CIBF 2024 | பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் ‘என்றும் தமிழர் தலைவர்’!

By செய்திப்பிரிவு

சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. வெற்றிகரமான முதலாம் ஆண்டைத் தொடர்ந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்தப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி, தமிழ்ப் பதிப்புலகின் மேம்பாட்டுக்கான பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் நுழைவாயிலும் அரங்குகளும், முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் நூல்களின் அட்டைப்படங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இந்த ஆண்டு அதே போன்ற அட்டைப்படங்களின் அணிவகுப்பு நுழைவாயில் தொடங்கி மொத்த அரங்கினையும் நிறைத்திருக்கிறது. இந்த வரிசையில், ‘இந்து தமிழ் திசை’ பதிப்பக வெளியீடான தந்தை பெரியார் பற்றிய ‘என்றும் தமிழர் தலைவர்’ பெருநூலின் அட்டைப்படம் புத்தகக் காட்சியின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருக்கிறது. நடைபெற்றுவரும் 47ஆவது சென்னை புத்தகக் காட்சியில் முதல் பதிப்பு முடிந்து இரண்டாம் பதிப்பு பரப்பரப்பாக விற்பனையாகிவரும் நிலையில், பன்னாட்டுப் புத்தகக் காட்சியிலும் ‘என்றும் தமிழர் தலைவர்’ இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது!

மொழிபெயர்ப்பாளர்களுக்காகக் காத்திருக்கும் உலக நாடுகள்: உலகம் முழுவதும் உள்ள இலக்கிய அமைப்புகள் வழங்கும் மொழிபெயர்ப்பு நிதி நல்கைத் திட்டம் குறித்த கையேட்டினை சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ஒரு பதிப்பாளர், ஓர் அயல்மொழியில் உள்ள நூலைத் தமிழில் மொழிபெயர்க்க விரும்பினால், அவர் அணுக வேண்டிய அமைப்பு குறித்த அடிப்படை விவரங்கள் இதில் உள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் பன்னாட்டுப் புத்தகக் காட்சியைப் பயன்படுத்தி சீனம், போலிஷ் (போலந்து), ஸ்காட்டிஷ் (ஸ்காட்லாந்து), ஸ்லோவேனியம் (ஸ்லோவேனியா), துருக்கி ஆகிய மொழிகளில் உள்ள நூல்கள், தமிழில் பெயர்க்கப்படுவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்னும் பல மொழிகளில் நிதி நல்கை இருந்தும், மொழிபெயர்ப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என இக்கையேடு மூலம் தெரியவருகிறது. லாட்விய மொழியில் உள்ள நூலை மலையாள மொழியில் கொண்டுவர முயற்சி நடக்கும்போது, அது தமிழில் ஏன் நடக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. பதிப்பாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் இந்தக் களத்தை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தலாம். - ஆனந்தன் செல்லையா

பதிப்புரிமைக் கையேடு: கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் பங்கேற்ற பிற மொழிப்பதிப்பாளர்களுடன் தமிழ்ப் பதிப்பாளர்கள் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தனர். தமிழிலிருந்து பிற மொழிகளுக்குக் கொண்டுசெல்லத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் பதிப்புரிமைக் கையேடு மூலம் பிற மொழிப் பதிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த ஆண்டு பன்னாட்டுப் புத்தகக் காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தயாரித்த பதிப்புரிமைக் கையேட்டில் 51 பதிப்பாளர்கள் தங்கள் நூல்களை முன்வைத்துள்ளனர். அதே போல், இந்த ஆண்டு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இலக்கிய முகவர் பயிற்சித் திட்டத்தில் தேர்வானவர்கள் தயாரித்துள்ள பதிப்புரிமைக் கையேடுகளின் அடிப்படையிலும் இந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

முத்துகள் 5

பனிக்குடம் இதழ் சிறுகதைகள்
தொகுப்பாசிரியர்: நா.கோகிலன்
தேநீர் பதிப்பகம், விலை: ரூ.130

சில்லுகளில் அலைக்கழியும் பிம்பங்கள், காலத்துகள்
கனலி பதிப்பகம், விலை: ரூ.150

ஏழு போராளிகள்!
இந்திய விடுதலைப் போரில் தோள்கொடுத்த மேற்கத்தியர்கள்
ராமச்சந்திர குஹா
தமிழில்: சு.தியடோர் பாஸ்கரன்
காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.690

கலைஞரும் நானும்
தொகுப்பு: நீரை மகேந்திரன்
முத்தமிழறிஞர் பதிப்பகம்
விலை: ரூ.200

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கை விதிகள்
வினா-விடை கையேடு
கர்னத்தம் இராம.கலியமூர்த்தி
வனிதா பதிப்பகம், விலை: ரூ.200

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE