பெருவெள்ளத்தின் அறிவியலும் அரசியல் பொருளாதாரமும்

By கோ.ரகுபதி

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. இன்னமும் பலரால் அந்தப் பாதிப்பிலிருந்து மீள முடியவில்லை. இவ்வெள்ளத்தை 2015ஆம் ஆண்டு மழை, வெள்ளத்தோடு ஒப்பிட்டுப் பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. 2015 பெருவெள்ளம், அதற்கு முந்தைய காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளுடன் ஒப்பிடப்பட்டது. எப்போதெல்லாம் வெள்ளம் வருகிறதோ அப்போதெல்லாம் கடந்தகால வெள்ளத்தைச் சுட்டிக்காட்டுவதோடு, அதைக்காட்டிலும் கூடுதலான மழைப்பொழிவு இருந்தால், இந்நிலை ஏற்பட்டதாகப் பேசப்படுவது வழக்கம்தான்.

மழைப்பொழிவின் அளவு கூடுவதும் குறைவதும் இயற்கையானதே; இது இயற்கையின் ஓர் அங்கம். மழைப்பொழிவின் அளவு, புயல் குறித்த ஏராளமான புள்ளிவிவரங்கள், வெள்ளச் சிந்துகள், கதைகள், செய்திகள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலந்தொட்டே ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. மழையும் புயலும் இயற்கையானவை என்றும் இவற்றை ஒருபோதும் தடுக்க இயலாது என்றும் இந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பேரிடரைத் தடுக்க இயலும். ஏனென்றால், இது அரசியல் பொருளாதாரத்தால் உருவானது. மிக்ஜாம் போன்ற பேரிடர்களின்போது எதிர்க்கட்சிகளும், முக்கியக் கலை-இலக்கிய, அரசியல் ஆளுமைகளும் ஆளும்கட்சியைக் குறைகூறுவது வழக்கம். இதற்கு ஆளும்கட்சி பதில் கூறுவதும் இயல்பே. எல்லாவற்றையும் கடந்து, மழை வெள்ளத்தைத் தேர்தல் அரசியலாகவும் அதிகாரம் சார்ந்ததாகவும் அணுகுவதற்குப் பதிலாக, அறிவியல்ரீதியாகவும் அரசியல் பொருளாதார வழியாகவும் புரிந்துகொள்வதன் மூலம்தான் வெள்ளச் சிக்கலுக்குத் தீர்வு காண இயலும்.

தொலைந்துபோன செழுமை: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தற்போதைய மெரினா கடற்கரையோரப் பகுதிகளில் மட்டும் சென்னை இருந்தது. அக்காலப் புள்ளிவிவரப்படி, சென்னை மாகாணத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில், சைதாப்பேட்டை தாலுகாவில் அடையாளம்பட்டு முதல் விருகம்பாக்கம் வரை உள்ள சுமார் 97 கிராமங்கள், அரசியல் பொருளாதார வளர்ச்சியால் காலப்போக்கில் சென்னைப் பெருநகரமாக உருவாகின. இந்தப் பகுதிகளில் இருந்த சுமார் 43 பாக்கங்கள், 13 சே(ஏரி)கள், 2 தாங்கல்கள் எனப் பின்னொட்டைக் கொண்டிருக்கின்ற கிராமங்கள் அனைத்தும் நீராதாரம் மிகுந்த பகுதிகளாகும். இதில் வெவ்வேறு புல எண்களில் வெள்ளச்சேரியும் வேளச்சேரியும் இடம்பெற்றிருந்தன. வெள்ளச்சேரியின் பெயரைத் தவிர, அதுகுறித்த வேறு தகவல்களை அறிய இயலவில்லை. மீதமுள்ள பகுதிகளில் நீராதாரம் இல்லை என்று கூற இயலாது. இவை குறித்த ஆராய்ச்சி தேவை.

இப்பகுதிகளில் வீடுகளுக்கும் விவசாயத் துக்குமான நீராதாரங்களுக்காகக் கிணறு தோண்டினால், சில அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்தது. நுங்கம்பாக்கத்தில் சுமார் 4 அடியிலேயே தண்ணீர் கிடைக்கும் நிலை, 1960களின் இறுதியில்கூட இருந்தது. இந்நீராதாரத்தின் விளைவால் இப்பகுதிகளில் அடர் காடுகளும் பல்லுயிரிகளும் இருந்தன. 1920களில், மாத இதழ் ஒன்றில் வெளியான தொடர் கதை, ஆதம்பாக்கம் முதல் ஈக்காட்டுத்தாங்கல் வரை அடர்ந்த காடுகளும் காட்டுப்பன்றிகளும் நிறைந்திருந்ததை விவரிக்கிறது. இதே காலங்களில் வெளியான ஒரு பத்திரிகையின் குறிப்பொன்று, கோடம்பாக்கத்துக் கத்தரிக்காயின் ருசியைப் போற்றியது. சென்னைப் புவிப்பரப்பின் இப்பண்புகளின் அடிப்படையில், இதைச் சங்க இலக்கியத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணையோடு ஒப்பிட்டு, பிரிட்டிஷ் காலத்திலேயே ஒருவர் கட்டுரை வெளியிட்டார். இவையெல்லாம் அக்காலச் சென்னையின் செழுமையைக் குறிப்பிடுகின்றன.

வளர்ச்சியின் விலை: சென்னையானது, சென்னை மாகாணத்தின் தலைநகராகவும் பிரிட்டிஷ் அதிகாரத்துக்கான மையப் புள்ளியாகவும் இருந்தது. இந்நிலையில், நவீன ஆலைகள், போக்குவரத்து உருவாக்கம், பள்ளி, கல்லூரி, தொழிற்கல்வி நிலையங்கள் நிறுவுதல் போன்ற நவீன அரசியல், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக சென்னையின் காடுகளும் வயல்வெளிகளும் நீர்த்தேக்கங்களும் நீர் வழித்தடங்களும் அழிக்கப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய இந்தப் போக்கு இன்றுவரை நீடிக்கிறது. கிராமப்புறங்களின் தற்சார்புப் பொருளாதார நிலை வலுவிழந்து, அவை நகரங்களைச் சார்ந்திருப்பதாலும், பொருளாதாரம், அதிகாரம் சார்ந்து கிராமப்புறங்களிலிருந்து சென்னைக்கு மக்கள் இடம்பெயர்வதாலும் சென்னையில் மக்கள்தொகைப் பெருக்கம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலந்தொட்டுப் பல்கிப் பெருகுகிறது.

இதனால் ஏற்படும் சிக்கலைத் தீர்க்க, சென்னையின் ‘புறநகர்ப் பகுதி’யும் செங்கல்பட்டு மாவட்டத்தின் தாலுகாவுமான சைதாப்பேட்டையில் மக்களைக் குடியேறச் செய்ய வேண்டுமென பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஆலோசித்தனர். இன்று சைதாப்பேட்டை சென்னையின் மையப் புள்ளியாக இருக்கிறது. நீர்த்தேக்கங்களிலும் நீர் வழித்தடங்களிலும் வயல்வெளிகளிலும் புறநகர்கள் விரிவாகிக்கொண்டிருக்கின்றன. மக்கள் பயன்படுத்தும் பொருள்கள் குப்பையாகக் குவிகின்றன; இவை ஏரியில் கொட்டப்படுகின்றன.

இவை நகரங்களில் பெரும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றன. குப்பை, சாக்கடை போன்றவற்றை மறுசுழற்சி செய்து, பொருளாதார முன்னேற்றத்துக்கு வித்திடுவது குறித்து, சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்லூரிப் பெளதிக கலைப் பேராசிரியர் ஈ.த.இராசேசுவரியம்மாள், பிரிட்டிஷ் காலத்தில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதினார். ஆனால், சென்னையின் குப்பைகள் ஏரிகளில் கொட்டப்படுகின்றன. மக்களிடம் பொதுச் சிந்தனையில்லாத போக்கும் இயற்கை அறிவியலுக்கும் மனிதனுக்குமான உறவைப் பற்றிய புரிதலின்மையும் இதற்கான காரணங்கள். வெள்ளம் ஏற்படும்போதுதான் இந்தப் பிரச்சினையின் தீவிரம் குறித்து விவாதங்கள் எழுகின்றன.

அரசியல்-பொருளாதார ஆக்கிரமிப்பு: தொடர்ச்சியான அரசியல்-பொருளாதாரச் செயல்பாடுகள், இயற்கை யான நீர்த்தேக்கங்களையும் வழித்தடங் களையும் அழித்துள்ளன. சில ஏரிகள் முழுமையாக அல்லாமல், ‘மிச்ச’மாக இருக்கின்றன. சென்னையின் புவிப் பரப்பில் நீரின் இயற்கையான இடத்தை - அதாவது இயற்கை அறிவியலை - அரசியல் பொருளாதாரச் செயல்கள் ஆக்கிரமித்திருப்பதால், மழை வெள்ளத்தின்போது நீர் தேங்குகிறது. இந்நிலப்பரப்பில் பிற உயிருள்ள, உயிரற்ற பொருட்களைப் போல் மனிதனுக்கும் ஓர் இடமுண்டு என்பதே நிதர்சனம்; அதாவது, இது மனிதனுக்கு மட்டுமேயானதல்ல. ஆனால், நாம் அவ்வாறு ஆக்கிக்கொண்டோம்.

இப்புவிப்பரப்பில் நீருக்கான இடம் இயற்கையானது. அதைக் கொடுக்க வேண்டியது மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கும் இயற்கையின் இயக்கத்துக்கும் அவசியம். ஆக்கிரமித்த ஏரிகளையும் நீர் வழித்தடங்களையும் மீட்க வேண்டியது தவிர்க்க இயலாத தேவையாக நம்முன் நிற்கிறது. இது முற்றிலும் இயலாதுதான். ஆனால், வாய்ப்புள்ள இடங்களில் அதைச் செய்ய வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சாதி, மத, வர்க்கப் பாகுபாடுகளின்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசுக்கு வரி செலுத்துவதால் அரசுதான் அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற மனநிலை இருக்கிறது. அரசின் கடமையை மறுக்க இயலாது என்றபோதிலும் மக்களுக்கும் இதில் பங்கு உண்டு.

நீர் வழித்தடங்களை ஆக்கிரமிக்கக் கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பு, எந்தெந்தக் குப்பைகளை எவ்வாறு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பன போன்ற அரசின் வழிகாட்டல்கள் இருப்பினும்கூட, அவற்றைப் பின்பற்றுவதில் பெருத்த அலட்சியம் நிலவுகிறது. இயற்கை அறிவியல், பேரிடர் குறித்த பாடங்களைப் பள்ளி, கல்லூரிகளில் அனைத்து நிலைகளிலும் கற்பித்தல், இவை தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல், இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற செயல்பாடுகளின் வழி இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள இயலும். அரசு, ஆராய்ச்சியாளர், மக்கள் ஆகியோருக்கிடையே ஒரு கூட்டுச் செயல்பாட்டால் இதைச் செயல்படுத்த இயலும். ‘வெள்ளம் வரும் முன் அணை போடு’ என்ற தமிழர்களின் சொல்வழக்கு இன்றும் பொருத்தப்பாடுடையதே!

- தொடர்புக்கு: ragupathi_ksc@yahoo.co.in

To Read in English: Science and political economy pertaining to floods

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்