கணை ஏவு காலம் 50 | ஒரு தரப்புக்கு ராணுவ சட்டம் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

By பா.ராகவன்

கடந்த வாரம் பாலஸ்தீனத்தை ஒரு ‘நாடாக’ ஏற்பதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்தார். எத்தனையோ நாடுகள் ஒப்புக்கொண்டதுதான் இது. ஆனால் இப்படியயொரு போர்ச் சூழலில் ஓர் ஐரோப்பிய நாட்டிடம் இருந்து வருகிற இந்த அங்கீகாரம் அம்மக்களுக்கு எவ்வளவு பெரிய ஆறுதலாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

சொற்கள் வடிவில் இம்மாதிரியான ஆறுதல்களுக்குப் பஞ்சமே இராது. நடைமுறை மட்டும் குரூரமானதாகவே எப்போதும் இருக்கும். சென்ற அத்தியாயத்தில், பாலஸ்தீனத்தின் 3 வெவ்வேறு விதமான ஆட்சிப் பிராந்தியங்களைக் குறித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதில் 3-வது பகுதி விவரிப்புக்கு அப்பாற்பட்ட சிக்கல்களை உள்ளடக்கிய பிராந்தியம்.

கடந்த 1967 முதல் பாலஸ்தீனத்தில் நடந்த யூதக் குடியேற்றங்கள் அனைத்தும் இந்தப் பிராந்தியங்களில்தான் நடந்தன. இன்றைய தேதியில் இங்கே மூன்றரை லட்சம் யூதர்கள் வசிக்கிறார்கள் என்று இஸ்ரேல் தரப்பில்ஒப்புக்கொள்ளப்பட்டாலும் இந்த எண்ணிக்கை எப்படியும் ஐந்து லட்சத்துக்குக் குறையாது என்று அரபிகள் சொல்கிறார்கள். இஸ்ரேலின் அண்டை நாடுகளான லெபனான், சிரியாமற்றும் ஜோர்டனும் இந்த எண்ணிக்கையை ஒப்புக்கொள்கின்றன.

முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்துக்கு சிறிது அதிகம். இந்தப்பகுதிக்கும் பாலஸ்தீன அத்தாரிடிக்கும் ஆட்சி அதிகார அளவில் எந்த சம்பந்தமும் கிடையாது. மொத்தமும் இஸ்ரேலிய ஆட்சிதான். சொல்லிக் கொள்வது ‘சிவில் ஆட்சி’ என்றாலும் அந்தப் பிராந்தியத்தில் மட்டும் ராணுவ சட்டம் நடைமுறையில் உள்ளது.

இதில் இன்னொரு சிடுக்கு உண்டு. பிராந்தியம் முழுவதற்கும் ராணுவ சட்டம் என்று அறிவிக்கப்பட்டாலும் யூதர்களுக்கு அது பொருந்தாது. அவர்கள் இஸ்ரேலில் எப்படி வாழ்ந்தார்களோ, அதே மாதிரி அங்கும் சுதந்திரமாக வாழலாம். ராணுவ சட்டமெல்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும்தான்.

இதன் முதற்படி, மொத்த பரப்பளவில் 99 சதவீதப் பகுதிகளுக்கு முஸ்லிம்கள் அனுமதியின்றி நுழைய முடியாது. அதாவது யூதர்கள் வசிக்கும் வீதிகளுக்குப் போக முடியாது. யூதர்களின் கடைகளுக்குச் செல்லக் கூடாது. தடுப்பு சுவரெல்லாம் ஒரு புறம் இருக்க, சாலைகளிலும் பிரிவினை உண்டு. யூதர்கள் மட்டுமே பயணம்செய்வதற்கான சாலைகள்அங்கே இருக்கின்றன. எங்கு சென்றாலும் அடையாள அட்டை இருக்க வேண்டும். எந்த முஸ்லிமையும் காவல்துறையினர் எங்கேவேண்டுமானாலும் நிறுத்திவிசாரிக்கலாம். சந்தேகம் ஏற்படுமானால் கைது செய்யலாம். விசாரணை இன்றி சிறைப்படுத்தலாம். யாரும் கேட்க முடியாது.

இந்த அ, ஆ, இ பிரிவு பாலஸ்தீனம் தவிர பாலஸ்தீனத்துக்குச் சொந்தமானதென்று அவர்களும் இஸ்ரேலுக்குத்தான் சொந்தம் என்று இவர்களும் ஆதிமுதல் இன்று வரை ஓயாமல் சண்டையிட்டுக் கொள்ளும் ஜெருசலேம் நான்காவது பிரிவு.

இன்றைய தேதியில் ஜெருசலேத்துக்கும் பாலஸ்தீனத்துக்கும் ஆட்சி ரீதியில் எந்த சம்பந்தமும் இல்லைஎன்பதுதான் கள யதார்த்தம். ஜெருசலேம் மாவட்டம் முழுதுமே இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்டபகுதியாகிவிட்டது. அங்கு வசித்துவந்த பெரும்பாலான முஸ்லிம்கள் அடித்துத் துரத்தப்பட்டுவிட்டார்கள் அல்லது கொல்லப்பட்டுவிட்டார்கள்.

கடந்த 2010-ம் ஆண்டு ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கிழக்கு ஜெருசலேத்தின் மக்கள் தொகை 4 லட்சத்து 50 ஆயிரம் என்று அப்போது சொல்லப்பட்டது. அதில் 60 சதவீதம் முஸ்லிம்கள். 40 சதவீதம் யூதர்கள். என்ன ஆனது என்றால், மெல்ல மெல்ல அங்கு வசித்த முஸ்லிம்களை மிரட்டி மேற்குக் கரையின் பகுதிகளுக்குப் போகச் செய்துவிட்டார்கள்.

இஸ்ரேலின் அடையாள அட்டையைக் கொடுத்து, நீங்கள் அங்கே சென்றால் நிம்மதியாக வாழ முடியும் என்று சொல்லப்பட்டது. இதன் பொருள், இங்கே நிம்மதி கிடையாது என்பது மட்டுமே. முஸ்லிம்கள் வேறு வழியின்றி இடம்பெயரத் தொடங்கியதும் சற்றும் மிச்சம் வைக்காமல் ஜெருசலேத்தை முழுமையாக இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது. அதற்கான திருத்திய சட்ட வரைவும் தயாரிக்கப்பட்டது.

ஜெருசலேம் ஒரு பொதுச் சொத்து; அனைத்து மதத்தவர்களுக்கும் பொதுவானது என்கிற பழைய ஐ.நா.வின் தீர்ப்பெல்லாம் என்ன ஆனது என்று கேட்க முடியாது. இனி ஜெருசலேம் என்னுடையது என்று இஸ்ரேல் சொல்லிவிட்டது, அவ்வளவுதான். உலக நாடுகள் இந்த இணைப்பை ஏற்கவில்லை என்பதை அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதவேயில்லை. நீ ஏற்றால் எனக்கென்ன, ஏற்காது போனாலென்ன என்று கடந்துவிட்டார்கள்.

ஜெருசலேம் தன்னுடையது என்று இஸ்ரேல் கருதுவதால்தான் அல் அக்ஸா வளாகத்தில் ஆண்டுக்கொரு முறை பட்டாசு வெடிக்கிறார்கள். அதுவும் சரியாக ரமலான் நோன்பு நேரத்தில். அதுதான் முஸ்லிம்களைக் கொதிப்படைய வைக்கிறது. அதுவேதான் இன்று நடக்கும் ஹமாஸ் - இஸ்ரேல் யுத்தத்துக்கும் முதற் காரணம்.

(தொடரும்)

முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 49 | ஒரே பகுதிக்குள் 3 விதமான ஆட்சி @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

15 days ago

மேலும்