மருந்து ஆராய்ச்சியில் விலங்குகளுக்கு விடுதலை!

By கு.கணேசன்

நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு நவீன மருந்தும் பலகட்ட ஆய்வுகளைத் தாண்டித்தான் நம் கைக்கு வருகிறது. புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், அது மனிதகுலத்துக்குப் பயன்படுமா, பாதுகாப்பானதா, பக்க விளைவுகள் உண்டா என்பனவற்றை அறிய, முதலில் விலங்குகளுக்கு அதைக் கொடுத்துப் பார்த்து, முடிவுகள் திருப்தியாக இருந்தால் மட்டுமே மனிதப் பயன்பாட்டுக்கு வரும். இதுதான் இந்தியாவில் இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) இதுவரை செயல்படுத்திவந்த நடைமுறை.

தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ‘புதிய மருந்துகள் - மருத்துவ முன் ஆய்வுகள் – 2023’ (New Drugs and Clinical Trial Rules, 2023) சட்டத்தில் மத்திய அரசு ஒரு திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி, ‘இனிமேல் புதிய மருந்து எதையும் விலங்குகளிடம் பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, உயிரினங்கள் இல்லாத நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது.

விலங்குகள் மூலம் ஆய்வுகள்: உலகில் பொ.ஆ.மு. (கி.மு.) 500க்கு முன்பிருந்தே மருத்துவ ஆய்வுக்கு விலங்குகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இரண்டாம் நூற்றாண்டில், இத்தாலியில் கேலன் (Galen) என்பவர் முதன்முதலில் பன்றிகளிடம் ஆய்வுசெய்து ரத்தக்குழாய்களைக் கண்டுபிடித்தது வரலாறு ஆனது. இந்தியாவில் இம்மாதிரியான ஆய்வுகள் 1860இல் தொடங்கப்பட்டன. ஆனால், ஆரம்பித்ததில் இருந்தே உலக அளவில் இதற்கு எதிர்ப்பு இருக்கிறது. இந்தியாவில் விலங்கு நலம் சார்ந்த அமைப்பான ‘பீட்டா’ (People for the Ethical Treatment of Animals) விலங்குகளைத் துன்புறுத்தும் இந்த ஆய்வுகளைக் கடுமையாக எதிர்க்கிறது. உலக நாடுகளைப் பின்பற்றி, 2013இல் புதிய அழகுசாதனப் பொருள்களைத் தயாரிக்க விலங்குகளிடம் ஆய்வு செய்யப்படுவதை இந்தியா தடைசெய்தது. ஆனாலும், நோய் தீர்க்கும் மருந்துக்கு விலங்குகளிடம் ஆய்வு செய்யப்படுவதைத் தடை செய்யவில்லை.

எலி, சுண்டெலி, முயல், நாய், குரங்கு ஆகியவைதான் ஆய்வில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. தொற்றுநோய்கள் முதல் புற்றுநோய்கள் வரை பல்வேறு நோய்கள் இந்த விலங்குகளிடமும் மனிதர்களிடமும் ஒன்றுபோல் காணப்படுகின்றன. இவற்றின் சுவாசம், செரிமானம், உடலியக்கம், இனப்பெருக்கம், நோய்த் தடுப்பாற்றல் போன்றவற்றின் உடலியல் செயல்பாடுகள் மனிதர்களுடன் ஒத்துப்போகின்றன. ஆபத்தான மருந்துகளை முதலில் மனிதர்களிடம் பரிசோதிப்பது கடினம். இந்தக் காரணங்களால் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, பிரிட்டன், ஜெர்மனி, தைவான், பிரேசில் ஆகிய 11 நாடுகள் மருந்து ஆய்வுக்கு விலங்குகளை அதிகமாகப் பயன்படுத்துகின்றன.

அறிவியலாளர்களின் அறைகூவல்: ‘உலகில் ஆண்டுதோறும் சுமார் 11.5 கோடி விலங்குகள் ஆய்வுக்கு உள்ளாகின்றன. ஆனால், புதிதாகத் தயாரிக்கப்படுவதோ 25 மருந்துகள்தான். ஒரு பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்க 12,000க்கும் அதிகமான விலங்குகளிடம் ஆராய வேண்டியுள்ளது. அப்போது கோடிக்கணக்கான விலங்குகள் உயிரிழக்கவும், வலி உள்ளிட்ட பல துன்பங்களை அனுபவிக்கவும் நேரிடுகிறது. ஆய்வுக்குப் பிறகு அவற்றின் வாழ்க்கைத் தரமும் குறைந்துவிடுகிறது. மனிதர்கள் வாழ விலங்குகளும் அவசியம். இப்பூவுலகில் மனிதர்களைப் போல விலங்குகளும் வாழப் பிறந்த உயிரினம்தான். அந்த உரிமையை மனிதர்கள் பறிப்பது நியாயமல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக, விலங்கின ஆய்வின்போது பதிவுசெய்யப்படும் முடிவுகளும் தரவுகளும் அந்த மருந்தை மனிதரிடம் பயன்படுத்தும்போது பெரும்பாலும் வித்தியாசப்படுகின்றன’ என்று பல்லுயிர் காக்கும் அறிவியலாளர்களும் குரல் கொடுக்கத் தொடங்கினர். அதனால், அரசு இப்போது புதிய முடிவை எடுத்துள்ளது; மருந்து ஆய்வுக்கு விலங்குகள் தவிர்த்த மாற்றுவழிகளைப் பரிந்துரைத்துள்ளது. விலங்குகள் இல்லாமலும் மருந்துகளை ஆய்வுசெய்ய முடியுமா? ‘முடியும்’ என்கின்றன நவீனத் தொழில்நுட்பங்கள்.

வியப்பூட்டும் உறுப்புச் சில்லுகள்: கணினிச்சில்லுகளைக் (Computer chips) கேள்விப்பட்டிருப்பீர்கள். சில்லுத் தொழில்நுட்பத்தின் ஆகப் பெரிய மனிதப் பயன்பாட்டின் தொடக்கப்புள்ளி அது. தற்போது, ‘உறுப்புச் சில்லுகள்’ (Organs-on-chips) எனும் நவீனத் தொழில்நுட்பம் மருத்துவத் துறையில் புகுந்துள்ளது. மனித உறுப்புகளைப் பிரதிபலிக்கும் இந்தச் சில்லுகளுக்கு, ‘உயிரிணையாக்கிகள்’ (Biomimetics) என்று பெயர். ஆய்வாளர்கள், உடலுறுப்புச் செல்கள் இயங்கும் விதத்தையொட்டி, இயற்கை போன்று உறுப்புச் சில்லுகளை முப்பரிமாணங்களில் வடிவமைக்கின்றனர்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட உறுப்புச் சில்லுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நுரையீரல், சிறுநீரகம், குடல், கல்லீரல், சருமம், மூளை, இதயம், எலும்பு மஜ்ஜை, கருப்பை, சூலகம் ஆகிய உறுப்புகளுக்கு உறுப்புச் சில்லுகள் தயார். இயற்கை செல்களுக்குள் நிகழ்வதுபோன்று இந்த உறுப்புச் சில்லுகளுக்குள் ரத்த ஓட்டமும் நிகழும். விலங்குகளின் உறுப்புகளுக்குப் பதிலாக இவற்றில் ஆய்வு செய்யலாம். ஆய்வுக்கு உள்ளாகும் மருந்தை உள்நுழைத்து விளைவுகளைப் பதிவுசெய்யலாம்.

ஒத்திசு உறுப்புகள் வருகை (Organoids): டச்சு அறிவியலாளர் ஹேன்ஸ் கிளவர்ஸ் (Hans Clevers) கண்டுபிடித்த இந்தத் தொழில்நுட்பம், செல் இயங்கியல் துறைக்குப் (Cell physiology) புதிய அறிமுகம். மனித ஸ்டெம் செல்களால் உருவாக்கப்பட்ட முப்பரிமாண உறுப்புகள் இவை. உடல் உறுப்புகளைப் போன்றே தோற்றமளிப்பவை. இவற்றின் செயல்பாடுகளும் உடலுக்குள் நிகழ்வதை ஒத்திருக்கின்றன. உதாரணமாக, ஸ்டெம் செல்களால் ஒரு நுரையீரல் மாதிரி வடிவம் உருவாக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனுள் ஒரே சமயத்தில் ரத்த ஓட்டமும் சுவாசமும் நிகழுமாறு வடிவமைக்கப்படுகிறது. ஆய்வு செய்யப்பட வேண்டிய மருந்தை இதற்குள் செலுத்தி, அடுத்து என்ன விளைவுகள் ஏற்படும், திசுவுக்குத் திசு இவை வேறுபடுகின்றனவா அல்லது ஒன்றுபோல் இருக்கின்றனவா, பக்கவிளைவுகள் ஏற்படுகின்றனவா என்பதை ஆய்வாளர்கள் பதிவுசெய்கின்றனர்.

முப்பரிமாண உயிரி அச்சுப்பிரதி (3D bio-printing): இதுவும் ஒத்திசு உறுப்பைப் போன்று செயல்படுவதுதான். ஆனாலும், இதில் சிறிய வித்தியாசம் இருக்கிறது. தனிப்பட்ட நபரின் ஸ்டெம் செல்களால் இது உருவாக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மருந்து அந்த நபருக்குப் பயன்படுமா என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

அடுத்து, ஜெர்மனியில் ‘விட்ரோசெல் இயந்திரம்’ (VITROCELL machines) எனும் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு நுரையீரல் மாதிரி வடிவம். மூச்சுக் காற்றின் வழியாக ஒரு மருந்து உறிஞ்சப்படுமானால் (Inhalers) அது நுரையீரல்களில் என்ன செய்யும் என்பதைத் தெரிவிக்கும் கருவி இது. தவிர, மனித-நோயாளி உருப்போலிகள் (Human-patient simulators) எனும் கருவிகளும் இப்போது வந்துள்ளன. மருந்துகளின் செயல்பாடுகளை மருத்துவ மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்கு விலங்குகளுக்குப் பதிலாக இந்தக் கருவிகள் பயன்படுகின்றன. நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் அறிவியல் யுகத்தில், இன்னும் பல புதிய கருவிகளும் தொழில்நுட்பங்களும் வரக்கூடும்.

சவால்கள் என்ன? மேற்சொன்ன நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டுமானால், இந்தியாவில் மருந்தியல் துறையில் வளர் ஊடகம் (Cell culture), பொருள் அறிவியல் (Material science) தொடர்பான மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். செல் உயிரியல், மருந்தியல், மின்னணுவியல், கணினியியல் ஆகிய துறைகளில் அதிக நிபுணத்துவமும் அனுபவமும் மிக்கவர்களை உருவாக்க வேண்டும். அதேவேளை, இந்தப் பல்துறை நிபுணர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவரை தற்போதுள்ள நிபுணர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் தரப்பட வேண்டும். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மருந்து ஆய்வுகளுக்குத் தேவையான பல வினைவேதிப்பொருள்களுக்கும் (Reagents), வளர் ஊடகப்பொருள்களுக்கும் வெளிநாடுகளை எதிர்நோக்கியுள்ளோம். இந்த நிலை மாற வேண்டும். மருந்து ஆய்வுகள் குறித்துச் சரியான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு செயல்படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆய்வின் தரத்தையும் முடிவையும் நிபுணர் குழு மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

To Read in English: Freedom for animals in clinical trials of drugs

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்