாநிலத்தின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் முனைப்போடு பேசப்படும் பேச்சுக்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன. ஆனால், இன்றைய யதார்த்தம் எப்படி இருக்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை.
ஆபாசமான பேச்சுகள், எழுத்துகள், நடனங்கள் பொதுவெளியில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இது குறித்து கவலை கொள்ள வேண்டிய, அரசியல், சமூக, ஆன்மிகத் தலைவர்கள் அமைதி காத்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி, இவர்களில் சிலரும்கூட ஆபாசத்துக்குக் காரணமாகவும், அதில் ஓர் அங்கமாகவும் இருப்பது அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. தனிமனித வக்கிரங்களுக்கு தனிமனிதர்கள் காரணமாக இருக்கும் நிலையைத் தாண்டி, சில அமைப்புகளும்கூட காரணமாக இருந்து வருகின்றன. அதிலும், குறிப்பாக கொள்கைகள், கோட்பாடுகளின் அடிப்படையில் நெறிசார்ந்து இயங்குவதாகக் கூறும் அரசியல் கட்சிகள், ஆபாச நடன நிகழ்ச்சிகளை நடத்தும் போக்கு சமூகத்தின் தர வீழ்ச்சியின் வெளிப்பாடாக தெரிகிறது.
கடந்த வாரம் சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் நடைபெற்ற ஆபாச நடனத்தை, தமிழகத்தில் அதிகரித்து வரும் சமூக ஒழுக்கக்கேட்டுக்கான சமீபத்திய அடையாளமாகக் கொள்ள முடியும். திமுகதான் என்றில்லை, தமிழகத்தின் மற்றொரு பிரதான அரசியல் கட்சியான அதிமுகவின் நிகழ்ச்சிகளிலும் இதுபோன்ற ஆபாச குழு நடனங்களுக்கு அளவில்லை. தமிழர்களின் நம்பிக்கையை அதிகம் பெற்ற இரு பெறும் அரசியல் கட்சிகள் இவ்வாறு ஒழுக்கக்கேட்டை ஊக்குவிப்பதைப் பார்க்கும்போது, இவர்களின் கைளில் தமிழகத்தின் எதிர்காலம் ஆரோக்கியமாக இருக்குமா என்ற கேள்வி ஏற்படுகிறது. சமூகத்தின் நலன் மீது அக்கறை கொண்டவர்களுக்கு இது மிகப் பெரிய அச்சத்தை இக்கட்சிகள் ஏற்படுத்துகின்றன.
‘மிகவும் உற்று நோக்க வேண்டிய கருத்துகளை பகிர வேண்டிய அரசியல் மேடைகள், ஆபாச கடை விரிப்பது மனித பலவீனங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களாகவே கருதப்பட வேண்டும். உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய மனித சமூகத்தை பலவீனமாக்கி அதில் அரசியல் ஆதாயம் பார்க்கத் துடிக்கிறதா தமிழகத்தின் இரு பெரும் அரசியல் கட்சிகள்? பணத்தைக் கொடுத்து, மதுவைக் கொடுத்து மாநாட்டுக்குக் கூட்டி வந்து அங்கே ஆபாசத்தையும் கொடுப்பது எம்மாதிரியான அரசியல்? இத்தகைய அரசியல் செய்பவர்களுக்கு நாகரிகம் குறித்துப் பேச தகுதி இருக்க முடியுமா?’ என்று குமுறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஆரோக்கியமாக இருந்து வந்த தமிழக அரசியல் மேடைகளில் ஆபாசம் கலக்கத் தொடங்கியது 1990-களில்தான் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் துரை கருணா. இது குறித்து நம்மிடம் பேசிய அவர், "நாட்டை நல்வழிப்படுத்த வேண்டிய அரசியல் கட்சிகள் கலாச்சார சீரழிவை கொண்டு வந்துவிட்டன. இத்தகைய அரசியல் போக்கு பரவலான கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது நல்லதல்ல. 1990-களில் இருந்துதான் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கத் தொடங்கின. முந்தைய காலங்களில் அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்றவர்களின் பேச்சைக் கேட்க 2 ரூபாய், 3 ரூபாய் டிக்கெட் எடுத்து செல்வார்கள். பணம் கொடுத்து தலைவர்களின் பேச்சைக் கேட்ட காலம் போய், இன்று, பணம் கொடுத்து ஆட்களைக் கூட்டி வந்தாலும் அவர்கள் தலைவர்கள் பேசுவதைக் கேட்க ஆர்வம் காட்டுவதில்லை.
முன்பெல்லாம், பொதுக் கூட்டங்களுக்கு அல்லது மாநாட்டுக்கு தலைவர்கள் வரும் வரை கூட்டத்தை தக்க வைக்க கட்சியின் பேச்சாளர்கள் பேசுவார்கள். தொடக்கத்தில் அதில் ஓர் ஆரோக்கியம் இருந்தது. காலப் போக்கில் ஆபாச பேச்சாளர்கள், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நிலை ஏற்பட்டது. அதன் பிறகு, மயிலாட்டம், கரகாட்டம் என கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன்மூலம் கூட்டத்தைக் கூட்டுவது, தக்கவைப்பது என நிலைமை சென்றது. தற்போது ஆபாசக் குழு நடனங்கள் நடக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகளின் நிகழ்ச்சிகளில்தான் இத்தகைய போக்கு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். அதேபோல், பொதுவுடமைக் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், பறை இசை போன்றவை இருக்கும். ஆனால், ஆபாச நடனங்கள் இருக்காது.
ஒரு காலத்தில் திராவிட கட்சிகள் தத்துவங்கள், சித்தாந்தங்களைப் பேசி மக்களை ஈர்த்தன. இன்று அப்படி பேசுவதற்கு யாரும் இல்லை. அதனால், இந்த மாதிரி ஆட்டம், பாட்டம் போட்டு கூட்டத்தை தக்க வைக்க முயல்கிறார்கள். இருந்தும்கூட கூட்டத்தை தக்க வைக்க முடிவதில்லை. அவரவரும் போய்க்கொண்டேதான் இருக்கிறார்கள். தலைவர்கள் பேசும்போதுகூட கூட்டம் கலைகிறது. கட்சியின் கொள்கை, நோக்கம் இவற்றை உள்வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வருபவர்களால்தான் அந்த கொள்கையும் நோக்கமும் பரவும். ஆட்டம், பாட்டத்தில் திசை திருப்பப்படுவதால், விஷயங்களை உள்வாங்குவது குறைந்து போகிறது. கெள்கைகள் சிதைந்து போவதற்கும், அவற்றின் முக்கியத்துவம் குறைந்து போவதற்கும் இதுபோன்ற ஆபாச நிகழ்ச்சிகள் காரணமாக இருக்கின்றன. உண்மையான தொண்டர்களை உருவாக்குவதற்கு இவை இடையூறாக இருக்கின்றன" என்று தெரிவித்துள்ளார்.
திமுக, அதிமுக மேடைகள் இவ்வாறு மாறிப் போனதற்கு அவற்றின் சினிமா பின்னணி முக்கிய காரணம் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அரசியல் விமர்சகர் ஒருவர். "இது ஒரு கலாச்சார சீரழிவு. பெண்களை பெருமைப்படுத்திய இயக்கங்கள், இன்று சிறுமைப்படுத்தி வருகின்றன. தொடக்கத்தில் சினிமா மூலம் அவர்கள் தங்கள் கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றார்கள். சினிமாவோடு அதிக நெருக்கத்தை வளர்த்துக்கொண்டு வளர்ந்தார்கள். அதன் தாக்கம்தான் இதற்குக் காரணம். இந்தியாவில் உள்ள வேறு எந்த அரசியல் கட்சியின் நிகழ்ச்சிகளிலும் இதுபோன்ற ஆபாச நடனங்கள் நடத்தப்படுவதாக நான் கேள்விப்பட்டதில்லை.
இயக்கங்கள் மூலமாக அரசியல் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். அதற்கு மக்கள் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் அவர்கள் பொதுக்கூட்டங்களிலும், மாநாடுகளிலும் தங்களுக்கான அரசியல் குறித்து மட்டுமே பேசுகிறார்கள். மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தோ, நாட்டின் எதிர்காலமாக இருக்கும் இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தோ, அவர்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி சார்ந்தோ மாநாடுகளில் பேசப்படுவதில்லை.
மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசினால், கேட்கக்கூடிய சாமானிய மனிதர்கள் வரவேற்பார்கள்; கைதட்டுவார்கள். ஆனால், மேடைகளில் பேசக்கூடியவர்களே அதுபோன்று பேசுவதில்லை. கட்சிகள் தங்களுக்கான அரசியல் குறித்து பேசக்கூடாது என்பதல்ல. ஆனால், அதை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள். முன்பு போல தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்த முடிவதில்லை என்று திராவிட கட்சிகளைச் சேர்ந்த சில தலைவர்களே கூறுகிறார்கள். அரசியலற்ற போக்கு வளர்ந்து கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.
அரசியலில் வெற்றிடம் என்று ஒன்று இருக்காது. திராவிட கட்சிகள் வலுவிழக்குமானால் அந்த இடத்தை இட்டு நிரப்ப வேறு ஒரு கட்சி வரும். உலகம் முழுவதுமே தற்போது வலதுசாரிகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவில் வலதுசாரி அரசியல்தான் வலுவாக இருக்கிறது. இந்தியாவிலும் வலதுசாரி அரசியல் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை எல்லோருமே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய பலவீனமான செயல்பாடுகளால் திராவிடக் கட்சிகள் பாஜகவுக்கு மறைமுகமாக உதவிக் கொண்டிருக்கின்றன" என அவர் தெரிவித்துள்ளார்.
பலவீனமான மனிதர்களைக் கொண்டு வலிமையான சமூகத்தை மட்டுமல்ல, ஓர் அரசியல் கட்சியைக் கூட கட்டியெழுப்ப முடியாது. வலிமையான சமூகத்தை கட்டியெழுப்ப இருப்பதாகக் கூறும் இந்த அரசியல் கட்சிகள், பலவீனமான பாதையை தேர்ந்தெடுத்துப் பயணிப்பது அவற்றின் இருத்தலுக்கே ஆபத்தானது. சினிமாக்களில் ஆபாசம், தொலைக்காட்சி தொடர்களில் ஆபாசம், சமூக ஊடகங்களில் ஆபாசம் என அது பரவாலக்கப்பட்டுவிட்ட நிலையில், அரசியல் கட்சிகளை மட்டும் குறை சொல்வது சரியா என்ற கேள்வி எழக்கூடும். ஆனால், அந்தக் கேள்வி, அரசியல் கட்சிகளின் தவறை நியாயப்படுத்துவதற்கானதாக மட்டுமே கொள்ளப்பட வேண்டும்.
அரசியல் தலைவர்கள் சமூகத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பவர்கள். அப்படித்தான் கடந்த காலங்களில் அரசியல் தலைவர்கள் இருந்தார்கள். சாமானிய தனி மனிதன் தவறிழைத்தால் கடும் கோபம் கொள்ளாத சமூகம், தலைவர்கள் தவறிழைத்தால் கடும் கோபம் கொள்வதன் பின்னணி இதுதான். கொள்கை, கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்குவதாக பேசுபவர்கள், அவற்றின் மதிப்பீடுகளில் இருந்து விலகிவிடக் கூடாது. விலகுவதாக இருந்தால், அவர்கள் முன்வைக்கும் கொள்கை முழக்கங்கள் அர்த்தமிழக்கும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago