திமுக அபிமானி முதல் எதிர்கட்சித் தலைவர் வரை - விஜயகாந்த் அரசியல் பயணமும், பல சம்பவங்களும்!

By செய்திப்பிரிவு

குறும்புக்காரச் சிறுவன்: மதுரையில் அழகர்சாமி - ஆண்டாள் தம்பதியின் நான்கு குழந்தைகளில் மூன்றாவதாக 1952 ஆகஸ்ட் 25-ல் பிறந்தவர் விஜயகாந்த். இயற்பெயர் விஜயராஜ். கைக்குழந்தையாக இருந்தபோதே தாயை இழந்த இவருக்கு அதீத செல்லம் கொடுத்தார் அழகர்சாமி. இளம் பருவத்தில் குறும்பு அதிகம். படிப்பில் ஈடுபாடு இல்லை. வகுப்புக்கு வகுப்பு பள்ளி மாறினாலும் கடைசிவரை படிப்பில் ஆர்வம் ஏற்படவில்லை. ஆனால், பின்னாளில் தமிழகம் அறிந்த ஆளுமையானார்.

திமுக அபிமானி: சிறுவனாக இருந்தபோது, மதுரையில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. எல்லா இளைஞர்களையும்போல விஜயகாந்தும், அவரது அண்ணன் நாகராஜும் திமுக அபிமானிகளாகிவிட்டார்கள். இரண்டு முறை மதுரை நகராட்சி கவுன்சிலராக இருந்த அழகர்சாமி, மூன்றாவது முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளருக்காக வேலைபார்த்து, சொந்தத் தந்தையையே தோற்கடித்தார் விஜயகாந்த். அந்த அளவுக்குத் திமுக மீது பேரபிமானம் கொண்டிருந்தார். இவரது திருமணத்தை நடத்தி வைத்தவரும் கருணாநிதிதான்.

ரைஸ் மில் முதலாளி: பையனுக்குப் படிப்பில் ஆர்வமில்லை என்பதை உணர்ந்த அழகர்சாமி, கீரைத்துறையில் இருந்த தனது அரிசி மில்லைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை விஜயகாந்திடம் ஒப்படைத்தார். தொழிலாளர்களுடன் தொழிலாளியாக மூட்டை தூக்குவது, மில்லிலேயே படுத்துக்கொள்வது என்றிருந்தார் விஜயகாந்த். வேலை நேரம் போக மீதி நேரங்களில் சுந்தரம், ராதா, சுந்தரராஜன், வீரபத்திரன், இப்ராஹிம், ராமுவசந்தன், ரவீந்திரன், ஆழ்வார் என்று நண்பர்கள் கூட்டத்துடனே சுற்றித்திரிவார்.

நடிகர் விஜயகாந்த்: நண்பர்களுடன் அவர் கொட்டமடித்த, மதுரை மேலஆவணி மூலவீதியில் ‘சேனாஸ் ஃபிலிம்ஸ்’ என்ற ஒரு பட விநியோக நிறுவனம் இருந்தது. அதன் உரிமையாளர் முகமது மர்சூக், “தம்பி, நீங்க ரஜினிகாந்த் மாதிரியே இருக்கீங்க” என்று சினிமா ஆசையைத் தூண்டினார். மர்சூக் விநியோகஸ்தராக இருந்த ஒரு படத்தின் வெற்றி விழாவுக்கு வந்த ரஜினியை நேரில் பார்த்ததும் உத்வேகம் தந்தது. மர்சூகின் நண்பரும் இயக்குநருமான எம்.ஏ.காஜாவின் மூலம், ‘இனிக்கும் இளமை’ படத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தது. விஜயகாந்த் ஆனார் விஜயராஜ்

ஈழத்தமிழர் ஆதரவு: தொடக்கத்தில் கிராமம் சார்ந்த கதைகளில் நடித்த விஜயகாந்த், பிறகு ஆக்‌ஷன் ஹீரோவானார். ஒருகட்டத்தில் அரசியல் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஈழப் பிரச்சினையில் ஆர்வம் காட்டிய அவர், தனது 100-வது படத்துக்கு ‘கேப்டன் பிரபாகரன்’ என்று பெயர் வைத்ததுடன், மூத்த மகனுக்கும் பிரபாகரன் என்றே பெயர் சூட்டினார். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகப் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்துவந்தார். 1991-ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, திமுக தலைவர்களின் வீடுகள் மட்டுமின்றி விஜயகாந்தின் வீடும் குறிவைத்துத் தாக்கப்பட்டது.

கருப்பு எம்ஜிஆர்: தனது வருவாயில் 10%-ஐ ரசிகர் மன்றங்கள் வாயிலாக நலத்திட்ட உதவிக்காக வழங்கிய விஜயகாந்த், 1990-க்கு முன்பே ஈரோட்டில் இலவச மருத்துவமனை, புதுக்கோட்டையில் திருமண மண்டபம் கட்டினார். சுமார் 30 ஆண்டுகளாக சென்னை கோயம்பேட்டில் ஞாயிறுதோறும் அன்னதானம் வழங்குகிறார். தவிர கார்கில் போர், குஜராத் பூகம்பம், ஒடிஷா வெள்ளம், ஆந்திரப் புயல், கும்பகோணம் தீ விபத்து, சுனாமிப் பேரழிவு என்று எல்லாவற்றிலும் முதல் ஆளாக நிதி கொடுத்து, பெரிய நடிகர்களும் கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினார். எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்து மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் பள்ளிக்கு வருடந்தோறும் ரூ.50 ஆயிரம் நிதி வழங்கினார். அந்த மரியாதைதான் எம்ஜிஆரின் பிரச்சார வேன், விஜயகாந்திடம் கைமாறக் காரணம்.

நடிகர் சங்கத் தலைவர்: பொதுவாழ்வில் முதலில் கிடைத்த பொறுப்பு, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் பதவி. மிகச் சிறப்பாகச் செயல்பட்ட அவர், தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் நட்சத்திரக் கலை விழா நடத்தி, நடிகர் சங்கக் கடனை வட்டியும் முதலுமாக அடைத்தார். மீதித் தொகை சுமார் ரூ.1 கோடியை வங்கியில் டெபாசிட் செய்து, நலிந்த கலைஞர்களுக்கு உதவிசெய்தார். 1996-ல் அரசியல் காரணங்களுக்காக, எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதியின் திரையுலகப் பொன்விழாவைக் கொண்டாட திரையுலகம் தயங்கி நின்றபோது, துணிந்து தானே தலைமை தாங்கி விழாவைப் பிரம்மாண்டமாக நடத்திக்காட்டினார்.

திடீர் தலைவரல்ல: யாரோ சொல்லி திடீரெனக் கட்சி தொடங்கியவர் அல்ல விஜயகாந்த். 15 வயதிலேயே அரசியலில் ஈடுபட்ட அவர், நடிகரான பிறகும் (1979) அரசியலை ஒதுக்கியதில்லை. 1985-களிலேயே தனது ரசிகர் மன்றத்தையும் ஒரு அரசியல் இயக்கம்போல வளர்த்தெடுத்தார். மன்ற நிகழ்ச்சிகளில் தானே கலந்துகொண்டு உதவிகள் வழங்கியவர், மன்றத்துக்கென தனிக் கொடியை அறிமுகப்படுத்தினார்.

திருமணத்துக்குப் போனால்கூட வழியோரக் கிராமங்களில் மன்றக்கொடி ஏற்றிவைத்தார். 2001 உள்ளாட்சித் தேர்தலில் அவரது ஆதரவுடன் மன்ற நிர்வாகிகள் சிலர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றனர். இப்படி திட்டமிட்டுச் செயல்பட்ட அவர், 2005-ல் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தைத் தொடங்கினார். 14.9.2005-ல் மதுரையில் நடந்த கட்சித் தொடக்க விழாவில், சுமார் 3 லட்சம் பேரைத் திரட்டி தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார். ரசிகர் மன்ற அடித்தளம்தான், டெல்லியில் வேட்பாளர் நிறுத்துமளவுக்கு அவருக்குத் தைரியத்தைக் கொடுத்தது.

சட்ட மன்ற உறுப்பினர்: திமுக, அதிமுகவை மட்டுமின்றி, அக்கட்சிகளுடன் மாறிமாறிக் கூட்டணி வைக்கும் கட்சிகளையும் சரமாரியாகச் சாடிய அவர், “ஊழலை ஒழிப்பேன். மக்களுடனும் தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி வைப்பேன்” என்று பிரச்சாரம் செய்தார். அவரது திருமண மண்டபத்தில் கை வைத்தது திமுக. ‘கஜேந்திரா’ படப்பெட்டியைத் தூக்கியது பாமக. ஊர்தோறும் கட்சிக்கொடியை வெட்டி வீழ்த்தியது அதிமுக. அசராமல், 232 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய விஜயகாந்த், பாமகவின் கோட்டையான விருத்தாச்சலத்தில் வெற்றி வாகை சூடினார். கட்சி ஆரம்பித்த ஏழே மாதங்களில் தமிழகம் முழுக்க 28 லட்சம் வாக்குகளைப் (8.38%) பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரும்கட்சியாக தேமுதிகவை நிலைநிறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர்: 2011 தேர்தலில் ஜெயலலிதாவின் அழைப்பின் பேரில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த அவர், போட்டியிட்ட 49 தொகுதிகளில் 29-ல் வென்று, தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரானார். முதல் முறையாக சட்டசபை கூடியபோதே, ஜெயலலிதாவின் பேச்சால் கோபமடைந்து, சினிமா பாணியில் நாக்கைத் துருத்திப் பதிலடி கொடுத்தார். பதிலுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட 9 தேமுதிக எம்எல்ஏக்களை அதிமுகவுக்கு இழுத்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் காலிசெய்தார் ஜெயலலிதா.

2014 மக்களவைத் தேர்தலிலும், 2016 சட்ட மன்றத் தேர்தலிலும் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று பட்டிமன்றமே நடக்கும் அளவுக்குக் கட்சிகளைக் காக்கவைத்தார். இரு தேர்தல்களிலும் பெரும் தோல்வி.விஜயகாந்தின் ஆகப் பெரிய பலம் அவரது எதார்த்தமான பேச்சு. கட்சி தொடக்க விழாவில் சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் பேசினார்.அப்படியான பேச்சுக்கு சொந்தக்காரர்.

- தொகுப்பு: கே.கே.மகேஷ்

| நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் மறைவையொட்டி, அவரது வாழ்க்கைப் பயணம் குறித்த மறுபகிர்வு கட்டுரை இது. |

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

26 days ago

மேலும்