தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்குப் பொன்விழா!

By ஆர்.முத்துக்குமார்

மா

நில அரசியல் களத்தில் அதிர்வலைகளை உருவாக்கிய நிகழ்வு அது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார், தமிழ்நாடு பெயர் சூட்டும் கோரிக்கை உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், அந்தக் கோரிக்கையை முதல்வர் காமராஜர் ஏற்கவில்லை. உண்ணாவிரதத்திலேயே உயிர் பிரிந்தது சங்கரலிங்கனாருக்கு.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’ என்று பெயர் வைத்த காங்கிரஸ் கட்சி, ஏன் மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்கத் தயங்குகிறது என்பது புரியாத புதிராகவே இருந்தது. சட்ட மன்றத்துக்குள் நுழைந்ததும் தனது கோரிக்கையை மீண்டும் திமுக வலியுறுத்தியது. 1957 மே 7 அன்று ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தது திமுக.

இறங்கிவந்த அரசு

தீர்மானத்துக்கு ஆதரவாக வெறும் 42 வாக்குகளே கிடைத்தன. எதிர்த்து விழுந்த வாக்குகள் 127. திமுகவின் முதல் தீர்மானம் முழுமையான தோல்வி. இருப்பினும், மேடைகளில் ‘தமிழ்நாடு’ பெயர் கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்தது திமுக. 1961 ஜனவரி 30 அன்று சோஷலிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் சின்னதுரை, ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தை வெற்றிபெறச் செய்யும் வகையில், ஆளுங்கட்சியினர் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை சட்ட மன்றத்துக்கு உள்ளும் புறமும் எழுந்தது. குறிப்பாக, தமிழரசு கழகத்தினர் சட்ட மன்றத்துக்கு வெளியே நின்று குரலெழுப்பினர்.

அது தொடர்பான விவாதத்தை ஒரு மாதத்துக்குத் தள்ளிவைக்குமாறு கோரினார் முதலமைச்சர் காமராஜர். இது தாமதிக்கும் தந்திரம் என்று சொல்லி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மூன்று நாட்களுக்கு இதே நிலைமை நீடிக்கவே, காமராஜர் அரசு கொஞ்சம் இறங்கிவந்தது. தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்குப் பதிலாக, நிர்வாகரீதியிலான கடிதப் போக்குவரத்துகளில் ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடுவதற்குச் சம்மதித்தது. ஆனால், அந்த முடிவு எதிர்க்கட்சிகளுக்கு முழுமையான திருப்தியைத் தரவில்லை. அரை மனதுடன் ஏற்றுக்கொண்டாலும், முழு வெற்றியை நோக்கிச் செல்வதற்கு ஆயத்தமாகவே இருந்தனர்.

கம்பனும் சேக்கிழாரும்

இப்படி மாநில அளவில் ‘தமிழ்நாடு’ கோரிக்கை இருந்த நிலையில், அதனை இந்திய அளவுக்குக் கொண்டுசென்றவர்களுள் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா முக்கியமானவர். ஆம், தமிழ்நாடு பெயர் சூட்டல் கோரி இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார் குப்தா. மாநில அரசு சட்டம் நிறைவேற்றி, அதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுப்பதைவிட, நேரடியாக மத்திய அரசே செய்துவிட சட்டத்தில் இடமிருக்கிறது என்பதால், அந்த முயற்சியை முன்னெடுத்தார் பூபேஷ் குப்தா.

அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா, குப்தாவின் மசோதாவை வெகுவாக ஆதரித்துப் பேசினார். அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், “சுமார் ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு வரைக்கும் ஒன்றுபட்ட தமிழ்நாடு என்ற ஒன்று இருந்ததே இல்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றுதான் இருந்தது. வரலாற்றுரீதியாக நியாயப்படுத்த முடியாதபோது, எதற்காகப் புதிய பெயரை உருவாக்க முனைகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அந்தக் கேள்விக்கு, பரிபாடல், பதிற்றுப்பத்து, மணிமேகலை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களில் இருந்தெல்லாம் சான்றுகளை எடுத்துச்சொல்லி பதிலளித்த அண்ணா, கம்பனும் சேக்கிழாரும் தமிழ்நாடு என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அப்போதும் திருப்தியடையாத ஓர் உறுப்பினர், “தமிழ்நாடு என்று பெயரிடுவதால் உங்களுக்கு என்ன லாபம்?” என்று கேள்வி எழுப்பினார்.

“பார்லிமெண்ட்டை, லோக்சபா என்று பெயர் மாற்றியதில் என்ன லாபம் கண்டீர்கள்? கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸை ராஜ்யசபா என்று மாற்றியதில் என்ன லாபம்? பிரசிடெண்ட்டை ராஷ்டிரபதி ஆக்கியதால் என்ன லாபம்?’’ என்றவர், ‘‘தமிழ்நாடு என்ற பெயரைத்தான் நீங்கள் மாநிலத்துக்குக் கொடுத்தாகவேண்டும். மாநிலத்தின் பெயருக்கும் அதன் தலைநகரத்தின் பெயருக்கும் வேறுபாடு இருக்க வேண்டும்” என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார். என்றாலும், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த அபரிமிதமான வலிமை காரணமாக ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்ற தனிநபர் மசோதா தோற்கடிக்கப்பட்டது.

தொடர் முயற்சி

பிறகு, மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து காமராஜர் விலகி, பக்தவத்சலம் முதல்வராகியிருந்த தருணத்தில் மீண்டும் ஒருமுறை, தமிழ்நாடு பெயர் சூட்டும் தீர்மானத்தைக் கொண்டுவந்தது திமுக. 23 ஜூலை 1963 அன்று திமுக சட்ட மன்ற உறுப்பினர் இராம.அரங்கண்ணல் கொண்டுவந்த அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய மாநில அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன், ‘‘தமிழ்நாடு என்று சொன்னால், வெளி உலகில் இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும்.. மெட்ராஸ் என்றால்தானே புரியும். அதுமட்டுமல்ல, மெட்ராஸ் என்று சொன்னால்தான், சர்வதேச அரங்கத்தில் கேட்கும் போது பெருமையாக இருக்கிறது” என்றார்.

அதுமட்டுமல்ல, ‘‘மாநிலத்தின் பெயரை மாற்றினால் பிற மாநிலத்துடனோ அல்லது வெளிநாட்டுடனோ போடப்பட்ட ஒப்பந்தங்களைத் திருத்த வேண்டியிருக்கும். அது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும்” என்றார். அதற்கு எதிர்வினை ஆற்றிய திமுக, “கோல்ட் கோஸ்ட் என்ற நாடு கானா என்று பெயர் மாற்றம் அடைந்தபோது, எந்தவிதப் பிரச்சினையும் எழவில்லை. ஒரு நாட்டுக்கே எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், மாநிலத்துக்கு எப்படிப் பிரச்சினை எழும்?” என்று கேட்டது.

வாதங்கள் வலுவாக எடுத்துவைக்கப்பட்டபோதும் சட்ட மன்றத்தில் எண்ணிக்கை பலம் இல்லாததால், தீர்மானம் தோல்வியடைந்தது. ஆக, எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்விகண்ட நிலையில்தான் 1967-ல் ஆட்சியைப் பிடித்தது திமுக. அதே வேகத்தோடு பெயர் மாற்ற விவகாரத்தைக் கையில் எடுத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்பதைத் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும் ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானம் தயாரிக்கப்பட்டது.

பெயர் சூட்டினார் அண்ணா!

1967 ஜூலை 18 அன்று சட்ட மன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் முதலமைச்சர் அண்ணா. விவாதத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பி.ஜி.கருத்திருமன், மெட்ராஸ் என்பது உலகறிந்த பெயர். தமிழ்நாடு என்பது அந்தப் புகழை இனிமேல்தான் எட்டவேண்டும். ஆகவே, ‘தமிழ்நாடு - மெட்ராஸ் ஸ்டேட்’ என்று பெயர் வைக்கலாமே என்று யோசனை சொன்னார். என்றாலும், இறுதியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவருமே ஒருமித்த எண்ணத்துக்கு வந்திருந்ததால், தமிழ்நாடு என்ற பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. பிறகு பேசிய முதலமைச்சர் அண்ணா, “தமிழ்நாடு” என்று மூன்று முறை அண்ணா உச்சரிக்க, மூன்று முறையும் ‘வாழ்க’ கோஷம் எழுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள்.

தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி, உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் பங்களிப்பையும் தமிழரசு கழகத்தின் தலைவர் ம.பொ.சிவஞானத்தின் தொடர் முயற்சிகளையும் பங்களிப்பையும் பதிவுசெய்து பேசினார் முதலமைச்சர் அண்ணா. அதோடு, ‘‘நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம்முடைய மாநிலம் இருக்கும்” என்பதையும் தெளிவுபடுத்தினார். அதன் நீட்சியாக, ‘‘தமிழ்நாடு அரசு - தலைமைச் செயலகம்” என்ற புதிய பெயர்ப்பலகை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்பட்டது. அண்ணாவின் மனத்துக்கு நெருக்கமான கோரிக்கை நிறைவேற்றப்பட்டதன் பொன் விழாவைத் தற்போது கொண்டாடுகிறது தமிழ்நாடு அரசு!

- ஆர்.முத்துக்குமார்,

எழுத்தாளர். ‘திராவிட இயக்க வரலாறு’

உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்