நீராதாரங்களுக்காகத் தாமிரபரணி ஆற்றைச் சார்ந்துள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதி கனமழையும் பெருவெள்ளமும் பேரழிவை ஏற்படுத்தியிருக்கின்றன. இப்படியான ஒரு காலகட்டத்தில் தாமிரபரணியின் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது அவசியம்.
முந்தைய மழையைவிட அதிகமா? - மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகிப் பாயும் கடம்பாநதி, குண்டாறு, சித்தாறு, கருப்பாநதி, தேவியாறு, உப்பு ஓடை, ஊத்துமலை ஓடை, பச்சையாறு, கோரையாறு, மணிமுத்தாறு ஆகியன தாமிரபரணியில் கலக்கின்றன. 1916இல் திருநெல்வேலி மாவட்டக் கையேட்டை வெளியிட்ட ஆங்கிலேயர் பேட் (H.R.Pate), தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு பெரும்பாலும் அடிக்கடி நிகழ்கிறது என்று குறிப்பிட்டார். கடந்த இரு நூற்றாண்டுகளில் 1810, 1827, 1869, 1874, 1877 (இருமுறை), 1880, 1885, 1914, 1923, 1925, 1931, 1992 ஆண்டுகளிலும், 1847இல் கோடையிலும் வெள்ளம் ஏற்பட்டன. இந்தியாவில் மழைப்பொழிவு தொடர்பாக 1879இல் எலியட், 1886இல் பிளன்ஃபோர்டு போன்றோர் முன்னெடுத்த ஆய்வுகளிலும் பிரிட்டிஷ், இந்திய அரசுகளின் ஆவணங்களிலும், 1870ஆம் ஆண்டு முதல் சராசரி மழையளவு, வெள்ளத்தின் குறிப்பான மழையளவு தொடர்பான தகவல்கள் கிடைக்கின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலையடியில் இருப்பதால் தென்காசி, கடையம், சிவகிரி, அம்பாசமுத்திரம், கடையநல்லூர் பகுதிகள் வடகிழக்கு, தென்மேற்கு என இரு பருவ மழையையும் பெறுகின்றன. இப்பகுதிகளுக்குக் கிழக்கேயுள்ள கோவில்பட்டி, நாங்குநேரி, பாளையங்கோட்டை, கயத்தாறு, ராதாபுரம், குலசேகரப்பட்டினம், சங்கரன்கோவில், கூத்தகுளி, திருவைகுண்டம், காயல்பட்டினம், ஒட்டப்பிடாரம், சாத்தான்குளம், விளாத்திக்குளம், அரசடி, தூத்துக்குடி பகுதிகள் குறைவான மழையைப் பெறுகின்றன. 1870–1914ஆம் ஆண்டுகளில் ஜனவரி–மார்ச், ஏப்ரல்-மே, ஜூன்–செப்டம்பர், அக்டோபர்–டிசம்பர் மாதங்களில் முறையே தென்காசியில் 139.192 மி.மீ., 129.54 மி.மீ., 240.03 மி.மீ., 515.366 மி.மீ., தூத்துக்குடியில் 65.024 மி.மீ., 63.246 மி.மீ., 28.194 மி.மீ., 405.13 மி.மீ., மழையும் சராசரியாகக் கிடைத்திருப்பது என்பது, மேற்கிலும் கிழக்கிலும் இருக்கின்ற மழையளவின் வேறுபாட்டைக் காட்டுகிறது.
நெல்லை மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்ட 1877இல் 1,190.244மி.மீ., 1902இல் 1,140.714 மி.மீ., 1891இல் 1044.194 மி.மீ., 1896இல் 989.584 மி.மீ., 1892இல் 389.89 மி.மீ., 1876இல் 409.956 மி.மீ., 1890இல் 435.864 மி.மீ., 1914இல் கடையத்தில் 1,898.142 மி.மீ., தென்காசியில் 1,658.366 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 1.624.838 மி.மீ., குலசேகரப்பட்டினம், கடையநல்லூர், திருச்செந்தூர், சிவகிரி பகுதிகளில் 1.270 மி.மீ. மழை பொழிந்தது. தற்போதைய வெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 946.00 மி.மீ., திருச்செந்தூரில் 689 மி.மீ, குலசேகரப்பட்டினத்தில் 330மி.மீ. மழை பொழிந்தது. இப்புள்ளிவிவரங்கள் 1877-1914ஆம் ஆண்டைவிட தற்போது குறைவான மழை பொழிந்திருப்பதைக் காட்டுகிறது.
உருக்குலைந்த ஊர்கள்: 1810 டிசம்பர் 6 தொடங்கி தொடர்ந்து 30 மணி நேரம் பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்தன. ஆழ்வார்திருநகரியில் 500 வீடுகள் சேதமடைந்தன. 1827 வெள்ளம் மக்களின் நினைவுக்கு எட்டிய எல்லாப் பேரிடர்களையும் விஞ்சியது. வீட்டின் கூரையில் நின்றோர் படகு மூலம் காப்பாற்றப்பட்டனர். இவ்வெள்ளத்தில் திருவைகுண்டத்தில் இருந்த உதவிப் பொறியாளர், அங்கிருந்த கோயில் கோபுரத்தில் மூன்று நாள்கள் சிக்கித் தவித்தார். 1869 நவம்பரில் புயலால் தூத்துக்குடியில் கடல்மட்டம் சாலைவரை உயர்ந்து புதிய கலங்கரை விளக்கமும் ஹரே தீவும் அழிந்தன. அம்பாசமுத்திரம் பாலத்தின் பதினொன்றில் நான்கு வளைவுகளை வெள்ளம் வாரிச் சென்றது. அப்போது கட்டிமுடிக்கப்பட்டு ஐந்து மாதங்களே ஆகியிருந்த திருக்குறங்குடி நம்பியாற்றுப் பாலம் சிறு தடயம்கூட இல்லாமல் அழிக்கப்பட்டது.
1874 நவம்பர் 24 அன்று திடீரெனப் பெய்த மழையால் 26ஆம் தேதி கிருஷ்ணபேரி வாய்க்கால் உடைந்து, நெல்லை நகரத்தில் வெள்ளம் பாய்ந்தது. வெடிக்கும் நிலையில் இருந்த நயினார்குளத்தில் உடைப்பு ஏற்படுத்த எண்ணியபோது, அது தானாகவே உடைந்து வயலிலும் பாய்ந்து, ரயில் நிலையத்துக்கும் பாய்ந்து, பாளையங்கோட்டைக்கும் திருநெல்வேலிக்குமான நிலவியல் தொடர்பை முற்றிலும் துண்டித்தது. திருவைகுண்டத்தில் ஏழு குளங்கள் உடைந்தன. கொரம்பள்ளம் குளம் உடைந்து சுற்றுப்புறங்கள் மூழ்கின. 1877 டிசம்பர் 5 அன்று தொடங்கிய மழையால் 6ஆம் தேதி பாளையங் கால்வாயில் காலை 10 அடி உயரத்துக்கும், மதியம் 2 மணிக்கு 27 அடி உயரத்துக்கும் வெள்ளம் பாய்ந்ததால் இரவில் நூற்றுக்கணக்கானோர் வீடற்றோராகினர். நாங்குநேரி, ராதாபுரம் பகுதிகளில் சுமார் 200 குளங்களும் உடைந்தன. 1895 டிசம்பர் 29 நள்ளிரவில் திருநெல்வேலி பாலத்தில் சென்ற 27 அடி வெள்ளத்தால் ஆற்றுப்படுகையின் பெரிய மண்டபத்தில் உறங்கிக்கொண்டிருந்த 13 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் தப்பினார்.
கோ.ரகுபதி, ஆய்வாளர் | - தொடர்புக்கு: ko.ragupathi@gmail.com
To Read in English: Flood in Thamirabarani: The past and the present
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago