உலகின் ஈடிணையற்ற மக்கள் தலைவர்களில் ஒருவர் லெனின் (1870-1924). ஈடிணையற்ற பொதுவுடைமை இயக்கத் தத்துவவாதிகளில் ஒருவரான அவர், அக்காலத் தென்னிந்தியாவின் ‘முதல் கம்யூனிஸ்ட்’ ம.சிங்காரவேலுவைவிட (1860-1948) 10 வயது இளையவர்; தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியைவிட (1879-1973) ஒன்பது வயது மூத்தவர். ஆயினும் இவ்விருவரைவிட மிகக் குறைவாக 54 ஆண்டுகளே வாழ்ந்தார். அதில் செம்பாதிக்கும் மேலாக ரஷ்யத் தொழிலாளர் இயக்கத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
தொழிலாளர் இயக்கம்: கொடுங்கோல் ஜார் அரசரின் குடும்ப ஆட்சி பெருஞ்சுமை மக்களை அழுத்தியது. ஜார் அரசாட்சியை ஒழித்துக்கட்டுவதற்காகப் பிரபுக்கள் முதல் உழவர்கள்வரை பல்வேறு வர்க்க வாழ்நிலையைச் சேர்ந்த ரஷ்ய ‘ஜனநாயகவாதி’கள் இயக்கமானது, அரச ஆட்சி என்கிற கருத்துநிலையையும் அதற்கு ஆதரவு வழங்கிய ரஷ்ய கத்தோலிக்கத் திருச்சபை ஆதிக்கத்தையும் கருத்தளவில் எதிர்த்துப் போராடியது; உழவர்களை அணிதிரட்ட முயன்றது. ஜார் அரசரைக் கொல்லவும் அதன் மூலம் குடும்ப ஆட்சியை ஒழிக்கவும் இயக்கத்தின் ஒரு பகுதியினர் முயன்றனர். அத்தகைய திட்டமொன்றில் பங்குகொண்டதால், தூக்கிலேற்றப்பட்டவர் லெனினுடைய அண்ணன் அலெக்ஸாந்தர்.
தமையனுடைய லட்சியத்தைத் தன்னுடையதாக வரித்துக்கொண்ட லெனின், தமையனுடைய வழியில் செல்லாமல், ஐரோப்பாவில் தோன்றியிருந்த தொழிலாளர் இயக்க வழிமுறையைக் கைக்கொண்டார். ஐரோப்பாவில் இருந்தது போன்று பெருமளவிலான தொழில் துறையோ தொழிலாளர் திரளோ ரஷ்யாவில் இல்லை; என்றாலும் வேகமாகப் பெருகிக்கொண்டு வந்தன. அத்துடன் ரஷ்ய ஜனநாயகவாதிகள் ஐரோப்பாவின் தொழிலாளர் இயக்கக் கருத்துகளின் செல்வாக்குக்கு ஆட்பட்டனர். அவற்றைத் தொழிலாளர் மத்தியில் கொண்டுசேர்த்தனர். இந்தத் தொழிலாளர் இயக்கத்தில் லெனின் தன்னைக் கரைத்துக்கொண்டு, இயக்கத்துக்கு உருக்கொடுத்தார்.
புரட்சிக்கு வழி: கார்ல் மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம் - முதல் தொகுதி’, 1867இல் வெளியிடப்பட்டது. இந்நூல் ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக, 1872இல் ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்டது; ஓர் ஆண்டுக்குள் மூன்று ஆயிரம் படிகள் விற்றுத் தீர்ந்தன. ஐந்து ஆண்டுகளில் ஜெர்மன் மொழிப் பதிப்போ 1,000 படிகள்தாம் விற்றிருந்தது. இது மார்க்ஸுக்கே ஆச்சரியத்தை அளித்தது. அந்த அளவுக்கு ரஷ்ய ஜனநாயக இயக்கம் சுறுசுறுப்பாக இருந்தது. அத்துடன் தொழிலாளர் பகுதியும் இணைந்தபோது முற்றிலும் புதுவகைப் புரட்சி இயக்கமாக மாறியது. அதேவேளையில், முடிவே இல்லாத கருத்துப் போர்களும் நடந்தன. இந்தக் கருத்துப் போர்களில் பெரும் ஆற்றல் மிக்கவராகவும் எல்லோரையும் வயப்படுத்தக்கூடியவராகவும் லெனின் விளங்கினார்; எண்ணற்ற விளக்க வெளியீடுகளையும் விவாத வெளியீடுகளையும் எழுதினார்; தொழிலாளர் - பிற உழைக்கும் மக்களின் நலனை முன்கொண்டு செல்லும் வன்மையுடையவராகவும் விளங்கினார்.
» ஏசர் அறிக்கை: கற்றல் விளைவுகள் மேம்பட வேண்டும்
» CIBF 2024 | பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் ‘என்றும் தமிழர் தலைவர்’!
பொதுவாக, ரஷ்ய மார்க்சிஸ்ட்டுகள் ஜார் ஆட்சி ஒழிப்பை ஜனநாயக வேலைத்திட்டமாகவும் தொழிலாளர் முதலான உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நிறுவுதலை சோஷலிச வேலைத்திட்டமாகவும் பிரித்து நோக்கினர். ஆயினும் இவ்விரு வேலைத்திட்டங்களுக்கு இடையே தொடர்புறவுகளை லெனின் வலியுறுத்தினார். கொடுங்கோல் ஆட்சியில் துன்புற்ற சிறுபான்மை தேசிய இனங்கள், மக்களினங்கள் விடுதலை முதலானவற்றையும் புரட்சியுடன் இணைத்து நோக்கின. இந்த வழியில் தொழிலாளர் – உழவர்கள் – இன்னும் இதர உழைக்கும் மக்கள் இயக்கங்கள், ஒடுக்குதலுக்கு ஆளான தேசிய இனங்கள், சமூகக் குழுமங்கள் ஒற்றுமையை வலியுறுத்தின. ‘அனைத்து நாட்டுத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்கிற முழக்கத்தை ‘அனைத்து ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுங்கள்’ என லெனின் விரிவாக்கினார்.
ஏகாதிபத்திய சகாப்தம், கட்சி, புரட்சி ஆகியன பற்றிய கொள்கைகளை லெனின் வகுத்தளித்துள்ளார். அத்துடன் மதம், அரசு முதலான எண்ணற்ற விஷயங்களில் மார்க்ஸ்-எங்கெல்ஸ் கொள்கைகளை மீட்டெடுப்பதிலும் விரிவுபடுத்தியதிலும் அளவில்லாத பங்களிப்பைச் செய்துள்ளார். லெனினுடைய தத்துவார்த்தக் குறிப்புப் புத்தகங்கள் அறிவுத் தத்துவ உலகக் கருவூலங்கள். இவை எல்லாவற்றையும்விட ரஷ்யப் புரட்சிக்கும், புரட்சிக்குப் பிந்தைய அரசை வழிநடத்துதலிலும் அவர் அளித்த தலைமைத்துவம் இணையற்றது. புரட்சிக்கு என்னென்ன தேவைப்பட்டதோ, அந்தத் தேவைப்பாடுகளை நிறைவு செய்தவர் லெனின்.
தமிழ்நாட்டில் லெனின்: 1917 புரட்சியை ஐரோப்பியத் தொழிலாளர் கட்சிகள் ஆரவாரத்துடன் வரவேற்கும் என லெனின் முதலில் நம்பினார்; ஆனால் ஏமாற்றம்தான் கிடைத்தது. ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கம், பின்தங்கிய ரஷ்ய நாட்டில் தொழிலாளர் புரட்சி நடைபெற முடியுமா, அது தொழிலாளர் புரட்சியாக இருக்க முடியுமா, சோஷலிசத்தை நோக்கி நடைபோட முடியுமா என்பது போன்ற கேள்விகளுடன் முடிவற்ற விவாதத்தில் இறங்கியது. அதேநேரம், லெனினுடைய ஏகாதிபத்தியக் கொள்கை எதிர்ப்பும், காலனி நாட்டு மக்களின் விடுதலைக்கான ஆதரவும் காலனிய உலகம் முழுவதும் அவரைப் பிரபலமடையச் செய்தன. இந்த வகையில்தான் லெனின் என்கிற பெயர் அந்தக் காலத் தமிழ்நாட்டில் ஈர்ப்பைப் பெற்றது.
1905 ரஷ்யப் புரட்சி முதலே லெனினுடைய பெயர் தமிழ் இதழியல் உலகில் அடிபடத் தொடங்கியது. லெனின் பற்றிய ஆரம்பகாலத் தமிழ் இதழியல் எழுத்துகளைப் பாரதி பெருமளவுக்கு எழுதியுள்ளார். வேறு சில எழுத்துகளும் வெளிவந்துள்ளன (ரகுநாதன், 1977). இந்த எழுத்துகளைப் பிற்காலக் கம்யூனிஸ்ட்டுகள் கொண்டாடியுள்ளனர். ஆயினும் இந்த எழுத்துகள், லெனினைக் ‘கொடுங்கோல் அரச ஆட்சியை வீழ்த்திய ரஷ்ய விடுதலை வீரன்’ என்கிற வகையில் அர்த்தப்படுத்தின. லெனினுடைய சமூக-பொருளாதாரச் சமத்துவக் கருத்துகளையும் வர்க்கப் போராட்டம் பற்றிய கருத்துகளையும் குறித்துத் தயக்கத்தோடு விவாதித்து, மறுதலித்தன; சமூக மாற்றத்தில் வன்முறை குறித்த கருத்துகளை அகிம்சையோடும், உடைமைப் பறிப்புக் கொள்கை தருமகர்த்தா கொள்கையின் மூலமான ‘பொது’ ஆக்குதல் ஆகியவற்றோடும் இயைபுபடுத்த விழைந்தன (‘தமிழகம் கண்ட லெனின்’).
ரஷ்யப் புரட்சி பற்றி தமிழ் இதழியல் எழுத்துகளில் தமிழகக் கம்யூனிஸ்ட் ஆய்வாளர்கள் கண்டுகொள்ளாமல் விட்டவை ‘குடிஅரசு’வின் இதழியல் எழுத்துகளும் சுயமரியாதை இயக்கத்தின் நடவடிக்கைகளும். இதை எஸ்.வி.ராஜதுரை, தமது பெரியார் குறித்த ஆய்வு எழுத்துகளின் வழியாக நிறைவு செய்துள்ளார். ‘குடிஅரசு’ இதழியல் எழுத்துகள் ரஷ்யப் புரட்சியை முழுமையான தோற்றத்தில் சித்தரிக்க முயன்றன. அத்துடன் அவை இந்திய-தமிழகச் சமூக மாற்ற நடவடிக்கைகளோடு தொடர்புபடுத்திச் சிந்திக்க முயன்றதன் வெளிப்பாடுகளாகவும் உள்ளன. இப்படியான சிந்தனையை, ம.சிங்காரவேலுவையும் பெரியாரையும் தவிர, வேறு யாரும் அக்காலத்தில் செய்யவில்லை என்பது கவனத்துக்குரியது. இதன் தொடர்ச்சியாகத்தான் தம் சொந்த முன்முயற்சியில் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் எழுத்துகளைத் தமிழில் பெரியார் வெளியிட்டார்.
லெனின் குறித்த சித்தரிப்புகள்: தமிழில் லெனின் பற்றியதும் லெனின் எழுத்துகள் பற்றியதுமான வெளியீட்டு விவரங்கள் முறையாகத் திரட்டப்படவில்லை; ஆராயப்படவில்லை. அவ்வாறு புத்தக வெளியீட்டு விவரங்களை ஆராய்வதால் தமிழ் அறிவுப் பண்பாட்டில் லெனினும் அவரது எழுத்துகளும் விளைவித்த மாற்றங்களை விளங்கிக்கொள்ள இயலும். லெனின் பற்றி ஆரம்ப காலத் தமிழ் அச்சுப் புத்தக வெளியீடுகளைக் காணும்போது, லெனின் பற்றிய இரண்டுவிதமான சித்தரிப்புகள் தமிழ் அறிவுப் பண்பாட்டில் உள்ளதைக் காண முடிகிறது. ஒன்று, தேசியவாதச் சித்தரிப்பு. அது லெனினைக் கொடுங்கோல் அரசை அழித்த விடுதலை வீரராக மட்டும் கண்டது. மற்றொன்று, சுயமரியாதை இயக்கச் சித்தரிப்பு. அது அனைத்து வகை சமூக - பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அவற்றுக்கு ஆதரவு வழங்கிய மத ஆதிக்கத்தை எதிர்த்த விடுதலை வீரராகவும் வரைந்துகாட்டியது. அத்துடன் தன்னுடைய சாதி ஒழிப்பு வேலைத்திட்டத்தில் லெனின் எழுத்துகளை மொழியாக்கம் செய்தது. இந்த முயற்சி மார்க்சியத்தைத் தமிழ்வயப்படுத்தும் வெளிப்பாடாக உள்ளதையும் காண முடிகிறது. இந்தச் சித்தரிப்புகளில் கம்யூனிஸ்ட்டுகள் எதை ஏற்றுக்கொள்வது என்பது நலன்பயக்கக்கூடிய கேள்வி.
தொடர்புக்கு: tamilkamarajan@gmail.com
ஜனவரி 21: லெனின் நினைவு நூற்றாண்டு நிறைவு
To Read in English: Lenin in the eyes of Tamil Nadu
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago