விடைபெறும் 2023: சாதனைகளும் சர்சைகளும் @ இலக்கியம்

By செய்திப்பிரிவு

அவசர அறிவிப்பு: சாகித்ய அகாடமி விருதுகள் என்றாலே சர்ச்சைதான். உருப்படியானவருக்கு விருது தரப்படவில்லை என்றுதான் பொதுவாக அவர்களும் இவர்களும் மாறி மாறி விமர்சிப்பார்கள். ஆனால், இந்த முறை உள்ளபடியே உருப்படியானவருக்கு விருது அளிக்கப்பட்டும் சர்ச்சை ஆகிவிட்டது. விருது அறிவிப்புக்கு முன்பே இன்னாருக்குத்தான் விருது என்பது அடிபடக்கூடிய கிசுகிசுதான். இந்த முறை ‘எனக்கு நாலு விஷயம் தெரியும்’ எனப் பறைசாற்றும் ஆர்வம்கொண்ட இலக்கியவாதி யாரோ இந்தக் கிசுகிசுவை அறிவிப்பு என்கிற ரீதியில் எழுத, அது சமூக ஊடகங்களில் பற்றிப் படர்ந்து முதல்வரின் டிவிட்டரையே எட்டியது. முதல்வரின் வாழ்த்தால் செய்திகளும் வெளியாகின.

விருது விஷயம் கசிந்தால் அந்த ஆண்டுக்கான விருது அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளருக்குத் தரப்படாமல் போகலாம் என விஷயம் தெரிந்தவர்கள் எழுதினார்கள். தரவே கூடாது என ஓர் எழுத்தாளர் கருத்தை உதிர்த்தார். ஒருவழியாக தேவிபாரதிக்கு முறைப்படி விருது அறிவிக்கப்பட்டாலும் ‘இதுதான்’ எனக்குத் தெரியுமே என்று எல்லாரும் ஆரவாரமில்லாமல் இருந்துவிட்டார்கள்.

புக்கரில் தமிழ் நூல்: சர்வதேச அளவில் கவனம் பெற்ற இலக்கியப் பரிசு புக்கர். சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய், கிரண் தேசாய், அரவிந்த் அடிகா இவர்கள் எல்லாம் தங்கள் ஆங்கிலப் படைப்புகளுக்காக இந்தப் பரிசை ஏற்கெனவே பெற்றுள்ளார்கள். முதன்முறையாக இந்திய மொழி (இந்தி) எழுத்தாளரான கீதாஞ்சலிக்கு 2022ஆம் ஆண்டு புக்கர் பரிசு கிடைத்தது.

அதைத் தொடர்ந்து, சென்ற ஆண்டு தமிழ் எழுத்தாளர் பெருமாள்முருகனின் ‘பூக்குழி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு புக்கர் பரிசின் நெடும் பட்டியலில் இடம்பெற்றது. தமிழ் நூல் ஒன்று சர்வதேச விருதுப் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறை. உலகின் மூத்த மொழியாக இருந்தாலும் சமீபத்தில் தமிழுக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக இதைப் பார்க்கலாம். பெருமாள்முருகனின் இதே நாவல் சமீபத்தில் இந்திய அளவில் புகழ்பெற்ற ஜேசிபி விருதையும் பெற்றுள்ளது. ஜேசிபி விருதைப் பெறும் முதல் தமிழ் எழுத்தாளரும் பெருமாள்முருகன்தான்.

பாலியல் சர்ச்சை: எழுத்தாளர் கோணங்கி குறித்து இளைஞர்கள் சிலர் சமூக ஊடகங்களில் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டைப் பகிர்ந்துகொண்டது இலக்கிய வெளியையும் தாண்டி இந்தாண்டு பரபரப்பாகப் பேசப்பட்டது. உலக அளவில் #metoo முன்னெடுப்பு இந்தியாவிலும் பலரையும் அம்பலப்படுத்தியது. ஆனால், இது தமிழ்த் தீவிர இலக்கியத்துக்குள்ளும் நுழைந்துவிடும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் புகார் விவகாரம் தொடர்பாக முன்னணி தமிழ், ஆங்கிலப் பத்திரிகைச் செய்திகளும் கட்டுரைகளும் வெளியிட்டன.

இதைத் தொடர்ந்து நாடக ஆளுமை கி.பார்த்திபராஜா மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மணல்வீடு ஹரிகிருஷ்ணன் மீது முன்பு ஓர் இளைஞரால் வைக்கப்பட்ட இதே போன்ற குற்றச்சாட்டு மீண்டும் பேசுபொருளானது. கோணங்கி புகாரை மறுத்ததுடன் அதைச் சதி என்றும் விமர்சித்தார். அதனால் மேலும் விமர்சனத்துக்கு ஆளானார். அதற்குப் பிறகு அவரது ஆசிரியத்துவத்தில் வெளிவந்த ‘கல்குதிரை’ இதழுக்கு எழுத்தாளர்கள் பலரும் பங்களித்திருந்தனர். இதைக் கண்டித்து சமூகச் செயற்பாட்டாளர் பிரேமா ரேவதி உள்ளிட்டோர் சமூக ஊடகத்தில் எழுதினர். அதற்கு மெளனமே பதிலானது.

ராயல்டி சர்ச்சை: ‘எழுத்தாளர்களின் மரணத்துக்காகக் காத்திருக்கும் பதிப்பாளர்கள் பலர் உண்டு’ என்கிற மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் மேற்கோள் ஒன்று உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் இந்தாண்டு ராயல்டி தொடர்பாகப் பதிப்பாளர்-எழுத்தாளர் மோதல் நிறையவே நடந்தது. எழுத்தாளர் பிரபு தர்மராஜ், வாசகசாலை பதிப்பகத்தின் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டைச் சொன்னார். இவருக்கும் பதிப்பகத்துக்குமான பரிவர்த்தனைகள் எல்லாம் சமூக ஊடகத்திலேயே வெளியாகிப் பேசுபொருள் ஆனது.

எழுத்தாளர் தமயந்தியும் இந்த ராயல்டி பிரச்சினைக்குள் வந்தார். வாசகசாலையும் விளக்கம் அளித்தது. டிஸ்கவரி புக்பேலஸும் இதற்குள் இழுக்கப்பட, அதன் பதிப்பாளர் வேடியப்பனும் சமூக ஊடகத்தில் விளக்கம் அளித்தார். அபிலாஷ் சந்திரனும் கிழக்குப் பதிப்பகம் மீது இம்மாதிரியான குற்றச்சாட்டை வைத்தார். தொடர்ந்து ராயல்டி பற்றி பேசிவரும் லஷ்மி சரவணக்குமார் இவர்கள் எல்லாருக்கும் ஆதரவாகப் பேசினார்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சர்ச்சை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தமிழின் முன்னணிப் பதிப்பகமாகும். இதற்குத் தமிழ்நாடு முழுவதும் பல கிளைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான புத்தகங்களை இந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பதிப்பகப் பிரிவாக அறியப்பட்டாலும் இது தனித்த நிறுவனமாகவே இருந்துவருகிறது. இதுதான் பிரச்சினைக்கும் காரணம். அதன் பெரும்பான்மைப் பங்குகள் சண்முக சரவணனிடமே இருந்தன. இவர் வசம் உள்ள பங்குகளைக் கட்சி சொல்லும் நபர்களுக்கு மாற்றிக்கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

ஆனால், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக இயங்குவதுதான் அதன் தன்மைக்கு உகந்தது என சண்முக சரவணன் தரப்பில் சொல்லப்பட்டது. பிறகு, அதன் இயக்குநராக இருந்த சண்முக சரவணன் தலைமறைவானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டுக் கட்சிக்குச் சாதகமான முடிவை எடுத்து விடப் பிரச்சினையும் தன் முடிவை அடைந்தது.

அரசு புத்தகத் திருவிழா/ வெளியீடு: தமிழ்நாடு அரசு சங்க இலக்கிய நூல் அறிமுகத்தை வெளியிட்டது. பழ.அதியமானின் ‘வைக்கம் போராட்டம்’ நூல் தமிழ்நாடு அரசின் முயற்சியால் மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. பாரதியின் வாழ்க்கையைப் படக் கதையாக சிறார்களுக்காக வெளியிட்டுள்ளது. ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்கிற பெயரில் உரை நிகழ்ச்சியையும் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைத்தது.

தமிழ்நாடு அரசு பபாசியுடன் இணைந்து மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகளை ஆண்டு முழுவதும் நடத்தியது. இது வரவேற்கத்தக்க முன்னெடுப்பாக இருந்தாலும், அருகருகே மாவட்டப் புத்தகக் காட்சிகள் நடத்துவதால் விற்பனை பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதனால் சிறு பதிப்பகங்கள் இம்மாதிரிப் புத்தகக் காட்சிகளில் தொடர்ந்து பங்கெடுப்பது சிக்கலானதாகிறது. இனி வரும் ஆண்டுகளில் அடுத்தடுத்த மாவட்டங்களில் உடனடியாகப் புத்தகக் காட்சி நடத்தாமல் தவிர்க்க தமிழ்நாடு அரசு கவனம் கொள்ள வேண்டும்.


திரைப்படமான இலக்கியங்கள்: அமரர் கல்கியின் புகழ்பெற்ற சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வனை’ அடிப்படையாக வைத்து. மணி ரத்னம் இயக்கிய இரண்டு திரைப்படங்களில் இரண்டாம் படமாகிய ‘பொன்னியின் செல்வன் 2’, ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு வெற்றிமாறன் இயக்கியிருந்த ‘விடுதலை’ இரண்டும் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல்ரீதியாகப் பெரும் வெற்றிபெற்றன. ‘விடுதலை’ இரண்டாம் பாகம் 2024இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு படங்களின் வெற்றி, இலக்கியங்களைச் சினிமா ஆக்குவதற்கான ஆர்வத்தையும் சாத்தியங்களையும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. எழுத்தாளர் இமையத்தின் ‘பெத்தவன்’ நாவல் மு.களஞ்சியம் இயக்கத்தில் ‘முந்திரிக்காடு’ என்னும் திரைப்படமாக வெளியானது.

தற்போது சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவலை அதே தலைப்பில் திரைப்படமாக்க இருக்கிறார் வெற்றிமாறன். இயக்குநர் மிஷ்கினின் தம்பி ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் வெளியாக விருக்கும் ‘டெவில்’ திரைப்படம் எழுத்தாளர் தேவிபாரதியின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது.

இலக்கிய உணர்வளித்த சினிமாக்கள்: எஸ்.ராமகிருஷ்ணனின் கதைப் பங்களிப்பில் மந்திரமூர்த்தி இயக்கியிருந்த ‘அயோத்தி’ வடநாட்டிலிருந்து வந்து ஒரு உறுப்பினரைப் பறிகொடுத்துக் கையறு நிலையில் நிற்கும் ஒரு குடும்பத்துக்கு முகம் தெரியாத பலர் உதவுவது போன்ற கதையைக் கொண்டிருந்தது.

விநாயக் சந்திரசேகரன் எழுதி இயக்கியிருந்த ‘குட்நைட்’ அதீத ஒலியுடன் குறட்டைவிடும் மனிதனுக்குக் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை வெகு இயல்பாகக் காட்சிப்படுத்தியிருந்தது. ராம் சங்கையாவின் ‘தண்டட்டி’ கிராமத்து மனிதர்களின் உறவுகளையும் சுயநலத்தையும் கலகலப்பான திரைக்கதை ஆக்கியிருந்தது.

ஆண்டு இறுதியில் வெளியான ‘பார்க்கிங்’ வாகன நிறுத்துமிடம் சார்ந்து இரண்டு ஆண்களுக்கிடையே வெடிக்கும் தகராறு, அவர்களுக்குள் இருக்கும் ஆழ்மன வன்முறையையும் வக்கிரங்களையும் வெளிப்பட வைப்பதைத் துளியும் மேற்பூச்சின்றிக் காட்சிப்படுத்தியது. சிறுகதை அல்லது நாவல் பகுதியைப் படித்தது போன்ற உணர்வைத் தரும் யதார்த்தத்துக்கு நெருக்கமான திரைப்படங்கள் மலையாளத்தில் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. தமிழிலும் அத்தகைய திரைப்படங்களின் எண்ணிக்கையும் அவற்றுக்கான வெகுமக்கள் ஆதரவும் அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE