படிப்பாளரைப் பண்படுத்தும் படைப்பாளரும் பதிப்பாளரும்

By கோ.ரகுபதி

பிரிட்டிஷ் இந்தியாவில் சமூகக் கட்டமைப்பானது அசமத்துவ நிலையிலிருந்து இன்றும் முற்றுப்பெறாத நவீன ஜனநாயக அமைப்பாக பரிணமித்துக் கொண்டிருந்தபோது, சமூகச் சீர்திருத்தத்துக்கான உரையாடலுக்கும் உறவாடலுக்கும் ஐரோப்பிய அச்சு இயந்திரமும் மேற்கத்தியக் கல்வியும் பெரும் துணைபுரிந்தன.

அறிவியக்கப் பரவல்: இந்தியாவில் மன்னராட்சிக் காலத்தில் கல்வெட்டு, செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் பதியப்பட்டவையும் வாய்மொழி வழக்காறுகளுமான அறிவியலறிவு, அறவியலறிவு, அரசியலறிவு, கலை-இலக்கியம் ஆகியன இக்காலகட்டத்தில் நூலாக்கம் பெற்றன. இப்போக்கில் படிப்பாளர், படைப்பாளர், பதிப்பாளர், பார்வையாளர் ஆகிய பிரிவினர்கள் உருவாகினர்.

முறையாகக் கல்வி கற்றவர்கள், கற்காதவர்கள் எனப் பலரும் எழுதினர். இப்பின்புலம் இதழ்களின் ஆசிரியர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் உண்டு. இவர்கள் சமூகத்தை மாற்றும் இயக்கத்தின் முன்னத்தி ஏர்களாக இருந்தனர். அச்சு இயந்திரத்தையும் எழுத்தையும் அவரவர் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏற்றவாறு பயன்படுத்தினர். எனவே, படைப்பாளரையும் பதிப்பாளரையும், ‘இருக்கின்ற சமூகக் கட்டமைப்பைப் பாதுக்காக்க எத்தனித்தோர்’, ‘அதை மாற்ற முயற்சித்தோர்’ எனப் பகுக்கலாம்.

மாற்றத்துக்கும் மறுப்புக்கும் இடையிலான கூர்மையான விவாதம் வெளிப்படையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்ததால் உருவான கணக்கற்ற பத்திரிகைகளும் நூல்களும் கடந்தகால அறிவுச் செழுமையையும் சமூகம் எதிர்கொண்ட சிக்கல்களையும் அவற்றைத் தீர்த்ததையும் ஆவணப்படுத்தியுள்ளன. 1860கள் முதற்கொண்டு வெளியான நூற்றுக்கணக்கான மாத, வார இதழ்கள் தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகத்திலும் தனியார் நூலகங்களிலும் கொட்டிக் கிடக்கின்றன.

படைப்பாளர்களின் எழுத்துகள் சில இதழ்களிலும் நூல்களிலும் தமிழ்–ஆங்கிலம், தமிழ்–சம்ஸ்கிருதம், தமிழ்–உருது என இரு மொழிகளில் எழுதப்பட்டன. அச்சடிக்கப்பட்ட நூல்களில் உள்ள இயல்களில் ஏற்பட்ட பிழைகளைத் திருத்தும் தொழில்நுட்பம் இல்லாததால் பிழைகளும் திருத்தமும் தனித்த பக்கங்களில் இடம்பெற்றன.

நூல்களின் முன் அட்டையில், ஆசிரியர் பெயருடன் அவருடைய ஊர், தந்தை, பதிப்பாளர், நூல்களைப் பரிசோதித்தவர், நூல் எழுதத் தூண்டியவர், புரவலர், அச்சகம் ஆகிய பெயர்களும் இடம்பெற்றன. நூல்களும் இதழ்களும் தமிழ்நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வெளியாகின. இவை அறிவியக்கம் பரவியதைக் காட்டுகின்றன.

ஆங்கில வாசிப்பாளருக்காக மணிமேகலை உள்பட தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் எழுதினர். மதராஸ், பம்பாய், கல்கத்தா, லண்டன் ஆகிய நகரங்களில் இயங்கிய மாக்மில்லன், இண்டியன் பப்ளிஷிங் ஹவுஸ் போன்றவை தமிழ் ஆங்கில நூல்களை வெளியிட்டன. அல்பீனியன் பிரஸ், அமெரிக்கன் மிஷன் பிரஸ், ஸ்காட்டிஷ் பிரஸ் என அச்சுக்கூடங்களின் இருப்பிடத்தையும் பெயர்களையும் வரிசைப்படுத்தினால் அது சில நூறு மீட்டர் தூரம் நீளும்.

நூல்களின், இதழ்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்த படிப்பாளர்கள், அறியப்பட்ட முக்கிய ஆளுமையான, தமிழ் இசையை மீட்டெடுத்த தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் முதல் அறியப்படாதோரும் இளைஞர்களும் சந்தாதாரர்களாக இருந்ததை இதழ்களில் வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியல்களிலிருந்து அறிய முடிகிறது. இவர்கள் தமிழ்நாடு, இலங்கை, பர்மா என அயல்நாடுகளிலும் இருந்தனர்.

செறிவும் அடர்த்தியும்: சமூகத்தைப் பண்படுத்தத் தேவையான, நீர்ப் பாய்ச்சுவதில் தமிழகக் கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறுகளை 1830கள் முதல் ஆவணப்படுத்திய நூல் முதற்கொண்டு ‘கஞ்சம் பஞ்சம்’ (1867), தரங்கம்பாடி இஎல்எம் அச்சுக்கூடத்தில் 1873இல் அச்சடிக்கப்பட்ட ‘குறள்: மூலமும் உரையும்’ என்ற நூல் எனக் கணக்கற்ற உரைநடை நூல்களும், கலை-இலக்கியப் படைப்புகளான நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள், நெல்லை வெள்ளச் சிந்து (1923), காவேரிப் பெருவெள்ளச் சிந்துகள் (1924), புயல் சிந்துகள், கொலைச் சிந்துகள், கலியாணப் பாடல்கள், தீண்டாமை ஒழிப்புப் பாடல்கள், அந்தரங்க உறவைப் பேசும் நூல்கள் வரை வெளியாயின.

மன்னார்குடி அஞ்சலகத் தெருவில் வசித்த மணிக்கடை வியாபாரி கோ.சுந்திரராசு செட்டியார், நவீனப் போக்குவரத்து உருவானதால் பாரம்பரிய வண்டிகள் பாதிக்கப்படுவதைக் கருப்பொருளாகக் கொண்டு வேடிக்கைச் சிந்து படைத்தார். நவீன அறிவியலுக்கான தமிழ் வார்த்தைகளை உருவாக்குதல், அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் எழுதுவதை ராஜேசுவரி அம்மாள் போன்றோர் செய்தனர்.

பிளேக், டெங்கு போன்ற கொள்ளைநோய்கள் பற்றி எழுதப்பட்ட விழிப்புணர்வுக் கட்டுரைகள் கணக்கற்றவை. சமூகத்தில் அப்போது நிகழ்ந்த உள்ளூர் சிக்கல்கள் முதற்கொண்டு உலகளாவிய அனைத்துப் பிரச்சினைகளும் தமிழில் விவாதிக்கப்பட்ட அக்கால எழுத்துகள் கருத்துச் செறிவுடனும் அடர்த்தியான பொருள் பொதிந்தும் இருக்கின்றன. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் வெளியிட்ட இதழ்களும் நூல்களும் அவர்களின் இயக்க நடவடிக்கைகளை விரிவாக எழுதின.

பெண் கல்வி, இல்லறக் கடமை, மணவயது, மணம், பொருந்தா மணம், மணமுறிவு, மறுமணம் இன்ன பிறவற்றைப் பொறுப்புணர்வுடன் முன்வைத்த விவாதங்களும், ‘கட் ஜாக்கெட் அணிந்து கணவன் கைப்பிடித்து நடந்தவளை’க் கேலி செய்ததோடு அவளின் உடுப்பு, சிகையலங்காரம், கேலிச் சித்திரங்களும் குவிந்துகிடக்கின்றன.

செங்கல்வராய நாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடத்தில் 1899இல் அச்சடிக்கப்பட்ட பள்ளிகொண்டை ரங்கநாச்சியாரின் ‘கோலப்புத்தகம்’, பெயரறியாத ஒருவரின் ‘ஆண்மக்கள் அல்லாதோர் மாநாடு’ முதல் அக்காலப் பாடகிகளான கே.பி.சுந்தராம்பாள், டி.கே.பட்டம்மாள், மதுரையைச் சேர்ந்த எம்.கே.சீதாலக்‌ஷிமி, டி.எம்.ஜகதாம்பாள் போன்றோர் கிராமபோனில் பாடியவை அச்சடிக்கப்பட்டு, நூல்களாக வெளியாயின.

இக்காலத்தைப் போன்ற அடையாள அரசியல் சிக்கல் அக்காலத்தில் இல்லாததால், அவரவர் அரசியல் நிலைப்பாட்டுக்கு எழுதினர். அக்காலப் பெண் சிந்தனைகள் தொகுக்கப்படவில்லை என்ற பெருங்குறை உண்டு. இவ்வெழுத்துகள் இக்காலத்துக்கும் பொருத்தமுடையவையாக இருப்பதால், அவற்றைக் கண்டெடுத்துப் படைப்பாளர்களும் பதிப்பாளர்களும் மறுபதிப்பு செய்ய வேண்டும்.

பதிப்புலகின் இன்றைய நிலை: இச்சமூகம் இன்றைய நிலைக்குப் பண்படுத்தியதில் படிப்பாளர், படைப்பாளர் பங்கும், இவ்விருவருக்கும் பாலமாக இருந்த படைப்புலகின் பங்கும் மகத்தானவை. காணொளிகளின் படையெடுப்பு பதிப்புலகில் பெரும்பாதிப்பை விளைவித்துக்கொண்டிருக்கிறது. கிராமபோன் பாடல்களைப் போல் திரைப்படப் பாடல்களும் நூல்களாக அச்சடிக்கப்பட்டு, பெட்டிக் கடைகளில் விற்கப்பட்ட நிலை முற்றிலும் அழிந்துவிட்டது.

கோலப் புத்தகங்களுக்கும் இந்நிலைதான். நாடகம், கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவதும் வெகுவாகக் குறைந்துவிட்டன. கல்வியறிவு குறைந்த அக்காலத்தில் அச்சிடப்பட்ட நூல்களின் பிரதிகளின் எண்ணிக்கை அதிகம். கல்வியறிவு மிகுந்த இக்காலத்தில் படைப்பாளர்களும் அச்சிடப்படும் நூல்களின் பிரதிகளின் எண்ணிக்கையும் குறைவு.

சென்னையிலும் பிற மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தப்படும் புத்தகக் காட்சிகள் படிப்பாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கான உத்திகளைக் கண்டறிய வேண்டும். அதேவேளை, எழுதப்படாதவற்றை எழுதுவதற்கான படைப்பாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும். இலக்கியப் படைப்புகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ஆய்வுக் கட்டுரைகளுக்கும் நூல்களுக்கும் கொடுப்பதும் அவசியம்.

கோயம்புத்தூர் விளாங்குறிச்சி வி.நா.மருதாச்சலம் எழுதிய ‘இந்தியப்பத்திரிகை தொழிலியல்’ நூலை ஆதரித்து 1935ஆம் ஆண்டு எழுதிய ஓர் இதழ், ‘எந்நாட்டில் பத்திரிகைத் தொழில் அதிகமாக மேம்பட்டு வருகிறதோ அந்நாட்டில்தான் மக்கள் அபிப்பிராயமும் ஒன்றுபட்டும் மேம்பட்டும்நிற்கும். அப்போதுதான் அந்நாட்டின் நாகரிகமும் முதிர்ந்துநிற்கும்.

அந்நாட்டு மொழியும் முன்னேற்றமடையும்’ என்று குறிப்பிட்டது இன்றைய காலத்துக்கும் பொருத்த முடையதாகும். நாகரிகமென்பது பொருள்களைப் பயன்படுத்துவது மட்டும் அல்ல; அது சக மனிதர்களிடம் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் பரிமாறுவது ஆகும். இது புத்தகங்கள் படிக்கும் பண்பாட்டின் வழியே நிகழும். இதுவே, நிதானமான சிந்தனையை, அறிவு உள்வாங்குதலைத் தந்து பண்படுத்தும்.

- தொடர்புக்கு: ko.ragupathi@gmail.com

To Read in English: It’s creative writer and publisher who refine readers

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்