நமக்கான அடிப்படை உரிமைகளைச் சட்டம் நமக்கு வழங்கியுள்ளதாகவே கருதிக்கொள்கிறோம். உண்மையில், நமது அரசமைப்புச் சட்டமானது நமக்கு அடிப்படையாக உள்ளவையாகவே உரிமைகளை அங்கீகரித்துள்ளது. ஏனெனில், உரிமைகளை எவரும் யாருக்கும் வழங்க முடியாது. நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்திலிருந்து உள்வாங்கப்பட்டவை. இந்த உலகில் வரலாறு முழுவதும் அநீதிக்கு, பாகுபாட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட இடைவிடாத போராட்டத்தால் உரிமைகள் நிலைபெற்றுள்ளன. உலகம் மீண்டும் மீண்டும் உரிமைகள் சார்ந்து மாற்றத்துக்கு உள்ளாகிறது.
மனித உரிமைப் பிரகடனத்தின் 30 உரிமைகள், எளியவர்கள், நாதியற்ற மனிதர்கள், அகதிகள் என அனைத்து விளிம்புநிலை மனிதர்களுக்குமான சம உரிமையை விளம்புகின்றன. சித்ரவதையிலிருந்து விடுதலை, தனி மனிதச் சுதந்திரம், உயிர் வாழும் உரிமை, கருத்துரிமை, கல்வி கற்கும் உரிமை, அரசியல் உரிமை, குடும்பமாக மாறும் உரிமை என உரிமையின் பல பரிமாணங்களை இப்பிரகடனம் உறுதிசெய்கிறது. இதன் உள்ளடக்கம், ‘சுதந்திரம் மனிதர்களுக்கானது. அதை எவரும், எப்போதும், எதன் பொருட்டும் பறிக்க முடியாது. உலகின் எல்லா மனிதர்களும் சுதந்திரத்துடனும், சமத்துவத்துடனுமே பிறக்கிறார்கள்’ என்கிறது.
விசாலமான பார்வை: இரண்டாம் உலகப் போரில் பொதுமக்கள், போர் வீரர்கள் எனக் கோடிக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். உலகச் சமூகத்துக்கு நிகழ்ந்த அந்தப் பெரும் அழிவுக்குப் பின்னர் உலகில் மனிதப் படுகொலைகள், சக மனிதனைக் கண்ணியமின்றி நடத்தும் அவலங்கள், பாகுபாடுகள், அநீதிகள் போன்றவற்றைத் தடுக்க ‘உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம்’ (Universal Declaration of Human Rights), 1948 டிசம்பர் 10 அன்று ஐ.நா. அவையில் அறிவிக்கப்பட்டது. அனைத்து மக்களுக்கும் சமத்துவம், கண்ணியம், சமநீதி என்ற கோட்பாடுகளின் வெளிப்பாடாய் அந்த மனித உரிமைப் பிரகடனம் இருந்தது. அதை உருவாக்கிய குழுவில் இந்தியாவின் சார்பில் ஹன்சா மேத்தா, எம்.ஆர்.மாசனி, லட்சுமி மேனன் ஆகியோர் இருந்தனர். இவர்களில், ஹன்சா மேத்தா இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய வரைவுக் குழுவில் இருந்த 15 பெண் உறுப்பினர்களில் ஒருவர்.
அந்த சாசனத்தில் மக்களைக் குறிக்க ‘ஆண்’ (man) என்ற சொல் இருந்தபோது இந்தியாவின் சார்பில் அதை ‘மனிதர்கள்’ (human beings) எனப் பொதுச் சொல்லாக மாற்றினர். பாகுபாடு என்ற இடத்தில் ‘நிறத்தாலோ அல்லது அரசியல் வேறுபாட்டாலோ’ என மாற்றம் கொண்டுவரப்பட்டது. பணி செய்யும் உரிமை என்ற இடத்தில் அந்தப் பணி, ‘நியாயமான, சாதகமான பணிச் சூழல் கொண்டதாக’ என அவர்கள் திருத்தினர். மேலும் மதச்சார்பின்மை, பல கலாச்சாரத்தை ஏற்பது, உலக மனிதர்களாக நிற்பது போன்றவை மனித உரிமைகளின் அங்கம் என்பனவற்றையும் சேர்த்தனர். இவ்வரைவுக் குழுவில் இருந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஜப்ருல்லா கான், “விரும்பிய மதத்தைத் தேர்வு செய்கின்ற அல்லது மதத்தை நிராகரிக்கின்ற உரிமை, குரானில் சுட்டிக்காட்டப்பட்ட மனிதர்களின் மதச் சுதந்திர உரிமை ஆகும்.
» சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் தலைவர்கள் நிவாரண உதவி
» பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை. வெளியீடு
இந்தச் சாசனத்தில் அது இணைக்கப்பட வேண்டும்” என்றார். சவுதி அரேபியா இதைக் கடுமையாக எதிர்த்தது; மதம் மாறும் உரிமையை இந்த சாசனத்தில் குறிப்பிடத் தேவையில்லை என்றது. ஆனால், மற்றொரு இந்தியப் பிரதிநிதியான முகமது ஹபீப், மத வழிபாட்டு உரிமை என்பது விரும்பிய மதத்தைத் தேர்வு செய்யும் உரிமையையும் உள்ளடக்கியது என அக்கருத்தை ஆதரித்தார். இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு அத்தகைய சுதந்திரம் உள்ளது என்றார். இதையடுத்து இந்த மத உரிமை சாசனத்தில் இணைக்கப்பட்டது. இப்படியான விசாலப் பார்வையாலும் உரிமைக் கரங்களாலும் உருவாக்கப்பட்ட உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தின் 75ஆம் ஆண்டு, டிசம்பர் 10 அன்று அனுசரிக்கப்படுகிறது.
பரப்பப்படும் வெறுப்பு: மனிதர்களின் உள்ளத்தில் படிந்துள்ள சமத்துவத்துக்கு எதிரான சிந்தனைகள், மனித உரிமையை மறுதலிக்கின்றன. சாதியம், மதவாதம் ஆகியவை, ‘மனிதர்கள் சமத்துவத்துடனும், சுதந்திரத்துடனும் பிறக்கிறார்கள்’ என்ற உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தின் முதல் வாசகத்துக்கே எதிராக நிற்கின்றன. அடிமை நிலை, உரிமைகளை நசுக்குவது, சக மனிதனை வெறுப்பது என மனித உரிமைகளுக்கு அச்சிந்தனைகள் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. உலகில் மனிதர்களைக் கொத்துக்கொத்தாய்க் கொன்ற எல்லா பாசிசத் தத்துவங்களும் முதலில் வெறுப்பு என்ற புள்ளியிலிருந்து தொடங்கியவை; அவை மானுடப் பரப்பின் மகத்துவத்தை உணர்வதைத் தடுப்பவை.
நாம் சமத்துவம், சகோதரத்துவம் என்ற உயரிய நோக்கம் கொண்ட அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டவர்கள். ஆனால், அதை உணர்வுபூர்வமாக உள்வாங்க வேண்டியது மிகவும் அவசியம். மனித உரிமைப் பிரகடனத்தின் உரிமைகள் மக்கள் சமூகத்துக்கானவை. சக மனிதனைக் கண்ணியத்துடன் நடத்தும் மனித உரிமைப் பண்பாட்டினை வலியுறுத்துபவை. ஆனால், இப்போதும் உலகின் ஒரு பகுதியில் குழந்தைகள் மீதும், குடியிருப்புகள் மீதும் குண்டுகள் வீசப்படுகின்றன. அக்டோபர் 7 முதல் நவம்பர் 2 வரை, 25,000 டன் வெடிகுண்டுகளைக் காசா பகுதியில் இஸ்ரேல் வீசியுள்ளது. இது இரண்டாம் உலகப் போரின்போது, 1945 ஆகஸ்ட் 6 அன்று ஜப்பானின் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட ‘லிட்டில்பாய்’ என்ற அணுகுண்டைக் காட்டிலும் அதிகம். அமெரிக்கா வீசிய அந்த அணுகுண்டு, 15,000 டன் எடை மட்டுமே கொண்டது.
வலிமை பெறும் உரிமைத் தத்துவம்: ஐ.நா. அவையின் அதிகாரம் மிக்க பாதுகாப்பு அவையில், போரை நிறுத்த நடக்கும் இஸ்ரேலுக்கு எதிரான முயற்சிகளை அமெரிக்கா தனது ‘வீட்டோ’ அதிகாரம் மூலம் தடுக்கிறது. அதிகாரம் மிக்க நாடுகள் தங்கள் அதிகாரத்தை நிறுவும் மையமாக ஐ.நா. அவையை மாற்ற முயல்கின்றன. வெறும் நாடுகளின் கூட்டமைப்பு என உலக அரசியல் தலைமைகளின் மையமாக ஐ.நா. சுருக்கப்படுகிறது. உண்மையில் உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் அந்த அவையை மானுடத்தின் உரிமையைப் பாதுகாக்கும் இடமாக இன்றும் நம்பிக்கை வெளிச்சத்தைப் பரப்புகிறது. காசா போர் போல அதிகாரம் மிக்க நாடுகளின் நேரடி/மறைமுக உதவியுடன் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் கொன்றொழிப்பது நடக்கிறது.
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டர்ஸ் பலமுறை வேண்டுகோள் வைத்தும் இந்த மனிதப் பேரழிவு தடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் இந்தப் போருக்கு எதிராக உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். தங்களின் ஆட்சியாளர்களுக்கு எதிராக அவர்கள் ஒவ்வொருவரும், உலக மனிதர்களில் ஒருவராய் நின்று தங்கள் குரலை உயர்த்தி அக்கொடுமையைக் கண்டித்துள்ளனர். மனித உரிமை என்ற தத்துவம் இன்னமும் வலிமை பெற்றுள்ளது. மனித உரிமைப் பிரகடனம் என்பது விடுதலையை உணர்பவர்கள், சுதந்திர வாழ்க்கையை நோக்கித் தங்களையும் தங்கள் சமூகத்தையும் நகர்த்துபவர்கள், உரிமைகளுக்கான கோரிக்கைகளை விடாது எழுப்புபவர்கள் எனத் தொடர் சமூகச் செயல்பாட்டால் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும். ஆம்! நாம் அனைவரும் மனித உரிமைகளின் பிரிக்க முடியாத அங்கமே.
டிசம்பர் 10: மனித உரிமைகள் நாள்
- தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com
To Read in English: A great and grand boon called human rights
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago