ம
க்கள் தலைவர் என்று பெயரெடுத்த கருப்பையா மூப்பனாரும், தமிழகத்தின் முக்கிய அரசியல் திருப்பங்களுக்குப் பின்னாலிருந்த வியூகி சோ ராமசாமியும் 20 ஆண்டுகளுக்கு முன்பே ரஜினிகாந்தை அரசியல் களத்துக்குள் அழைத்துவர ஆசைப்பட்டார்கள். அதையடுத்து வந்த அரசியல் வியூகிகள் ரஜினி அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடவும்கூடச் செய்தார்கள். தனது அரசியல் பிரவேசத்தைக் கவனமாகத் தவிர்த்த ரஜினி, இப்போது கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். ‘கட்சியெல்லாம் இப்ப நமக்கு எதுக்கு, காலத்தின் கையில் அது இருக்கு’ என்று பாடி நடித்தவருக்கு, காலம் இப்போது கனிந்திருக்கிறதா?
1996 தேர்தல் சமயத்திலேயே ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று ரஜினியின் ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள். கருணாநிதி, ஜெயலலிதா என்று தமிழகத்தின் செல்வாக்கு மிக்க இரண்டு தலைவர்கள் அப்போது களத்தில் இருந்தார்கள். தேர்தல் வெற்றி தோல்விகள் ஒருபுறமிருந்தாலும், அவர்களுக்கு ஈடுகொடுக்கிற வகையில் ரஜினியால் அரசியல் செய்ய முடிந்திருக்காது என்பதை மற்றவர்களைக் காட்டிலும் ரஜினி நன்றாக அறிந்திருந்தார் என்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது. ஜெயலலிதா காலமாகிவிட்டார். கருணாநிதி அரசியலில் முழுமையாகப் பங்கெடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார். உறுமீன் வருமளவும் காத்திருந்த ‘கொக்கு’போல ரஜினி தனது பிரவேசத்துக்குச் சரியான நேரத்தைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால், நேரமும் காலமும் மட்டுமே அவருக்குச் சாதகமாகிவிடுமா என்பதுதான் கேள்வி.
நேற்று அண்ணாயிஸம்… இன்று ஆன்மிக அரசியல்!
திமுகவில் கருணாநிதியின் இடத்திலிருக்கும் மு.க.ஸ்டாலின், தனது வாழ்வு முழுவதையுமே அரசியலுக்கு அர்ப்பணித்தவர். அதிமுகவில் தற்போது தனிப்பெரும் தலைவர்களாக யாரும் இல்லையென்றாலும், அதன் அனைத்துப் பிரிவுத் தலைவர்களுமே நடைமுறை அரசியலைக் கற்றுத் தேர்ந்தவர்கள். தற்போது முதலமைச்சராக உள்ள பழனிசாமி தனது 18-வது வயதிலேயே கிளைக் கழகச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவர். ஒரே நாளில் யாரும் உயரத்துக்கு வந்துவிடவில்லை. இப்போதிருக்கும் தலைவர்கள் நிச்சயமாக கருணாநிதியோ ஜெயலலிதாவோ அல்ல. ஆனால், திரைப்படங்களின் வழியாக உருவான கதாநாயகப் பிம்பத்தால் எளிதில் வீழ்ந்துவிடக்கூடியவர்களும் அல்ல. எனவே, அடுத்துவரும் சட்ட மன்றத் தேர்தல், வெற்றிக்கனியை வெள்ளித்தட்டில் வைத்து ரஜினிக்குப் பரிசளித்துவிடாது. ஆனால், கணிசமான அளவுக்கு அவரால் வாக்குகளைப் பிரிக்க முடியும். அது யாருக்கு ஆதரவாக அமையும் என்பதையும் இப்போதைய சூழலில் துல்லியமாக முன்கணித்துவிட முடியாது.
அரசியலுக்கு வந்துவிட்டார். சரி, வரவேற்போம். ஆனால், அவருக்கு என்ன கொள்கை, என்ன கோட்பாடு என்று கேட்கும் அப்பாவிகளும்கூட இருக்கிறார்கள். தமிழக அரசியல் என்பது எப்போதுமே கருத்துச் சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டங்களும் விவாதங்களுமாகத்தான் இருக்கிறது. ஆனால், அது போதிய அளவுக்குத் தேர்தலில் எதிரொலிப்பதில்லை. தமிழக மக்களின் இதுவரையிலான தேர்தல் தெரிவுகள், சமூக நலத்திட்டங்களைச் செயல்படுத்தினால் போதும் என்கிற அளவுக்குத்தான் இருந்துவந்திருக்கிறது. திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களைக் கொண்ட திமுகவைத் தவிர்த்துவிட்டு, எம்ஜிஆரைத் தமிழக மக்கள் தொடர்ந்து ஆட்சியில் அமர்த்தியதற்கு வேறென்ன காரணங்கள் இருந்துவிட முடியும்? அன்றைக்கு எம்ஜிஆருக்கு என்ன விசேஷமான கொள்கை இருந்தது? என்னுடைய கொள்கை அண்ணாயிஸம் என்று அலங்கார வார்த்தைகளைச் சொல்லிவிட்டு எம்ஜிஆர் நகர்ந்துவிடவில்லையா? ஏறக்குறைய ஆன்மிக அரசியல் என்ற முரண்தொகைத் தொடரும் அதுபோன்றதுதான்.
ரஜினியின் ஆன்மிக ஈடுபாடுகள் ஏற்கெனவே மக்களுக்குத் தெரிந்த விஷயங்கள்தான். எனவே, அதில் ஆச்சரியத்துக்கோ அதிர்ச்சிக்கோ ஆளாவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், ஆன்மிகம் என்ற வார்த்தையோடு இன்றைக்கு மதவாதமும் இணைந்தியங்குவதை ரஜினி அறியாதவர் என்று சொல்லிவிட முடியாது. அவர் குறிப்பிடுவது காந்திய வழி அரசியலைத்தான் என்று பொருள் விளக்கம் கொடுப்பவர்கள், காந்தியைப் பற்றியும் சமூகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதை முதன்மையான நோக்கமாகக் கொண்ட அதன் வழிமுறைகளைப் பற்றியும் ரஜினிக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
அன்னைத் தமிழ் நாட்டில்…
எங்கிருந்தோ வந்தவர், இந்த மண்ணை ஆள ஆசைப்படலாமா என்ற ஆவேசக் குரல்களும் ஒலிக்கின்றன. மொழியின் அடிப்படையில், இனத்தின் அடிப்படையில் உயர்வு தாழ்வு காட்டப்படுவதை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில்தான், தமிழ்நாட்டில் மொழியையும் இன உரிமைகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தார்களே ஒழிய தமிழைக் குங்குமச் சிமிழுக்குள் அடைத்துப் பாதுகாப்பதற்காக அல்ல. எனவே, இன்றைக்கு மொழியுணர்வும் இன உணர்வும் அடிப்படைவாதம் என்ற நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்கு உரியதல்ல.
ரஜினிகாந்த், தமிழின் சமகால கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகிப்போனவர். அரசியலில் அவர் என்ன சாதிக்கப்போகிறார் என்பது வேறு விஷயம். ஆனால், அவரது அடையாளம் தமிழ் மண்ணுடன் பின்னிப் பிணைந்தது. தமிழகத்தில் இதற்கு முன் முதல்வராகப் பொறுப்பு வகித்தவர்களின் மீதும் இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. அதையெல்லாம் தமிழ் மக்கள் பொருட்படுத்தியதே இல்லை என்பதை யும் ‘உணர்வாளர்கள்’ கருத்தில் கொள்ள வேண்டும்.
அப்படியே நேரா முதல்வர்தானா?
ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு அடுத்து வர இருக்கிற சட்ட மன்றத் தேர்தலை மட்டுமே குறிவைத்திருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, தமிழக அரசு ஒருவேளை உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால்? உள்ளாட்சி அமைப்புகள், அரசியலின் மிக முக்கியமான அங்கம் என்று அவருடைய ஆலோசகர்கள் அவருக்குச் சொல்லிக்கொடுக்கவில்லையா?
மூப்பனாரும் சோ ராமசாமியும் ரஜினியை அரசியலுக்கு அழைத்தார்கள். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்றாக அவர்கள் ஓர் அரசியல் தலைமையை உருவாக்க விரும்பினார்கள். இன்று மக்கள் தலைவரும் இல்லை. வியூகியும் இல்லை. அவர்கள் எதற்காக ரஜினியை அழைத்தார்களோ, அதற்கான அவசியமும் இல்லை. இன்று ரஜினியை அரசியலுக்கு அழைப்பவர்களின் நோக்கம் வேறு. அந்த நோக்கத்தை ரஜினி ஏற்றுக்கொள்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. அழைப்புகள் வந்தபோது தவிர்க்கத் தெரிந்த ரஜினி, காலம் தாமதித்து அதை ஏற்றுக்கொள்ளும்போது அழைப்புகளின் பின்னாலிருக்கும் அரசியலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியாமலா இருப்பார்?
- புவி, தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago