திராவிடர் கழகத் தலைவர் - ‘ஆசிரியர்’ கி.வீரமணி. சாரங்கபாணியாகப் பிறந்து பள்ளி ஆசிரியர் திராவிடமணியால் வீரமணி எனப் பெயர் மாற்றம் பெற்ற அவருடைய அரசியல் பயணம், 1943 ஜூன் 27 அன்று கடலூர் செட்டிக்கோவில் தெருவில் நடந்த ‘திராவிடநாடு நிதியளிப்புக் கூட்டத்தில்’ 9 வயதுச் சிறுவனாக அறிஞர் அண்ணா முன்னிலையில் ஆற்றிய உரையிலிருந்து தொடங்குகிறது. 1944 ஜூலை 29 அன்று கடலூரில் திருப்பாதிரிப்புலியூரில் தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் மாநாட்டில் 10 வயதுச் சிறுவனாக தந்தை பெரியார், அண்ணா முன்னிலையில் உரையாற்றி ‘திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர்’ என்று பாராட்டும் பெற்றார். இன்று 90 வயதைக் கடந்துவிட்டபோதும், சமூக நீதிக்காக இடையறாது ஒலித்துக்கொண்டிருக்கிறது வீரமணியின் குரல். பெரியார் தொண்டர்களில் கடைசித் தொண்டராகத் தன்னைக் கருதும் வீரமணி, “பெரியாரை உலகமயமாக்க வேண்டும்; உலகம் பெரியார்மயமாக வேண்டும்!” என்பதைத் தம் முதன்மை லட்சியமாகக் கொண்டு இயங்கிவருகிறார். அவருடனான உரையாடலில் இருந்து...
இன்றைய தலைமுறையினருக்குப் பெரியாரை எப்படி அறிமுகப்படுத்துவீர்கள்?
இந்தத் தலைமுறை, அறிவியல் பயனுள்ள ஒரு தலைமுறை. இந்தத் தலைமுறையினர் படிப்பறிவிலும் மற்ற துறைகளிலும் வளர்ந்திருந்தாலும் இன்னமும் அவர்களுக்குப் போதிய அளவுக்குச் சமூக நீதி கிட்டவில்லை. அவர்கள் பெறுகின்ற வேலைவாய்ப்புகள், கல்வி வாய்ப்புகளைத் தட்டிப்பறிக்கும் முயற்சிகளை வலதுசாரி அமைப்புகள் தொடர்ச்சியாகச் செய்துவருகின்றன. அதேபோல, சமூகத்தில் சரிபகுதியாக இருக்கக்கூடிய இளையோருக்கும் மகளிர்க்கும் கொடுமைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தொழிற்கல்வியில் எவ்வளவு வஞ்சகமாக நீட் போன்ற தேர்வுகளை நடத்த முடியுமோ... அதைச் செய்கிறார்கள். மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தி, விடிவு தெரியாமல் அவர்கள் தாங்களாகவே தற்கொலைக்கு ஆளாகக்கூடிய கொடுமைக்கு உள்ளாகிறார்கள்.
பெரியாரைப் பற்றிப் பிரச்சாரம் செய்யாமலேயே ‘மருந்துக்காக ஏங்கித் தவிக்கிற நோயாளிகளைப் போல’ பலதரப்பட்ட மாணவர்கள் - இங்கே மட்டுமல்ல வடக்கே இருக்கின்ற பல்கலைக்கழகங்கள் - எடுத்துக்காட்டாக ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் - அதேபோலப் பல வட மாநிலங்களிலே மிகப் பெரிய அளவுக்குப் பெரியார் பரவிக்கொண்டிருக்கிறார். புதிய மருந்துகள் கண்டுபிடித்தால் எப்படி ஊசி போட்ட உடனே கோவிட் போன்ற நோய்கள் தீர்க்கப்படும்போது மகிழ்ச்சியடைகிறோமோ, அதுபோல பெரியார் தங்களுக்கு அவசியம் தேவையானவர் என மாணவர்கள் நினைக்கிறார்கள்.
மொழிப் பிரச்சினை போன்ற மிக முக்கியமான உணர்வுபூர்வமான பிரச்சினைகளிலே, நேரடியாக அவர்கள் பாதிக்கப்படுகின்ற நேரத்திலே - ஒரு நூற்றாண்டு காலத்துக்கு முன்பே இப்படிப்பட்ட திணிப்பு பண்பாட்டுப் படையெடுப்பு என்பதைச் சுட்டிக்காட்டி, அதற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்தவர் பெரியார் என்பதை மாணவர்கள் உணர்கிறார்கள். உடனே, பெரியாரைப் படிக்க வேண்டும், பெரியாரைப் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். ‘‘பெரியார் தனி மனிதர் அல்ல, அவர் ஒரு சகாப்தம், ஒரு காலகட்டம், ஒரு திருப்பம்’’ என்று அண்ணா அழகாகச் சொன்னார். அந்தச் சகாப்தம்-திருப்பம் இளைஞர்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. எனவே, பெரியாரின் முக்கியத்துவம், அவருடைய தத்துவம் இப்போது பரவலாகியிருக்கிறது.
பெரியாருடைய தத்துவம் ஒரு சமூக விஞ்ஞானம். எனவே, அந்தச் சமூக விஞ்ஞானத்தை நாங்கள் பரப்புவதைவிட காலத்தின் கட்டாயமாக தாங்களே தேடிக் கண்டுபிடிக்கக்கூடிய அளவுக்கு இளைஞர்கள் முன்வந்திருப்பது ஒரு நல்ல, புதிய திருப்பம், புதிய நம்பிக்கை.
சமூக மாற்றத்துக்காகவும் மானுட மேம்பாட்டுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பல தளங்களில் பெரியார் போராடினார். எனினும், பார்ப்பனர் எதிர்ப்பாளர், கடவுள் மறுப்பாளர் என்கிற நிலைகளில் மட்டுமே அவரை அணுகும் போக்கு இன்றும் நிலவுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பெரியாருக்குப் பெருமை வரக் கூடாது என்று நினைக்கக்கூடிய இன எதிரிகள், திட்டமிட்டுச் செய்கின்ற சூழ்ச்சியான வியூகத்தினுடைய ஒரு அம்சம் இது. பெரியாருடைய கடவுள் மறுப்பு என்பது கடவுள் மறுப்புக்காக அல்ல; பெரியார் அடிப்படையிலேயே ஒரு மனிதநேயர் - Humanist. அந்த மனிதநேயத்திலே சமத்துவம், சகோதரத்துவம், கருத்துச் சுதந்திரம், எண்ணச் சுதந்திரம், எதையும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கக்கூடிய ஆழ்ந்த பகுத்தறிவு - இவற்றை மனிதநேயத்துக்கு அடிப்படையாக வைத்துத் தன்னுடைய இயக்கத்தை ஆரம்பிக்கிறார். அவருக்கு முதலில் அடிப்படையானது மனிதம், மனிதத் தன்மை, மனித ஒருமைப்பாடு.
நான் விரும்பி கடவுள் மறுப்புப் பிரச்சாரத்துக்கு வரவில்லை. எனக்கு வேண்டியது பிறவிபேதம் கூடாது. பிறவிபேதம் என்றால் உயர்ந்த சாதிக்காரன் - தாழ்ந்த சாதிக்காரன், தீண்டாமை - தொடக்கூடியவன் என்று இருப்பதே பிறவிபேதம். அந்தப் பிறவிபேதத்திலும்கூட - உயர்ந்த சாதி-தாழ்ந்த சாதி, பார்ப்பான்-பறையன், பிராமணன்-சூத்திரன் என்கிற பேதம் மட்டுமல்ல, ஆண் உயர்ந்தவன் - பெண் தாழ்ந்தவள், ஆண் எஜமானன் - பெண் தாழ்ந்தவள் என்று இருப்பது பிறவிபேதம்தான். அந்தப் பிறவிபேதத்துக்குப் பெரியார் விரிவான பொருள் கொண்டார். அதை ஒழிக்க என்ன வழி என்று வாழ்நாள் முழுவதும் யோசித்தார். அதற்கு அடிப்படை எது என்றால், அவருடைய மனிதாபிமானம் - Humanism. எனவே, சுயமரியாதை இயக்கம் என்று அந்த இயக்கத்துக்குப் பெயரிட்ட முறை இருக்கிறதே... அது மனிதநேயத்திலிருந்தே தோன்றியது.
தீவிரமான புரட்சியாளராக இருந்த பெரியார், ஒரு துளி ரத்தம் சிந்தி இந்தச் சாதனைகள் செய்தார் என எங்காவது இருக்கிறதா? வன்முறைப் போராட்டத்தை அவர் நடத்தியிருக்கிறாரா? காந்தியார் கொல்லப்பட்டதைவிட மோசமான ஒரு சூழல் அன்றைக்கு இருந்திருக்க முடியாது. அன்றைக்குத் தமிழ்நாட்டின் அமைதியைக் காத்தவர் தந்தை பெரியார். பிள்ளையார் உடைப்பு நடத்தினார், எங்காவது ஒரு கோயிலுக்குள் இருக்கின்ற பிள்ளையாரை எடுத்துவந்து உடைத்தார் என்று சொல்ல முடியுமா? இன்னும் சொல்லப்போனால், கோயிலுக்கு முன்பாகத்தான் திராவிடர் கழகக் கூட்டங்கள் தமிழ்நாட்டில் பெரும்பாலும் நடைபெற்றுவருகின்றன. எந்த இடத்திலும் கலவரங்கள் கிடையாது. அதே நேரத்தில், நாட்டின் மற்ற பகுதிகளில் என்ன சூழ்நிலை என்று நினைத்துப் பாருங்கள்!
அவருடைய சிந்தனை மனிதம், மனித சமூகம், மனிதத் தன்மை, மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று சொல்லும்போது இந்த சமூக ஒழுக்கம், சமத்துவம், சம வாய்ப்பு, சம உரிமை இந்த அத்தனையும் உள்ளடக்கியதுதான் - இதுதான் அடிப்படையானது. இதிலிருந்துதான் அவருடைய எல்லா தத்துவங்களும் வருகின்றன; பெண்ணுரிமை உள்பட!
பெரியார் தனக்கான ஊக்கத்தை எங்கிருந்து பெற்றார்? உடல் உபாதைகளைக் கடந்து தன் இறுதிமூச்சு வரை ஓய்வொழிச்சல் இல்லாமல் அவரை இயங்கச் செய்தது எது?
நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்கிற உறுதிப்பாடு ஆரம்பத்திலிருந்தே பெரியாரிடம் உண்டு. சமரசம் செய்துகொள்ளாத ஒரு கொள்கைவாதி அவர். ஈடுபாடு என்று வரும்போது, எதை எடுத்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நினைத்துக் கவலைப்பட மாட்டார். கட்சிக்காரர்கள் கூட்டத்தில் சொல்கிறார், “இந்த இயக்கம் ரொம்ப சின்ன இயக்கம். ஆனால், இந்தக் கொள்கை, ரொம்பப் பெரிய கொள்கை, இதற்கு மரியாதை வர வேண்டும் என்றால், உண்மையைச் சொல்ல வேண்டும், உண்மையைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை” என்று சொல்வார். பெரியாரின் அணுகுமுறை கடைசி வரை அப்படியே இருந்தது.
சந்திப்பு: ஆதி வள்ளியப்பன், சு.அருண் பிரசாத் | தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in
(‘என்றும் தமிழர் தலைவர்’ நூலில் இடம்பெற்றுள்ள விரிவான பேட்டியின் ஒரு பகுதி.)
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago