தமிழக அரசியலில் ‘மாற்று சக்தி’ - விஜயகாந்த் முன்னெடுப்பும், கவனத்துக்குரிய பின்புலமும்!

By பாரதி ஆனந்த்

விஜயகாந்த்... பிரதமர் மோடி தொடங்கி கிராமத்து நடுத்தர வயதினர் வரை அனைவரும் உச்சரிக்கும் பெயராக இருக்கிறது. கேப்டன் மறைந்தார், கருப்பு நிலா கரைந்தது என்ற கேப்ஷன்களுடன் செய்திகளும், செய்தித் தொகுப்புகளும் ஊடகங்களில் ஒலித்தன. 'உள்ளமெல்லாம் தள்ளாடுதே..' என்று தூரத்து இடிமுழக்கம் படத்தில் பாடிய விஜயகாந்த் மறைவால் அவரது கட்சித் தொண்டர்கள், திரையுலகினரும் தள்ளாடிப்போய்தான் இருக்கின்றனர். அத்தனை கதறல்கள், இரங்கல்கள், புகழஞ்சலிகள். பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் குறிப்பில், “தமிழக அரசியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர்” என்று கூறியிருந்தார். அந்தப் புள்ளியில் இருந்து விஜயகாந்தின் அரசியல் வளர்ச்சியை அணுகுவோம்.

மதுர குலுங்க குலுங்க... - 2005-ஆம் ஆண்டு மதுரையில் நடந்த மாநாட்டில் தேமுதிக கட்சியை அறிவித்தார் விஜயகாந்த். 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டது. 232 தொகுதிகளில் முரசு சின்னத்திலும் மீதம் உள்ள 2 தொகுதிகளில் (கடயநல்லூர், திருநெல்வேலி) மோதிரம் சின்னத்திலும் போட்டியிட்டது. கட்சித் தலைவர் விஜயகாந்த் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றாலும் (விருத்தாச்சலம் தொகுதி), குறிப்பிடத்தக்க தொகுதிகளில் இக்கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

முதல் தேர்தலிலேயே அவர் வெற்றி பெறக் காரணம் அவர் உருவாக்கி வைத்திருந்த ரசிகர் மன்றம். அந்த ரசிகர் மன்றத்தை அவர் வலுவாகக் கட்டமைத்திருந்தார். அதுவே அவர் அரசியலில் குதித்தபோது அவர் மூழ்கிவிடாமல் சட்டசபைக்கு கொண்டு சேர்த்தது.

திரையில் அவர் கொண்ட ஆளுமையும், நிஜத்தில் அவர் கொண்ட தயாள சிந்தனையும் அவரை அரசியலில் அவர் ஆபத்பாந்தவனாக இருப்பார் என்ற நம்பிக்கையை ரசிகர்களைக் கொள்ள வைத்தது. ரசிகர்களின் நம்பிக்கை பொது சமூகத்துக்கும் பாய்ச்சப்பட்டது. ஏற்கெனவே எம்ஜிஆர், ஜெயலலிதா என திரையுலக ஆளுமைகளை அரசியல் வானில் மின்னவைத்த வெகுஜனம், ஜிகினா உலகிலிருந்து வந்த விஜயகாந்தையும் உற்சாகத்துடன் ஸ்வீகரித்துக் கொள்ளச் செய்தது. அத்தகைய வலுவான ரசிகர் பட்டாளம் ரஜினிகாந்துக்கும், கமலஹாசனுக்கு இருந்ததா, இருக்கிறதா என்றால், அது இன்னொரு கட்டுரையின் விவாதப் பொருளாகிவிடும். ஆகையால், நிற்க.

ஊழல், வறுமை ஒழிப்பு: எளிய மக்களுக்கு அன்றாட வில்லன் வறுமையும், வாய்ப்புகளைப் பறிக்கும் ஊழலும்தான். அந்த இரண்டையும் ஒழிப்பதுதான் லட்சியம் என்றார் விஜயகாந்த். அப்போது அவர் நிச்சயமாக வெகுஜனத்துக்கு கருப்பு எம்ஜிஆராகத்தான் தெரிந்திருந்தார் போல. ரமணா படத்தில் நரம்பு புடைக்க அவர் பேசிய வசனங்கள் எல்லாம் மக்கள் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்ததோ என்னவோ அரசியலில் ஆரம்ப நாட்கள் இனிதே அமைந்தது.

தேமுதிக நிறுவப்பட்டு ஒரே ஆண்டுக்குள் வாக்கு வங்கி பலமாக இருந்தது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் 8.40 சதவீதம் வாக்குகளை தேமுதிக பெற்றது. அதுவும் விஜயகாந்த் பாமகவின் கோட்டை என அறியப்படும் வடக்கு மண்டலத்தில் விருத்தாச்சலத்தில் வெற்றி பெற்று அக்கட்சிக்கு கிலியை ஏற்படுத்தியது.

பாமகவும் விஜயகாந்த் மீதான விமர்சனங்களை தாராளமாக அள்ளி வீசியது. வாழ்வியலில் காய்த்த மரம் கல்லடி படும் என்றால் அரசியலைப் பொறுத்தவரை காய்க்க ஆரம்பித்துவிட்டாலே கல்லடி அதிகம் விழும். அப்படியாக விமர்சனங்களை வாங்கிக்கட்டிக் கொண்டே தேமுதிக வளர்ந்தது. 2009 மக்களவைத் தேர்தலில் அதன் விளைவாக 10 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றது.

மக்களுடன்தான் கூட்டணி: வெற்றிகள் குவிந்து கொண்டிருந்தாலும், அடையாளத்தின் வீச்சு டெல்லி வரை ஒளிர்ந்தாலும் விஜயகாந்த் ஒரே ஒரு வாக்கியத்தை விடாமல் பிடித்துக் கொண்டார். அதுதான் ‘மக்களுடன் மட்டும்தான் கூட்டணி’ என்ற வாக்கியம். அதனாலேயே தேமுதிகவின் ஆரம்ப காலத்தில் அது தமிழகத்தில் திமுக, அதிமுகவின் மாற்றாக உருவாகும் என்ற கணிப்புக் கட்டுரைகள் அலை அலையாய் திரண்டன. ஆனால், தனக்குப் போட்டுக் கொண்ட வளையத்தை தானே உடைத்தார் விஜயகாந்த்.

2011-ல் விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். அதிமுக வெற்றி பெற்றது. ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்தும் வாகை சூடினார். 41 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த். 8 சதவீத வாக்குகளுடன் தேமுதிக தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சியானது.

தயங்காத விஜயகாந்த்... - எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் சட்டமன்றத்தில் சற்றும் தயங்காமல் அரசாங்கத்தை தட்டிக் கேட்கலானார். ஜெயலலிதாவுடன் சட்டப்பேரவையில் நேருக்கு நேர் வாய்த்தகராறில் ஈடுபட்ட காட்சிகள் இப்போதும் யூடியூபில் காணக் கிடைக்கும். விஜயகாந்தின் செல்வாக்கு தமிழகத்தில் திமுக, அதிமுக ஆதிக்கத்துக்கு சவாலாக உருவெடுத்தது.

இந்த வளர்ச்சி ஒருபுறம் இருக்க, அதிமுகவை நேரடியாக எதிர்ப்பதா என்று தேமுதிகவுக்குள்ளேயே அதிருப்தி முழக்கங்கள் எழ தனது எம்எல்ஏ.க்களிலேயே சிலரை அதிருப்தியாளர்களைக் கொண்டு அரசியல் சூட்சமங்களால் சற்றே திணற ஆரம்பித்தார் விஜயகாந்த். அதிமுக புளித்துப்போன உறவாகிப்போக 2014 பொதுத் தேர்தலில் பாஜகவின் பக்கம் சாய்ந்தார் விஜயகாந்த். அவரை வாஞ்சையோடு வரவேற்றது பாஜக.

தமிழகத்தில் தடம் பதித்துவிடமாட்டோமா என்ற தவித்த பாஜகவுக்கு நாடு முழுவதும் மோடி அலை இருந்தாலும் திராவிடக் காற்று தேவைப்பட்டதால் விஜயகாந்துடன் ஒட்டிக் கொண்டது. தன்னை விமர்சித்த பாமகவுக்கும் பாஜக கூட்டணியில் இருந்தாலும் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்ற புரிதல் எட்டிப் பார்த்ததால் விஜயகாந்த் அணி சேர்ந்தார். 2014 பாஜகவுக்கு இமாலய வெற்றி வந்தது. 39 தொகுதிகளில் 14 தொகுதிகள் தேமுதிகவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், ஒன்றில் கூட விஜயகாந்தால் வெற்றி பெற முடியவில்லை. தேமுதிகவின் வாக்குவங்கி 5.1 சதவீதமாக சரிந்தது. டெல்லி வரை சென்று அரசியல் ஆழங்களைக் கண்டுவந்த விஜயகாந்த் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வேறு ஒரு வியூகம் வகுத்தார்.

மக்கள் நலக் கூட்டணி: 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கினார் விஜயகாந்த். இதில் தேமுதிக, மதிமுக, விசிக, இடதுசாரிகள் இணைந்தன. ஆனால் விஜயகாந்துக்கு பேரதிர்ச்சியாக உளுந்தூர்பேட்டையில் டெபாசிட் காலியானது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் 2.4 சதவீத வாக்கு வங்கியாக சரிந்தது தேமுதிக. 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தையுமே இழந்தது தேமுதிக.

2016 ஆம் ஆண்டிலிருந்தே... - இதற்கு முன்னால் 2016-ஆம் ஆண்டு முதலே விஜயகாந்தின் உடல்நலன் தொடர்ச்சியாக பின்னடைவை சந்தித்தது. பொதுக்கூட்ட மேடைகளில் அவர் பேச்சு தெளிவற்று இருக்க அவர் போதையில் மேடையேறுகிறார் என்று ஒரு தரப்பும், உடல்நலன் சரியில்லாதவர் ஊராள்வது எப்படி இன்னொரு தரப்பும் விமர்சித்தன. இவற்றிற்கெல்லாம் தூபம் போடுவதுபோல் அவரின் மேடைப் பேச்சுக்கள் மீம், கலாய்ப்பு கன்டென்ட்டுகளாகின. ஊடகத்தினரின் அதிருப்தியையும் சந்திக்கத் தொடங்கினார். கேள்வி கேட்கும் நிருபர்களை தூக்கி அடிச்சிருவேன் பாரு..., இங்க வாங்க அடிக்கலாம் மாட்டேன் என்று கலாய்த்தது ஆகியன அவர் மீது கரும்புள்ளிகளாகின.

எதையும் தயங்காமல் தட்டிக் கேட்பவர் என்று பாராட்டப்பட்ட விஜயகாந்த் எடுத்தெறிந்து பேசும் நபர் என்ற பெயரை சம்பாதித்தார். கட்சியில் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் கை ஓங்க கட்சியின் ஆரம்ப காலத்தில் இருந்துவந்த முக்கியப் புள்ளிகள் பலரும் விலகிச் சென்றனர். முடிவெடுக்கும் அதிகாரம் பல்வேறு படிநிலைகளைக் கடக்க வேண்டியதாயிற்று.

விஜயகாந்த் மறைந்த பின்னர் கருத்து தெரிவித்த பிரபலங்கள் பலரும் அவர் உடல்நலத்தோடு இருந்திருந்தால் தேமுதிக அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றெல்லாம் சிலாகித்தார்கள். விஜயகாந்த் தன் உடல்நலனில் அக்கறை செலுத்தியிருந்தால் அரசியலில் இன்னும் தீர்க்கமான நகர்வுகளை முன்னெடுத்திருக்க முடிந்திருக்குமோ என்ற ஐயம் எழாமல் இருப்பதைத் தவிர்க்க முடியாது. தேமுதிகவை மாற்று சக்தியாக உருவாக்க முயன்ற விஜயகாந்தின் முயற்சிக்கு பலன் முழுமையாகக் கிட்டியிருக்கக் கூடும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்