2023 கற்றதும் பெற்றதும் | சாதி வெறி, நீதியின் வெற்றி மற்றும் சில...

By ச.தமிழ்ச்செல்வன்

புள்ளிவிவரங்கள், தரவுகள் எதையும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாமல் கண்ணை மூடி ஒரு நிமிடம் யோசித்துப்பார்க்கிறேன். 2023ஆம் ஆண்டின் தமிழக வாழ்க்கையில் என்னவெல்லாம் நிகழ்ந்தது? முதலில் மனதில் வருவது ஆளுநரின் நடவடிக்கைகள். மிகுந்த சர்ச்சைக்குரிய ஆளுநராகத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த ஆண்டில் பார்க்கப்பட்டார். மசோதாக்களைக் கிடப்பில் போட்டார். உச்ச நீதிமன்றத்தால் விமர்சிக்கப்பட்டார். நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர் ஒருவரின் தந்தைகூட அவருக்கு எதிராகப் பேசுமளவுக்கு எளிய மக்களின் வெறுப்பைச் சந்தித்தார். தகைசால் தமிழர் என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார்.

அடங்காச் சாதிவெறி: புதுக்கோட்டை மாவட்டம் இறையூர்-வேங்கைவயலில் ஒடுக்கப்பட்ட மக்கள் குடிக்கும் நீரில் (குடிநீர்த்தொட்டி) மலம் கலந்த சம்பவம் தமிழ்நாட்டைக் குலுக்கியது. குற்றவாளிகளை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 2022 முடிவடைய இருந்த நேரத்தில், தோன்றி ஆறாத வடுவாக நிற்கும் நிகழ்வு அது. சாதியின் குரூர முகம் அது. அதை எந்தத் துடைப்பத்தால் அறையப்போகிறோம்? நாங்குநேரியில் சக மாணவனைக் கொலைவெறியோடு இன்னொரு மாணவன் வெட்டித்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியைத் தந்ததோடு நிற்கவில்லை. வெட்டப்பட்ட பையனின் தாத்தா அதைப் பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு, அந்த இடத்திலேயே செத்துவிழுந்தார்.

நாமெல்லாம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம். நம் எல்லாப் பெருமிதங்களும் மண்சுவரென இற்றுச் சரிந்து வீழ்ந்துவிட்டதே? நம் குழந்தைகள் மனங்களில் ஏற்றப்பட்டுவிட்ட இந்தச் சாதி நெருப்பை எப்படி அணைக்கப்போகிறோம்? வெட்டுப்பட்ட சின்னத்துரைக்குச் சமாதானமாகச் சொல்ல நம்மிடம் என்ன வார்த்தை இருக்கிறது? மதுரையில் தங்களோடு பேசும்போது கைலியை இறக்கிவிடாமல் மடித்துக் கட்டியபடி பேசினார்கள் என்பதற்காகப் பட்டியல் சாதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மற்றும் முதியவர் ஒருவருடன் அவரது ஏழு வயதுப் பேரனும் ஆதிக்க சாதி இளைஞர்கள் இரண்டு பேரால் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர்.

வெட்டுக்காயங்களுடன் ஐந்து பேரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், பட்டியல் சாதியினரின் தெருவில் சாதி இந்துக்கள் நடந்துசென்றபோது ஒரு பட்டியல் சாதி இளைஞர் தன் வீட்டு வாசலில் ஒரு கால் மீது இன்னொரு காலைப்போட்டு உட்கார்ந்திருந்ததற்காகக் கால்களை வெட்டினர். பட்டியல் சாதியினர் மனிதர்களாக மாண்புடன் வாழ்வதைக்கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத சாதிவெறி தமிழ்நாட்டில் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இந்த உண்மை மீண்டும் மீண்டும் நம் முகத்தில் இந்த ஆண்டு அறைந்தது.

முற்றுப்பெறா ஆணவக் கொலைகள்: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகில் அப்புவிளை கிராமத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் முத்தையா சாதி மீறிக் காதலித்ததால் ஆதிக்கச் சாதியினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல் துறை வழக்கைத் திசைதிருப்ப முயன்றதும் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுபாஷ் என்கிறஇளைஞர் அனுஷா என்கிற பட்டியல் சாதிப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். தந்தை ஏற்றுக்கொள்ளாததால் பக்கத்து ஊரில் பாட்டி வீட்டில் வாழப்போனார். அவருடைய தந்தைஅங்கேயும் தேடிவந்து, அவரைக் கொலை செய்துள்ளார். இன்னும் இரண்டு ஜோடிகள் சரண்யா-ஜெகன் (கிருஷ்ணகிரி), சரண்யா-மோகன் (கும்பகோணம்) இவர்களின் வாழ்வும் ரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்டது. ஆணவப் படுகொலைகளுக்குப் பேர்பெற்ற மாநிலமாகத் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதுபல ஆண்டுகளாகவே தொடர்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 400க்கும் மேற்பட்ட ஆணவக்கொலைகள் உள்ளிட்ட ஆணவக்குற்றங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளதாக மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த எவிடன்ஸ் கதிர் குறிப்பிடுகிறார். மூன்று ஆண்டுகளில் 81 ஆணவக்கொலைகள் என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மை.

நிலைநிறுத்தப்பட்ட நீதி: 2023இல் மனதுக்கு ஆறுதலாக ஒன்றுமே நடக்கவில்லையா என்று யோசித்தால், கொங்கு வட்டாரத்தின் ஆணவப்படுகொலையான கோகுல்ராஜ் கொலை வழக்கில், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதிசெய்து ஜூன் 2 அன்று வழங்கிய தீர்ப்பைச் சொல்லலாம். தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மீதான தண்டனை உறுதிசெய்யப்பட்டதைத் தமிழ்நாட்டின் ஜனநாயக உள்ளங்கள் மகிழ்வுடன் வரவேற்றன. இந்த ஆண்டின் மகத்தான தீர்ப்பு என்று வாச்சாத்தி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், செப்டம்பர் மாதம் வழங்கிய தீர்ப்பைச் சொல்ல வேண்டும்.

31 ஆண்டு காலம் நீடித்த வாச்சாத்தி மக்களின் மன அழுத்தம் இந்தத் தீர்ப்புநாளில் கண்ணீராய் வெடித்ததைக் கண்டோம். வாச்சாத்தி பிரச்சினை தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு, 2011 செப்டம்பர் 29 அன்று வெளிவந்தது. குற்றவாளிகளின் மேல்முறையீட்டின்மீது 2023 செப்டம்பர் 29 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே கொடுத்த தீர்ப்பினை அப்படியே உயர் நீதிமன்றம் அங்கீகரித்ததோடு இது தொடர்பாகச் சில விளக்கங்களையும், புதிதாகச் சில பகுதிகளையும் சேர்த்து வழங்கியிருக்கிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களிடம் நஷ்ட ஈடு பற்றிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. தங்கள் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைத்தெறிய வேண்டும் என்பதே, அவர்களது மனதில் ஆழமாகப் படிந்திருந்தது. முதலாவதாக, சந்தனக்கட்டைகளைத் திருடினார்கள் என்ற பழி சுமத்தப்பட்டது. இரண்டாவதாக செல்வராஜ் என்கிற வனவரைக் (Forester) கொலைசெய்ய முயன்றார்கள் என்று ஒரு பழி, மூன்றாவதாக இந்த மக்கள் நஷ்ட ஈட்டுக்கு ஆசைப்பட்டுத் தங்கள் சொத்துக்களைத் தாங்களே சேதப்படுத்திக்கொண்டார்கள் என்கிற பழி. பாலியல் வன்கொடுமையே நடக்கவில்லை என்றும், இந்த மக்கள் பொய்யர்கள் என்றும் மோசடிக்காரர்கள் என்றும் பழிசுமத்தப்பட்டது. அன்றைய அதிமுக ஆட்சியாளர்கள் குற்றவாளிகளின் பக்கம் உறுதியாக நின்றார்கள்.

மறுபுறம், சுமத்தப்பட்ட பழிகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும், தங்கள் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன்னாலும், சமூகத்தின் முன்னாலும் அவர்கள் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக வாச்சாத்தி மக்கள் 19 ஆண்டுகள் உறுதியாக நின்றார்கள். மார்க்சிஸ்ட் கட்சியும், மலைவாழ் மக்கள் சங்கமும் நடத்திய எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டார்கள். சற்றும் மனச்சோர்வு அடையாமல் போராடினார்கள். நீடித்த போராட்டம் நீதியை நிலைநிறுத்தும் என்கிற நம்பிக்கையை எளிய மக்களின் மனங்களில் இத்தீர்ப்பு விதைத்துள்ளது. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இத்தீர்ப்பு நாள் என்றென்றும் மனதில் நிற்கும்.

நம்பிக்கையூட்டும் முன்னெடுப்புகள்: இதுபோக சின்னச்சின்ன சந்தோஷங்களை 2023 தந்துள்ளது. மதுரையில் பிரம்மாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டதற்காகவும், கடலுக்குள் பேனா நிறுவும் முடிவைக் கைவிட்டதற்காகவும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்ட வேண்டும். பள்ளிக்கல்வித் துறையில் வாசிப்பு இயக்கம், கலைப்போட்டிகள், திரைப்படங்கள் திரையிடல் என எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் மகிழ்வளிக்கின்றன. மாவட்டத் தலைநகர்களில் புத்தகக் காட்சிகள் தொடர்வதும் நம்பிக்கையூட்டும் பண்பாட்டு நிகழ்வாகும். இந்த ஆண்டில் தீராத பிரச்சினைகளாக இருப்பவை அடுத்துவரும் ஆண்டுகளிலாவது மாறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கான சூழலையும் மனங்களையும் மக்களும் பெற்றாக வேண்டும்.

- ச.தமிழ்ச்செல்வன் | தொடர்புக்கு: tamizh53@gmail.com

To Read in English: Hallmarks of 2023: Caste fanaticism, triumph of justice and a few more…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்