தேர்வாணையக் குளறுபடிகளும் தேவைப்படும் சீர்திருத்தங்களும்

By வெற்றிச்செல்வன்

தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் சேர்வதற்கான போட்டித் தேர்வுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்துகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுதிவருகின்றனர். குறிப்பாக, குரூப் 1, 2 மற்றும் 4 ஆகிய தேர்வுகளை எழுதும் மாணவர்கள் மிகுதியான எண்ணிக்கையில் உள்ளனர். இந்நிலையில், இந்தத் தேர்வுகள் குறித்த அறிவிப்புகளில் குளறுபடிகள் இருப்பதால் தேர்வுக்குத் தயாராவதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் குழப்பநிலை உள்ளிட்ட பிரச்சினைகளைப் பதிவுசெய்வது அவசியம்.

அட்டவணைக் குழப்பங்கள்: ஒவ்வோர் ஆண்டின் முடிவிலும், அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையைத் தேர்வாணையம் வெளியிடுவது வழக்கம். இந்த அட்டவணையில், வரப்போகிற ஆண்டில் நடைபெற இருக்கும் தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகும் நாள், தேர்வுகள் நடைபெறும் நாள், தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் ஆகியவற்றுக்கான உத்தேசத் தேதிகள் (tentative dates) அறிவிக்கப்படும் சில நாள்களுக்கு முன்னர், 2024ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியானது.

ஆனால் சோகம் என்னவென்றால், தேர்வாணையம் தேர்வு நடத்தும் தேதிகளுக்கும், அட்டவணையில் உள்ள தேதிகளுக்கும் தொடர்பே இல்லை என்பதுதான். சான்றாக, 2023ஆம் ஆண்டின் அட்டவணையின்படி, 2023 குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 2023இல் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். நவம்பர் 2023இல் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றிருக்க வேண்டும்.

ஆனால், இன்றைய நாள் வரையில் 2023 குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்புகூட வெளியிடப்படவில்லை. இப்போது 2024ஆம் ஆண்டுக்கு வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், மார்ச் 2024இல்தான் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பே வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பும் குறித்த தேதியில் வெளியிடப்படுமா என்பது தேர்வாணையத்துக்கே வெளிச்சம். இதே நிலைமைதான் மற்ற தேர்வுகளுக்கும்.

கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வினை எழுதியவர்கள் 18 லட்சம் பேர். தேர்வுக்கு அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் 10,117 மட்டுமே. 2023இல் குரூப் 4 தேர்வே நடைபெறவில்லை. இது போன்ற போட்டித் தேர்வுகளுக்காகச் சென்னையில் இருக்கும் பயிற்சி நிலையங்களில் பயில்வதற்கு ஏராளமான மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் படித்து வருகின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கிப் படிப்பதற்கான செலவுகளை அனைத்து மாணவர்களாலும் எதிர்கொள்ள இயலாது.

தேர்வர்களின் குடும்ப மற்றும் பொருளாதாரச் சூழல் அவர்களை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிக்குச் செல்ல நிர்ப்பந்திக்கும் நிலையில், ஒவ்வொரு தேர்வையும் இவ்வளவு கால இடைவெளியில் நடத்தினால், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகிறது. இதனால், மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

விடைத்தாள் குளறுபடிகள்: ஒவ்வொரு தேர்வும் முடிந்தவுடன் தேர்வாணையத்தின் வலைதளத்தில் கொள்குறி வினாக்களுக்கான (objective questions) விடைத்தாள் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிந்த சில நாள்களில் வெளியிடப்படும் உத்தேச விடைத்தாளில் (tentative answer key) ஏகப்பட்ட குளறுபடிகள்.

இறுதி விடைத்தாளை வெளியிடுவதற்குள் அத்தேர்வுக்கான கலந்தாய்வே (counseling) முடிந்துவிடுகிறது. வினாத்தாளைத் தயாரிக்கும் ஆணையத்தால் வினாத்தாளுக்குரிய விடைத்தாளைச் சரியாகத் தயாரிக்க முடியாமல் போவதில் உள்ள மர்மம் என்ன என்று விளங்கவில்லை.

தமிழ்வழித் தேர்வர்கள்: தமிழ்வழியில் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கும் பொருட்டு, அம்மாணவர்களுக்குத் தனியாக இடஒதுக்கீடு வழங்கப்படுவது வரவேற்புக்குரியது.

ஆனால், தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2 ஆகியவற்றுக்கான முதன்மைத் தேர்வுகளைத் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் எழுதுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பினும், தமிழில் எழுதித் தேர்ச்சி பெறுகின்ற மாணவர்கள் எண்ணிக்கை வெகு சொற்பமே. இதனால் ஆங்கிலத்தில் தேர்வு எழுதினால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற எண்ணத்துக்கு மாணவர்கள் ஆட்படுகிறார்கள்.

ஒவ்வொரு தேர்விலும் தமிழில் எழுதித் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையைத் தேர்வாணையம் வெளியிடுவது, ஆணை யத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்து வதோடு, மாணவர்களின் நம்பிக்கைக்கும் பாத்திர மாகத் தேர்வாணையம் இருக்கும்.

வாக்குறுதியும் வேலைவாய்ப்புகளும்: திமுகவின் 2021ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ‘அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர்’ என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சில ஆயிரம் பணிகள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்பதுதான் துயரம். அரசுத் துறைகளில் நிலவும் பல்வேறு காலிப் பணியிடங்கள், ஏற்கெனவே இருக்கும் அரசு ஊழியர்களால் கூடுதல் பொறுப்பில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை போன்ற பெரிய திட்டங்களை அறிமுகப்படுத்தும்போது, அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. இதனைத் தடுக்கக் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

கரோனா பெருந்தொற்றின்போது, தேர்வாணையத்தால் பல தேர்வுகளை நடத்த முடியாமல் போனது. ஆனால், அதற்குப் பிறகான காலகட்டத்திலும் தேர்வுகளை நடத்துவதில் இழுபறி ஏற்படுவது மாணவர்களை மனச்சோர்வுக்கு உள்ளாக்குகிறது.

குறிப்பாக, தேர்வுக்கு ஆயத்தமாகும் பெண்கள் இந்தக் காலதாமதத்தால் திருமண உறவுக்குள் புக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அவர்களின் வேலைவாய்ப்புக் கனவு கானல் நீராகிறது. அரசுப் பணிகளுக்காகப் பயின்று வரும் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, தேவைப்படும் சீர்திருத்தங்களை மேற்கொண்டு மாணவர்களின் நலனைப் பேணுவது தமிழக அரசின் தலையாய கடமையாகும்.

- தொடர்புக்கு: vetriblackshirt@gmail.com

To Read in English: Wanted: Reforms to set right TNPSC

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்