‘ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார்’ என்றபெயரில் புதிய அறிவியல் விருதுகளுடன், விருது சார்ந்த கொள்கையையும் சமீபத்தில் அமல்படுத்தியிருக்கிறது மத்திய அரசு. விஞ்ஞானிகளின் எதிர்ப்புகளையும் மீறி அரசு எடுத்திருக்கும் இந்நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல், அரசு அளிக்கும் விருது பாராட்டுகளைத் தவிர, வேறு விருதுகளை முன் அனுமதி இன்றி ஏற்றுக் கொள்ள மத்திய அரசு விஞ்ஞானிகளுக்குத் தடை விதித்துள்ளது.
மதிப்புமிக்க விருதுகளுக்கு முடிவுரை: இதுவரை வழங்கப்பட்டுவந்த நான்கு தேசிய விருதுகள், 97 தனியார் அறக்கட்டளை விருதுகள், 54 ஆய்வு உதவித்தொகை விருதுகள், 56 பல்வேறு துறைசார் விருதுகள் என அறிவியல் தொழில்நுட்பத் துறை வழங்கிவந்த 207 விருதுகள், அணுசக்தித் துறை வழங்கிவந்த 38 விருதுகள், விண்வெளித் துறை சார்ந்து ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்பட்ட மூன்று விருதுகள், புவிஅறிவியல் துறையின் நான்கு விருதுகள், மருத்துவத் துறைசார் எட்டு தேசிய விருதுகள், ஒன்பது தனியார் அறக்கட்டளை விருதுகள் என ஏறத்தாழ 400 அறிவியல் விருதுகளை முடக்கியிருக்கிறது மத்திய அரசு. மேலும், அறிவியல் துறை பிரிவு சார்ந்த ஆய்வுகளுக்கு வழங்கிவந்த விருதுகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பி.சி.ராய் விருது, அம்பேத்கர் விருது, சுபாஷ் முகர்ஜீ விருது, அன்னா மாணி விருது போன்ற மதிப்பு மிக்க விருதுகள் முடிவுக்கு வந்துவிட்டன.
இனி ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதின்கீழ் இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொறியியல், விண்வெளி அறிவியல் உள்ளிட்ட 13 துறைகளுக்கு விருது வழங்கப்படும். மேலும் வாழ்நாள் சாதனையைப் பாராட்டும் விதமாக, ‘விஞ்ஞான் ரத்னா’, அறிவியல் துறை சாதனைக்கு ‘விஞ்ஞான் ஸ்ரீ’, இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாக 45 வயதுக்கு உட்பட்ட ஆய்வாளர்களுக்கு, ‘விஞ்ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்நாகர்’ விருது, கூட்டு ஆய்வுக்கு ‘விஞ்ஞான் டீம்’ எனப் புதிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இன்மை, நிதிச் சுமை, பல்வேறு விருதுகள் இருப்பதால் அவற்றின் மதிப்பு குறைகிறது என்றெல்லாம் காரணங்களை முன்வைத்து, இதுவரை வழங்கப்பட்ட விருதுகளை ஒழித்து, புதிய விருதுகளை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. விருதுகளால் விளையும் நன்மைகள்: 1731இல் மின் கடத்தல் தொடர்பான ஆய்வுக்காக, ஸ்டீபன் கிரேவுக்கு இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி அளித்த ‘கோப்லி பதக்கம்’தான் (Copley Medal) நவீன அறிவியலில் அளிக்கப்பட்ட முதல் விருதாகக் கருதப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிக்கோப்பை இலக்காக அமைவதுபோல, சக ஆய்வர்களின் மதிப்பீடு சார்ந்து வழங்கப்படும் அங்கீகாரமும் விருதுகளும்தான் அறிவியல் ஆய்வாளர்களுக்கு உத்வேகம் கொடுத்து உந்துகின்றன என ராபர்ட் கே. மெர்டன் எனும் ஆய்வாளர் சுட்டிக்காட்டினார்.
» காங்கிரஸ் கட்சி இருக்கும்போது பணம் கொள்ளை பற்றிய கதை யாருக்கு வேண்டும்? - பிரதமர் மோடி கிண்டல்
» குஜராத், இமாச்சலுக்கு ரூ.971 கோடி இயற்கை பேரிடர் நிவாரண நிதி: மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
அறிவியல் துறை சார்ந்து, உலகம் முழுவதும் வழங்கப்படும் 11,000 விருதுகளை ஆய்வுசெய்த சிங் ஜின், யிஃபாங் மா, பிரையன் உஸ்ஸி ஆகியோர், தமது ஆய்வு முடிவுகளை ‘நேச்சர்’ அறிவியல் இதழில் 2021இல் வெளியிட்டனர். இந்த ஆய்வின்படி, அறிவியல் துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட, விருதுகளே அறிவியல் வளர்ச்சிக்கு ஊக்கம் தருகின்றன என்றும், விருது பெற்றவர்கள் முதல் 5-10 ஆண்டுகளில், 40% கூடுதல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுகின்றனர் என்றும், அவர்களின் ஆய்வு, 33% கூடுதல் கவனிப்பு பெறுகிறது என்றும் தெரியவந்திருக்கிறது. விருதுகளின் பலன் பரிசு பெற்றவர்களுக்கு மட்டும் சென்றுசேர்வதில்லை.
விருதுபெறும் குறிப்பிட்ட அறிவியல் ஆய்வுப் பிரிவு, 40% கூடுதல் வேகத்தில் வளர்ச்சி அடைகிறது. விருது பெற்றவர்களின் மாணவ-மாணவியர்கள் சிறப்பான ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். விருதுகளின் தொகை மதிப்பு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல எனவும் இந்த ஆய்வு சுட்டுவது கவனிக்கத்தக்கது. அதாவது, பெரும் தொகை கொண்ட பண முடிப்புடன் கூடிய விருதுகளைவிட, குறைவான தொகை என்றாலும் பற்பல விருதுகளே அறிவியல் வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் எனப் புரிந்துகொள்ளலாம். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப் பட்ட குழு, இதுபோன்ற ஆய்வுகளைக் கணக்கில் கொள்ளாமல் தன்போக்கில் விருதுகளை ஒழித்து விட்டதுதான் அவலம்.
விருதுகளின் மறுபக்கம்: எல்லாத் துறைகளையும் போலவே அறிவியல் விருதுகளிலும் விரும்பத்தகாத சில போக்குகள் உள்ளது உண்மைதான். பல சமயம் ஆய்வுகள் கூட்டாக மேற்கொள்ளப்பட்டாலும் அதில் சிலருக்கு மட்டும் விருது அளிக்கப்படுகிறது. விருதுகளினால் நிறுவனங்களில் போட்டி பொறாமை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பிரபலமானவர்களுக்கே மேலும் மேலும் பரிசுகள் குவியும் போக்கும் இருக்கிறது. பெண்கள், ஒடுக்கப்பட்டவர்கள், சமூகத்தின் விளிம்புநிலையிலிருந்து அறிவியலில் ஈடுபடுபவர்கள் மீது விருதுக் குழுவினரின் கவனம் செல்வதே இல்லை எனும் ‘மாடில்டா விளைவு’ அனைவரும் அறிந்ததே. நோபல் பரிசு போன்ற பிரபல பரிசுகளைப் பெறுவதுதான் ஆழமான ஆய்வு என்பது போன்ற பிழையான பார்வை மக்கள் மத்தியில் எழும் ஆபத்தும் உள்ளது. மேலும், பரிசுபெற்ற ஆய்வுதான் நினைவில் நிற்கும் என்பதால், குறிப்பிட்ட சில ஆய்வுகளுக்கு மட்டும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, உள்ளபடியே அத்தியாவசியமான ஆய்வு கவனம்பெற முடியாமல் போகலாம்.
விருதுகளினால் ஏற்படக்கூடிய இப்படியான எதிர்மறை விளைவுகளைச் சரிசெய்ய முயல்வது முக்கியம். குறிப்பாக, அறிவியல் விருதுகளிலும் சமூக நீதிப் பார்வை தேவை. உலகின் பல்வேறு பகுதிகள், பொருளாதாரப் பண்பாட்டுப் பின்புலம், பாலினம், இளம் ஆய்வாளர்கள் எனப் பல பிரிவுகளை ஊக்குவிக்கும் விதமான விருதுகளும் பாராட்டுகளும் அவசியம் என உலகம் முழுவதும் அறிவியல் அமைப்புகள் உணர்ந்துள்ளன. எனவேதான் தேர்வுக் குழுவில் பிரதிநிதித்துவம் உள்படப் பல்வேறு சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், விருதுகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், தேசிய அளவில் ஒருமுகப்படுத்தப்பட்ட தெரிவு, ஒரே ஒரு குழுவே எல்லா விருதுகளையும் தேர்வுசெய்தல் போன்றவை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகிவிடாது.
அரசின் கடமை: “பற்பல தேர்வுக் குழுக்கள் தெரிவுசெய்வதால் பல்வேறு எண்ணப்போக்குகளைக் கொண்டவர்கள், விருதுகளுக்குத் தேர்வாகின்றனர். இதில் சிலர் அரசின் கொள்கைகளை விமர்சனம் செய்பவர்களாகவும் இருக்கின்றனர் எனக் கருதி இனிவரும் காலங்களில் மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை மூலம் தற்போதைய அரசின் கொள்கைக்கேற்றபடி செயல்படும் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விருதாக மாற்றும் முயற்சி இது” என அகில இந்திய மக்கள் அறிவியல் அமைப்பின் முன்னாள் செயலர் பேராசிரியர் ராஜமாணிக்கம் சாடுகிறார். மேலும், விடுதலை இயக்கங்களோடு தொடர்புடைய பி.சி.ராய் (P.C.Ray Memorial Award) போன்ற விருதுகளை அகற்றி, ‘வியாசர்’, ‘தன்வந்திரி’, ‘பதஞ்சலி' போன்ற பெயர்களில் விருதுகளை நுழைப்பதும் இந்த முயற்சியின் நோக்கம் என அறிவியல் சமூகம் சந்தேகிக்கிறது.
அமெரிக்க இயற்பியல் கழகம் (American Physical Society) மட்டுமே ஆண்டுதோறும் 4,70,500 டாலர்கள் மதிப்புகொண்ட 78 விருதுகளை வழங்குகிறது. அதோடு ஒப்பிட்டால், இந்திய அறிவியல் கழகங்கள் ஆண்டுதோறும் அளிக்கும் பரிசுத்தொகையும் விருதுகளின் எண்ணிக்கையும் மிகச் சொற்பமே. அறிவியல் கழகங்களின் சுயேச்சை செயல்பாட்டைத் தடைசெய்யும் விதமாக, விருதுகளை முடக்குவது இந்திய அறிவியல் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும். பல்வேறுவிதமான பக்கச்சார்புகள் நீங்க வேண்டும். விருதுகளைப் பரவலாக்கும் முனைப்பு அவசியம். பல்வேறு ஆய்வுத் துறை முனைப்புகளுக்குப் பல அமைப்புகள் பற்பல விருதுகளை வழங்கும்போது மட்டுமே சமூகத்தின் பல பிரிவினருக்கும் பரிசுகளும் பாராட்டும் கிடைக்கும். அரசு இதை நினைவில் கொள்ள வேண்டும்!
- தொடர்புக்கு: tvv123@gmail.com
To Read in English: Freezing of science awards: Curtains down on research?
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago