பி
ரதமர் நரேந்திர மோடி நெருக்கடிநிலையை அறிவிப்பார் என்று அவரது கட்சிக்காரர்களே அச்சம் தெரிவித்தார்கள். ‘தடா’.. ‘பொடா’போல ஒரு பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவருவார் என்று மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் எச்சரித்தார்கள். பாகிஸ்தானுடன் போர் துவங்கக்கூடும், பொதுத் தேர்தலே நடத்தப்படாமல்கூடப் போகலாம் என ஊடகங்களில் சிலர் எழுதினார்கள். இதில் எதுவுமே நடக்கவில்லை.
புதிதாக எதையும் செய்யாமலேயே இந்திய ஜனநாயகத்தைச் சர்வாதிகாரமாக மாற்றிவிட முடியும் என இன்றைய ஆட்சியாளர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஹஜ் மானிய ஒழிப்பில், எப்படி உச்ச நீதிமன்றத்தின் பழைய தீர்ப்பு ஒன்றைப் பயன்படுத்திக்கொண்டார்களோ, அதுபோலவே முந்தைய ஆட்சிகளில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளைச் செயல்படுத்தியே ஒரு சர்வாதிகார ஆட்சியை அமைப்பதற்கு அவர்கள் இப்போது திட்டமிடுகிறார்களோ என்று தோன்றுகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் திட்டம் அவர்களுக்கு வரப்பிரசாதமாக வாய்த்திருக்கிறது. அடுத்ததாக அவர்களது கண்ணில் பட்டிருப்பது, வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்ட மலிமத் கமிட்டி அறிக்கை.
தூசு தட்டப்படும் மலிமத் அறிக்கை
வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் எல்.கே.அத்வானி துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்தபோது, இந்தியாவின் குற்றவியல் சட்டங்களையும், நீதி நிர்வாக முறையையும் ‘சீர்திருத்தும்’ நோக்கத்தோடு 2000-ல் அமைக்கப்பட்டதுதான் மலிமத் கமிட்டி. அப்போது சட்ட அமைச்சராக இருந்தவர் வேறு யாருமல்ல, இப்போது பிரதமர் தலைமையிலான மூவர் அணியின் முக்கியமான உறுப்பினராக இருக்கும் அருண் ஜேட்லிதான்.
கர்நாடக, கேரள நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி அனுபவம் கொண்ட நீதிபதி மலிமத் தலைமையிலான கமிட்டி 2003-ல் தனது அறிக்கையை அளித்தது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையில், ‘தேசியக் குற்றவியல் கொள்கை’ ஒன்றை உருவாக்க, 2007-ல் பேராசிரியர் மாதவ மேனன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது காங்கிரஸ் அரசு. அந்தக் குழுவும் வரைவுக் கொள்கை ஒன்றை உருவாக்கி வழங்கியது. ஆனால், அதற்கு மேல் எதுவும் நடக்கவில்லை. இப்போது திடீரென்று மலிமத் கமிட்டி அறிக்கையை மோடி அரசு தூசு தட்டி எடுத்திருக்கிறது. அதன் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது பற்றி தீவிரமான பரிசீலனையிலும் இறங்கியிருக்கிறது. இந்தியாவின் குற்றவியல் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்காக மலிமத் கமிட்டி முதலில் ஒரு வினாப் பட்டியலைத் தயாரித்தது. அதைப் பிரதமர், முதலமைச்சர்கள், காவல் துறை அதிகாரிகள், பார் கவுன்சில் தலைவர்கள் உள்ளிட்ட 3,164 பேருக்கு அனுப்பியது. ஆனால், வெறும் 284 பேர் மட்டுமே அதற்குப் பதில் தந்தனர்.
சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்புகொண்ட மாநில அரசுகளுக்கும் அவர்களது கருத்துகளைக் கேட்டு மலிமத் கமிட்டி கடிதம் எழுதியது. ஆறு மாநிலங்கள் மட்டுமே பதிலளித்தன. தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பான்மையான மாநிலங்கள் அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை.
பிரச்சினைக்குரிய பரிந்துரைகள்
ஒரு சில இடங்களில் கருத்தரங்குகளை நடத்திவிட்டுத் தனது அறிக்கையை அது தயாரித்துவிட்டது. இரண்டு பாகங்கள் கொண்ட அந்த அறிக்கையில், 23 தலைப்புகளின்கீழ் 158 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அந்தப் பரிந்துரைகள், நீதி நிர்வாக முறையின் அடிப்படைகளையே மாற்றுவதாக இருக்கின்றன என்பதுதான் பிரச்சினை.
‘குற்றம்சாட்டப்பட்டவர் அது நிரூபிக்கப்படும்வரை அப்பாவியாகவே கருதப்பட வேண்டும். அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்களுக்கு அவரையே சாட்சியாக்கக் கூடாது. குற்றத்தை நிரூபிக்க வேண்டியது பிராசிகியூஷன் தரப்பின் பொறுப்பு. எவர் ஒருவருக்கும் நியாயமான விசாரணை கோருவதற்கான உரிமை உள்ளது’ - இதுதான் குற்றவியல் நீதிமுறையின் அடிப்படை. இந்த அடிப்படைகளையே மலிமத் கமிட்டி உடைக்கச் சொல்கிறது. ‘குற்றம்சாட்டப்பட்டவரிடமிருந்து நீதிமன்றம் எழுத்துபூர்வமாக வாக்குமூலம் பெற வேண்டும், அவரை முன்னறிவிப்பு இல்லாமல் அழைத்து விசாரிக்க வேண்டும், அவரது வாக்குமூலத்தை அவருக்கு எதிரான சாட்சியமாகப் பயன்படுத்த வேண்டும்’ எனக் கூறியுள்ள மலிமத் கமிட்டி, அதற்காகக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 313-ல், மூன்று உட்பிரிவுகளைச் சேர்க்க வேண்டும் எனக் கூறுகிறது.
‘ஒரு குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும் என்று தற்போதுள்ள நடைமுறையைத் தளர்த்தி, ‘நீதிமன்றம் நம்பினால் போதும்’ என்று அதை மாற்ற வேண்டும்’ என மலிமத் கமிட்டி கூறியுள்ளது. நீதிபதிகளின் எண்ணிக்கையைத் தற்போது உள்ளது போல ஐந்து மடங்கு கூட்ட வேண்டும் எனக் கூறியிருக்கும் மலிமத் கமிட்டி, ‘உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்குச் சில சிறப்பு அதிகாரங்கள் தரப்பட வேண்டும்’ எனப் பரிந்துரை செய்துள்ளது. ‘சக நீதிபதி எவரையும் குறிப்பிட்ட வழக்குகளை விசாரிக்காமல் தடுக்கவும், அவருக்குக் கண்டனம் தெரிவிக்கவும், குறிப்பிட்ட காலம் வரை அவருக்கு வழக்குகளே தராமல் நிறுத்திவைக்கவும், அவரை விருப்ப ஓய்வில் செல்லுமாறு அறிவுறுத்தவும், அவர் மீது ‘இம்பீச்மென்ட்’ நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கவும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அதிகாரம் வழங்க வேண்டும்’ என்கிறது மலிமத் கமிட்டி.
மாநில உரிமைக்கு ஆபத்து
தற்போது, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிராக நான்கு மூத்த நீதிபதிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், இந்தப் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால் என்ன ஆகும் என்பதை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
‘சட்டம் - ஒழுங்கு இப்போது மாநிலப் பட்டியலில் இருக்கிறது. பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்படும் குற்றங்களை விசாரிக்க ஃபெடரல் சட்டம் இயற்றப்பட வேண்டும். அந்த வழக்குகளை மாநில நீதிமன்றங்களில் விசாரிக்காமல், அதற்கென உருவாக்கப்படும் ஃபெடரல் நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும். இந்த அதிகாரத்தை மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் சேர்க்க வேண்டும்’ என்கிறது மலிமத் கமிட்டி. இது அப்பட்டமாக மாநில உரிமையைப் பறிக்கும் யோசனையாகும்.
‘ஒருவர், துப்பாக்கி போன்ற ஆயுதம் எதையேனும் வைத்திருந்தாலே அவருக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கலாம்’ என்பது மலிமத் கமிட்டியின் ஆபத்தான பரிந்துரைகளில் ஒன்று. சில வரவேற்கத்தக்க பரிந்துரைகளும் உள்ளன. ‘கர்ப்பிணிப் பெண்ணுக்கோ, ஏழு வயதுக்குக் கீழே குழந்தை உள்ள பெண்ணுக்கோ தண்டனை விதிக்கப்பட்டால், அவரை வீட்டுக் காவலில் வைக்கலாம். திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் பெண்ணுக்கும் மனைவியைப் போலவே உரிமை இருக்கிறது.
சாட்சி சொல்பவர்களுக்குப் பாதுகாப்பு, பயணப்படி வழங்க வேண்டும்’ என்பன போன்றவை அவை. ஆனால், ஆகப்பெரும்பாலான பரிந்துரைகள் தற்போதுள்ள தண்டனைச் சட்டத்தையும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தையும் ‘தடா’, ‘பொடா’ போன்ற பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களாக மாற்றுவதாகவே இருக்கின்றன.
‘போலீஸ் அதிகாரியின் முன்னால் அளிக்கும் வாக்கு மூலத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு பொடா சட்டத்தின் பிரிவு 32-ஐப் போலத் தற்போதுள்ள சாட்சிய சட்டத்தைத் திருத்த வேண்டும். தகவல் தொடர்பை இடைமறித்து ஒட்டுக் கேட்பதற்கு ஏதுவாக பொடா சட்டத்தில் 36 முதல் 48 வரை உள்ள பிரிவுகளை முன்மாதிரியாகக் கொண்டு, சட்டத் திருத்தங்களைச் செய்ய வேண்டும்’ என்பன போன்ற பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தால், சாதாரண குடிமகனின் அடிப்படை உரிமை என்பது, ஆவியாகிப் போய்விடும்.
மலிமத் கமிட்டியின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால், அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்ப்பதாகத்தான் இருக்கும். தனது அடிப்படை உரிமைகளின்மீது மதிப்புகொண்ட எந்தவொரு குடிமகனும், மத்திய அரசின் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க முடியாது.
- ரவிக்குமார், எழுத்தாளர்,
தொடர்புக்கு: manarkeni@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago