வீட்டுக்கும் பொதுவெளிக்கும் இடைவெளியற்ற வாழ்க்கை!

By ஷங்கர்ராமசுப்ரமணியன்

தா

ம் கொண்ட கருத்தியலையும் தமது தனி வாழ்க்கையையும் வேறுவேறாகப் பார்க்கவியலாத இலட்சியவாதத் தலைமுறை ஒன்றின் பிரதிநிதி ஞாநி. சினிமா, அரசியல், எழுத்து அனைத்துமே கேளிக்கையை மையமாகக் கொண்டு வெகுஜனக் கலாச்சாரத்தைத் தீர்மானித்த 1970, 80-களில் இலக்கியம், கலை, அரசியல், சிந்தனைத் துறைகளில் எந்த உடனடிப் பயனையும் கருதாது சொந்த நஷ்டங்களைப் பொருட்படுத்தாது ஈடுபட்டவர்களில் ஒருவர். பெண்ணியம், பெரியாரியம், சுற்றுச்சூழல், தலித்தியம், மாற்றுக் கல்வி, மாற்று மருத்துவம், விளிம்பு நிலை அரசியல், தீவிர இலக்கியம் போன்றவை மீது இன்று அரசுக்கும் வெகுஜன ஊடகங்களுக்கும் வெகுமக்களுக்கும் ஏற்பட்டிருக்கும் அக்கறைக்கு இவர்கள்தாம் காரணம்.

மென்மை, மிதம், தீவிரம் என அடையாளப்படுத்த முடியுமே தவிர, இந்த ஆங்க்ரி யங்மேன்கள் எல்லாரையும் மார்க்சியம் பாதித்திருந்தது. இவர்கள் அனைவரும் உயர், மத்தியதர வர்க்க, முன்னேறிய சமூகங்களிலிருந்து வந்த இளைஞர்களாகவே பெரும்பாலும் இருந்துள்ளனர். ஞாநியைப் பொறுத்தவரை எந்தத் தீவிரமான விஷயமும் வெகுமக்களைச் சேரும் விதமாக இருக்க வேண்டும் என்பதே அவரது பிரதான வேலைத் திட்டமும் நோக்கமுமாக இருந்தது. ‘தினமணி’ முதல் ‘பாடம்’ வரை கனத்த, காத்திரமான விஷயங்களை வெகுஜனப் பரப்புக்குக் கொண்டுசேர்த்திருக்கிறார். குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்களுக்காக வெவ்வேறு காலகட்டங்களில் அவர் ஆசிரியராகவும் ஆலோசகராகவும் பணியாற்றிய பத்திரிகைகளுக்கும் வாசகர்களுக்கும் அவரது வேலைத்திட்டம் பயன் அளித்துள்ளது. ஒருகட்டத்தில் அலுப்பையும் வரையறைகளையும் உணரும்போது ‘தீம்தரிகிட’ போன்ற சிறு பத்திரிகைகளையும் நடத்தியிருந்திருக்கிறார். வீடியோ ஜர்னல், தூர்தர்ஷன், கதைத் தொடர் தொடங்கி சமீபத்திய வடிவமான யூட்யூப் சேனல் வரை அவர் பல்வேறு ஊடகங்களில் பயணித்தபடி இருந்திருக்கிறார்.

ஒரு மத்தியதர வர்க்க நோக்குள்ள நேர்மையான அறிவிஜீவியாகத் தன்னை வரையறுத்துக்கொண்ட அவரது வேலைத்திட்டமே அவரது எல்லைகளை வரையறை செய்துவிட்டது என்று கூறலாம். அது நம்முடைய சூழலில் அபூர்வமான நிகழ்வுமல்ல. அவரது வாசிப்பு, சமூக நோக்கு, அரசியல் பார்வை, ரசனைகளில் வளர்ச்சிப் போக்கையும் மாறுதலையும் அவர் அடையவில்லை. தன் எல்லைகளையும் தன் வரையறைகளையும் கொண்டே அவர் மற்ற ஆளுமைகளையும் மற்ற இயக்கங்களையும் பார்த்தார். ஒருவகையில் ஒரு காலகட்டத்தோடு தன்னை உறையவைத்துக் கொண்ட பொது அறிவுஜீவி அவர்.1960-ளில் மாணவர் இயக்கங்களிடமும் இரண்டாம் அலை பெண்ணியவாதிகளிடமும் புகழ்பெற்ற ‘தி பெர்சனல் இஸ் பொலிடிகல்’ (அந்தரங்கம் அரசியல்தான்) என்ற முழக்கம் 1970, 1980-களில் உருவான தமிழக அறிவுஜீவிகளிடமும் புகழ்பெற்றது. முதலில் இந்த முழகத்தை நான் ஞாநி, பத்மா இணையர் வீட்டில்தான் கேட்டேன். தனி வாழ்க்கை, பொது வாழ்க்கை என்ற பேதங்கள் இல்லாமல் தாங்கள் நம்பும் கருத்தியலையே வாழ்வாக அவர்கள் தேர்ந்தெடுத்திருந்தனர். குடும்பம், குழந்தைகள் என எல்லோரையும் தங்கள் நம்பிக்கைகளுக்குப் பாத்தியப்பட்டவர்களாக ஆக்கி சொந்த இழப்புகளையும் அடைந்தவர்கள் இவர்கள். சென்னையின் மூன்று தலைமுறை அறிவுஜீவிகளுக்கும் வாசகர்களுக்கும் இடமளித்து மேம்படுத்திப் பராமரித்த வீடு அவருடையது. இளைப்பாறியவர்களின் நினைவுகளில் ஞாநிக்கும் அவர் ஏற்படுத்திய சூழலுக்கும் என்றும் இடமிருக்கும்!

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

15 days ago

மேலும்