உலக முதலீட்டாளர் மாநாடு 2024: டிரில்லியன் டாலர் கனவின் திசை!

By சுரேஷ் சம்பந்தம்

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ பிரம்மாண்ட அளவில் நடைபெற உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாகத் தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற உயரிய கொள்கையை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதன் ஒருபகுதியாக இந்த மாநாடு அமைய உள்ளது. இந்த மாநாட்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான செயல் திட்டத்தை வெளியிட்டு முதலமைச்சர் பேச உள்ளார்.

தமிழ்நாடு அரசின் செயல் திட்டமாக உருவெடுத்துள்ள ஒரு டிரில்லியன் டாலர் கனவு, 2019இல் முதலில் அறிவிக்கப்பட்டது. அதற்கான பல்வேறு பணிகளை ஒருங்கிணைக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. தமிழ்நாடு அரசு இத்தகைய முதலீட்டாளர் மாநாட்டினை நடத்துவதன் நோக்கம், பின்னணி, இத்தகைய மாநாடு கொண்டுவரும் உடனடி விளைவுகள், நீண்டகால விளைவுகள், சென்னை தாண்டி தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான முன்னெடுப்புகள் எனப் பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன.

கிடைக்கப்போகும் பலன்கள்: தமிழ்நாடு அரசு உலக நாடுகளிலிருந்து அந்நிய முதலீட்டைத் தமிழ்நாட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஒரு மிகப் பெரிய முன்னெடுப்பே உலக முதலீட்டாளர் மாநாடு.

குறிப்பாக, அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் முதலீட்டாளர்களைக் அழைத்துவந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதி இது. உலக முதலீட்டாளர் மாநாட்டை வெறுமனே ‘முதலீடு’ என்கிற நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது. அதை விரிவான கண்ணோட்டத்தில் பார்ப்பது அவசியம்.

உலக முதலீட்டாளர் மாநாட்டின் வழியே அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும். அதன்வழியே உள்ளூர் பொருளாதார வளர்ச்சி (Local Economic Growth) மேம்படும். குறிப்பாக, தமிழ்நாட்டின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கு இது வழிவகுப்பதோடு, தனிநபர் வருமானத்தையும் (Per Capita Income) அதிகரிக்கும்.

தனிநபர் வருமானம் உயர வேண்டுமானால் வேலைவாய்ப்பு தேவை. அதை அடைவதற்கான பல்வேறு வேலைகளை அளிக்கக்கூடிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகரிக்க வேண்டும். அதற்கு இந்த உலக முதலீட்டாளர் மாநாடு பெரிய அளவில் உதவும்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டுமானால், தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம். தமிழ்நாட்டுக்குள் முதலீடுகள் வரும்போது, இயல்பாக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும். போக்குவரத்து, சுகாதாரம், மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்டவை இன்னும் பரலாக, அதிகமாகக் கிடைக்கும்.

தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னோடியாக விளங்கி வருகிறது. உதாரணத்துக்கு மின்சார வாகனங்கள், உலகளாவிய திறன் மையங்கள் (GCC - Global Capability Center), குறைகடத்திகள் (Semiconductors), மின்னணுச் சாதனங்கள் தயாரிப்பு, உணவுப் பதப்படுத்துதல், காலணித் தயாரிப்பு, ஆடை உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் - அறிவுசார் பொருளாதாரம் (IT - Knowledge economy), விண்வெளி (Aerospace), மூலதனப் பொருள்கள் (Capital Goods) உள்ளிட்ட துறைகளில் அளப்பரிய வளர்ச்சியைக் கண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. இந்தத் துறையில் அடைந்துள்ள மேம்பாடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குத் தெரிவிப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் உலக முதலீட்டாளர் மாநாடு அமையும்.

முதலீட்டாளர்களுக்கு ஊக்குவிப்பு: கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பல்வேறு முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. அவற்றை மீட்டெடுப்பதன் ஒரு பகுதியாகவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும், உலக முதலீட்டாளர் மாநாடு அமையும். இம்மாநாட்டில் அறிவிக்கப்படவிருக்கும் கொள்கை சார்ந்த பல்வேறு முடிவுகள், முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அமையும்.

உலக முதலீட்டாளர் மாநாட்டைப் பெரிய அளவில் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதால், இம்மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெரும் தொழில்முனைவோர், அறிவியல் அறிஞர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில்முனைவில் ஆர்வம் காட்டும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பார்கள்.

இவ்வாறு, ஓரிடத்தில் பல்வேறு ஆளுமைகளைக் கண்டு, உரையாடுவதற்கான ஒரு மிகப் பெரிய களமாகவும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இருக்கும்.

வளம் சேர்க்கும் வளம்: அது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள பிரபல பிராண்டுகளுக்குச் சர்வதேச அளவிலான கவனத்தை ஈர்க்கும் வகையில் இம்மாநாடு அமையும். அடுத்து, மாநாட்டில் பங்கெடுக்கும் முதலீட்டாளர்கள், தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்குப் பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் இருக்கும். தமிழ்நாடுதான் தொழில் தொடங்குவதற்கான பல்வேறு சாத்தியங்களைக் கொண்டுள்ள மாநிலம்.

தொழிற்சாலைகளுக்கான இடம், சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவை முன்னுரிமை அடிப்படையில் கிடைப்பது மட்டுமின்றி, அமைதியான (Social & Industrial Peace) சூழல் கொண்ட மாநிலமும் தமிழ்நாடுதான். இது குறித்துப் பலருக்கும் தெரியும். இதையும் தாண்டிப் பல்வேறு கேள்விகளுக்கான பதிலைப் பெறுகிற இடமாகவும் முதலீட்டாளர் மாநாடு அமையும்.

இறுதியாக, தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான வளங்களில் ஒன்று மனிதவளம். கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடுதான். முனைவர் பட்டம் முடித்த மாணவர்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம். அவர்கள் அதிக அளவிலான காப்புரிமையை (Patent) பதிவுசெய்துள்ளனர். இவ்வகையான மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டும் வகையிலும் உலக முதலீட்டாளர் மாநாடு அமையும் என்பதுதான் இதன் சிறப்பம்சம்.

- தொடர்புக்கு: suresh@dreamtn.org

To Read in English: TN Global Investors Meet 2024 set to give shape to trillion-dollar dream

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்